சுடச்சுட

  

  உலக அளவில் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பெற்ற நூல்களாக அறியப்பெறுவன, திருக்குர்ஆனும், பைபிளும். இவ்விரு நூல்களும் சமயச்சார்புடையன. சமய நெறிகளைப் பரப்புதற்கும் பின்பற்றுதற்கும் வேண்டிய தேவை கருதி, அந்நூல்கள் மொழிபெயர்க்கப்பெற்றிருக்கின்றன.

  ஆனால், இவற்றுக்கு அடுத்த நிலையில் இடம் பெறும் நூலான திருக்குறள், எந்த ஒரு சமயத்தையும் சார்ந்தது இல்லை. அதே சமயம் எந்தவொரு சமயத்தை சாடி எழுந்ததும் இல்லை.

  உலகின் எல்லா சமயத்தவரும் ஏற்றுப் போற்றுகின்ற, அதே சமயம், சமய மறுப்பாளர்களும் ஏற்றுக் கொள்கின்ற ஒரே நூலாக, ஒப்பற்ற நூலாக விளங்குவது திருக்குறள்தான். சமயச் சார்பாளர்களும் சமய மறுப்பாளர்களும் தத்தம் சார்புநிலை கடந்து வள்ளுவம் உணர்த்துகிற வாழ்வியல் உண்மைகளைக் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள்; அனுபவித்துப் பயன் எய்தியிருக்கிறார்கள்.

  தாம் பெற்ற பெரும்பயனை உலகத்தவர் எல்லாரும் பெற வேண்டும் என்கிற நன்னோக்கில், தத்தம் முயற்சியால் செய்த பேருழைப்பின் வெளிப்பாடுதான் இத்தகைய உலகளாவிய மொழிபெயர்ப்பு. இதுவரையில், நரிக்குறவர்கள் பேசும் வாக்ரிபோலி உள்ளிட்ட 34 மொழிகளில், திருக்குறளுக்கு 130 மொழி பெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் மட்டும் சுமார் 40-க்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் வெளியாகி உள்ளன.

  இலத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு, டச்சு, பின்னிஷ், போலிஷ், ரஷ்யன், சீனம், பிஜி, மலாய், பர்மியம் முதலிய பிறநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பெற்றுள்ளது.

  "செப்புமொழிகள் பதினெட்டு உடைய' இந்தியத் திருநாட்டிலோ, வடமொழி, இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம், மணிப்புரி ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழியாக்கம் பெற்றிருக்கின்றது. இன்னும் பிற மொழிகளிலும் ஆக்கம்பெறும்.

  இதனால், பெருமை தமிழுக்கு என்றாலும் பெரும் பயன் இந்தியர்களுக்கே. காலங்காலமாக, இந்திய நாடு ஏற்றுக் கொண்டுள்ள இறையாண்மைக்குத் தக்கவாறு இந்தியர்களை நெறிப்படுத்தும் உன்னதக் கருத்துகளை உள்ளடக்கிய நூலாகத் திருக்குறள் திகழ்கிறது என்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

  இன்றைக்கு இந்திய அரசு பெரிதும் வலியுறுத்துகிற ஒருமைப்பாட்டு உணர்வை, உணர்வுபூர்வமாகச் செயல்பாடாக ஆக்கும் வல்லமை இந்த நூலுக்கு உண்டு.

  ஒவ்வொரு உள்ளத்தின் உள்ளும் சாதி, சமய, இன, மொழி முதலான எல்லைகளைக் கடந்து, தன்னை ஓர் இந்தியனாக, இந்தியத் தன்மை கொண்ட உலகமானுடனாக உணரவைக்கும் அற்புதத்தை, "பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்கிற வாசகம் செய்து காட்டும்.

  "செக்யூலரிசம்' என்பதற்குச் சமயச்சார்பின்மை என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஏனைய நாடுகளில் எப்படியோ, இந்தியத் திருநாட்டில் எல்லாச் சமயத்தவர்க்கும் இடமுண்டு.

  என் சமயம் என்று சொல்லும் ஒவ்வொருவரும் தத்தமது சமயநெறி நின்று வாழ வழி வகுக்கும் இந்தியா, சமயங்களை ஏற்றுக்கொள்கிற நாடு. சமய மறுப்பாளர்களையும் ஏற்றுக்கொள்கிற நாடு. எனவே, சமய சகிப்பு, சமயச்சார்பின்மை என்பதைவிட, எல்லாச் சமயங்களையும், சமய மறுப்புகளையும் ஏற்றுப் போற்றுகிற சமய ஒருமை பேணுகிற நாடாகவே இது திகழ்ந்துவருகிறது.

  ஆகவே, இதற்கு ஏற்ற நெறிகளை உணர்த்தும் ஒரு பொதுநூலாக, உள்நாட்டவர்கள் மட்டுமல்ல, உலகத்தவரும் ஏற்றுக்கொள்கிற ஒரு தேசிய நூலாகத் திருக்குறளை அறிவிப்பதில் என்ன தடை?

  மேலும், இது சமய நெறிகளை மட்டும் போதிப்பதாகச் சுருங்கிவிடவில்லை. ஆட்சியாளர்களுக்கு வேண்டிய அறநெறிகளையும், பின்பற்றியே ஆகவேண்டிய பெருநெறிகளையும் இலகுவாக எடுத்துரைக்கின்ற நூலாக விளங்குகின்றது.

  இந்நூல் தோன்றிய காலம் மன்னராட்சிக் காலம் என்றாலும் எந்தவொரு மன்னனின் பெயரையோ, ஆட்சி மரபையோ முன்வைக்காத திருக்குறள், ஜனநாயக மரபுக்கு ஏற்ற ஒழுகலாறுகளைத்தான் எடுத்துரைக்கின்றது.

  குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு என்கிறது திருக்குறள். இது மாநில முதல்வருக்கும் பொருந்தும்; பிரதமருக்கும் ஏற்புடையதாகும்.

  மேலும், இயல்பாகச் சொல்வதையும் அழுத்தமாக, எடுத்தொலிக்க வேண்டும் என்பதால், தழீஇ என அளபெடுத்து ஒலிப்பதில் எத்தனை ஆர்வம் திருவள்ளுவருக்கு இருந்திருக்க வேண்டும்?

  இவ்வாறு, அரசியலாருக்கு மட்டுமா? கல்வியாளர்களுக்கு, சிந்தனையாளர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு, மருத்துவர்களுக்கு, பொருளாதார நிபுணர்களுக்கு, பொறியாளர்களுக்கு, நிர்வாகிகளுக்கு என்று துறைதோறும் துறைதோறும் உயரிய உண்மைகளை, உயர்வு நவிற்சியாக இல்லாமல், உண்மை விளக்கும் இயல்பு நவிற்சியாக, எடுத்துரைப்பதில் திருக்குறளுக்கு இணை வேறு இல்லை என்பதை உலகத்தவர் அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்களே!

  உலகின் சிந்தனை வளர்ச்சிக்கும் ஏற்றத்திற்கும் தங்களை ஒப்புக்கொடுத்துக்கொண்ட பேரறிஞர்கள் பலரோடும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களுக்கும் மேலானவராய் திருவள்ளுவரை ஏற்றுக்கொள்ள வைத்த இலக்கிய நூல்.

  அதை விடவும், அவரோடு ஒப்பிட்டு ஆராய்கிற ஒப்புக்கொள்கிற அறிஞர்களின் வரலாறு இருக்கிறது. வாழ்வியல் பின்புலம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், திருக்குறள் தந்த திருவள்ளுவருக்கு அப்படி ஒரு பின்புலம் உறுதியாக இதுவென்று வரையறுக்கப்பெறவில்லை. இதுகூட, இந்திய மரபிற்கு எடுத்துக்காட்டாகவே விளங்குகிறது. நதி மூலம், ரிஷி மூலம் காண்பது இல்லை என்கிற பெருநோக்கு நம்மிடம் இருக்கிறதே.

  எந்தக் குலத்தில், எந்த இனத்தில், எந்தப் பின்புலத்தில் தோன்றினாலும், ஞானம் உரைத்த பெரியோர்களை ரிஷி எனப் போற்றும் இந்திய மரபில் மிகவும் உன்னதமான ரிஷி அல்லவா இந்தத் தமிழர்? தமிழர்தம் பெருமைக்குரிய சித்தர்மரபையும் இதனையும் சேர்த்து ஒப்பிட்டுப் பார்த்து உணரலாம்.

  வீடுபேறு என்று தனியே விளக்காமல், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களுக்கு உள்ளேயே வீட்டையும் உள்ளடக்கிக் காட்டிய ஞான நூல் திருக்குறள். அந்த ஞானம் மெய்ஞானம் சார்ந்தும் விளக்கம் பெறுகிறது. விஞ்ஞானம் சார்ந்தும் உணர்த்தப் பெறுகிறது.

  உண்மையில், அறிவியல், ஆன்மிகம், கலை, இலக்கியம், மருத்துவம், நிர்வாகம், பொருளாதாரம், உளவியல் உள்ளிட்ட பல்வேறு துறையாளர்களும் பங்கெடுத்துக்கொண்டு விவாதிக்கவும், விளக்கம் பெறவும், மேலெடுத்துச் செயல்படவும் தூண்டித் துணை நிற்பதோடு, அவர்களது ஆதார நூல்களுள் அடிப்படையானதாக ஏற்றுக்கொள்ள வைக்கும் ஏற்றம் உடையதாகவும் இந்நூல் விளங்குகிறது.

  இன்றுவரை எத்தனையோ விளக்க உரைகள் இதற்கு வந்து கொண்டே இருக்கின்றன. என்றாலும், இதன் மூலத்திற்குமுன் முழுமையாக நிற்கும் பேராற்றல் எந்த உரைக்கும் இருக்கவில்லை.

  அதேவேளை, அந்தந்த உரை நூல்களுக்கும், விளக்க நூல்களுக்கும், ஆய்வு நூல்களுக்கும் வேண்டிய அனைத்து ஆற்றல்களையும் அள்ளி வழங்குகிற ஆற்றல் உடையது திருக்குறள். அளிக்க, அளிக்கத் தனதுஆற்றல் முன்னிலும் பன்மடங்கு மேலெழுந்து நிற்கும்படியாக எழுந்து சிறப்பதும் இந்நூல்தான்.

  தம் வாழ்நாள் முழுவதும் இத்தகு கருத்துகளை இந்திய மற்றும் உலக அளவில் பலரும் எடுத்து முழங்கியிருக்கின்றனர். தமிழகம் ஏற்றுப் போற்றும் உன்னத நூலை, உலகத்தவர் எல்லாரும் உவந்து ஏற்றுத் தம் நூல் என்று உரிமை கொண்டாடும் அளவிற்குச் சிறந்த திருக்குறளைத் "தேசிய நூலாக' அறிவிக்க வேண்டும் என்னும் முழக்கம் இந்தியா எங்கும் எழுந்து ஒலிக்க வேண்டும்.

  குறிப்பாக, தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் இச்சிந்தனை ஆக்கம் பெறவேண்டும். மொழிக் கல்வி, தத்துவக் கல்வி என்கிற அளவில் சுருங்கிவிடாமல், பொறியியல், மருத்துவம், நிர்வாகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்நூலின் கருத்தாக்கங்கள் வெளிப்பட வேண்டும்.

  இந்தியப் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும், திருவள்ளுவர் இருக்கை ஏற்படுத்தப்பெற வேண்டும். தக்க அறிஞர்களை அவ்விருக்கையில் அமர்த்தி இந்திய மொழிகளில் திருக்குறள் நெறிகளைத் துறைசார்நிலைகளில் செயல்படுத்த இதுவே நல்ல தருணம். இதை நழுவ விடலாமா?

   

  கட்டுரையாளர்: துணைப் பேராசிரியர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai