சுடச்சுட

  

  தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் தங்களை மக்களின் ஆதரவாளர்கள் என்று காட்டிக் கொள்வதற்கு தூசி துரும்பைத் தேடியபோது, ஆவின் பால் விலை உயர்வு என்ற துடுப்பு கிடைத்தது. கேட்க வேண்டுமா? அந்தக் கட்சிகளின் தலைவர்கள் உடனடியாக ஆவின் பால் விலையைக் குறைக்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டார்கள்.

  உண்மையில், மாநில அரசு பால் கொள்முதல் விலையை ரூ.5 வரை உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.28 என்றும், எருமைப்பாலுக்கு ரூ.35 என்றும் வழங்க முன்வந்து, ஆவினுக்குப் பால் வழங்கும் சிறு விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

  இதைப் பாராட்டாமல், நுகர்வோர் நலனை மட்டும் கருத்தில் கொண்டு போராட்டம் நடத்தி சாதிக்கப் போவது என்ன? இன்று கொழுப்பின் அளவைப் பொருத்து ஆவின் பால் பாக்கெட்டுகள் ரூ.24 முதல் ரூ.35 வரை விற்கப்படுகிறது.

  விலை உயர்த்தியும்கூட ஆவின் நிர்வாகம் நஷ்டத்தை ஈடுகட்டுமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனங்களின் சில்லறை விலை, இப்படி உயர்த்தி வழங்கப்பட்ட ஆவின் பால் விலையை விடக் கூடுதலாக உள்ளதே. அப்படிப்பட்ட தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் கொள்முதல் விலையும் ஆவின் விலையைவிட ரூ.5 குறைவாயுள்ளதே.

  பால் கொள்முதல் விலையை உயர்த்தியும், சில்லறை விலையைக் குறைத்தும் வழங்கும்படி மேற்படி பால் நிறுவனங்கள் முன் அரசியல் தலைவர்கள் போராட்டமோ, உண்ணாவிரதமோ இருக்கலாமே. அந்த நிறுவனங்களும் கட்சிக்கு எதுவும் நன்கொடை கொடுப்பார்களே.

  அது போகட்டும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மொத்தப் பால் அளவில் ஆவின் பங்கு எவ்வளவு? தனியார் பங்கு எவ்வளவு? நம்பத் தகுந்த பல புள்ளிவிவர அடிப்படையில் கணக்கிட்டால், ஆவின் பால்

  20 சதவீதமே. இதர பாக்கெட் பால் 25 சதவீதம். மீதி 55 சதவீதம் பால் உற்பத்தியாகும் இடத்திலேயே விற்பனையாகின்றன.

  சென்னை நீங்கலாகப் புறநகரங்களில் இருசக்கர வாகனங்களில் பால் கொண்டு வந்து விநியோகமாகிறது. இந்தப் பாலில் 10 முதல் 30 சதவீதம் தண்ணீர் கலக்கப்பட்டு, லிட்டர் 30 ரூபாயிலிருந்து 40 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.

  தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் நேரிடையாக பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யாமல் இடைத்தரகர்கள் மூலம் பால் வாங்குவதால், பால் விவசாயி பெறும் விலை லிட்டருக்கு ரூ.17தான்.

  ஆவின் கூட்டுறவு அமைப்புகள் இல்லாத ஊர்களில் பால் தரகர்கள் ஏகபோகமாக உள்ளனர். இந்தப் பால் தரகர்கள் பைனான்சியர்களாகவும், சீட்டு நடத்துவோராகவும் உள்ளனர்.

  இவர்களிடம் ஏராளமான கறவையாளர்கள் உள்ளனர். கறவையாளர்களுக்குப் பால் கறக்க ஒரு மாட்டுக்கு ரூ.10 சம்பளம். இரண்டு வேளை என்றால் ரூ.20. இவர்கள் பால் தரகர்களின் அடியாள்களும்கூட.

  கறவை மாடு வைத்துள்ள விவசாயிகளுக்கு முன்பணமாகக் கடன் வழங்குகிறார்கள். ஒரு மாடு சினையாகிக் கன்று போடும் சமயம் கடன் தரப்படுகிறது. தினம் 10 லிட்டர் பால் வழங்கக் கூடிய மாடுகளை வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.15,000 வரை கடன் வழங்கி, எழுதா ஒப்பந்தம் செய்யப்பட்டு கொடுத்த கடனுக்குரிய வட்டியும் பாலாகவே வசூலாகிறது.

  ஆவின் வழங்கும் விலையைவிட லிட்டருக்கு 13 ரூபாய் குறைவாக வழங்கப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் சுரண்டப்படுகின்றனர். இந்த நிலை மாற அரசியல் கட்சிகள் போராடுமா? நெல்லுக்கும், கோதுமைக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயமானதைப்போல் பாலுக்கும் குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று அந்தக் கட்சிகள் குரல் எழுப்பலாமே?

  மேற்படி பால் இடைத்தரகர்களே இவ்வாறு ஏழை பால் உற்பத்தியாளர்களை வஞ்சித்துப் பெற்ற பாலை, பெரிய பால் நிறுவனங்களுக்குத் தண்ணீர் கலக்காமலும், டூ வீலர் பால் விநியோகத்துக்குத் தண்ணீர் கலந்தும் பால் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

  இப்படிப்பட்ட இடைத்தரகர்கள் நிறைந்துள்ள கிராமங்களில் அரசு ஆவின் பால் கொள்முதலுக்கு ஏற்பாடு செய்தல் நலம்.

  இப்படிப்பட்ட இடைத்தரகர்களை ஒழித்துவிட்டு, ஏழை விவசாயிகளுக்கு லாபகரமான விலை வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் 1965-இல் தேசியப் பால் வளர்ச்சி நிறுவனம் (சஹற்ண்ர்ய்ஹப் ஈஹண்ழ்ஹ் ஈங்ஸ்ங்ப்ர்ல்ம்ங்ய்ற் ஆர்ஹழ்க்) உருவாக்கப்பட்டது.

  குஜராத்தில் உள்ள "அமுல்' நிறுவனம் போல் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டுறவுப் பால் இணையம் உருவாக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் பிறந்ததுதான் ஆவின். இவ்வாறே மகாராஷ்டிரத்தில் மதர், கர்நாடகத்தில் கே.எம்.எஃப். ஆகியவை பிறந்தன.

  கர்நாடகத்திலும், மகாராஷ்டிரத்திலும், குஜராத்திலும் கூட்டுறவுப் பால் இணையம் அரசியல் தலையீடு இல்லாமல் வளர்ந்து வரும்போது, தமிழ்நாட்டில் ஆவின் நலிந்து வருவது ஏன்?

  ஏனென்றால், ஆவினை ஒழித்துக் கட்ட பலம் பொருந்திய தனியார் பால் நிறுவனங்களின் அசுர வளர்ச்சிக்கு அரசியல்வாதிகள் உரம் போட்டு ஆவினை நம்பியுள்ள சுமார் 20 லட்சம் ஏழைப் பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் விஷத்தை ஊற்றுகிறார்கள். யோசித்துப் பாருங்கள்.

  நல்ல தவிடு கிலோ ரூ.12, கடலைப் பிண்ணாக்கு கிலோ ரூ.50, மக்காச்சோள மாவு ரூ.25, புஞ்சை தானியங்கள் எதுவுமே

  ரூ.40-க்குக் கீழே இல்லை. ஒரு கட்டு வைக்கோல் ரூ.100, பத்து லிட்டர் பால் கறக்கும் கலப்பினப் பசுவின் விலை ரூ.35,000.

  கறவை மாடு வைத்துள்ள விவசாயிகளின் பராமரிப்புச் செலவு பன்மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில், பாலின் கொள்முதல் விலையை மட்டும் குறைவாக வழங்குவது என்ன நியாயம்?

  ஒரு கறவைக்காரன் பெறும் வருமானத்தைவிட மாட்டின் சொந்தக்காரன் பெறும் வருமானம் குறைவு. ஆவின் பால் பாக்கெட் வாங்குபவர்கள் ஏழைகளா? பால் மாடு வைத்துள்ளவர்கள் ஏழைகளா?

  பால் பாக்கெட் வாங்கும் நகர மக்கள் ரூ.150 கொடுத்து ஐஸ்கிரீம் சாப்பிட முடியும். ஓட்டலில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு ரூ.100 வரை செலவழிக்க முடியும். கேபிள் டி.வி. பார்க்க மாதம் ரூ.400 செலவு செய்ய முடியும். ஹார்லிக்ஸ், காம்ப்ளான், நூடுல்ஸ், பாஸ்தா வாங்கி உண்ண ஆயிரம் ஆயிரமாகச் செலவு செய்வார்கள்.

  பால் விவசாயிகள் நன்மைக்காக அவர்களுக்கு வழங்கப்படும் பஞ்சப்படியில்

  ரூ.10 கழித்துக் கொள்ள முடியாதா? விலை உயர்வுக்கு ஏற்ப அவ்வப்போது அவர்களின் மாதச் சம்பளம் கூட்டித் தருகிறார்களே. பால் விவசாயிகளுக்கு யார் விலையைக் கூட்டித் தருவார்கள்?

  பால் விலை உயர்வைக் கண்டிக்கும் கட்சித் தலைவர்களுக்கும், தம்மை சோஷலிசத் தியாகிகள் என்று கூறிக் கொள்ளும் தலைவர்களுக்கும் ஒரு கேள்வி. ஒரு பாவனைக்காக உலகமயமாதலையும், பன்முக முதலாளித்துவத்தையம் எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு, சற்று லாபத்தில் இயங்கும் சில பொதுத் துறை நிறுவனங்களுக்கு சவக்குழி தோண்டுவோர் சமதர்மவாதிகளா?

  பால் விநியோகம் முழுக்க முழுக்க கூட்டுறவுத் துறையின் ஏகபோகமாக 15 ஆண்டுகளுக்கு முன்புவரை விளங்கி வந்தது. பின்னர் தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோக உரிமம் வழங்கப்பட்டது.

  தனியார் துறையில் ஏராளமாக சிறு - நடுத்தர - பெரும் நிறுவனங்களும் பாக்கெட் பால் விற்கிறார்கள். பெரும் நிறுவனங்களில் அகில இந்தியாவிலும் முதல்நிலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் விற்பனை, ஆவின் பால் பொருள் விற்பனையைவிட மிக மிக அதிகம்.

  பொதுத் துறையில் இயங்கும் ஆவின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தராமல், மற்ற வகைப் பால் விலை உயர்வுக்கு மவுனமாயிருந்துவிட்டு, ஆவின் பால் விலை உயர்வுக்குக் குரல் எழுப்புவோர் உண்மையான சமதர்மவாதிகளா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும்.

  தொடர்ந்து ஆவின் நிறுவனம் நிர்வாகச் சுமையினால் நஷ்டமாகி ஆவின் ஏலத்துக்கு வந்துவிட்டால், அதன் பங்குகளை தனியார் பால் நிறுவனம் வாங்கி விடும் ஆபத்தும் உள்ளது. ஆவினைக் காப்பாற்றுவது நம் கடமை.

   

  கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai