Enable Javscript for better performance
தேவை புதிய அரசியல் கலாசாரம்!- Dinamani

சுடச்சுட

    

    அண்மையில் தமிழக அரசியலில் ஒரு திருப்பம். ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத்துவக்க முடிவு செய்திருக்கிறார். இது காங்கிரஸ் கட்சியில் மட்டும் ஏற்பட்டிருக்கிற பெரிய திருப்பமா அல்லது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தகூடிய புதிய திருப்பமா என்பதுதான் கேள்வி.

    தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படவேண்டிய, மாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மாற்றம் கொண்டுவரக்கூடிய எந்த கட்சியோ, தலைமையோ கண்ணுக்கெட்டாததால், திராவிட அரசியலிலிருந்து மாற்றம் என்பது பேச்சளவிலேய நின்று விட்டிருக்கிறது.

    தமிழக அரசியலில் பெரிய மாறுதலைக் கொண்டுவந்தது 1960-களில் அரசியல் கட்சியாக வலுப்பெற்ற ஹிந்து ஆன்மிக விரோத, தேசிய விரோத திராவிட முன்னேற்றக் கழகம்தான். திராவிட இயக்கம் எல்லா மத நம்பிக்கைகளையும் எதிர்க்கக்கூடிய ஒட்டுமொத்த நாத்திக இயக்கம் அல்ல. அது ஹிந்து ஆத்திகத்தை மட்டும் குறிவைத்ததே தவிர மற்ற மதங்களை எதிர்க்காதது மட்டுமல்லாமல், அவற்றைப் போற்றி, அவற்றுடன் உறவாடியும் வந்தது.

    இதனால் மற்ற மதங்களைப் போற்றி ஹிந்து மதத்தை ஒருவர் இகழ்ந்தால்தான் அவர் சிறுபான்மையினரின் ஆதரவாளர் என்று எண்ணுகிற அளவுக்கு வக்கிரமான மதசார்பின்மை சிந்தனை தமிழ்நாட்டில் உருவாகியது.

    ஆகவே, திராவிட இயக்கம் 1970-கள் வரை, குறிப்பாக, எம்.ஜி.ஆர். அ.தி.மு.க-வை உருவாக்கும் வரை, ஹிந்து எதிர்ப்பை மட்டுமே நாத்திகக் கொள்கையாகக் கொண்டிருந்தது. அதுவே திராவிட இயக்கங்களின் மதசர்பின்மை விளக்கமாகவும் அமைந்தது. இன்றும் திமுகவின் மதசார்பின்மை விளக்கம் அப்படித்தான் இருக்கிறது.

    காங்கிரஸ் கொடிகட்டி பறந்த தமிழ் நாட்டில், 15 ஆண்டுகளில் திராவிடச் சிந்தனையின் அரசியல் உருவமான தி.மு.க. சுனாமி போல் மாறி 1967-இல் ஆட்சியைக் கைப்பற்றியது. 1967-லிருந்து இன்று வரை திராவிட கட்சிகளின் ஆட்சிதான்.

    1967-க்குப் பிறகு திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தினால் தேசிய மரபுகள் மறைந்து, தேசிய தமிழக அரசியல் குறுகி மாநில அரசியலாக மாறியது. 1971-க்கு பிறகு, தமிழகம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலக, தேசிய கட்சிகள் எல்லாமே எதாவது ஒரு திராவிட கட்சியை அண்டிப்பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

    இப்படி ஒரு நிலை ஒரு பக்கம் ஏற்பட்டாலும், மறுபக்கம், 1972-இல் தி.மு.க. பிளவுபட்டு, எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. உருவானதிலிருந்து, மறைமுகமாக இருந்து வந்த பிரிவினைவாதம் கலந்த தேசிய விரோத திராவிட அரசியல் படிப்படியாக தமிழ்நாட்டிலிருந்து மறைந்தது. அநாகரிகமான ஹிந்து தெய்வ விரோத அரசியலை மாற்றி தமிழக அரசியலில் ஓரளவுக்கு பண்பையும், நாகரிகத்தையும், தேசியத்தையும் திரும்பக்கொண்டுவந்த பெருமை எம்.ஜி.யாரையே சாரும்.

    ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த, குறிப்பாக கலைஞர் கருணாநிதி பதவிக்கு வந்த, அதே நேரத்தில், நாட்டை ஆளும் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியிலும் பிளவு ஏற்பட்டது. அதன் காரணமாக இந்திரா காந்தி தலைமையில் இருந்த ஆளும் காங்கிரஸ் கட்சி தி.மு.க-வுடன் உறவுகொண்டு, காமராஜர் தலைமையில் இருந்த ஸ்தாபன காங்கிரஸ் கட்சியை 1971 தேர்தலில் தோற்கடித்தது. விளைவு, தமிழகத்தில் பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்த தேசிய நீரோட்டம் நாளடைவில் குறுகிக் குறுகி ஒரு சிறு நீரோடையாக - சொல்லப்போனால் சாக்கடையாக - மாறியது. ஆகவே, தி.மு.க. பிளவு பட்டாலும் தமிழகத்தில் பிரிவினைவாதம் நலிந்து தேசியம் தழைக்க ஆரம்பித்ததே தவிர தேசிய கட்சியான காங்கிரஸ் தலை தூக்கவில்லை.

    இருந்தும், தி.மு.க. பிளவுபட்டதன் காரணமாக, தமிழ் சமுதாயத்திலும் அரசியலிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போது எந்தவிதமான தேச விரோத கொள்கையும் இல்லாமல் - ஏன் எந்தவிதமான கொள்கையுமே இல்லாமல் - அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே கொள்கையாகக் கொண்டு இருக்கும் அரசியல் கட்சிகளாக திராவிட கட்சிகள் மாறின.

    அரசியலில் எப்படி தேசவிரோத திராவிடம் மறைந்ததோ அதுபோலவே சமுதாயத்தில் ஹிந்து விரோத நாத்திகம் மறைந்தது. எந்தெந்த நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்று தி.க., தி.மு.க. சாடியதோ - அது தீ மிதியாக இருக்கலாம் அல்லது அலகு குத்துவதாக இருக்கலாம் - அவை எல்லாம் முன்னைவிடப் பல மடங்கு வரவேற்புடன் சமுதாயத்தில் பரவி அவற்றில் தி.மு.க. உள்பட திராவிட கட்சியினரே பங்கேற்கிற அளவுக்கு பிரசித்தமாகின. 50 ஆண்டுகளுக்கு முன் எந்த அளவுக்கு தெய்வ நம்பிக்கை தமிழ்நாட்டில் இருந்ததோ, அதை விட பலமடங்கு இப்போது வளர்ந்து இருக்கின்றது.

    மக்களை இப்படி மாற்றியது அரசியலோ அரசியல் வாதிகளோ அல்ல. மக்கள் தாங்களாகவே நாத்திகத்தை வெறுக்க ஆரம்பித்தனர். ஆத்திகம் தழைத்தோங்க ஆரம்பித்தது. இதனால்தான் திராவிட அரசியல் சரிந்து திராவிட இயக்கங்கள் கலகலத்துப் போயின.

    பொதுவாகவே தமிழ் சமுதாயத்துக்கும் திராவிட கட்சிகளுக்கும் இடையே இடைவெளி அதிகமாகிக்கொண்டு வருகிறது. திராவிட அரசியல் பாணியால் அரசியல்வாதிகளுக்கும் மரியாதை குறைந்துவருகிறது.

    அரசியல்வாதிகளுக்கு எல்லோரும் அளவுக்கு மீறி அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டதால் மற்ற யாருக்கும் பெரிய மரியாதை இல்லாத ஒரு நிலை உருவாகின. உயர்ந்த மனிதர்களே அதிகம் இல்லையோ என்கிற சூழ்நிலை இப்போது. இந்த நிலையில், தி.மு.க. "அ.தி.மு.க. என்று இரண்டு கட்சிகளிடையே சிக்கியிருக்கும் தமிழகம்', திராவிட கட்சிகள் இரண்டும் அல்லாத, எந்தவித திராவிட சாயலும் இல்லாத ஒரு மாற்று கட்சி அல்லது அரசியல் வாழ்க்கைக்காக கடந்த 30 ஆண்டுகளாக எதிர்பார்க்கிறது.

    இப்போது அ.தி.மு.க-வுக்கு இருக்கும் ஆதரவில் பாதி தி.மு.க-வின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்திதான் என்று பலர் கருதுகிறார்கள்.

    தமிழகத்தில் உதயசூரியன் சின்னம் கொண்ட தி.மு.க., மிகப்பிரகாசமாக உயர்ந்து, புகழின் உச்சாணிக்குச் சென்று, பின்பு தாழ்ந்து இப்போது பலவிதமான ஊழல்களில் சிக்கி, இப்போது அஸ்தமன சூரியன் போல இருக்கிறது.

    தி.மு.க-வில் இருப்பவர்களே திராவிட இயக்கத்தின் பலன் பல குடும்பங்கள் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சேர்த்ததுதான் என்று கூறுகிற அளவுக்கு திமுகவின் நிலை தாழ்ந்து விட்டிருக்கிறது. கட்சிக்கும் குடும்பத்துக்கு வித்தியாசம் இல்லை என்கிற நிலை.

    ஆனாலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி இருக்கும் வரை அக்கட்சியைக் குறைத்து மதிப்பிட முடியாது. 1968-லிருந்து தமிழகத்தின் அரசியலில் பெரும்பங்கு வகித்த அவர் இன்றும், வயதாகியும் கூட, செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

    இந்த நேரத்தில், அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் அ.தி.மு.க-வுக்கு அந்தக் கட்சியின் தன்னிகரில்லாத் தலைவி ஜெயலலிதா வழக்கில் சிக்கியிருப்பதால், அ.தி.மு.க. மட்டுமல்லாமல் தமிழக அரசியலும் கூட ஒரு முடுக்கில் மாட்டிகொண்டிருக்கிறது. அதிலிருந்து அ.தி.மு.க. விடுபட வேண்டுமானால், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைய வேண்டும். அவருக்கெதிரான வழக்கில் சாரம் இல்லை, அதனால், தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமையலாம் என்றும் சில நடுநிலை சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    அப்படி நடந்தால் தமிழக அரசியல் சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கும். இல்லை என்றால், தமிழக அரசியலில் தீர்க்க முடியாத குழப்பம் நீடிக்கும். ÷மோடி தலைமயிலான பா.ஜ.க. தமிழகத்தில் ஒரு சக்தியாக உருவாக வாய்ப்பிருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள்.

    பா.ஜ.க-வுக்கு நல்ல எதிர் காலமிருக்கிறது. ஆனால், இருக்கும் அரசியல் இடைவெளியை அது உடனே நிரப்புமா என்கிற கேள்வியும் எழுகிறது. ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. வலுவாக இருக்கும்வரை, அதுதான் தி.மு.க-வை தோற்கடிக்க முடியும் என்று அந்த வாக்காளர்கள் நினைக்கும் வரை பா.ஜ.க. மாற்று சக்தியாக உருவாகும் வாய்ப்பு குறைவு என்று நினைக்கிறார்கள்.

    அகில இந்திய அளவிலான பா.ஜ.க-வின் எழுச்சி தமிழ்நாட்டிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சிந்தனையாளர்கள் பலர் நினைக்கிறார்கள். ஆனால், கூட்டணி அமைத்து பா.ஜ.க. தன்னுடைய தனித்தன்மையை மங்கவிட்டுவிட்டால் பா.ஜ.க-வின் மகத்துவம் குறைந்து அதுவும் மற்ற கட்சிகளைப்போல ஆகிவிடும் என்பதும் ஒரு கருத்து. பா.ம.க. தலைவர் ராமதாஸ், தமிழகத்தில் அனைத்து ஜாதிகளையும் இணைத்து ஒரு மாறுதலைக் கொண்டு வர முயற்சி செய்கிறார். வைகோ மற்றும் பலர் அரசியல் அரங்கத்தில் இருந்தாலும் அவர்கள் மற்றவர்களைச் சார்ந்துதான் அரசியல் நடத்தமுடியும் என்றும் ஆய்வாளர்கள் பலர் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில்தான் ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புது கட்சி ஆரம்பித்திருக்கிறார். 1996-ஆம் ஆண்டு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வாசனின் தந்தை ஜி.கே. மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் துவக்கி, தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து ஒரு பெரும் வெற்றி பெற்றது எல்லோருக்கும் நினைவிலிருக்கும்.

    ஆனால், அன்றைய அந்த நிலைக்கும் இப்போதைய நிலைக்கும் சம்பந்தமே இல்லை. அப்போது தேர்தல் இல்லை என்றால், காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றால், மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியே இருக்கமாட்டார்.

    அன்று மூப்பனார் செய்ததை இன்று வாசனால் செய்ய முடியுமா என்கிற கேள்விக்கு, முடியாது என்று பதில் கூற ஒரு சித்த புருஷர் தேவை இல்லை. ஆகவே 1996-க்கும் 2014-க்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

    ஆனால், எந்த விதத்தில் செயல்பட்டால் ஜி.கே. வாசன் தமிழக அரசியலில் ஒரு மாறுதலை செய்ய முடியும்? தற்போதய அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் என்கிற உறுதி அவருக்குத் தேவை. அதற்கு சரியான தலைவர்களையும் அறிவு ஜீவிகளையும், ஆலோசகர்களையும் அவர் நாடவேண்டும். மக்களை பெருமளவுக்குத் தொடர்பு கொள்ளவேண்டும். வெகுஜன எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். தேசபக்தி மற்றும் நாணயம் உள்ள இளைஞர்களை உருவாக்கவேண்டும். இது ஓரிரு ஆண்டுகளில் நடக்காது. ஆக அடுத்த தேர்தலை மனதில் கொண்டு இதில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கினால், அது இன்னொரு கட்சியை மட்டுமே உருவாக்கும். தமிழ் நாட்டுக்குத் தேவை இன்னொரு கட்சி அல்ல. ஒரு புதிய அரசியல் கலாசாரம். அதை செயல்படுத்தும் ஒரு தலைவர்.

    காமராஜர் ஆட்சி வரவேண்டுமென்றால் அவர் கடைபிடித்த அரசியல் பண்பும் பாணியும் கலந்த இயக்கம் உருவாகவேண்டும். வாசன் நல்லவர் தான். ஆனாலும், அவர் தமிழக அரசியல் கலாசாரத்தை மாற்றும் வல்லமை பெற்றவர் என்று மக்கள் நம்பும் படியாக அவர் தன்னை நடத்திக்கொள்ள வேண்டும்.

    தோல்வியை சந்திக்கும் தைரியம் யாருக்கு இருக்கிறதோ அவர்தான் வெற்றி அடைய முடியும். மேலும், போலி மதசார்பின்மை அரசியல் தேசியத்தையும் தமிழ் பாரம்பரியத்தையும் அழித்துவருகிறது. தமிழ்நாட்டில் பயங்கர வாதம் உருவாக இதுவும் ஒரு காரணம். இது தரமற்ற அரசியலிலும் ஒரு பெரிய அங்கம் வகிக்கிறது. போலி மதசார்பின்மையை கைவிட்டுவிட்டு எல்லா மதங்களையும் போற்றும் அரசியல் கலாசாரத்தை கொண்டு வரவேண்டும். தமிழக மக்கள் போலி மதவாதத்தை நிராகரிக்கிறார்கள் என்பதற்கு எம்.ஜி.யா-ரின் மூகாம்பிகை கோயில் பயணமே சான்று.

    இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுவோம். தமிழக மக்கள் கோவில்களையும் தெய்வத்தையும் போற்றுபவர்கள். இன்று ஹிந்து கோயில்கள் அரசாங்கத்தின் சொத்தாக மாறி அரசியல்வாதிகள் கையில் கோயில் சிலைகளிலிருந்து, நகைகள், நிலங்கள் வரை சிக்கிக் கொண்டு இருக்கின்றன.

    இந்தக் கோயில்களை அரசியல் பிடியிலிருந்து விடுவித்து ஆன்மிகவாதிகள் கையில் ஒப்படைப்பேன் என்று கூறுகிற அரசியல் தலைவரை தமிழகம் வேண்டுகிறது. இது ஒரு பெரிய ஆன்மிக - அரசியல் புரட்சியை உருவாக்கும். இதை பா.ஜ.க. கூறினால் அது புரட்சியாகாது. வாசன் செய்தால் பெரும் ஆன்மிகப் புரட்சியாகும். மற்ற மதத்தினர் யாரும் இதை எதிர்க்க மாட்டார்கள்.

    அடுத்தது, பகிரங்கமாக பணம் கொடுத்து ஒட்டு வாங்குவது. மக்களுடைய ஆயிரக்கணக்கான கோடி ருபாய்களை கொள்ளை அடித்தால்தான் அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஓட்டு வாங்க முடியும். ஆகவே, மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுப் போடவைக்கும் பழக்கம் ஒழிந்தால் தவிர, லஞ்ச லாவண்ய அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கிடையாது.

    வாசன் காசுக்காக ஓட்டு என்கிற கலாசாரத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்த வேண்டும். முக்கியமான எல்லா கோயில்களுக்கும், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற மற்ற மத தலங்களுக்கும் சென்று தமிழ்நாட்டுக்கு ஓட்டு விற்பனை கலாசாரத்திலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவேண்டும். உடனே வெளியில் வந்து மக்கள் பேரணியில் பேசவேண்டும். அவர்களை காசுக்காக ஓட்டை விற்கமாட்டோம் என்று உறுதி மொழி எடுக்க வைக்க வேண்டும்.

    தமிழக அரசியல் கலாசாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை இவை. வாசன் இப்படி யோசிப்பாரா? செயல் படுவாரா? இன்றைய அரசியல் கலாசாரத்திலேயே ஊறிய அவருடைய சகாக்கள் அவருடன் ஒத்துப்போவார்களா? தேர்தலில் வெற்றி மட்டுமே குறிக்கோள் என்பதை விட்டுவிட்டு, தமிழகத்தின் அரசியலை சுத்தப்படுத்துவேன் என்று உறுதிமொழி எடுப்பார்களா? இவை எல்லாம் கேள்விகள். பதில்கள் அவர்களிடமிருந்துதான் வரவேண்டும்!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai