Enable Javscript for better performance
ஏன் கையை ஏந்த வேண்டும்?- Dinamani

சுடச்சுட

  

  நதி நீர் பிரச்னை, கண்ணகிக் கோட்டம், அட்டப்பாடி கிராமப் பிரச்னை, கேரள அரசு குமரி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் குடும்ப அட்டைகளை வழங்குதல், தமது மாநில கழிவுகளை தமிழக எல்லையோரங்களில் கொட்டுதல் போன்ற செய்கைகளால் கேரளா தொடர்ந்து தமிழகத்தை சீண்டிப் பார்க்கிறது.

  தற்போது திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை பாதிக்கக் கூடிய அளவில், பாம்பாற்றின் குறுக்கே 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டிசேரி என்ற இடத்தில் அணையை கட்ட கேரள முதல்வர் உம்மண் சாண்டி காணொலி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

  இதனால், உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து தடுக்கப்படும். ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள், 300 கிராமங்களுக்கு பயன்படும் 26 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும். 20,000 விவசாயிகள் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் கரும்புச் சாகுபடி இல்லாமல் போய்விடும்.

  உடுமலைப்பேட்டையிலிருந்து 24 கி.மீ. தூரத்திலுள்ள சின்னாறு வனத்துறை செக்போஸ்ட்தான் தமிழகத்தின் எல்லை. அப்பகுதியின் மறையூர், காந்தலூர் கிராமங்களைத் தாண்டி 43 கி.மீ. தூரத்தில் மூணாறு அருகே ஆனைமுடி சிகரம் உள்ளது.

  அங்கு உருவாகிவரும் காட்டாறுகளும், அருவிகளும் கலந்து, வாகுப்பாறை, சட்ட மூணாறு, காப்பி ஸ்டோர், பள்ள நாடு, நாச்சி வயல், கோவில் கடவு, மறையூர் பகுதிகள் வழியாக பாம்பாறு என்று பெயர் பெற்று கிழக்கு முகமாக வந்து தமிழகத்தில் அமராவதி ஆறாக காவிரியில் கலக்கிறது.

  1937-இல் பட்டிசேரி கிராமத்தில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. சிறு சிறு ஓடைகளிலிருந்து வரும் நீர் இந்தத் தடுப்பணையில் நிறைந்து பின் கோவில் கடவு என்ற இடத்தில் பாம்பாற்றில் கலக்கிறது. அமராவதி அணை 1958-இல் கட்டப்பட்டது. அதற்கு முன்பே 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்பாற்றின் நீரை தமிழகத்தின் கொங்கு மண்டலப் பகுதி தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

  அமராவதி, காவிரியின் கிளை நதியாகும். கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் காவிரி பிரச்னை குறித்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தபொழுது, அமராவதி, பாம்பாற்று நீர்வரத்தும் கணக்கிடப்பட்டது.

  1924 மற்றும் 1974 காவிரி நதி நீர் ஒப்பந்தத்தில், அமராவதிக்கு வரும் தண்ணீரை தடுக்கவோ அல்லது குறுக்கே அணைக் கட்டவோ கூடாது என்று இருக்கும்பொழுது, உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல், கேரளா அணை கட்டலாமா? எந்தவித நியாயத்துக்கும் கட்டுப்படாமல், கேரளா சண்டித்தனம் செய்கிறது.

  அமராவதி அணைக்கு தேனாறு, பாம்பாறு, சின்னாறு என நீர் வரத்துகள் இருந்தாலும், பாம்பாற்று நதியைத் தடுத்தால் எல்லா நதிகளிலிருந்து வரும் நீரும் தடுக்கப்படும். கேரள அதிகாரிகள் பாம்பாற்றின் குறுக்கே பட்டிசேரி அணையை கட்டவில்லை என்று மழுப்புகிறார்கள்.

  ஆனால், காடுகளில் மரங்கள் வெட்டப்பட்டு, கூடாரங்கள் அமைத்து, இரும்புத் தூண்களை அமைத்து பணிகள் நடைபெறுகின்றன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தபோது, அணை கட்டும் பணி நடப்பதை உறுதி செய்துள்ளனர்.

  கேரளத்தில் நீர் வளம் அதிகம். நீரை வீணாக கடலுக்கு செல்ல விடுவோமே தவிர, தமிழகத்திற்கு ஒரு சொட்டுகூட தரமாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

  கேரளம், தொடர்ந்து விதண்டாவாதம் செய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, தக்கலை பகுதிகளில் 60,000 ஏக்கருக்கு பாசன வசதி கொடுத்த நெய்யாற்று அணை மூடப்பட்டது.

  இந்த அணையைத் திறக்கும் நிகழ்ச்சியில், அப்போதைய தமிழக முதல்வர் காமராசரும், கேரள முதல்வர் சங்கரும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் கேரள முதல்வர் சங்கர், தமிழகத்தையும், கேரளத்தையும் பிரிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை மீறி, நாமெல்லாம் சகோதரர்களாக இருப்போம். அதற்கு அடையாளம்தான் நெய்யாறு. தமிழ் சேட்டனுக்கு தண்ணீர் கொடுக்க யாம் சந்தோஷப்படுகிறோம் என்று பேசினார்.

  இதையெல்லாம் கேரளாவில் இன்றைக்கு ஆட்சியில் இருக்கின்றவர்கள் மறந்து விட்டார்களா? நெய்யாறு அணை திட்டத்திற்கான முழு செலவையும் அன்றைய சென்னை மாகாண அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.

  நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே 1989-இல் கட்டப்பட்ட அடவிநயனாறு அணையில் கேரளத்திலிருந்து வரும் தண்ணீரும் தடுக்கப்படுகிறது. இந்த அணையை இடிப்பதற்காக, உலகவாதம் பேசும் முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், அடவிநயனாறு அணைக்கு, 2002-இல் கடப்பாறை, மம்பட்டியோடு வந்தார்.

  வாசுதேவநல்லூர் அருகே கட்ட வேண்டிய உள்ளாறு அணையின் சாத்தியக் கூறுகள் பற்றி அறிய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், கேரளாவின் ஒப்புதல் இல்லாததால் அந்தப் பணி முடக்கப்பட்டது.

  வாசுதேவநல்லூருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இடையில் 1989-இல் கட்டப்பட்ட செண்பகத்தோப்பு அணையை, 1992-இல் கேரள அரசு இடித்துவிட்ட செய்தி அன்றைக்கு ஏடுகளில் கூட வரவில்லை.

  ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 40 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அழகர் அணை திட்டத்தை, கேரளாவின் அனுமதி கிடைக்காததால் செயல்படுத்த முடியவில்லை. முல்லைப் பெரியாறு சிக்கல் நாமறிந்ததே.

  ஆழியாறு பரம்பிக்குளம், பாண்டியாறு, புன்னம்புழா, சிறுவாணி என்று கேரளாவிடமிருந்து நியாயமாக தமிழகம் பெற வேண்டிய பல நதி நீர் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகள் மறுப்படுகின்றது. கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உற்பத்தி தமிழகத்தில் இருந்தாலும், கேரளா அதனை கிஞ்சிற்றும் சிந்திப்பதில்லை. இப்போது அமராவதி நதி நீர் பிரச்னையை கிளப்புகிறது.

  கேரளத்தில் உற்பத்தியாகும் நதி நீரை முழுமையாக கேரள மக்கள் பயன்படுத்த முடியவில்லை. அதிகமான மலைப் பிரதேசங்கள் இருப்பதால் விவசாய நிலங்கள் குறைவு. தமிழ்நாட்டின் நீர்வளம் 1,300 டி.எம்.சி. ஆகும். ஆனால், கேரளத்தின் நீர்வளம் சுமார் 2,500 டி.எம்.சி. இதில் சுமார் 1,100 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் வீணாகி அரபிக் கடலில் சேருகிறது.

  கேரளத்துக்குத் தேவையான நீர் அளவு 800 டி.எம்.சி. உபரி நீரைத் தமிழகத்திற்குக் கொடுத்தால் சுமார் 8.20 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். இதனால், கேரளத்துக்குப் பாதிப்பு இல்லை.

  கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் 85 உள்ளன. 1,96,000 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் இதன் மூலம் செல்கிறது. இதில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் கடலுக்கு செல்கிறது என்று திட்டக்குழுவின் அறிக்கை கூறுகிறது.

  மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் தமிழகத்திற்குத் திருப்புவது பற்றி ஆராய மத்திய அரசு 1978-ஆம் ஆண்டு ஒரு குழு அமைத்தது. இந்த நதி நீரைத் தமிழகத்திற்குத் திருப்புவதற்குச் சாத்தியக் கூறுகள் உள்ளன என அக்குழு கூறியது.

  அதன் பின்பு மத்திய, தமிழக, கேரள அரசுகள் சுமார் 16 முறை பேசியும் எவ்விதத் தீர்வும் ஏற்படவில்லை. நான் உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்னை குறித்து வழக்குத் தொடுத்து, தீர்ப்பையும் பெற்றுள்ளேன்.

  கேரளத்தில் ஓடுகின்ற சாலியாறு, பாரதப்புழா, சாலக்குடி, பெரியாறு, ஆழியாறு ஆகிய நீர்ப் பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் உள்ளன. இந்த நதிகள் கேரள மாநிலத்தில் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றது. இதிலிருந்து தமிழகத்திற்கு நீர் கொடுக்கலாம்.

  கேரளாவுக்கு அரிசி, காய்கறி, சிமெண்ட், வைக்கோல், பால் போன்ற பல அத்தியாவசியப் பொருள்களை தமிழகம் வழங்குகிறது. அவற்றை உற்பத்தி செய்ய தண்ணீர் கொடுத்தால் தானே அதன்மூலம் கேரள சகோதரர்களுக்கு தேவையான பொருள்களை நாம் தர முடியும்.

  தமிழகம் நீர் ஆதாரத்திற்கு பிற மாநிலங்களோடு தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் இரண்டு அணைகளைக் கட்டி 48 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

  தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசுபவர்கள், இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

   

  கட்டுரையாளர்: வழக்குரைஞர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai