சுடச்சுட

  

  அகில இந்திய காங்கிரஸின் பிடியிலிருந்து மீண்டு(ம்) வந்திருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ். திருச்சி பொதுக்கூட்டத்தில், கட்சியின் பெயரை அறிவித்தார் அதன் தலைவர் ஜி.கே. வாசன்.

  மழை பெய்த வேளையிலும் திடல் நிரம்பிய கூட்டத்தை வைத்து, தமிழ் மாநில காங்கிரஸூக்கு தொண்டர்கள் அதிகமா அல்லது தமிழ்நாடு காங்கிரஸூக்கு இழப்பு அதிகமா என்பதைக் கணிக்க முடியாது.

  வாக்கு வங்கியும் வரும் கூட்டமும் எப்போதும் ஒரு விகிதத்தில் இருப்பதில்லை என்பதே தமிழக அரசியல் வரலாறு.

  மேடையில் பேசிய அனைவரும், ஜி.கே வாசன் உள்பட, காங்கிரஸ் கட்சி மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே பல பேட்டிகள் மூலம் தெரிவிக்கப்பட்டவைதான்.

  தமிழகத்தை காங்கிரஸ் தலைமை கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி வெறும்

  4 சதவீதமாகக் குறைந்துபோனது, மூப்பனார், காமராஜர் தியாகங்களை மறைக்கப் பார்க்கிறார்கள் போன்றவைதான்.

  இதைத் தவிர்த்துப் பார்த்தால், நேர்மையான தூய்மையான, எளிமையான நிர்வாகம் என்று விளம்பரங்களில் முன்வைத்த அதே கருத்தையே மேடையிலும் வலியுறுத்தினார்கள்.

  திருச்சி பொதுக்கூட்டத்தின் முடிவில் எழும் கேள்விகள் இரண்டுதான்: தமிழக அரசியலில் தமாகா-வின் இடம் என்ன? மக்கள் இக்கட்சியை எப்படிப் பார்ப்பார்கள்?

  1996-ஆம் ஆண்டு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி கூடாது என்று காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு எதிராக எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்புதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தோன்றக் காரணமாக இருந்தது.

  அன்றைய தினம் கிடைத்த பெரும் ஆதரவுக்கு அ.தி.மு.க. மீதான எதிர்ப்பு மட்டுமல்ல, தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் மீதான சலிப்பும் காரணம்.

  அதை மூப்பனார் புரிந்துகொண்டிருந்தால், தனித்துப் போட்டியிட்டிருப்பார். அன்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாதிருந்தாலும்கூட, தமிழகத்தின் இரண்டாவது நிலைக்கு காங்கிரஸ் உயர்ந்திருக்கும். அப்போது கிடைத்த வாய்ப்பை மூப்பனார் தவறவிட்டுவிட்டார்.

  2014-இல் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் உருவாகியதன் காரணம் கூட்டணி பிரச்னை அல்ல, தமிழக மக்கள் மனக்கொந்தளிப்பும் காரணம் அல்ல. வெறும் உள்கட்சிப் பூசலால் தமாகா உருவெடுத்துள்ளது.

  மத்திய அரசின் ஊழலை மையப்படுத்தி, தலைமையின் ஊழலை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கினாலும் மக்கள் இக்கட்சியைத் திரும்பிப் பார்த்திருப்பார்கள்.

  1996 சூழலை உருவாக்கியிருக்கலாம். ஆனால், ஜி.கே. வாசன் அப்படிச் செய்யவில்லை. சோனியா, ராகுல் குறித்து விமர்சித்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

  அப்படியானால் இவருக்கு எத்தகைய வாக்கு வங்கி உருவாகும்?

  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனையாலும், தி.மு.க. கடந்த பொதுத்தேர்தலில் அடைந்த தோல்வி, தி.மு.க. உள்கட்சிப் பூசல்கள், தி.மு.க. தலைவரால் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இயலாத நிலையில் உள்ள அவரது உடல்நிலை ஆகியவற்றாலும் தமிழக அரசியலில் எப்போதுமில்லாத வகையில் இப்போது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.

  இந்த வெற்றிடத்தை நாங்கள்தான் நிரப்பப்போகிறோம் என்று ஒவ்வொரு கட்சியும் கூறிக்கொள்கின்றன.

  ஆனால், வெற்றிடத்தை நிரப்ப வேண்டியவர்கள் மக்கள்தான்.

  தலைவன் என்பவன் மக்கள் திரளின் உருவாக்கம். அந்த நேரத்தில் சமூகத்துக்கு எது தேவையோ அதற்கான ஒரு நபரை அந்த சமூகம் தேர்வு செய்யும்.

  ஜனநாயகத்தில் மக்கள் அரசியல் கட்சிகளைத் தேர்வு செய்கிறார்கள். பரவலாகப் பேசப்படும் தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வல்லமை மக்களிடம்தான் உள்ளது.

  மக்கள் ஒரு கட்சியைத் தேர்வு செய்ய வேண்டுமானால், அந்த மக்களின் ஓட்டுமொத்த எதிர்பார்ப்புக்கு நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டும்.

  ஜி.கே.வாசன் ஆதரவாளர்களை "உதிர்ந்த இலைகள்' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.

  நாங்கள் "முறிந்த கிளைகள்" என்று பதில் கூறினார் ஜி.கே.வாசன். மக்களைப் பொருத்தவரை இலைகளா, கிளைகளா என்பது முக்கியமல்ல. நிழல்தரும் மரத்துக்கான விதைகள் என்றால் மட்டுமே பெரும் வாக்கு வங்கி கிடைக்கும்.

  திருச்சி பொதுக்கூட்டம் முறிந்த கிளைகள் என்பதை மட்டுமே நிரூபித்திருக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai