சுடச்சுட

  

  ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  இதற்கு முன்னதாக, 2010-இல் ஜாதிவாரியாகக் கணக்கெடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு உயர்நீதிமன்றம் தந்த முடிவு, வரம்பு மீறியது என்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால், அதற்கு மேல் எந்த நீதிமன்றமும் இந்திய ஆட்சிமுறையில் இல்லை.

  உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பின்படி, பாதிக்கப்பட்டுள்ள சட்டத்தை அரசு உரிய முறையில் திருத்திக் கொள்ள வேண்டும். அல்லது அதைத் தொடர்ந்து பயன்படுத்த அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்

  இந்திய அரசமைப்புச் சட்டம், 1946 டிசம்பர் 9 முதல், 1950 ஜனவரி 24 வரை இந்திய அரசியல் நிர்ணய சபையால் விவாதிக்கப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் செயல்பட ஆரம்பித்தது. அதில் 12 பகுதிகளில் 395 விதிமுறைகளும், 8 பட்டியல்களும் இருந்தன. இது உலகிலேயே மிகவும் நீண்ட, பெரிய அரசமைப்புச் சட்டமாகும்.

  அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு நாட்டின் அடிப்படையான சட்டம் ஆகும். அதற்குக் கீழ்ப்பட்டுதான் ஆட்சி முறையில் உள்ள நாடாளுமன்றம், அரசு, நீதிமன்றம் ஆகிய மூன்று பெரும் பிரிவுகள் தத்தம் வரையறைகளுக்கு உள்பட்டு தனித்த இறையாண்மையுடன் செயல்பட வேண்டும்.

  ஆயினும், சில விதிமுறைகளின் மீது மத்திய - மாநில அரசுகள் சட்டங்களை இயற்றி அவற்றின் மூலம் நடவடிக்கைகளை எடுக்கும்பொழுது, அவற்றுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படலாம்.

  நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அரசின் சட்டங்களுக்கு எதிராகவும் சில பகுதிகளில் வரக்கூடும். அவற்றுக்கான சட்டப் பகுதிகளை உரிய முறையில் திருத்தங்கள் செய்ய சம்பந்தப்பட்ட அரசு முன்வர வேண்டும்.

  அரசமைப்புச் சட்டம் பற்றி 1948 நவம்பர் 8 அன்று அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் ஜவாஹர்லால் நேரு வலியுறுத்தினார். "நாம் உருவாக்கும் அரசமைப்புச் சட்டம் வலுவானதாக, நேர்மையானதாக இருக்க வேண்டும்.

  ஆனால், என்றென்றும் நிலைபெற்ற ஒன்றாக இருக்க முடியாது. தேவைப்படும்பொழுது, அது வளைந்து கொடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்' என்றார்.

  இவ்வாறு கூறிய ஜவாஹர்லால் நேருவுக்கே 1951 மே மாதத்தில் ஒரு சோதனை ஏற்பட்டது. சமுதாய அமைப்பிலும், கல்வி வளர்ச்சியிலும் பின்தங்கியிருந்த, தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்கு, கல்வி - வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அரசு இட ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து மற்ற மக்களுடைய அடிப்படை மனித உரிமைகளுக்கு முரண்பட்டதாக அது இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அந்த குறைபாட்டை ஏற்றுத் தனது தீர்ப்பை அளித்தது.

  அப்பொழுது மத்திய அரசில் முக்கியமாக இருந்தவர்கள், பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியவர்கள்தாம். அவர்கள் இருவரும் முன்னின்று அரசமைப்புச் சட்டத்தையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டையும் உருவாக்கினார்கள்.

  சாதாரணமாக, ஒரு சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதாவை முன்வைத்து, விவாதம் நடைபெறும். மசோதாவில் உள்ள ஒவ்வொரு விதிமுறையின் மீதும் வாக்கெடுப்பு நடத்தி, உறுப்பினர்களில் பெரும்பான்மையோரின் ஆதரவைப் பெறவேண்டும்.

  கடைசியில் எல்லா விதிமுறைகளையும் உள்ளடக்கிய மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, அவையில் உள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, மற்றொரு நாடாளுமன்ற அவையிலும் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டதும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அது சட்டமாக ஆகிவிடும்.

  ஆனால், அரசமைப்பு விதிமுறைகளில் திருத்தம் செய்திட, அதற்கான மசோதாவுக்கு அவையின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் ஆதரவு தரப்படுவதுடன், வாக்கெடுப்பில் அவையில் இருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவும் வேண்டும்.

  இதனை ஒட்டி நீதிமன்றங்கள் தந்த முடிவுகளை ஏற்று, 1952-இல் முதலாவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. பிறகு 2013 டிசம்பர் 5 வரை, 72 தடவை அரசமைப்புச் சட்ட விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன.

  பிரதமராக ஜவாஹர்லால் நேரு 1951 முதல், 27 மே 1964 (அவர் இறக்கும்) வரை, அவருக்கு இருந்த செல்வாக்கால் 16 தடவை அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் எளிதாக நிறைவேற்றப்பட்டன.

  மேலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கூறப்படும்பொழுது, அது ஒரு தனிப்பட்ட சமுதாயப் பிரிவாக இருக்கவில்லை. அந்த இன மக்களுக்குள் பல ஜாதிப்பிரிவுகள் இருந்து வருகின்றன என்பதை மத்திய அரசே வெளிப்படுத்தியது.

  1950-இல் மத்திய அரசு தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரிவுகள் (இர்ய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய் நஸ்ரீட்ங்க்ன்ப்ங்க் இஹள்ற்ங்ள் ஞழ்க்ங்ழ் 1950) என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.

  அது ஒவ்வொரு மாகாணத்திலும் வாழும் தாழ்த்தப்பட்ட இனத்துக்குள் இருக்கும் ஜாதிகள் பற்றிய விவரங்களைத் தந்துள்ளது.

  அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் 76 ஜாதிகளில் இருந்தனர் என உறுதிப்பட பெயர்களை வெளியிட்டுள்ளது.

  அதேபோல் ஆந்திரா, அஸ்ஸாம் தொடங்கி இந்தியாவின் 25 மாகாண - யூனியன் பிரதேசங்களில் தாழ்த்தப்பட்ட இனம் என்பதில் 1,108 தனிப்பட்ட ஜாதிகள் இருக்கின்றன என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

  ஆக, ஜாதிப் பெயர்களைக் காட்டாமல் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாது என்று ஆகிவிட்டது.

  காலப்போக்கில் ஒவ்வொரு மாநிலத்திலும் தாழ்த்தப்பட்ட - மலைவாழ் என்ற பிரிவினருடன், பின்தங்கிய வகுப்பினர், மேலும் பின்தங்கிய வகுப்பினர் என்று பாகுபாடுகள் உண்டாகி, இட ஒதுக்கீடுகள் அதிக அளவில் பெருகியது.

  பல வழக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதிமன்றம் அடிக்கடி வலியுறுத்தியது.

  பிரதமர் ஜவாஹர்லால் நேரு காலத்தில் நிலங்கள் பெருமளவில் சிலரிடம் குவிந்து கிடப்பதைக் கட்டுப்படுத்த 1950-இல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

  சட்டத்துக்கு அதிகமாக உள்ள நிலங்களை அரசு எடுத்துக்கொள்ளும்போது, அதற்கு ஈடாக அரசு தரும் தொகை மார்க்கெட் அளவில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது.

  இதைத் தடுக்க, அரசமைப்புச் சட்டத்தில் 9-ஆவது பட்டியலை உருவாக்கி, நிலக் கட்டுப்பாட்டுக்கான சட்டங்களை அந்தப் பட்டியலின் கீழ் கொண்டு வந்ததால், அவை நீதிமன்றங்களின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டது என்று ஆனது.

  அந்தப் பட்டியல், பல மாநில சட்டங்களுக்குப் பாதுகாப்பு அளித்தது. காலப்போக்கில், ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பது சட்ட விரோதமானது என்று 7 நவம்பர் 2014-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நிலக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சட்டங்களுக்கும் இடமளிக்க மத்திய அரசு முன்வந்தது.

  தமிழ்நாட்டில் கல்வி - வேலைவாய்ப்புக்கான திட்டங்களின்கீழ், பின்தங்கிய பகுதி (30), மிகவும் பின்தங்கிய பகுதி (20), தாழ்த்தப்பட்டவர்கள் (19) என மொத்த இட ஒதுக்கீடு 69 சதவீதம் ஆனது.

  தமிழ் நாட்டின் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்கான அந்தச் சட்டத்தை மத்திய அரசு வரவேற்று, 9-ஆவது பட்டியலில் 257ஏ எண் கணக்கில் சேர்த்தது. அதனால், தமிழ்நாட்டின் 69 சதவீத திட்டம் தொடர்ந்து நிலை பெற்றது.

  நீதிபதி சச்சார் கமிட்டியின் 2006 அறிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து, முஸ்லீம், கிருத்துவர், சீக், ஜெயின், பௌத்தம் ஆகிய பல மதங்களில் பரவியுள்ளனர். புத்த மதத்தில் டாக்டர் அம்பேத்கர் சேர்ந்தார். தற்காலத்தில் அதில் மகாராஷ்டிர மாநிலத்திய தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

  ஆக, அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பில் ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பது தேவைப்படுகிற ஒன்றே தவிர, எந்த வகையிலும் சட்ட விரோதமானது அல்ல.

   

  கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai