Enable Javscript for better performance
கட்டளைகள் அல்ல, பரிந்துரைகள்!- Dinamani

சுடச்சுட

  

  இன்று தமிழகத்தில் தேசியக் கட்சிகளில் ஒன்றுகூட வலிமையாக இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்து மக்களை விடுவித்து மாற்று அரசியலை வளர்த்தெடுக்க ஓர் வலிமையான கூட்டணி 2016 சட்டமன்றத் தேர்தலில் களம் காணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

  வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் தனித்தனியாக நின்று எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. மோடியைக் காட்டி மட்டுமே பா.ஜ.க. தமிழகத்தில் தனிப்பெரும் சக்தியாக வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. ஒவ்வொருவரும் முதல்வர் கனவில் மூழ்கியிருந்தால் வலிமையான ஒரு கூட்டணிக்கு வழியே இல்லை.

  இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல் சேற்றில் சிக்கி எழ முடியாமல் தடுமாறும் இந்த அரசியல் சூழலை, மாற்று அரசியலை வளர்த்தெடுக்க விரும்பும் கட்சிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  இந்த முக்கியமானத் தருணத்தில் வாசன் காங்கிரஸிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கப் பெரிதாக உதவக்கூடும் என்று நடுநிலையாளர்களும், மாற்று அரசியல் மலர வேண்டும் என்று ஆர்வத்துடன் எதிர்பார்ப்பவர்களும் அழுத்தமாக நம்புகின்றனர்.

  வாசன், மூப்பனார் மறைவுக்குப் பின்பு 2002-இல் நேரடி அரசியலில் கால் பதித்தார். தமிழ் மாநில காங்கிரஸின் தலைவரானார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்க்கும் நோக்கில் தன் கட்சியை அதில் இணைத்தார். கடந்த 12 ஆண்டுகளாக அவர் தமிழ்நாடு காங்கிரஸின் தனிப்பெருந்தலைவராகத் திகழ்ந்தார்.

  தொண்டர்களிடையே மிகப்பெரிய செல்வாக்குடன் வலம் வந்த வாசனை காங்கிரஸ் தலைமை அங்கீகரிக்கவில்லை. அவரைப் பின்பற்றிய பெருந்திரளான தொண்டர்களின் நிர்பந்தத்தினால் காங்கிரஸிலிருந்து வெளியேறி இன்று தனிகட்சி கண்டிருக்கும் வாசன், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுக்கவும், அவரது கட்சி மக்களின் மகத்தான ஆதரவைப் பெறவும் சில முக்கியமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

  1. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்து ஊழல் கறை சிறிதும் படியாமல் சிறப்பாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் வாசன். ஆனால், அவர் மட்டும் தூய்மையானவராக இருந்தால் போதாது.

  வாசன் ஊழல் கறை படியாத, கிரிமினல் குற்றச்சாட்டுக்குள்ளாகாத, அரசியல் பதவிகளைத் தங்கள் சொந்த நலனுக்குப் பயன்படுத்தாத, தவறான வழிகளில் சொத்து சேர்க்காத மிகச்சிறந்த மனிதர்களை மட்டுமே இனங்கண்டு அவர்களை முதன்மைப்படுத்த வேண்டும்.

  2. நேர்மை, எளிமை, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் தன்னுடைய கட்சி மக்களிடம் சென்றடையும் என்றும், மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கட்சி போர்க்குணத்துடன் செயலாற்றும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புக்கேற்பத் தன்னுடைய கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் அர்ப்பணிப்புடன் கடும் உழைப்பை நல்குவார்கள் என்றும் வாசன் உறுதிமொழி வழங்கியிருக்கிறார்.

  இந்த உறுதிமொழிப்படி அவருடைய நம்பிக்கைக்குரிய தளபதிகளும், தொண்டர்களும் சிறிதும் வழுவாமல் நடந்துகொள்கிறார்களா என்று தொடர் கண்காணிப்பில் அவர் ஈடுபட வேண்டும்.

  3. பெருந்தலைவர் காமராஜரின் கால்கள் படாத கிராமமே தமிழகத்தில் இல்லை. அதனால்தான், 1967-இல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தபோதும் 41 விழுக்காடு வாக்குகளைப் பெற முடிந்தது. காமராஜர் மறைவுக்குப் பின்பு தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அனைவரும் சத்தியமூர்த்தி பவனில் இருந்தபடி அன்றாடம் காகித அறிக்கைகள் மூலமே கட்சியை நடத்தினர்.

  மூப்பனார் "காமராஜர் ஆட்சி' தமிழகத்தில் மலர வேண்டும் என்று கனவு கண்டார். அந்தக் கனவை நனவாக்க அவர் "கிராம தரிசனம்' என்ற பெயரில் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று மக்கள் பிரச்னைகளை அறிய முற்பட்டார். ஆனால், அதற்குள் காலம் அவரைக் களவாடிவிட்டது.

  வாசன் குக்கிராமங்கள் வரை நேரில் சென்று மக்களுடன் நெருக்கங் கொண்டு அவர்களுடைய பிரச்னைகளை அறிய வேண்டும்.

  4. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மீது மாறாத நேசங் கொண்டிருந்த மூப்பனார், எந்த நிலையிலும் காங்கிரஸ் கட்சியின் தோழனாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஒரு மாநிலக் கட்சியைத் தொடங்கிய பின்பு "பூர்வாசிரம வாசனை'யிலிருந்து முற்றாக விடுபட்டு விட வேண்டும்.

  தன்னுடைய தந்தை செய்த அரசியல் தவறை வாசன் செய்யக்கூடாது. காங்கிரஸ் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதைப் பாரபட்சமின்றி நேர்மையாக விமர்சிக்க வேண்டும்.

  காங்கிரஸ் கட்சியின் ஊழல் நடவடிக்கைகள், உள்கட்சி ஜனநாயகத்திற்கு வாய்ப்பின்மை, ஒற்றைக் குடும்பத்தின் ஆதிக்கம் போன்ற பல தவறுகளை மக்கள் கடுமையாக எதிர்ப்பதை வாசன் கவனத்தில் கொள்ள வேண்டும். "காங்கிரஸ் நட்புக் கட்சி' என்று வாசன் சொன்னால், என்றாவது ஒருநாள் இவர் மீண்டும் காங்கிரஸில் இணைந்து விடுவார் என்ற சந்தேகத்திற்கு அது சாட்சியமாகிவிடும்.

  5. காமராஜர் கண்மூடும் வரை "இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று பாமரருக்கும் புரியும் வகையில் விளக்கினார். காங்கிரஸ் கட்சி 41 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற நிலையிலிருந்து 4.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் "டெபாசிட்' பறிகொடுத்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு முதன்மையான காரணம், அது அடுத்தவர் தோள்களில் அமர்ந்துகொண்டு, சொந்தக் கால்களில் நடப்பதாகக் கற்பனை செய்து மகிழ்ந்ததுதான்.

  வாசன் இரண்டு திராவிட கட்சிகளுடன் தேர்தல் உறவு கொள்ளக்கூடாது. சில அரசியல் ஆதாயங்களுக்காகப் பதவி விரும்பிகளின் நிர்பந்தத்தினால் வாசன் 2016-இல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் வாசனின் கட்சி தமிழ

  கத்தில் பத்தோடு பதினொன்றாகிவிடும்.

  6. தன்னுடைய புதியக் கட்சியில் பெரும்பாலான பொறுப்புகளும், பதவிகளும் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வழங்கப்படும் என்று வாசன் வாக்களித்திருக்கிறார். நாற்பதாண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முகங்கள் மாறியதே இல்லை. ஏறக்குறைய ஒவ்வொரு தொகுதிக்கும் இன்னாருக்கென்று பட்டா போட்ட கதைதான்.

  இந்த நிலை வாசன் கட்சியில் நீடிக்கலாகாது. கட்சியை வளர்க்க அரும்பணியாற்றும் இளைய தலைமுறைக்கு 50 விழுக்காடு இடங்களையாவது வாசன் ஒதுக்க முன்வர வேண்டும்.

  7. வாரிசு அரசியலை வளர்த்தெடுக்காத மாநிலமே இன்று இந்தியாவில் இல்லை. காஷ்மீரம் தொடங்கி, தமிழகம் வரை எங்கும் வாரிசு மயம். இதில் விதிவிலக்காக இருப்பவை இடதுசாரி இயக்கங்களே.

  வித்தியாசமான தலைவராக தமிழகத்தில் வாசன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள, இந்த விஷயத்தில் வைகோவை முன்மாதிரியாக ஏற்க வேண்டும். மூப்பனாரின் வாரிசாக வாசன் அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனால், மூப்பனார் இருக்கும்போதே கட்சியைக் கைப்பற்ற அவர் அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தவில்லை. மூப்பனார் மறைவுக்குப் பின்பும் அவர் கட்சித் தலைவராவதற்குக் காரியமாற்றவில்லை.

  தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர்கள் ஒருமனதாக அவருடைய தலையில் சூட்டிய மகுடந்தான் கட்சித் தலைமைப் பதவி. வாசன் தொடங்கியிருக்கும் புதிய கட்சியில் ஒரு குடும்பத்தில் இருவருக்குப் பதவி என்ற நிலை என்றும் ஏற்படக் கூடாது.

  8. வாசன் கட்சியின் சார்பாகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகிப்பவர்கள் ஆண்டுதோறும் தங்கள் சொத்துப் பட்டியலை மக்கள் மன்றத்தில் வெளியிட வேண்டும்.

  பதவியைப் பயன்படுத்தி அறத்துக்குப் புறம்பாக ஒரு ரூபாய்கூட சேர்க்கவில்லை என்பதை வாக்காளர்களுக்கு அவர்கள் வெளிப்படுத்துவதன் மூலம் கட்சியின் மீது மக்களின் மதிப்பீடு உயரும்.

  9. தமிழினம் சார்ந்தும், தமிழ்மொழி சார்ந்தும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசியலமைப்பாக வாசனுடைய கட்சி வடிவம் பெற வேண்டும். தமிழினத்தை பாதிக்கக் கூடிய, தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக விளங்கக்கூடிய சக்திகளுக்கு எதிராகப் போராடும் போராளிகளின் பாசறையாக இக்கட்சி பரிணமிக்க வேண்டும்.

  இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் சக்திகளின் ஆதிக்கத்தில் தமிழினம் வீழ்ந்துவிடாமல் "வளமான தமிழகம், வலிமையான பாரதம்' என்ற மூப்பனாரின் வாசகத்தை வாசன் கட்சி எந்நாளும் சோர்வின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

  10. வாசன் தனிக்கட்சி தொடங்கிய நிலையிலேயே காமராஜர் ஆட்சியை அமைத்துவிட முடியாது. இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அணி அமைய வேண்டும். அந்த அணியில் வாசன் கட்சி முக்கிய அங்கம் வகிக்க வேண்டும்.

  "நாளையே முதல்வர் ஆவோம்' என்ற கனவுக்கு இடந்தராமல் பொறுமையோடு காய் நகர்த்த வேண்டும். இவை யூதர்களுக்கு மோசஸ் வழங்கியது போன்று பத்துக் கட்டளைகள் அன்று; தமிழகத்தில் வாசன் தனித்துவமிக்க தலைவராகப் பரிணமிப்பதற்கான பத்துப் பரிந்துரைகள்.

   

  கட்டுரையாளர்:

   

  தலைவர், காந்திய மக்கள் கட்சி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai