சுடச்சுட

  

  நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதனின் முழு முயற்சியால், 1948-இல் "தமிழ்நாடு பொது நூலகச் சட்டம்', அன்று தமிழ்நாடு நிதியமைச்சராக இருந்த தி.சு. அவினாசிலிங்கம் செட்டியாரின் முழு ஆதரவோடு, இந்தியாவிலேயே முதல்முறையாக நிறைவேற்றப்பட்டது.

  தொடர்ந்து தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில், பொது நூலகத் துறை சார்பாக கிளை நூலகங்கள் அமைக்கப்பட்டன. நெ.து. சுந்தரவடிவேலு, பொதுக் கல்வித் துறை இயக்குநராக இருந்தபோது, அண்ணா சாலையில் முக்கியமான இடத்தில், மிகக் குறைந்த விலையில், சென்னை மாவட்ட மைய நூலகம் அமைக்க இடம் வாங்கப்பட்டு மாவட்ட மைய நூலகம் அமைக்கப்பட்டது.

  1972-இல் வெளியிடப்பட்ட அரசாணையின் மூலம், பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பிரிக்கப்பட்டு, தனியாக பொது நூலகத் துறை அமைக்கப்பட்டது. 1974-இல் மற்றொரு அரசாணையின் மூலம், 10 ஆண்டுகள் நூலக அனுபவமும், நூலகவியலில் மேற்பட்டப்படிப்பு படித்தவர்கள், பொது நூலகத் துறை இயக்குநராக நியமிக்கப்பட வேண்டுமென்ற விதியின்படி, வே. தில்லைநாயகம் பொது நூலகத் துறை முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

  இவர் அண்ணா சாலை, பொது நூலகத் துறை இயக்குநர் அலுவலகத்தினை செயலகமாகக் கொண்டு 10 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். மாவட்டம்தோறும் நூலக ஆணையகங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாவட்ட மைய நூலகங்களும், மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் கிளை நூலகங்களும் ஏற்படுத்தப்பட்டன.

  மாவட்ட மைய நூலகங்களுக்கு இடம் வாங்கி சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதில் நூலகங்கள் செயல்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மாவட்ட நூலக ஆணையங்கள் அமைக்கப்பட்டு, அவை மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்களின் செயல்பாட்டினை மேற்பார்வையிட்டு கண்காணித்து வந்தன.

  எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, நூலகங்கள் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி, நூலகர்களை அரசுப் பணியாளர்களாக மாற்றி, புதிதாக நூலகங்கள் அமைக்க வேண்டிய நிதி உதவியினையும் அளித்து வந்தார்.

  1982-இல் வே. தில்லைநாயகம் ஓய்வுபெற்ற பின், பொது நூலகத் துறை நிர்வாகம் சீரழியத் தொடங்கியது.

  1982-க்குப் பிறகு இன்று வரை, அரசாணைப்படி, பத்து ஆண்டுகள் நூலக அனுபவமும், நூலகவியலில் பட்டமேற்படிப்பு பெற்றவர் பொது நூலகத் துறை இயக்குநராக நியமிக்கப்படவில்லை. தமிழ்நாட்டிலுள்ள அரசுத் துறைகளில், மிகவும் சீர்கேடான, விதிகளை மீறிய துறை பொது நூலகத் துறைதான்!

  இயக்குநரகத்தில் பல்லாண்டுகளாக உதவி இயக்குநர் பதவியும் இணை இயக்குநர் பதவியும் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் மாவட்ட நூலக அதிகாரி பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன.

  தமிழ்நாட்டிலுள்ள 4,000-க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களில் 1,000-க்கும் மேற்பட்ட கிளை நூலகர்கள் பதவி காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளாக விதிப்படி நூலகர்களுக்கு பதவி உயர்வு தரப்படவில்லை.

  ஆண்டுதோறும் குறித்த காலத்திற்குள் புதிய நூல்கள் வாங்கப்படவில்லை. கிளை நூலகங்களுக்குத் தேவையான மின்சார வசதி, கழிவறை வசதி, இருக்கைகள் வசதி செய்து தரப்படவில்லை. இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகளை நீக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  ஆனால், பொதுமக்கள், ஆண்டுதோறும் தவறாமல், ரூ.200 கோடிக்கு மேல் "நூலக வரி' தனியாகச் செலுத்தி வருகிறார்கள். ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை ஆண்டுதோறும் ரூ.10 கோடிக்கு மேல் நிதியளிக்கிறது.

  நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின், 73 மற்றும் 74-ஆவது திருத்தங்களின்படி, மாநகராட்சிகளும், நகராட்சிகளும், பேரூராட்சிகளும் நூலகங்களை ஏற்படுத்தி, அவற்றை முறையாக நிர்வகித்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  ஆனால், அவர்கள் நூலக வரியினை மட்டும் வசூலித்துவிட்டு, நூலக வளர்ச்சியில் கவனம் செலுத்துவதில்லை. சென்ற ஆண்டு மட்டும் சென்னை மாநகராட்சி ரூ.40 கோடிக்கு மேல் நூலக வரி வசூலிக்கப்பட்டு உள்ளது.

  ஆனால், நகரிலுள்ள 134 கிளை நூலகங்களில் 60-க்கு மேல் நூலகர் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. பல நூலகங்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லை.

  சட்டமன்றக் கூட்டத்தில், பள்ளிக் கல்வி மானிய கோரிக்கையின்போது இதைப் பற்றி, எந்த கட்சி சட்டமன்ற உறுப்பினரும் பேசுவதுமில்லை! தமிழ்நாட்டு "அறிவுப் பசியாளர்கள் இன்றும் எத்தனை காலம்தான் விரதம்' இருக்க வேண்டுமோ?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai