Enable Javscript for better performance
இயற்கையே நல்லது- Dinamani

சுடச்சுட

  

  இயற்கையோடு இயைந்த பாரம்பரிய விவசாயத்துக்கு ÷விவசாயிகள் திரும்ப வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்த நிலையில், இந்த ஆண்டு பெய்த மழையால் அணைகள், குளங்கள், ஏரிகள் நிரம்பியுள்ளன.

  இதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிர்சாகுபடியை துவக்கியுள்ளனர். பழனி மற்றும் சுற்றுப்பகுதியில் பல நூறு ஏக்கர்களில் நெற்பயிருக்கு நாற்று விடப்பட்டுள்ளது. ஆனால், அடியுரம் இடுவதற்கு யூரியா கிடைக்கவில்லை.

  சிலர் யூரியாவை மூட்டைக்கு ரூ.300 வரை அதிகம் கொடுத்து வாங்கினர். ஆனால், யாரும் இயற்கையான குப்பை உரமோ, மண்புழு உரமோ போடுவதற்கு தயாராக இல்லை. 

  இதற்குக் காரணம் விவசாயிகள் வாங்கி நடும் விதைநெல், உரங்கள் மூலமாகவே தோன்றி பூச்சிமருந்து, களைக்கொல்லி மூலமாகவே வளர்ந்து சாகுபடியாகிறது.  

  1960-இல் ஏற்பட்ட பசுமைப்புரட்சியால் இந்திய வேளாண் முறை தலைகீழாக மாறியது. இதனால் நெல் உற்பத்தி அதிகமானது என்றாலும், ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகள் அதிகம் என்பதை, அண்மைக்காலமாக அறிய முடிகிறது.

  இயற்கையை துன்புறுத்தாமல், காசு செலவில்லாமல் கைக்கு கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இயற்கை விவசாயத்தை செய்தால் லாபம் கிடைக்காது என்பது பொய்யான ஒன்றாகும். 

  தற்போது இயற்கை முறையால் விளைவிக்கப்படும் பொருள்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. மருத்துவ குணம் நிறைந்த சின்ன பொன்னி, ராஜமுடி, ரத்னசுடி, மைசூர் மல்லிகே, ஜீராசன்னா, கெப்ரிசன்னா நெல் வகைகளைப் பயிரிட வேண்டும். 

  பாரம்பரிய நெல் வகைகளின் குணம், மணம், சுவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாது. அரசே கிராம பஞ்சாயத்துக்கள் மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க  வேண்டும்.

  பாரம்பரிய நெல் வகைகளில் ஒவ்வொரு நெல்லும் ஒரு வியாதிக்கு மருந்தாகியிருக்கிறது. மாப்பிள்ளை சம்பாவும், காட்டு யானமும் உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. விதைத்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டு, மீண்டும் அறுவடைக்கு சென்றால் போதும்.

  ரசாயன உரம், பூச்சி மருந்தால் விளையும் பயிரும் ரசாயனமே. இதை சாப்பிடும் மனிதனின் உடலில் ரசாயனம் சேர்கிறது. 

  தமிழ்நாட்டில் இருந்த பாரம்பரிய நெல் வகைகளில் பெரும்பாலானவை அழிந்து விட்டதாக தெரியவருகிறது. நம் பாரம்பரிய விவசாயத்தில் தற்போது நவீன கருவிகளை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியது.

  அறுவடைக்கான கருவிகள், நடவுக்கான கருவிகள், டிராக்டர் போன்றவை தொழிலாளர்கள் பற்றாக்குறையை நீக்கவல்லது. இதை நவீன விவசாயிகள் ஏற்றுக்கொள்ளலாம். இதில் தவறேதும் இல்லை. 

  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை விவசாயத்துக்கு மாற்றாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியதன் விளைவு, இன்று நிலங்களில் உரம், பூச்சிமருந்து இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலம் மலடாகிவிட்டது.

  முந்தைய காலங்களில் விளைநிலங்களின் வரப்புகள் முழுவதும் பசுமையான கீரை வகைகள் இருக்கும். அவற்றைச் சமைக்கும் போதே நல்ல மணம் வீசும்; பசியையும் அவை தூண்டும். 

  பச்சைக் கத்திரி, வெண்டை, நாட்டுத் தக்காளி, சிறு தானியங்கள் போன்றவை தற்போது மறைந்து வருகின்றன. வெளிநாட்டு விதை நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

  வரும் காலங்களில் காயைப் பழுக்க வைத்து, அதில் விதை எடுத்து போட்டு செடியை உருவாக்க முடியாது. விதைக்கு, நிறுவனங்களிடம் கையேந்தி நிற்க வேண்டும். அது வளர்வதற்கு உரம், பூச்சி மருந்து கேட்டு அலையவேண்டும்.

  விதையுள்ள காய்கறிகளும், பழங்களுமே உடலுக்கு நல்லது. விதையற்றவை சிறந்தது அல்ல. நம் நிலத்தை மீண்டும் மீட்டெடுக்க பல ஆண்டுகளாகும். ரசாயன உரத்தால் விளைவிக்கப்படும் உணவுப்பொருள்கள் ஏற்றுமதிக்கு தகுந்ததல்ல. 

  ரசாயன கலப்பில்லாத இயற்கை உரம் கொண்டு தயாரிக்கப்படும் விவசாய பொருள்களுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டிலும் சந்தை வாய்ப்பு உள்ளது.  பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சிகளை இயற்கை உரம் தயாரிக்க அரசு வற்புறுத்த வேண்டும்.

  இந்த நிர்வாகங்கள் மக்கும் பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் உரம், ஆடு, மாடு கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் உரம், மண்புழு உரம் ஆகியவற்றை குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 

  ரசாயனத்தைக் குறைத்து மலடாகிக் கொண்டிருக்கும் நிலத்தை பண்பட்ட நிலமாக மாற்ற வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai