சுடச்சுட

  

  மங்கள்யான் வாயிலாக நமக்கு செவ்வாய்க்கிரகமே வசப்பட்டுவிட்டது. விண்வெளி அறிவியலில் உலகமே வியக்கும் சாதனைகள் பலவற்றை இந்தியா படைத்துக் கொண்டிருக்கிறது. நமது அறிவியலுக்கு "வானம்' வசப்பட்ட அளவில் ஒரு சிறு பகுதியளவுக்குக் கூட "பூமி' வசப்படவில்லை,

  நமது நாட்டின் இன்றைய மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேற்பட்டோர், அதாவது 62 கோடிப் பேர், திறந்தவெளியையே கழிப்பிடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். கிராமப்புற வீடுகளின் புறக்கடைப் பகுதி என்பது கிராமங்களைச் சூழ்ந்த வெளிவட்டப் பகுதிகளாகும். அப்பகுதிகளே கிராம மக்களின் கழிப்பிடங்கள். இதுதான் இந்தியக் கிராமங்களின் இன்றைய சுகாதார நிலையாகும்.

  கிராமப்புறங்கள் மட்டுமன்றி, பள்ளிக் கூடங்களிலும்,  பேருந்து நிலையங்களிலும்கூட முறையான கழிப்பறை வசதிகள் செய்யப்படவில்லை.  ஆனாலும், கழிப்பறைத் தேவை குறித்தக் கோரிக்கைகள் அண்மைக்காலமாகப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் வலுப்பெற்று வருகின்றன.

  2050-ஆம் ஆண்டில் மேலும் 40 கோடி மக்களுடன் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட, அதாவது 160 கோடி மக்கள் தொகையுள்ள நாடாக இந்தியா இருக்கும் என்று ஒரு சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது. இன்றைய நிலையே நீடித்தால் 2050-ஆம் ஆண்டில் 80 கோடி இந்தியர்கள் பொது இடங்களையே கழிப்பிடங்களாகப் பயன்படுத்துகிறவர்களாக இருப்பர்.

  கழிப்பறைகளைப் பயன்படுத்தும் விஷயத்தில், மக்கள் மீதே குற்றம்சாட்டிப் பேசும் வழக்கத்தை நமது நிர்வாகத் தரப்பினர் கடைப்பிடித்து வருகின்றனர். இந்திய கிராமப்புறங்களில் ஒப்புக்குக் கட்டப்படுகிற கழிப்பறைகளுக்கு முறையான, நிரந்தரமான தண்ணீர் வசதி கிடையாது.

  இந்நிலையில், கைவிடப்பட்டுவிட்ட கழிப்பறைகள், மக்கள் பயன்படுத்தாமல் விட்டவை என்று அடையாளம் காட்டப்படுகின்றன. தண்ணீர் இல்லாத கழிப்பறைகளை கைவிடுவதைத் தவிர, மக்களுக்கு வேறு வழி இல்லை என்பது மறைக்கப்படுகிறது.

  தமிழ்நாட்டில் 53 சதவீதம் பேர் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில்லை என்று ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இல்லாத கழிப்பறைகளை எப்படிப் பயன்படுத்துவது?

  திறந்தவெளிகளைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் முறையை விரைந்து ஒழிக்க வேண்டுமென்று மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியிருக்கிறார்.

  நமது மக்கள் திறந்தவெளிகளையே கழிப்பிடங்களாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பதையும், நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர்கள் தங்களுக்கான கழிப்பிடங்களைப் பெறவில்லை என்பதையும், வசதியாக மறந்துவிடுகின்றனர்.

  இன்றைய நமது மக்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தரமான கழிப்பறைகளும், அவற்றுக்கான தடைபடாத தண்ணீரும்தானே தவிர, கழிப்பறை சார்ந்த அறிவுரைகள் அல்ல.

  இந்திய அளவில் புதிதாகக் கட்டப்பட்ட 3 லட்சம் கழிப்பறைகளில் 10,000 கழிப்பறைகள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக 2,90,000 கழிப்பறைகள் கைவிடப்பட்டதற்கான காரணம் நீரின்மையும் பராமரிப்பின்மையுமே தவிர, விழிப்புணர்வின்மையல்ல.

  தமிழ்நாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் முறையான கழிப்பறை வசதிகள் இல்லை என்று மத்திய அரசின் அமைப்பு ஒன்று தெரிவித்தது. அதை மறுத்து, தமிழ்நாட்டின் பள்ளிகளில் 2,700 கழிப்பறைகள் பழுது பார்க்கப்பட்டிருப்பதாகவும், 4,000 பொதுக் கழிப்பறைகளும், மாணவிகளுக்கென 2,300 கழிப்பறைகளும். கடந்த 2013-ஆம் ஆண்டு கட்டப்பட்டிருப்பதாகவும் இன்னொரு புள்ளி விவரம் முன் வைக்கப்பட்டது.

  இந்தப் புள்ளிவிவரம் எந்த அளவுக்கு சரியானது என்பதற்கு கீழ்க்கண்ட செய்தியே சான்று. "தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்குத் தனித்தனியாக தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்க வேண்டும். கழிவறையைப் பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதற்கு எத்தனை நாள் ஆகும் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

  இதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கழிப்பறை விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்' - இது மதுரை உயர்நீதிமன்றக்  கிளை கடந்த வாரம் வெளியிட்டிருக்கும் உத்தரவு.

  300 பேர் அமர்ந்து உண்ணக்கூடிய உணவு விடுதிகளில்கூட ஒரே ஒரு கழிப்பறைதான் காணப்படுகிறது. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அது காலியாக இருக்கும்.

  கழிப்பறை விஷயத்தில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட நிறைய பேர் கிளம்பிவிட்டார்கள். ஆனால், மக்கள் இந்த விஷயத்தில் விழிப்புணர்வோடுதான் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியவில்லை.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாய்கேடா என்ற கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா ஆவாலே என்ற பெண், தனது தாலியை விற்று தனது வீட்டில் கழிப்பறையைக் கட்டியிருக்கிறார். தங்கத் தாலியைவிட கழிப்பறைதான் முக்கியம் என்று சொல்லியிருக்கிறார்.

  உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனோராணி யாதவ் என்ற பெண் பொதுக் கழிப்பிடம் கட்டுவதற்காக தனது நிலத்தையே அரசுக்கு கொடுத்திருக்கிறார்.

  தங்களுக்கு கழிப்பறை கட்டித் தருமாறு மகளிர் படையுடன் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அவர் கோரிக்கை வைக்க, அரசு அதற்கு நிதி உதவி செய்ய முன் வந்தது. ஆனால், அதற்கு உரிய இடத்தை ஒதுக்க வனத்துறை உள்ளிட்ட பிற அரசுத் துறைகள் முன் வராத நிலையில் தன் சொந்த நிலத்தைக் கொடுத்திருக்கிறார் அவர்.

  மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குப் போன அனிதா நாரே என்ற இளம்பெண் தன் கணவன் வீட்டில் கழிப்பறை இல்லை என்றும், திறந்த வெளியில்தான் இயற்கைக் கடன்களைக் கழிக்க வேண்டும் என்பதையும் அறிந்து, திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று போன வேகத்திலேயே தாய் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

  இதுபோன்ற பெண்களை சுகாதாரத் தூதுவர்களாக நியமித்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன அந்தந்த மாநில அரசுகள். இந்தப் பெண்களுக்கு இன்றைக்கு ஏற்பட்ட இந்த விழிப்புணர்வு, சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலத்துக்கும் மேலாகியும் அரசுகளுக்கு ஏற்படாமல் போனது ஏன்?

  கல்வி கற்றவர்கள் அதிகமாக உள்ள கேரள மாநிலம்கூட இந்தக் கழிப்பறை விஷயத்தில் பின்தங்கியேதான் காணப்படுகிறது. அம்மாநிலத்தில் 196 அரசுப் பள்ளிகளிலும் 1,011 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

  அடுத்த கல்வியாண்டிற்குள் பள்ளிகளில் முழுமையாகக் கழிப்பறைகளைக் கட்டி முடிக்கும்படியும், கழிப்பறை இல்லாத பள்ளிகளுக்குத் தகுதிச்சான்றிதழ் வழங்க முடியாது எனவும் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி.

  பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வீடுகளில் கட்டாயமாக கழிப்பறை இருந்தே ஆகவேண்டும் என்று அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது குஜராத் அரசு.

  2019-ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் லட்சியத்துக்கு பெரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ள உலகப் பணக்காரர்களுள் ஒருவரான பில்கேட்ஸ், எந்தத் தலைவரும் இவ்வளவு தீவிரமாக மக்களுக்கான கழிப்பறை வசதிகளைக் குறித்து யோசித்ததில்லை என்றும் கூறியிருக்கிறார்.

  இன்றைய நிலையில் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் கழிப்பறை கட்ட மத்திய அரசு தரும் தலா 12,000 ரூபாயும், தமிழக அரசின் சார்பில் அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் நிறைவேற்றப்பட்டு வருகின்ற ஆண்கள் மற்றும் மகளிர் சுகாதார வளாகங்களும், யுனிசெஃப், பில்கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளும், ஒட்டு மொத்த கழிப்பறைகளின் தேவையில் ஒரு சிறு பகுதியை மட்டுமே நிறைவு செய்யும்.

  எனவே, சரியானத் திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும், ஆக்கப்பூர்வமான, அக்கறையுடன் கூடிய செயல்பாடுகளுமே கழிப்பறைத் தேவைகளுக்கான தீர்வுகளாக இருக்கமுடியும்.

  முதற்கட்டமாக பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் முறையான, தண்ணீர் வசதிகளுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்க வேண்டும்.

  அடுத்ததாக கிராமப்புற வீடுகளில் இட வசதியுள்ளோரின் வீடுகள் அனைத்திற்கும் அரசே தரமான கழிப்பறைகளை அமைத்துத் தர வேண்டும். தங்களது வீடுகளில் அமைக்கப்பெறும் கழிப்பறைகளை மக்கள் கைவிடமாட்டார்கள். வெளியில் இருந்து கொண்டு வரும் தண்ணீரின் வாயிலாகக்கூட அவற்றை அவர்கள் பராமரித்துக் கொள்வார்கள்.

  அடுத்து, ஊர்ப் பொதுக் கழிப்பறைகளை தரமாகப் பராமரிப்பதன் வாயிலாக எஞ்சியுள்ளோருக்கும் நிவாரணம் கிடைக்கும். நமது பெரும்பான்மை இந்திய மக்களுக்கு சாப்பிட உணவு கிடைப்பது ஒரு பிரச்னை என்றால், சாப்பிட்டுச் செரிமானமானவற்றைக் கெüரவமாகக் கழிப்பது என்பது அதைவிடப் பெரிய பிரச்னையாக இருக்கிறது.

  மனித உடல் இயக்கத்திற்கு முதன்மையானவை இரண்டு. ஒன்று உணவைக் கொள்வது. மற்றொன்று கழிப்பது. இவற்றில் கொள்வதைத் தள்ளிப்போடலாம் அல்லது தவிர்க்கலாம். கழிப்பதை?

  கட்டுரையாளர்: எழுத்தாளர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai