Enable Javscript for better performance
முன்னெச்சரிக்கை தேவை- Dinamani

சுடச்சுட

  

  குடிநீர் பிரச்னை, விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை என்பதெல்லாம் இன்று சர்வசாதாரண விஷயமாகிவிட்டது.

  முன்பெல்லாம் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பச்சைப் பசேல் என்று சாகுபடியாகும் பயிர்கள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இன்று கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு வீடுகள், கட்டடங்கள், ஆலைகள் என்று காலம் மாறிவிட்டது.

  இன்னும் கொஞ்ச நாளில் விவசாயம் அடியோடு பொய்த்துப்போய் பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நிலை வந்துவிடும்.

  கடந்த சில ஆண்டுகளாகப் பருவமழை மாறிப் பெய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மாதம் மும்மாரி மழை பொழிந்தது அந்தக் காலம். இன்று மாதமும் மாறி மழை பொழிகிறது.

  பல நாள் வெயிலைத் தாங்கிய நம்மால் ஒருநாள் மழையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை, காரணம், போதிய முன்னேற்பாடுகள் இல்லாததுதான்.

  இன்று தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளது. நீர்நிலைகள் நிரம்பும், விவசாயம் செழிக்கும் என்ற கனவில் விவசாயிகள் இருந்தனர். ஆனால், அவர்கள் கனவு பொய்யாகிப் போனது.

  பல இடங்களில் மழைநீர் தேங்க வழியின்றியும், தூர் வாராத காரணத்தால் நீர்நிலைகள், குளங்களின் கரைகள் உடைப்பெடுத்து தண்ணீர் அனைத்துமே வீணாகிக் கொண்டிருக்கும் நிலைதான் எல்லா மாவட்டங்களிலும் உள்ளது.

  இதுதான் இப்படியென்றால், குளத்தில் நீர் சேமிக்கும் இடங்கள் அனைத்தும் கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளால் நிரம்பி வழிகின்றன. சில பகுதிகளில் குப்பைக் கழிவுகளைக் கொட்டி நீர்நிலைகளை நிரந்தரமாக மூடியும் வருகின்றனர்.

  இதைக் கண்டித்து பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தும் நிலை காணப்படுகிறது.

  கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக இன்று டெல்டா மாவட்ட விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

  அனைத்து குளம், குட்டைகள், ஆறுகளைத் தூர் வாராமல் வைத்திருந்ததன் விளைவு, இன்று மழை வெள்ளம் வந்தும் நீரைத் தேக்க முடியாத பரிதாப நிலை.

  இத்தனைக்கும் காரணம் அதிகாரிகள் மெத்தனப் போக்கால் காலத்தைக் கழித்துவிட்டதே.

  எனவே, ரசிகர் மன்றங்களோ, கட்சிகளோ, தனியார் அமைப்புகளோ தங்களது வீர தீர பிரதாபங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்காட்டி புகழ், பணம் சம்

  பாதிப்பதைத் தவிர்த்து கிராமங்களைத் தத்தெடுத்து தூர் வாருதல், குளம் வெட்டுதல், நீர் நிலைகள் அமைத்தல் போன்ற அடிப்படைப் பணிகளை மேற்கொண்டால், மக்களிடம் நல்ல பெயரும், கூடவே வாக்குகளையும் அள்ளலாமே.

  அண்மையில் பிரதமர் மோடி "தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கிவைத்தார். இது நல்ல விஷயம்தான். இத்திட்டம் நல்லது என்பதால் தெருக்களை மட்டுமே சுத்தம் செய்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துத் தள்ளுகின்றனர்.

  இது தவறான செயல். மாறாக கால்வாய், சாக்கடைகள், ஆறுகள், குளங்களில் கிடக்கும் குப்பைக்கூளங்களை அகற்றியும், செடி, கொடிகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றினாலே போதும், தூய்மையாகிவிடும். விவசாயமும் செழித்தோங்கும். குடிநீர் பிரச்னையும் தீரும்.

  விஞ்ஞானத்தில் முன்னேறி மங்கள்யான்வரை சென்றுவிட்ட நமக்கு, ஊழல், பஞ்சம், பட்டினி, வறட்சி என்பவற்றை மட்டும் அறவே நீக்க முடியவில்லை.

  வெளிநாடுகளில் வானியல் ஆராய்ச்சி சிறப்பாக உள்ளது. ஆனால், நம் நாட்டில் மழை எப்போது பெய்யும், எந்த அளவு பெய்யும் என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக அறிந்து கொள்வதற்கு வழி எதுவும் இல்லை.

  இப்படி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தால் விவசாயப் பணி, நீர் சேமிப்பு, மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீள்வது போன்றவற்றை நாம் எப்படிச் செய்ய முடியும்?

  மேலும், ஆங்காங்கே வெள்ளம் ஏற்படும்போது, அதைச் சரிசெய்வதற்கு இப்போதெல்லாம் கிராம மக்களே முன்வருவதில்லை. வெள்ளம் வருமுன்னே தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என நம்புவதைவிட, நாமே அவற்றை செய்வதுதான் நன்மை பயக்கும்.

  வீணாகக் கடலுக்குச் செல்லும் நீரை தடுக்க முடியாமல் பல ஆண்டுகளாக தவிக்கும் விவசாயிகளின் துயர் என்று துடைக்கப்படுமோ?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai