Enable Javscript for better performance
மிதமிஞ்சிய வாகனப் பெருக்கம்- Dinamani

சுடச்சுட

    

    இன்றைய நிலையில் ஓர் இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேருவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த அளவுக்கு வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

    மதுரையில் மூன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் 120 முதல் 150 வரை இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மூன்று அலுவலகங்களிலும் சேர்த்து ஒரு நாளில் சுமார் 400 வாகனங்கள் பதிவாகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் இதன் எண்ணிக்கை சற்று குறையலாம்.

    மாதத்துக்கு 20 வேலை நாள்கள் என்று கணக்கிட்டும் செவ்வாய்க்கிழமை பதிவுகளைக் குறைத்தும் சராசரியாகக் கணக்கிட்டால், ஒரு வாரத்துக்கு 1500 வாகனங்கள் மதுரை சாலைகளில் ஓட ஆரம்பிக்கின்றன. அதாவது, மதுரையில் மட்டும் மாதம் 6 ஆயிரம் வாகனங்கள்.

    தமிழகம் முழுவதும் 70 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. சென்னையில் தினசரி வாகனப் பதிவு அதிகமாக இருக்கலாம். சில நகரங்களில் குறைவாக இருக்கலாம். இதையும் சராசரி செய்தால், ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒரு நாளைக்கு 100 வாகனங்கள் என வைத்தால், ஒரு நாளைக்கு 7 ஆயிரம் புதிய வாகனங்கள். ஒரு மாதத்துக்கு 20 வேலை நாள்கள் என கணக்கிட்டால், 1,40,000 வாகனங்கள் தமிழகச் சாலைகளில் உலா வரத் துவங்குகின்றன.

    மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டது... வசதி அதிகரித்து விட்டது... இதனால், வாகனங்கள் வாங்குகிறார்கள் எனக் கூறலாம். ஆனால், வசதி இல்லாதவர்கள் கூட, தவணை முறையிலாவது வாகனம் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. இதற்கு முக்கியக் காரணம் தரமில்லாத பொதுப் போக்குவரத்து அமைப்புதான்.

    நகரமயமாக்கலால் கிராமப்புறங்களில் வாழ்க்கை சீர்குலைந்து விட்டது. விவசாயம் பொய்த்துப்போன நிலையில், கட்டடப் பணிக்கும், சந்தைகள், தனியார் நிறுவனங்கள் பணிக்காகவும் கிராமப்புற மக்கள் தினமும் அருகிலுள்ள நகரத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், அதற்கேற்ப பேருந்து வசதிகள் இல்லை. அப்படியே இருந்தாலும், அவை குறித்த நேரத்தில் வருவது கிடையாது.

    குறித்த நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாததால், மாதத் தவணையிலாவது இரு சக்கர வாகனத்தை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.

    மற்றொரு காரணம், பேருந்துகளில் வசூலிக்கப்படும் தாறுமாறான கட்டணம். சென்னையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.3-ஆக உள்ளது. ஆனால், மதுரையில் குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் ரூ.5. அதுவும் ஒன்றிரண்டு பேருந்துகள் தான்.

    இதைத் தவிர, தாழ்தளம், எல்.எஸ்.எஸ். என்று விதவிதமான கூடுதல் கட்டணப் பேருந்துகள் இயங்குகின்றன. எந்தப் பேருந்துக்கு என்ன கட்டணம் என்பது நமக்கு பயணச்சீட்டு வாங்கும்போதுதான் தெரியும். அந்த நிலையில் தான் மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்குகின்றன.

    திருச்சி, கோவை போன்ற நகரங்களில் இந்தப் பிரச்னை கிடையாது. காரணம் அங்கெல்லாம், நகரப் பேருந்து தடங்களிலும், தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. மதுரையிலும், சென்னையிலும்

    மட்டும்தான் அனைத்து நகரப் பேருந்துகளையும் அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

    கிராமத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நகருக்கு செல்ல ரூ.15 பேருந்துக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்றுவர பேருந்துக் கட்டணம் மட்டும் ரூ.30. இதுவே இருசக்கர வாகனத்தில் 2 பேர் சென்று வந்தால் போகவர 20 கி.மீ.-க்கு ரூ.25 தான் செலவாகிறது.

    ஒருவரது பேருந்துக் கட்டணம் அப்படியே மீதமாகிறது. மேலும், குறித்த நேரத்தில் எந்த இடத்துக்கும் சென்றுவிட முடிகிறது. இதனால், வாகனப் பெருக்கம் மிதமிஞ்சிச் சென்று கொண்டிருக்கிறது.

    இதைப்போன்ற ஒரு நிலை சீனாவில் ஏற்பட்டபோது, வாகனங்கள் வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குஜராத்தில் பொதுப் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டதன் விளைவாக, வாகனங்களில் பெருக்கம் வெகுவாகக் குறைந்தது.

    இவற்றை முன்னோடியாகக் கொண்டு, தமிழகத்திலும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். இல்லையேல், சில ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai