Enable Javscript for better performance
நீர்நிலைகள்: அன்றும் இன்றும்- Dinamani

சுடச்சுட

  

  நீரின்றி அமையாது உலகு' என்பது அற நூல். காடு கொன்று நாடாக்கி, குளந்தொட்டு வளம் பெருக்கியவர்கள் தமிழர்கள். இந்தியாவிலேயே மழை நீரைத் தேக்கி வைத்து நீர்ப்பாசனத்திற்காக அதிக நீர்நிலைகளை ஏற்படுத்தியவன் தமிழன்.

  மழை நீர் மட்டுமன்றி, ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டியும் நீர் வீணாகக் கடலில் கலப்பதற்கு முன்பு பல ஏரிகளையும் குளங்களையும் ஆற்றுப் பகுதிகளில் அமைத்தும் நீரைத் தேக்கி வேளாண்மைக்குப் பயன்படுத்தினான்.

  தமிழகத்தில் உழவுத்தொழில் ஏறக்குறைய 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழர்கள் ஏரிகளை வடிவமைக்கும் பொழுது அவை பெரும்பாலும் ஊரை ஒட்டிய பகுதிகளிலேயே அமைக்கப்பட்டன.

  தமிழகத்தில் குறிப்பாக தொண்டைமண்டலத்தில் உள்ள ஏரிகள் பெரும்பாலும் ஊரின் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வடக்குத் தெற்காக கிழக்கில் ஏரிக்கரைகள் நீண்டு சென்றன. ஊர்ப்பகுதியின் வழியாகவே வாய்க்கால்கள் சென்றன.

  வெள்ளப்பெருக்கினால் கரை உடைகின்ற காலங்களில், ஊர்மக்கள் அறிவதற்கு ஏற்றவாறு குடியிருப்புகள் இருந்தன.

  ஏரியின் வடகோடி, தென்கோடிப் பகுதியில் உபரி நீர் செல்ல, உபரி நீர் வெளியேற்றுக் கண்மாய்கள் அமைந்திருந்தன. இவை "கோடி' அல்லது "கலிங்கு' எனப்பட்டன. இவ்விடைப்பட்ட பகுதியில் குடியிருப்புகளும் நிலங்களும் அமைந்தன.

  தமிழகத்தில் இன்றைக்கு இருக்கின்ற ஏரிகளின் தோராய எண்ணிக்கை 39,202. இவை பெரும்பாலும் 2000 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டவை.

  ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரி நீர் அந்தந்தப் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் சென்றடைந்தன. பாலாற்றில் வரும் நீர் அப்பகுதிகளில் இருந்த ஏரிகளுக்குத் திருப்பி விடப்பட்டன.

  புகழ்பெற்ற காவேரிப்பாக்கம் ஏரிக்கு பாலாற்றின் நீர் கால்வாய் வழியாகச் செல்வதற்கு பல்லவ மன்னர்கள் ஆவன செய்தனர். காவேரிப்பாக்கம் ஏரி நிறைந்து உபரியாகச் சென்ற நீர் அருகில் இருந்த மகேந்திரவாடி ஏரிக்குச் சென்றது.

  மகேந்திரவாடி ஏரி மகேந்திர வர்ம பல்லவன் அமைத்த மற்றொரு ஏரியாகும். இவ்வாறு தொடர்ச்சியாக பல ஏரிகள் மழைக்காலங்களில் நிரப்பப்பட்டு அவை வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்பட்டன. இவை தொடர்பு நீர்நிலைகள் எனப்பட்டன.

  தமிழகத்தின் வறட்சி மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் பாண்டியர்கள், குறுநில மன்னர்கள் பல ஏரிகளை அமைத்து வேளாண்மையைப் பெருக்கினர். நிலங்களுக்கு நீர் பகுப்பு செய்ய ஊரில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

  பல்லவர்கள் தமிழகத்தில் அமைத்த பெரும்பாலான குடைதளிகள் ஏரிகளின் கரைகளை ஒட்டி, அதன் அருகில் அமைக்கப்பட்டன. வழிபாட்டிற்குச் செல்லும் மக்கள் ஏரிகளைக் கண்காணிக்க இது உதவியது.

  ஏரிகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்யவும், ஏரிகளில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றவும், தூர் வாரி ஆழப்படுத்தவும் அலுவலர்கள் ஊர்மக்களின் துணை கொண்டு பணிகள் செய்ததை பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

  இதற்காக ஏரி ஆயம், ஏரி மீன்பாட்டம், நீர்நிலைக்காக ஆகிய வரிகள் வசூலிக்கப்பட்டன. ஏரிகளில் மீன் வளர்ப்பும் ஊருக்கு வளம் சேர்த்தது.

  சென்னையைச் சுற்றியுள்ள புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, மதுராந்தகம் ஏரி, சோழபுரம் ஏரி, அம்பத்தூர் ஏரி, கொரட்டூர் ஏரி போன்றவை, பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டவை.

  இன்று சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளாக இவற்றுள் சில இருப்பினும், பராந்தக சோழன் சிதம்பரம் அருகில் அமைத்த வீர நாராயணன் எனப்படும் வீராணம் ஏரிதான் சென்னை நகரின் குடிநீர்த் தேவை நிறைவு செய்கிறது. சென்னையின் ஏரிகளைப் பராமரித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

  விளைநிலங்கள் மட்டுமன்றி, ஏரிகளும் இன்று பல அடுக்கு வீடுகளைக் கொண்டவையாக உள்ளன. எஞ்சியிருக்கும் ஏரிப் பகுதிகள் கழிவுநீர் குளங்களாக உள்ளன. இருந்த கால்வாய்கள் மூடப்பட்டு அவையும் குடியிருப்புகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாறியுள்ளன.

  சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தியும், அவற்றிலுள்ள மாசுகளை அகற்றியும், கழிவுநீர் கால்வாய்களை அமைத்தும், ஏரிகளில் இருந்து வரும் வாய்க்கால்களை ஆழப்படுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் பல்நோக்குத் திட்டத்துடன் அரசும் மக்களும் செயல்பட்டால், நிச்சயம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வளம் பெருகும்; வேளாண்மை வளர்ச்சியடையும்; நீருக்காக நாம் அண்டை மாநிலங்களை அணுக வேண்டிய தேவையிருக்காது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai