சுடச்சுட

  

  உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறிய நாடுகள் எல்லாம் பதக்கப் பட்டியலில் முன்னணியில் நிற்கும்போது, செறிவான மனிதவளமும், இளைஞர் சக்தியும் மிக்க நமது இந்தியா மட்டும் பின்தங்கியே இருக்கிறது.

  இதற்கு முக்கியக் காரணம் பல்வேறு திறமைசாலிகள் கண்டறியப்படாமலும், ஊக்குவிக்கப்படாமலும் போவதுதான். இதனால் இவர்களின் விளையாட்டுத் திறமை, அவர்தம் கிராம, நகர ஊருக்குள்ளேயே முடங்கி விடுகிறது.

  இப்படி எத்தனையோ விளையாட்டு வீரர்கள் தங்களின் அளப்பறிய திறமைகளோடு முடங்கிப்போன கதைகள் நிறைய உண்டு.

  பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் விளையாட்டில் சூரர்களாகப் பரிணமிப்பவர்கள், அதற்குப் பின் வேலை, திருமணம், குடும்பம், குழந்தை என வாழ்க்கையின் வட்டத்தில் சிக்கி, தங்கள் சிறகுகளை இழந்து, விளையாட்டு வானில் பறக்க இயலாமல் போய்விடுகின்றனர்.

  இன்றும் விடுமுறை நாள்களில் கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடும் இளைஞர்கள் நம் கண்களில் தட்டுப்படுகிறார்களே தவிர, பிற விளையாட்டுகளில் கவனம் செலுத்துபவர்கள் மிகச் சிலரே. இதுவே நாம் விளையாட்டுத் துறையில் பின்தங்கிப் போனதற்குக் காரணம்.

  மேலும், கிரிக்கெட்டில் சாதித்த ஒருவர், தன் துறையிலேயே பலரையும் உருவாக்க விரும்பி ஒரு பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி, பல கிரிக்கெட் விரர்களை உருவாக்குகிறார். ஒரு செஸ் வீரர், தன்னைப் போலவே மற்றொரு செஸ் வீரரை உருவாக்குகிறார்.

  ஆனால், அதிகமாக விளையாடப்படாத விளையாட்டுகளின் கதி, அதோகதி தானா? இந்த கவலையைப் போக்க, விளையாட்டு வானில் விடிவெள்ளியாய் பிரகாசித்து, மற்றவர்களையும் பிரகாசிக்கச் செய்யவேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கியுள்ள பெண்களின் "உற்சாக டானிக்' குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்.

  அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர்தான் இந்த குத்துச் சண்டை வீராங்கனை மாங்டே கங்நிஜாங் மேரி கோம் என்பது நமக்குத் தெரியும்.

  ஆனால், இவர் மணிப்பூரில் உள்ள கங்காதீ என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் என்பதும், இதுவரை 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பதும், ஒலிம்பிக்கில் சாதித்தவர் என்பதும் பலருக்குத் தெரியாத தகவல்கள்.

  விளையாட்டு வீரர்களுக்கு உடலில் பழைய ஃபிட்னெஸ் இல்லை, அதுதான் தோல்விக்கு காரணம் எனப் பிதற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு முக்கியத் தகவல். மேரிகோம் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது, அவரது தலைப் பிரசவத்துக்குப் பின்தான்.

  மூன்று குழந்தைகளின் தாயான மேரிகோம், சர்வதேச அளவில் சாதித்த கதை "மேரிகோம்' என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாக வெளிவந்து சக்கை போடுபோட்டுக் கொண்டிருக்கிறது. பெண்கள் தங்களுக்கு திருமணமாகிவிட்டதால் முடங்கிவிடக் கூடாது.

  திருமணத்துக்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் தங்கள் லட்சியங்களைச் சாதிக்க இயலும். கடினமாக உழைத்து இலக்கை நோக்கி முன்னேறினால் எந்த ஒரு பெண்ணாலும் சாதிக்க இயலும் என மேரிகோம் பறைசாற்றியிருக்கிறார்.

  அதோடு நில்லாமல், மேரிகோம் ஸ்போர்ட்ஸ் அகாதெமி என்ற பெயரில் மணிப்பூரில் ஒரு விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி, இந்தியா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டுகளின் பட்டியலில் உள்ள விளையாட்டுகளில் பங்கேற்க வைப்பதற்காக அந்தந்த விளையாட்டுகளில் திறமையான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு முறையாகப் பயிற்சியளித்து, 2016-இல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவை பதக்கப் பட்டியலில் ஜொலிக்க வைக்கவேண்டும் என்பதே இந்த தங்க மங்கையின் கனவாகும்.

  இதற்கென அவர் இப்போதே ஒரு குழுவை உருவாக்கியுள்ளார். அவர்கள் திறமையான விளையாட்டு வீரர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா பங்கேற்கும் எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார்.

  நாட்டில் எத்தனையோ விளையாட்டு வீரர்கள், விளையாட்டில் புகழ்பெற்று, அதன் மூலம் விளம்பரம், சினிமா என பணமழையில் நனைந்து கொண்டிருக்கும்போது, நம் நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும், தன்னைப் போலவே ஜெயிக்கவேண்டும் என்ற அக்கறையுடன் பாடுபடும் இவர் உண்மையிலேயே விளையாட்டு வானில் ஒரு விடிவெள்ளிதானே!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai