சுடச்சுட

  

  குஜராத்தில் பிறந்து "சத்திய சோதனை' கண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாகிய மகாத்மாவின் பெயர், அவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில தினங்கள் முன்னதாகக்கூட அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. "தகுதியானவர் இன்று உயிருடன் இல்லை' என்று 1948-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எவருக்கும் வழங்கப்படவில்லை.

  நோபல் விருதுகூட இன்றைக்குச் சில சிந்தனைகளைக் கிளப்பி உள்ளது. ஐரோப்பியர்கள் மட்டுமே பெற்றுவந்த இந்த விருது, அமெரிக்கர்களுக்கும், அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கும் வாய்த்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக வங்கதேசத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பெற்றுவந்த நிலை. இந்திய வாழ் மேனாட்டாருக்கும் உறுதி ஆனது.

  இன்றைக்கு இந்தியர் பலரது வங்கிக் கணக்குகள் பதுங்கி இருக்கும் சுவீடன் நாட்டில் ஆல்பிரெட் பென்ஹார்டு நோபல் தம் பெயரில் நிறுவிய பரிசுத் திட்டம் இது.

  1901 டிசம்பர் மாதம் முதல் இன்றுவரை 199 இயற்பியல் விருதாளர்களில் மூவர் மட்டுமே இந்தியர்கள். தமிழ்நாட்டில் திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்து, இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த முதல் நோபல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன் (1930). அமெரிக்கக் குடியுரிமை பெற்ற டாக்டர் சுப்பிரமணியம் சந்திரசேகர் இரண்டாவது நோபல் தமிழர் (1983). மூன்றாமவர், பிரிக்கப்படாத இந்தியாவில் (இன்றைய பாகிஸ்தானில்) பிறந்த அப்துஸ் சலாம் (1979).

  வேதியியலில் 169 விருதாளர்களில் ஒரே ஒருவர்தான் இந்தியர். வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கடராமன் ராமகிருஷ்ணன் (2009), கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிறந்தவர்.

  மேல் படிப்பிற்காக, சென்னை இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம் மற்றும் வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கவில்லையாம். அதனால், அமெரிக்காவில் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவர்.

  இலக்கியத்திற்கு நோபல் விருது பெற்ற 111 பேரில் மூவர் இந்தியாவைச் சார்ந்தவர்கள். அவர்களில் பிரபலமான "தேசிய கீதம்' படைத்த ரவீந்திரநாத் தாகூர் (1913). பண்டைய வங்காளத்தில் (இன்றைய வங்க தேசத்தில்) ஜெஸ்ஸூர் மாவட்டத்தினை பூர்வீகமாகக் கொண்டவர்.

  முன்னொரு காலத்தில் ஜெஸ்ஸூரில் ஆளுநராகப் பொறுப்பு வகித்த முகம்மது தாஹிர் தீஹிர் பிர் அலி, உண்மையில் இந்துவாக இருந்து மதம் மாறியவர். அதே இந்துக் குடும்பத்தில் கல்கத்தா நகரில் தோன்றியவர் தாகூர்.

  அவர் ஒரு ஜமீன்தார் போலவே வாழ்ந்து வந்தார். ககன் ஹார்ஹாரா (ககன் சந்திரா தாம்) என்னும் கவிஞரின் நட்பினால், அவரது "ஏமி ஹோத்தாய் பாவோ தாரே' என்ற இசை மெட்டு அடிப்படையில்தான் வங்கதேசத்தின் தேசிய கீதத்தினைத் தாகூர் யாத்தார் என்கிறார்கள். தாகூர் பாடிய இந்திய தேசிய கீதத்தில் இன்றைய பாகிஸ்தானின் "சிந்து' மாகாணமும் இடம்பெற்றுள்ளது.

  தாகூருக்கு முன்னால் இலக்கியத்திற்கான இவ்விருது பெற்றவர் "பிரிட்டிஷ் பேரரசின் தீர்க்கதரிசி' ருட்யர்ட் கிப்ளிங் (1907). இவர் பம்பாய் பிரசிடென்சியில், பம்பாய் நகரில் பிறந்த "ஆங்கிலோ இந்தியர்'.

  மூன்றாவதாக, அயல்நாடுவாழ் இந்திய வம்சாவளியினரான வித்யாதர் சூர்ஜ் ப்ரசாத் நைப்பால் என்கிற வி.எஸ். நைப்பால் (2001). பிரிட்டிஷ் ஆளுகைக்கு உள்பட்ட த்ரினிதாத் தீவில் பிறந்தவர். இவரது பெற்றோர் இந்தியாவில் இருந்து பிஜித் தீவுகளுக்குக் கரும்புத் தோட்டத் தொழிலாளிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.

  பாரதியார் "பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்' எனும் தலைப்பில் "கரும்புத் தோட்டத்திலே' என்று கவிதை பாடியது இவரைப் போன்றோரின் இன்னல்களைத்தான்.

  பொருளாதாரத்தில் பரிசு பெற்ற ஒரே ஒரு இந்தியர் அமார்த்ய சென் (1998). 1960-ஆம் ஆண்டுகளின் இறுதியில், அமெரிக்கப் பொருளாதார நிபுணர் கென்னத் ஆர்ரோவின் கண்டுபிடிப்பை ஒட்டி, தமது ஆய்வு முடிவுகளை "வறுமையும் பஞ்சமும்: உரிமையும் மறுப்பும்' என்கிற நூலாக வெளியிட்டவர்.

  "நியூயார்க் புத்தக மதிப்பீடுகள்' என்ற இதழில் "10 கோடிக்கும் மேற்பட்ட பெண்களைக் காணவில்லை' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை தீட்டினார். பெண் சிசுக் கொலை அதிகரித்து வருவதே இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பெண்கள் "காணாமல்' போகக் காரணம் என்று குறிப்பிட்டார்.

  பிறகென்ன, அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின் பதவிகள் இவரைத் தேடிவந்தன. மாசச்சூசெட்ஸ் தொழில்நுட்பப் பயிலகம் மற்றும் பெர்க்ளி பல்கலைக்கழகக் கல்லூரியில் வருகைப் பேராசிரியர், லண்டன் பொருளாதாரக் கல்வியகம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு "அனைத்து ஆன்மக் கல்லூரி'யில் அரசியல் - பொருளாதாரத் துறைப் பேராசிரியர், கேம்பிரிட்ஜ் "ட்ரினிட்டி கல்லூரி'யில் ஆசான் (1988 - 2004), அமெரிக்கப் பொருளாதாரச் சங்க உறுப்பினர் (1994), ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் "தாமஸ் டபிள்யு. லாமான்ட் பல்கலைக்கழக இருக்கை'ப் பேராசிரியர் எனப் பல்வேறு பணிகள்.

  பொதுவாக, இந்தியாவோடு தொடர்பு உடையவர்கள் அமைதிக்கு நோபல் தகுதி பெறுவது அதிகரித்துள்ளது.

  1979-ஆம் ஆண்டு விருது பெற்ற அன்னை தெரசாவின் பூர்வீகம், ஐரோப்பாவில் ஆதி ஈரானிய "துருக்கியப் பேரரசு' இது. 1948 வரை யுகோஸ்லாவியக் குடியுரிமை. 1950-ஆம் ஆண்டு இந்தியப் பிரஜை ஆனவர்.

  இந்தியாவில் வாழ்ந்து வரும் பதினான்காம் தலாய் லாமா, திபெத் நாட்டவர். "தலாய் ப்லாமா' என்ற சொல்லே பேச்சுவழக்கில் தலாய் லாமா ஆகிவிட்டது. "தலாய் ப்லாமா' என்ற திபெத்தியச் சொல்லின் பொருள் "கடல் ஆசான்' என்பது. இவர் மடாலய பீடம் ஏறிய மறு ஆண்டில் (1951), சீன மக்கள் குடியரசு திபெத் மீது படையெடுத்தது. இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

  1960-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் மத்திய உளவுத் துறை அளித்த 17 லட்சம் டாலர் நிதி உதயுடன், இந்தியாவில் இருந்தவாறே சீனா மீது கொரில்லாப் போர் நடத்தினார்.

  1959-ஆம் ஆண்டு திபெத் கிளர்ச்சி தோல்வியுற்றதால், தலாய் லாமா அகதியாக இந்தியாவிற்கு வரவேண்டியது ஆயிற்று. அந்நாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அனுமதியுடன், வட இந்தியாவில் இமாசலப் பிரதேசத்தின் "தர்மசாலா' எனும் இடத்தில் குடியேறி வாழ்ந்தார். தலாய் லாமாவிற்கு 1989-ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

  அதிகம் பேசப்படாதவர் முகம்மது யூனஸ். பண்டைய வங்காளத்தில் (இன்றைய வங்க தேசத்தில்) பத்துவா கிராமத்தில் பிறந்தவர். வங்க தேச விடுதலைக்காக "வங்காளப் பிரஜைகள் குழு' அமைத்தவர் யூனஸ்.

  அமெரிக்கவாழ் பங்களாதேஷ் மக்களையும் ஒருங்கிணைத்துப் போராடியவர். 1982-ஆம் ஆண்டுவாக்கில் 28,000 உறுப்பினர்களைக் கொண்டு சொந்தமாக "கிராமீய வங்கி' (கிராமப்புற வங்கி) உருவாக்கினார். அந்த வகையில், அவருக்கு 2006-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

  2007-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ராஜேந்திர கே. பச்சோரி "ஐ.பி.சி.சி.' என்று குறிக்கப்படும் "வானிலை மாற்றம் குறித்த உலக நாடுகளுக்கு இடையிலான ஆய்வுக்குழு'வின் தலைவர். பிரிட்டிஷ் இந்தியாவில் (இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள) நைனிடால் யூனியன் பிரதேசத்தில் பிறந்தவர்.

  அமெரிக்காவிலுள்ள வட கரோலினா மாகாணப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் வணிகத் துறையில் உதவிப் பேராசிரியர், சிறப்பு வருகைப் பேராசிரியர், உலக வங்கியில் வருகை ஆய்வாளர் ஆகிய பதவிகள் வகித்தார்.

  அண்மையில் அமைதிக்கான நோபல் விருது பெற்ற கைலாஷ் சத்யார்த்தி (கைலாஷ் சர்மா) மத்தியப் பிரதேசத்தவர். தாம் ஆற்றிவந்த விரிவுரையாளர் பணியை ராஜிநாமா செய்துவிட்டு, "ருக்மார்க்' எனும் அமைப்பினை உருவாக்கியவர். "ருக்' என்றால் கம்பளி என்று பொருள்.

  கம்பளி நெசவுத் தொழிற்சாலைகளில் குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவதை எதிர்க்கும் அமைப்பு. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்கா இதனை, தெற்கு ஆசியப் பகுதிகளில் "ருக்மார்க் யு.எஸ்.ஏ.' என மாற்றியது.

  இந்தப் பன்னாட்டு நிறுவனத்தின்வழி "குழந்தைகள் கைபடாமல் தயாரித்த கம்பளி இது' என்று அமெரிக்கா சந்தையில் இறங்கியது. இந்தியாவில் அலங்கார விரிப்புகள் ஆகவும், இமயமலைப் பகுதிகளில் படுக்கைகள், போர்வைகள் ஆகவும் பயன்படுத்தப்படும் கம்பளித் தயாரிப்பிற்கும் இதே சான்றிதழ் முறை பொருந்துமாம்.

  இதனால், கைலாஷ் சத்யார்த்திக்கு வந்து சேர்ந்த அமெரிக்க கெளரவிப்புகளும் உதவிகளும் ஏராளம்.

  அமெரிக்காவின் "குழந்தைகள் வன்கொடுமைத் தடுப்பு மையம்', "பன்னாட்டுத் தொழிலாளர் உரிமைகள் நிதியம்' ஆகிய அமைப்புகளில் ஆட்சிக் குழு உறுப்பினர். அமெரிக்காவின் "அசோகா சான்றோன்' (1993), "தி ட்ரம்பட்டர் விருது' (1995), "ராபர்ட் எஃப் கென்னடி மனித உரிமைகள் விருது' (1995), "வால்லன்பெர்க் பதக்கம்' (மிக்சிகன் பல்கலைக்கழகம், 2002), "விடுதலை விருது' (2006), நவீன உலகின் அடிமைத்தனத்தை ஒழித்த நாயகர்கள் வரிசையில் அங்கீகாரம் (2007), "ஜனநாயகப் பாதுகாவலர் விருது' (2009) - இப்படிப் பற்பல.

  கட்டுரையாளர்:இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai