சுடச்சுட

  

  முன்பெல்லாம் கோடை காலங்களில் மட்டும் வன விலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வந்தன. ஆனால், தற்போது அனைத்துக் காலங்களிலும் வனவிலங்குகள் தோட்டப் பகுதிகள் மற்றும் மக்கள் குடியிருப்புகளுக்கு உணவு தேடி வருகின்றன.

  இதனால், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் மோதல் ஏற்பட்டு, உயிர்ப் பலியும் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் வனங்கள் அழிக்கப்படுவதும், வனத்தில் ஏற்படும் உணவு பற்றாக்குறையுமே.

  மான், முயல், ஆடு போன்றவை தாவரங்களை உண்ணுகின்றன. அவற்றை அசைவ விலங்குகள் உண்ணுகின்றன. இவை இறந்த பின் பாக்டீரியா உதவியுடன் மண்ணில் மக்கி தாவரங்களுக்கு உரமாக மாறுகின்றன. இந்த சங்கிலி முறையில் சிறிய மாறுதல் ஏற்பட்டாலும் பிரச்னைதான்.

  தற்போது பெரும்பாலான இடங்களில் அரசினால் தடுப்பணைகள் மற்றும் தொட்டிகள் கட்டப்பட்டு தண்ணீர் இல்லாத காலங்களில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

  வனப்பகுதியில் வன விலங்களுக்குத் தேவையான மூங்கில் மற்றும் பல்வேறு வகையான உணவு தாவரங்கள் அரசினால் நடப்பட்டு வருகிறது. ஆனால், அவை பெரும்பாலான இடங்களில் வளர்ச்சி அடையாததால், வன விலங்குகளுக்கு உணவு கிடைக்காமல், அவை மக்கள் குடியிருப்புகளைத் தேடி வருகின்றன.

  வனங்களில் நடப்படும் தாவரங்கள் வளர்ச்சி அடையாததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வனத்தில் ஏற்படும் தீ; மற்றொன்று தாவரங்களை வளரவிடாமல் தடுக்கும் செடிகள். அதாவது, வெளிநாடுகளில் இருந்து நாம் பல்வேறு வகையான விதைகளையும் உணவு பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.

  அதன் மூலம் பல்வேறு வகையான களைச் செடிகள் இந்தியாவில் ஊடுருவியுள்ளன. அவற்றுள் முக்கியமானவை பார்த்தீனியம், ஆகாயத்தாமரை, லன்டானா கேமரா ஆகும். இதில் கடந்த சிலநாள்களுக்கு முன் அரசினால் பார்த்தீனியச் செடிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  ஆனால், லன்டான கேமரா மறைமுகமாக வனப்பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் வளர்ந்து வனப்பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது.

  லன்டான கேமரா என்பது செடியின் தாவரவியல் பெயர். குற்றுச்செடி வகையைச் சேர்ந்த இத்தாவரம், மித வெப்பமான பகுதியில் 7 அடி உயரம்வரை வளரும் தன்மை கொண்டது. இதன் தாயகம் மெக்சிகோ, கரீபியன், மத்திய அமெரிக்கா, கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள்.

  இத்தாவரங்கள் வளர்வதற்கு மிக குறைந்த அளவிலான நீர் போதுமானது, மேலும் இத்தாவரங்கள் தீயினால் அழிந்தாலும் இதன் விதைகள் அழிவதில்லை.

  இதனால், இத்தாவரங்களின் விதைகள் எளிதில் வளர்ந்து விவசாய பகுதி மற்றும் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கொள்கின்றன. மேலும், இச்செடிகள் வளரும் பகுதியில் மற்ற செடிகளை வளரவிடாமல் ஆக்கிரமித்து கொள்கிறது.

  இச்செடிகள் கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் ஊடுருவியுள்ளன. இதன் பூக்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை வண்ணங்களில் இருப்பதால் இதனை வீடுகளில் அழகுக்காக வைத்தும், இதன் குச்சிகளை துடைப்பானாக பயன்படுத்தியும் வருகிறார்கள்.

  இதன் இலைகளில் "பென்ட்டாசைக்கிளிக் ட்ரைட்டர் பானாய்ட்ஸ்' என்ற திரவம் உள்ளதால், இதனை சாப்பிட்ட கால்நடைகளுக்கு ஹெப்பட்டோ விஷத்தன்மையும், போட்டோ சென்சிட்டி விட்டியும் ஏற்படுகின்றன.

  இத்தாவரத்தின் விஷம் கால்நடைகளின் ரத்தத்தில் கலந்து நச்சுத்தன்மை ஏற்படுத்துகிறது. இதனால், கால்நடைகள் மற்றும் விலங்குகளின் தோலில் சிவப்பு தடிப்பு ஏற்பட்டு, அரிப்பு மற்றும் புண்கள் ஏற்படுகின்றன. இதனால், கால்நடைகளின் வளர்ச்சியும் பால் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.

  இச்செடியின் வளர்ச்சியால் காடுகள் மலட்டு தன்மையடையும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

  எனவே, லன்டான கேமராவை உடனே வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai