Enable Javscript for better performance
உயர் தரமா? ஆரோக்கியமா?- Dinamani

சுடச்சுட

  

  நமது இளைஞர்கள் வெள்ளைக்காரர்கள்கூடப் பின்பற்றாத உணவுப் பழக்கங்களை தற்போது பின்பற்றத் தொடங்கி இருப்பதன் மூலம், நமது நாட்டின் பாரம்பரிய உணவையே அடுத்தத் தலைமுறையினர் அறியா வண்ணம் செய்திடுவர் போலும்.

  இயற்கை உணவு, புன்செய் தானியங்களின் நன்மை ஆகியவற்றை ஒருசிலர் போதிக்க எண்ணினாலும் பீட்சா, பர்கர் நுகர்வே நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

  மேலை நாட்டு உணவு தயாரிப்புகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பளிக்கவும் நம் நாட்டு உணவு வணிகத்திற்குச் சாவுமணி அடிக்கவும் 2006-ஆம் ஆண்டிலேயே ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதன் பெயர் "உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்'.

  2011-ஆம் ஆண்டில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு அமலுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அமலில் இருந்த "உணவு கலப்படத் தடைச் சட்டம்' ரத்துச் செய்யப்பட்டது.

  நம் நாடு ஏழை நாடல்ல. ஆனால், இந்தியர்களில் பெரும்பாலோர் ஏழைகள் என்பது போன்ற மாயத் தோற்றத்தை அரசியல் வாதிகள் ஏற்படுத்தினர்.

  நமது மக்கள் சிக்கனமானவர்கள், சேமிக்கும் பழக்கம் உடையவர்கள், கடன் வாங்கி ஊதாரி வாழ்க்கை வாழ விரும்பாதவர்கள்.

  மிகுந்த பணம் படைத்தவராயினும் இன்னும் ரயிலில் சாதாரண வகுப்பில் பயணம் செய்வோரைக் காணலாம். அவர்கள் ரத்தத்தில் உள்ள சிக்கன குணம் சாதாரண வகுப்பில் திருப்தி கொள்ளச் செய்கிறது.

  நாம் காய்கறி கடைக்குச் சென்றால் சொத்தை, வாடல் இல்லாமல் நல்ல காய்கறியாகப் பார்த்து வாங்குவோம். ஆனால், மேலை நாடுகளில் மிகப்பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் விவசாயிகளிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்திலுள்ள நீள, அகலத்திற்கு மாறான அளவில் காய்கறிகள் இருந்தால் அது திருப்பி அனுப்பப்பட்டு அழிக்கப்படும்.

  சிறிய அளவிலான முருங்கைக்காயோ அல்லது நீளம் குறைந்து வளைந்துள்ள புடலங்காயோ நாம் வீசி எறிவதில்லை. அவற்றால் நமது உடல்நலத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை என்பதை நாம் நன்கு அறிவோம். இதுதான் மேலை நாட்டுத் தர நிர்ணயத்திற்கும் நமது பயன்பாட்டுக்கும் உள்ள வேறுபாடு.

  2006-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் முழுமையாக அமல் படுத்தப்பட்டால் பாதிப்படையப் போகிறவர்கள் நம் நாட்டு விவசாயிகளே தவிர வணிகர்கள் அல்ல.

  விதை விதைத்துப் பயிராக்கி அறுவடைக்காகக் காத்திருக்கிறான் விவசாயி. அறுவடை நேரத்தில் பெருமழை பெய்து பயிராகி நின்ற உளுந்து மழையினால் கெட்டுப்போய் விட்டது. அந்த விவசாயி என்ன செய்ய முடியும்?

  பாதிக்கப்பட்ட உளுந்தை அறுவடை செய்து தனது வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்துக் காய வைத்துப் பதமாக்கினால், அதில் 30 விழுக்காடு கெட்டுப் போனதாகவும் மீதம் 70 விழுக்காடு நல்ல தானியங்களாகவும் கலந்து உள்ளது.

  அவன் அதைச் சந்தைக்குக் கொண்டு சென்றால், அதை வாங்கும் மொத்த வணிகர் தனது இடத்திற்குக் கொண்டு சென்று ஆலையில் நவீன இயந்திரங்களின் உதவியால் கெட்டுப்போன தானியத்தைத் தனியே பிரித்து மாட்டுத் தீவனத்திற்கு விற்பனை செய்யவும் நல்ல தானியங்களைப் பருப்பாக உடைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யவும் இயலும்.

  ஆனால், 2006-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்தை, சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாது.

  ஏனெனில், அதைக் கொள்முதல் செய்யும் வணிகர் மறு நிமிடமே குற்றவியல் வழக்குப் போடப்பட்டு கைது செய்யப்படுவார். அவ்வாறாயின் அந்த விவசாயியின் கதி? ஏற்கெனவே கடன் வாங்கி விவசாயம் செய்த அவர் மீண்டும் கடன் வாங்கி தான் வைத்திருக்கும் கொஞ்ச நிலத்தையும் இழக்க வேண்டியதுதான்.

  நகராட்சியால் பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர் அனைவருக்கும் வழங்க இயலாது. ஆனால், அந்த நீரினால் தயாராகும் உணவுப் பொருள் மட்டும் மேல்நாட்டுத் தரத்தில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?

  நமது வீட்டைச் சுற்றி சாக்கடை. ஆனால், மளிகைக் கடைக்குள் ஒரு பல்லியோ எலியோ இருந்தால் உரிமையாளருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம்.

  நமது நாட்டில் புகையிலையினால் பலியாவோர் ஆண்டுக்கு 10 லட்சம் பேர். ஆனால், அரசு புகையிலை உற்பத்தி மற்றும் உபயோகத்தைத் தடை செய்யவில்லை.

  மது உடல்நலத்திற்குக் கேடு என்று கூறிக்கொண்டு, அரசே அதன் விற்பனையை ஊக்குவிக்கிறது. இப்போது கூறுங்கள். நமக்குத் தேவை மேல்நாட்டுப் பாணி உயர்தரமா? நமது பாரம்பரிய உணவினால் கிடைக்கும் ஆரோக்கியமா?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai