Enable Javscript for better performance
ஊழலற்ற பாதை வகுப்போம்!- Dinamani

சுடச்சுட

  

  உலக வணிக முறை சீராக இயங்க தடங்கலாக இருப்பது ஊழல் என்பதை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை, ஊழலைத் தடுக்கவும், தவிர்க்கவும் 1990-இல் இருந்து பல கலந்தாய்வுக் கூட்டங்கள் மூலம் முயற்சி எடுத்துள்ளது. ஊழல் தடுப்பு உடன்படிக்கை 2003-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் நாள் கையெழுத்திடப்பட்டு, 2005 டிசம்பர் 14- இல் அமலுக்கு வந்தது. இதுவரை 140 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தத்தம் நாட்டில் அமல்படுத்தத் துவங்கியுள்ளன.

  இந்தியா 2011-ஆம் ஆண்டுதான் நாடாளுமன்றத்தில் வைத்து பிரகடனத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. பிரிட்டன் போன்ற பல நாடுகள் கையூட்டு தடுக்கும் சட்டத்தை (ப்ரைபரி ஆக்ட்) அமல்படுத்தியுள்ளன. ஆனால், இந்தியாவில், லோக்பால், லோக் ஆயுக்தா, ஒருங்கிணைந்த ஊழல் தடுப்பு சட்டம் போன்றவை இன்னும் நாடாளுமன்றத்தில் விவாத அளவில்தான் உள்ளன. தனியார் முறைகேடுகளையும் ஒருமுகப்படுத்தும் சட்டம் விரைவில் நிறைவேற வேண்டும்.

  1964-ஆம் ஆண்டு அரசு நடவடிக்கைகளில் ஊழலைத் தவிர்க்க எடுக்க வேண்டிய செயல் முறைகளை ஆராய்ந்து சந்தானம் தலைமையிலான கமிட்டி பரிந்துரைகளை அளித்தது. அதன் அடிப்படையில் உருவானதுதான் சி.வி.சி. எனப்படும் மத்திய விழிப்பணர்வு ஆணையம்.

  ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான ஊழல் தடுப்புச் செய்தியை முன்நிறுத்தி, நாடெங்கிலும் அதற்கான விழிப்புணர்வை எடுப்பதற்கு எல்லா அரசுத்துறைகளையும் சி.வி.சி. அறிவுறுத்தும். ஊழல் ஒழிப்பு உறுதிமொழியும் எடுக்கப்படும்.

  2013-ஆம் ஆண்டு, அரசு தனது தேவைக்கான கொள்முதலில் வெளிப்படைத் தன்மையையும், ஊழலற்ற முறையையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. வளர்ச்சிப் பணிகளுக்காக அரசுதுறைகள் மூலமாக கொள்முதல் மதிப்பு வருடத்திற்கு சுமார் ரூபாய் பனிரெண்டாயிரம் கோடி. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறியீட்டில் முப்பது சதவீதம். இதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

  ஊழலற்ற நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சி.வி.சி. இந்த பொருண்மையை முன் வைத்தது. எந்த அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டது என்பதும் அதன் விளைவாக ஊழல் குறைந்ததா என்பதும் கேள்விக்குறியே. காற்றலை, நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டில் எழுந்த முறைகேடுகள் நீதிமன்றங்களின் பார்வைக்கு வந்துள்ளன.

  எட்டு அத்தியாயம், 71 ஷரத்துகள் கொண்ட ஐநா உடன்படிக்கையில், எல்லா நாடுகளும் ஊழல் தடுப்பு முறைகளை மேம்படுத்தவும், நன்னெறி வழிகளுக்கு ஊக்கம் அளிக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மேலும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்படும் சொத்துகளை மீட்க பரஸ்பர உதவி நல்க வேண்டும் என்று 54 1அ பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பு சொத்துகளை முடக்க, நாடுகளுக்கிடையே சட்ட உதவி புரிந்துணர்வு ஒப்பந்தமும் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக கலந்தாய்வு தொடர்ந்து நடந்தும், சர்ச்சை முடிவுக்கு வராமலே இருந்தது.

  வளர்ந்து வரும் நாடுகளில் அரசியல் நிலையாமை, ராணுவ ஆதிக்கம், அரசு அதிகாரிகளின் வஞ்சகம் போன்றவை காரணமாக ஊழல்

  தறிகெட்டு, ஊழல் பணம் பாதுகாப்பான நாடுகளில் பதுக்குவது தொடர்ந்து வருவதால், ஒரு கட்டத்தில் சொத்து மீட்பு முக்கியமான நடவடிக்கையாகிறது.

  கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளை மீட்க வழி செய்யும் சர்வதேச சொத்து மீட்பு அத்தியாயம் ஐந்தில் உள்ளடக்கிய ஷரத்துகள் சேர்க்கப்பட்டதன் அடிப்படையில்தான் வளர்ந்து வரும் பல நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்க முன் வந்தன.

  தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்ற ஆணையின்படி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கணக்கில் வராத பணத்தை மீட்க சிறப்பு விசாரணைக் குழாமை நீதிபதி ஷா தலைமையில் அமைத்துள்ளது. இதில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றதை

  உச்சநீதிமன்றம் முனைப்பாகக் கண்காணிக்கிறது. அதைவிட முக்கியம், நாட்டில் புழங்கும் கணக்கில் வராத பணத்தை வெளிக் கொணரும் நடவடிக்கை.

  ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம், சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்திலிருந்து ஒரு வாரம் நாடெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த மறு ஆண்டே, ராணுவத்திற்கு வாகனங்கள் வாங்குவதில் நடைபெற்ற முறைகேடு பரபரப்பை ஏற்படுத்தியது.

  அப்போதே படேல், பொது வாழ்வில் தரம் தாழ்ந்து வருவது பற்றியும், ஆளுமையிலும், நிர்வாகத்திலும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை, மனவேதனை அளிக்கிறது என்றும் தனது வருத்தத்தை தெரிவித்தார். நிலைமையை சீர்செய்ய தேவை மாற்றம். ஆனால் வீண் சர்ச்சைதான் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த சர்ச்சை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

  இந்த ஆண்டு மத்திய விஜிலன்ஸ் கமிஷன், தொழில் நுட்பம் எவ்வாறு ஊழலை தவிர்க்க முடியும் என்பதை மையக் கருத்தாக அறிவித்துள்ளது. அரசு நிர்வாகத்தில் பல சட்ட திட்டங்கள் உள்ளன.

  பல்வேறு துறைகளில் நிர்வாக நெறிமுறைகள், விதிகள் உள்ளன. அவற்றைப் புரிந்து கொண்டு அமல் படுத்துவதே அரசு ஊழியருக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். குழப்பமான விதிகளுக்கும் குறைவில்லை. இத்தகைய குழப்பமான விதிகள்தான் ஊழலுக்கு வித்திடுகின்றன.

  ஊழலைத் தவிர்ப்பதற்கு முதல் நடவடிக்கை விதிகளை சுலபமாக்குதல். ஆனால், சுலபமாக்குவது சுலபமல்ல என்பதைக் கண்கூடாக பார்க்கிறோம். உதாரணமாக, காவல் துறையில் புகார் கொடுக்க கணினி மூலமாகப் பதிவு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. அரசு விதிகளைப் புரிந்து கொள்வதை ஜனரஞ்சக அறிவு எனலாம். எவ்வளவுதான் படித்திருந்தாலும், இந்த ஜனரஞ்சக நடைமுறை அறிவை அடைவது என்பது பிரம்ம பிரயத்தனம்தான்.

  இந்தச் சூழலில்தான், தொழில் நுட்பம் மக்களின் உதவிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மத்திய விஜிலன்ஸ் கமிஷன், தொழில் நுட்பத்தைக் கடைப்பிடிக்க அரசுத் துறைகளை அறிவுறுத்தியது வரவேற்கத்தக்கது.

  அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி, மக்களின் கவனத்தையும் அரசின் பார்வையையும் இந்த முக்கிய பிரச்னை மீது திருப்பினார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். அதே சமயம், சி.ஏ.ஜி.யின் தலைவர் வினோத் ராயின் 2ஜி அறிக்கையும் ஹிமாலய ஊழலை மக்கள் முன் வைத்தது.

  அன்றாட வாழ்க்கையில் மக்கள் எதிர்கொள்ளும் அரசுத் துறைகளில் சங்கடமின்றி சேவையைப் பெற, தொழில்நுட்பம் அதிக அளவில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  மக்கள் நேராக எதிர்கொள்ளும் துறைகளில் கணினி மூலம் தகவல்களைப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால், மக்களுக்கு அரசின் சேவை சுலபமாகக் கிடைக்கும். இ-சேவை முறை பல இடங்களில் வழிமுறைகளைச் சுலபமாக்கியுள்ளது.

  அரசுப் பணியாளர்கள் நியமனம், பணி மாற்றம், கல்வி நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் இவற்றில் நேரும் தவறுகளின் பாதிப்பு நேர்முகமாகத் தெரியாது. ஆனால், அதன் விளைவின் அழுத்தம் அதிகம்.

  பணியாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இருப்பதோடு, காலதாமதமின்றி தேர்வுகளின் முடிவுகளையும், பணி நியமன ஆணையையும் அளித்தால்தான் நம்பிக்கை பிறக்கும். அரசுப் பணியாளர்கள் சுமார் முப்பது ஆண்டுகள் பணியில் இருக்கக் கூடியவர்கள். அவர்களது தேர்வு நேர்மையாக நடந்தால்தான் அவர்கள் நேர்மையாகப் பணி புரிவார்கள்.

  தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புத் துறை மூன்று வகையாக நடவடிக்கை எடுக்கிறது. கையும் களவுமாகக் கையூட்டு பெறும்போது பிடிப்பது ஒரு வகை. விதிகளை மீறி, சட்ட விரோதமாக நடந்து லஞ்சம் பெறுவதை கோப்புகளை ஆராய்ந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது இரண்டாவது வகை. மூன்றாவது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தலை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தல்.

  முதல் இரண்டு வழிகளும் தவறு செய்யும் ஊழியரை ஊழல் குற்றத்தோடு நேராக இணைக்கும். மூன்றாவது வழியான "வரவிற்கு அதிகமான சொத்து' என்பது சுற்றி வளைக்கும் வழி.

  எந்த ஒரு நபரும் வீட்டில் உள்ள ஒவ்வொரு குந்துமணிக்கும் கணக்கு காட்டுவது முடியாத காரியம்.

  அபாண்டமாக ஜோடனை செய்வதற்கும், நேர்மையற்ற முறையில் புலன் விசாரணை செய்யவும் சந்தர்ப்பம் அளிக்கும். நேர்மையற்ற விசாரணையும், அதைத் தூண்டி துணை போவதும் ஊழலின் ஒரு பரிமாணமே.

  அரசு நிர்வாகம், கோப்புகளோடு நின்றுவிடாது, மக்களின் வாழ்க்கையை வளமாக்கவும் வல்லது. அன்றாட வாழ்க்கைக்கு உதவிக்கரம் கொடுக்கும் அரசே வல்லரசு.

  மத்திய அரசில் உள் துறை, பாதுகாப்பு, தொழில், உணவு, நிதி என்று ஐம்பத்தோரு அமைச்சகங்கள் உள்ளன. சி.வி.சி., மனித உரிமை போன்ற கண்காணிப்பு ஆணையங்கள், மத்தியிலும் மாநிலங்களிலும் எல்லா நேர்வுகளையும் பார்வையிடுகின்றன.

  மேல் மட்ட நிர்வாகத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சட்டத் திருத்தங்கள், நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தல், அரசியல் சாசனக் கட்டமைப்பைப் பாதுகாத்தல் இவை அரசியல் திறம் சார்ந்தவை.

  இங்கு தொழில்நுட்பத்தைவிட, நேர்மையான சிந்தனையும், மக்கள் பயன்பாட்டை உள்ளடக்கிய நோக்கமும்தான் முக்கியம். அவைதான் ஊழலற்ற பாதையை வகுக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai