சுடச்சுட

  

  எங்கும் தாமதம், எதிலும் தாமதம் என்ற நிலையே அரசுத் துறைகளில் நீடித்து வருகிறது. தாமதம் என்ற நிலையை முடிந்த அளவுக்கு தவிர்க்கும் வகையில் செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களிடையே எளிதில் சென்றடையும். தாமதத்தைத் தவிர்க்கவே முடியாதா?

  அண்மையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், விவசாயி ஒருவர் அளித்த மனு குறித்து கேள்வி எழுந்தது. மானியத்துடன் கூடிய மாட்டுக்கொட்டகை அமைத்துத் தர அந்த விவசாயி 60 நாள்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார்.

  இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலரிடம் இருந்து வழங்கப்பட்ட பதிலில், உங்கள் மனு பரிசீலனையில் உள்ளது. உங்களுக்குத் தகுதி இருந்தால் மாட்டுக்கொட்டகை அமைக்க பரிசீலிக்கப்படுவீர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இதே பதில், பத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததைக் கண்டு கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியரும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் நொந்து கொண்டனர்.

  பழைய ஆவணங்களை ஆராய்ந்து பார்த்தபோது கடந்த காலங்களில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் இதேபோன்றே பதில் தெரிவிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

  விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு இந்த மாதிரியான பதிலைத் தெரிவிப்பதோடு தங்களது பணி முடிந்துவிட்டதாக சில அதிகாரிகள் நினைக்கின்றனர்.

  ஒருவர் ஒரு திட்டத்தில் தன்னால் பயன்பெற முடியுமா எனக் கேள்வி கேட்டிருந்தால், முடியும் அல்லது முடியாது எனப் பதில் தெரிவித்தால்தான் கேள்வி கேட்டவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  முடியாது என்றால் ஏன் முடியாது என்ற காரணத்தைச் சரியாகக் குறிப்பிட்டால் கேள்வி கேட்டவரும் தனக்கு இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதி இல்லை என்ற முடிவுக்கு வந்து அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிடுவார். ஆனால், குழப்பமான பதில்களால் விவசாயிக்கு எந்தவித பயனும் இல்லை என்பதே உண்மை.

  இந்த விவகாரத்தில் தலையிட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, மனு அளித்த விவசாயிக்கு மாட்டுக்கொட்டகை அமைத்துக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினார்.

  விலையில்லா மாடுகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும்தான் மானியத்துடன்கூடிய மாட்டுக்கொட்டகை அமைத்துக் கொடுக்க முடியும் என அரசாணை உள்ளதாக அந்த அதிகாரி ஆட்சியரிடம் தெரிவித்தார்.

  இந்தக் காரணத்தை முறைப்படி அந்த விவசாயிக்கு தெரிவித்து இருந்தால் அவர் தெளிவடைந்திருப்பார்.

  அதைவிட்டுவிட்டு 60 நாள்களுக்கும்  மேல் தாமதப்படுத்தி அவரது மனு மீது எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் பழைய பல்லவியையே பாடினால் அப்படிப்பட்ட அரசு அதிகாரிகள் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

  ஆனாலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள்குறை தீர்க்கும் நாளில் மனு அளிக்க குவிந்து வருகின்றனர்.

  ஆனால், ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

  மனுக்களைப் பெற்று வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் பதில் அனுப்ப நிர்ணயிக்கப்படும் நாளும் பரிசீலிக்கும் அலுவலர் குறித்த விவரமும் உள்ளன.

  ஆனால், நிறைய அரசு அலுவலகங்களில் இருந்து உரிய பதில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  அப்படியே, பதில் தந்தாலும் அதில் மனுதாரின் கோரிக்கை ஏற்பு என்றும் விரைவில் அதனை செயல்படுத்துவதாகவும் தகவல் தரப்படுகிறது.

  தங்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் சூழல் உருவாகிறது.

  கீழமை அதிகாரிகள் என்றில்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களை அளித்தாலும் தாமதமாகவே பதில் தரப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் கூறப்படுகின்றன.

  மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்படும் கோரிக்கை மனுவின் தன்மை மற்றும் உண்மை நிலையினை நன்கு ஆய்வு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மாதம்தோறும் ஏதாவது ஒரு நாளில் முன்னர் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலையில் மனுதாரருக்கு தகவல் தெரிவித்து

  ஆய்வு மேற்கொண்டால் விரைவில் தீர்வு கிடைப்பதுடன் மக்கள் குறைதீர்க்கும் நாள் எதற்காக நடத்தப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

  தாமதத்தைத் தவிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai