Enable Javscript for better performance
சீனாவிடம் எச்சரிக்கை வேண்டும்!- Dinamani

சுடச்சுட

  

  ரோம் நகரம் பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்பது வரலாறு. வரலாறு திரும்பும் என்பார்கள்.

  சீனத் தலைவர் ஜீ ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். சீனாவிலிருந்து அவர் நேரடியாக இந்தியாவுக்கு வரவில்லை. மொரீசியஸ் சென்று விட்டு அங்கிருந்து கொழும்பு சென்று தன்னுடைய புதிய நண்பர் ராஜபக்சயின் அன்பு வெள்ளத்தில் மூழ்கி எழுந்து கொழும்பிலிருந்து ஆமதாபாத் வந்தார்.

  வழக்கத்திற்கு மாறாக தில்லி செல்லாமல் ஆமதாபாத் வந்த சீனத் தலைவரை அன்போடு அழைத்து மகாத்மாவின் சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்து சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. ஆமதாபாதில் சபர்மதி நதிக்கரையில் சீனத் தலைவரும் அவருடைய மனைவியும் பாரம்பரியமான குஜராத் ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தார்கள்.

  அதாவது நீரோ மன்னன் பிடில் வாசித்து மகிழ்ந்தது போல. அந்த நேரத்தில் தில்லி எரியவில்லை என்பது உண்மைதான். ஆனாலும், அதைவிட மோசமான ஒரு சம்பவம் நடந்தது. சீனத் தலைவர் இந்தியா வருவதற்கு முன்பாகவே, சீன ராணுவம் லடாக் பகுதியில் ஊடுருவியது. இப்படி நடந்தது இது முதல் முறை அல்ல.

  சென்ற முறை சீனத் தலைவர் இந்தியா வருவதற்கு முன்னால், இந்தியாவிலிருந்த சீனத் தூதர், அருணாசல பிரதேசம், சீனாவின் ஒரு பகுதி என அறிவித்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் விளையாட்டு வீரர்கள் சீனா செல்ல விசா பெற வேண்டியதில்லை என துடுக்குதனமாக அறிவித்தார். இந்தியா கையைப் பிசைந்து கொண்டு மௌனமாக நின்றது. இது அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்தது என்றால், இப்பொழுது பா.ஜ.க. ஆட்சியிலும் அதே நிலைதான்.

  இந்தியாவில் ஆட்சி மாறியிருந்தாலும் காட்சி மாறவில்லை. சீனாவும் தன் நிலைப்பாட்டை எள்ளளவும் மாற்றிக் கொள்ளவில்லை. சீனாவின் வளர்ச்சியைப் பற்றி பூரிக்கும் கம்யூனிச நண்பர்கள் இந்த அத்துமீறல்களை ஏனோ கண்டிக்கவில்லை.

  ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ரயில்வே மந்திரியானவுடன் அளித்த பேட்டியில், தனக்கு முன் ரயில்வே மந்திரியாக இருந்த மாதவராவ் சிந்தியாவின் பணியினை சிறப்பாகப் பாராட்டினார்.

  ஜார்ஜ் ஒரு பூர்ஷுவா அல்ல. ஏழைகளுக்காகப் பாடுபட்ட தொழிற்சங்கத் தலைவர். அவசர நிலை அமலில் இருந்தபோது, சிறையிலிருந்தபடியே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

  அவர் பாதுகாப்பு மந்திரியாக இருந்த போது "பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரி நாடல்ல, சீனாதான் இந்தியாவுக்கு எதிரி நாடு. சீனாவிடம் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்றார்.

  சீனாவும், இந்தியாவும் சம காலத்தில் விடுதலை அடைந்தன. சீனாவில் கம்யூனிஸ்ட்டும் இந்தியாவில் சோஷலிச கருத்துள்ள காங்கிரஸ்காரரான ஜவாஹர்லால் நேருவும் ஆட்சியை பிடித்தனர். சீனாவில் அடக்குமுறை ஆட்சியும், இந்தியாவில் ஜனநாயக ஆட்சியும் மலர்ந்தன.

  உலகிலேயே, தான், தனது என்று வாழும் நாடு அமெரிக்கா. அங்கு லாபத்தை மட்டுமே முக்கியமாகக் கருதும் பணக்கார உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும், அதிகரித்து வரும் சம்பள பிரச்னை பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் கவலைப்பட ஆரம்பித்தனர்.

  இப்படி அமெரிக்கர்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது, மக்களை அடக்கி வளர்ந்து கொண்டிருந்த சீனா, அவர்கள் கண்ணில் பட்டது. நிக்ஸன் ஆட்சியில் அவருடைய வெளியுறவுச் செயலாளராக இருந்த கிசிங்கர் சீனாவுடனான உறவை வளர்க்க முதலடியை எடுத்து வைத்தார்.

  "எதிரிக்கு எதிரி நண்பன்' என்பதை போல், ரஷியாவை மிரட்ட சீனாவுடன் கைக்கோக்கத் தயாரானது அமெரிக்கா. இரும்புத்திரை நாடான ரஷியாவை மிரட்ட, மூங்கில் திரை நாடான சீனாவுக்கு, பாகிஸ்தானிலிருந்து பயணித்தார் கிசிங்கர். அமெரிக்கர்களின் பேராசையைப் புரிந்து கொண்ட சீனா காயை சரியாக நகர்த்தியது.

  தன்னுடைய துறைமுக நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா செம்மைப்படுத்தியது. அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. அமெரிக்காவில் கொடுத்த சம்பளத்தில் 10-இல் ஒரு பங்கு எங்கள் தொழிலாளர்களுக்குத் தந்தால் போதும் என்றது.

  தொழிலாளர் நலம் என்பதும் தொழிலாளர் பாதுகாப்பு என்பதும் கம்யூனிச சீனாவில் கெட்ட வார்த்தைகளாக மாறின. சீனத் தொழிலாளர்கள் வெளிநாட்டு கம்பெனிகளில் பணிப் பாதுகாப்பின்றி மிக குறைந்த ஊதியத்தில் கசக்கி பிழியப்பட்டார்கள்.

  அமெரிக்க கம்பெனிகள் ஒன்றன்பின் ஒன்றாக சீனாவிடம் சரணடைந்தன. உலக கம்பெனிகள் எல்லாம் சீனாவை நோக்கிப் படையெடுத்தன. சீனாவில் பண மழை கொட்டத் தொடங்கியது.

  சீனாவின் டாலர் கையிருப்பு, அமெரிக்கப் பொருளாதாரத்தையே அசைக்கும் உச்சத்தை தொட்டது. விவரம் புரியாமல் லாபத்தை மட்டுமே சிந்தித்த அமெரிக்கா, சீனாவிடம் சிக்கிக் கொண்டது.

  இதை பார்த்த நம் நாட்டின் அன்றைய பிரதமர் நரசிம்மராவ், மன்மோகன் சிங்கை அழைத்து, இந்தியப் பொருளாதாரத்தையும் வெளிநாட்டிற்கு திறந்து விட்டார். அமெரிக்காவின் மோட்டார் தயாரிப்பான ஃபோர்டு, சென்னையில் தொழிற்சாலை வைத்திருக்கிறது.

  கடந்தாண்டு "எக்கோ ஸ்போர்ட்' என்ற காரினை அறிமுகப்படுத்தி, 10 மாதத்தில் ஒரு லட்சம் கார்களை விற்றுவிட்டது.

  ஒரு காரின் விலை பத்து லட்சம் என்றால், 10 மாதத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் விற்பனை. தயாரிப்புச் செலவும், சம்பளமும், வரிகளும் மத்திய, மாநில

  அரசுகளுக்கு சென்ற வரி நீங்கி இலாபம் மட்டும் அமெரிக்க கம்பெனிக்கு போனது.

  இது ஒரு காரின் கணக்குதான். அந்த கம்பெனி பல கார்களைத் தயாரிக்கிறது. லாபக்கணக்கை கேட்டால் தலை சுற்றும்.

  இந்தியாவுக்கு வந்த கம்பெனிகள் மிக கொஞ்சம். ஆனால், சீனாவுக்கு போன கம்பெனிகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இப்படி லாபத்தை நம்பி சீனாவுக்குப் போன அமெரிக்கர்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

  இப்போது உலகத்தின் ரவுடி யார் என்பதில் முதலாளித்துவ அமெரிக்காவுக்கும், கம்யூனிச சீனாவுக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

  இன்றைக்கு சீனாவின் கையில் அபரிமிதமான பணம் இருக்கிறது. சீனாவின் மக்கள் தொகை சாபமாக இருந்த நிலை வரமாக மாறிவிட்டது. சீனாவில் உலகச் சட்டம் எதுவும் செல்லுபடியாகாது. காப்புரிமை சட்டத்தையும், டிரேடு மார்க் சட்டத்தையும், காப்பி ரைட் சட்டத்தையும், அவர்கள் மதிப்பதேயில்லை.

  ஜப்பானை மிஞ்சிய கற்பனை வளம் மிக்க சீனாக்காரர்கள் குறைந்த செலவில் உதவாக்கரை எலக்ட்ரானிக் பொருள்களை உலகமெங்கும் தூவி பணம் பார்த்தார்கள். இன்றைக்கு தரமில்லாத சீனப் பட்டாசுகள் குறைந்த விலை என்ற போர்வையில் சிவகாசியை நடுங்க வைத்துள்ளது.

  இந்த பின்னணியில் சீனத் தலைவரின் இந்திய விஜயத்தை பார்க்க வேண்டும். உலகிலேயே அதிவேக ரயில்களை ஓட்டுவது நாங்கள்தான் என சீனா மார்தட்டுகிறது. சீனாவில் நடக்கும் விபத்துகள் அரசால் மறைக்கப்படுகின்றன. சீனாவில் விளிம்பிலிருக்கும் வளர்ச்சி உள் நாட்டிலில்லை. சீன ரயில்வேயில் பாதுகாப்பில்லை. ஜப்பானும் பிரான்சும்தான் விரைவு ரயிலில் முன்னிலையில் இருக்கும் நாடுகள்.

  4 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஊழலை பற்றி பத்திரிக்கைகள் பத்தி பத்தியாக எழுதின. ஆனால், அவை ஒரு விஷயத்தை மறந்துவிட்டன. புது தில்லியின் இதயம் கன்னாட்பிளேஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட இன்றைய ராஜீவ் சௌக் ஆகும். அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது சிவாஜி விளையாட்டு அரங்கம்.

  1982-இல் அங்கு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, பாகிஸ்தானிடம் பரிதாபமாகத் தோற்றது. ஆனால், இந்திய பெண்கள் ஹாக்கி அணி இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தது.

  ஆனால், நம்முடைய ஊழல்வாதிகள், சீனாவை சேர்ந்த ரயில் கட்டுமான நிறுவனத்தோடு, 2010 காமன்வெல்த் விளையாட்டுக்கு முன் ஸ்டேடியத்தை இடித்து புதிதாக கட்ட ஒப்பந்தம் செய்தார்கள்.

  கட்டட நிறுவனம் விளையாட்டு ஆரம்பிக்க ஓராண்டு இருக்கும் போது நன்றாக இருந்த சிவாஜி ஸ்டேடியத்தை இடிக்க ஆரம்பித்தது.

  ஆசிய விளையாட்டு 2010 முடிந்தும் கூட ஸ்டேடியம் கட்டி முடிக்கப்படவில்லை. அதற்குக் காரணம், இந்தியா காமன்வெல்த் விளையாட்டுகளை சிறப்பாக நடத்தி பெயர் தட்டிக் கொண்டுவிடக் கூடாது என்கிற நயவஞ்சகத்தனம்.

  இன்றைக்கு இந்தியாவில் 1.2 லட்சம் கோடியை சீனா முதலீடு செய்யும் என சீன அதிபர் ஆசை வார்த்தை காட்டுகிறார்.

  ஏற்கெனவே இந்தியாவில் குவிந்து கிடக்கும் தரமில்லாத சீனப் பொருள்களை நமது ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும். சீனத் தயாரிப்பான பால், மோசடியானது என்று ஐரோப்பிய நாடுகள் தடை செய்துள்ளன.

  சீனாவின் பால், மாடுகளிடமிருந்து கறக்கப்படுவதல்ல, எந்திரங்களினால் உருவாக்கப்படும் போலி பால். சீனர்களின் சூழ்ச்சியை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

   

  கட்டுரையாளர்: வழக்குரைஞர்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai