Enable Javscript for better performance
இந்தியர்களைத் துயிலெழுப்பிய அன்னி பெசன்ட்!- Dinamani

சுடச்சுட

  இந்தியர்களைத் துயிலெழுப்பிய அன்னி பெசன்ட்!

  By ஆர். நடராஜ்  |   Published on : 16th October 2014 01:48 AM  |   அ+அ அ-   |    |  

  அக்டோபர் மாதத்திற்குத் தனி மகிமை உண்டு. நாம் நேசிக்கும் பல மாமனிதர்கள் பிறந்த மாதம் இது. மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, ஜெயபிரகாஷ் நாராயணன், வல்லபபாய் படேல், சுப்பிரமணிய சிவா ஆகியோர் பிறந்த மாதம்.

  நம் நாட்டிற்காக அர்ப்பணிப்போடு உழைத்த தேசிய தலைவர்களில் அன்னி பெசன்ட் அம்மையார் முக்கியமானவர். ஆனால், அவரைப் பற்றி நாம் அதிகம் நினைவில் கொள்வதில்லை.

  1893-ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர், "சகோதர சகோதரிகளே' என்று தன் பேச்சைத் துவங்கி கூடியிருந்தோரின் கரகோஷத்தைப் பெற்றதை நேரில் கண்டார் அன்னி பெசன்ட்.

  மனிதப் பிறவியின் நோக்கம், பிரபஞ்சத்தின் விந்தைகள், மதங்களின் நெறிகள் இவற்றுக்கானத் தேடலின் முடிவு இந்தியாவில் கிடைக்கும் என்ற உணர்வு உண்டாக, இந்தியாவின் தென்முனையான தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கினார்.

  இளம்பருவத்தில் அன்னி பெசன்ட்டுக்கு ஏற்பட்டது போன்ற கஷ்டங்கள் வேறொருவருக்கு ஏற்பட்டிருந்தால் அவர் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார்.

  ஐந்து வயதில் தந்தை இறப்பு, சில வருடங்களில் சகோதரன் இறப்பு, அவருடைய தாயார் இரு குழந்தைகளை இன்னல்களைப் பொருள்படுத்தாமல் வளர்த்தது என்று அன்னியின் இளம் பிராயம் கஷ்ட ஜீவனத்தில் கழிந்தது. ஆனால், "மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கையின் குறிக்கோள்' என்ற ஆழமான வைராக்கியத்தை அது அளித்தது.

  வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற தேடலில் இருந்தவருக்கு, தான் சார்ந்திருந்த மதத்தின் இறுக்கமான கோட்பாடுகள் உறுத்தின. உண்மையைத் தேடும் உள்மனதிற்கு ஏற்புடையதாக இல்லை.

  இந்நிலையில், பத்தொன்பது வயதிலேயே ப்ராங்க பெசன்ட் என்ற போதகருடன் திருமணம். புகுந்த இடத்தில் நிம்மதியில்லை. அடுத்தடுத்து பிறந்த இரு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு, அவர்களை குணப்படுத்த மாதக்கணக்கில் போராட்டம் என்று தொடர் கஷ்டங்கள்.

  குடும்ப வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து, குழந்தைகள் மீது உரிமை பெற நீதிமன்றத்தில் வழக்கு, அன்புத் தாயாரின் மரணம் இவையெல்லாம் மதங்கள் மீது கொண்ட அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்தின.

  1872-ஆம் வருடம் பிளாவட்ஸ்கி அம்மையாரின் பிரம்ம ஞான சபையில் அன்னி பெசன்ட் தன்னை இணைத்துக் கொண்டார். சோஷலிசக் கொள்கைகளில் அதிகப் பற்று கொண்டு ஃபேபியன் இயக்கத்தில் இணைந்து, அப்போதைய உயரிய சிந்தனையாளர்களான பெர்னாட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், வெல்ஸ், வெர்ஜீனியா உல்ப் போன்றவர்களோடு சிந்தனைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

  மனிதப் பிறவி, மதம், அரசியல், சமுதாய ஏற்றத்தாழ்வு போன்ற உண்மைகள் அவரை மிகவும் பாதித்தன. மனிதப் பண்பு உயர பாடுபட வேண்டும், மனித நேயம் நிலைபெற உழைக்க வேண்டும் என்ற முடிவோடு பிரம்ம ஞான சபையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

  ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சீடராக விவேகானந்தர் அமைந்தது போல், பிளாவட்ஸ்கி அம்மையாருக்கு அன்னி பெசன்ட் அமைந்தார். பிரம்ம ஞான சபையின் கொள்கைகளை இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று மக்களோடு பகிர்ந்து கொண்டார்.

  இந்தியாவின் கலாசாரம் என்ற பொக்கிஷத்தை சுமந்து கொண்டு, ஆனால், அதைப்பற்றிய ஸ்மரணையின்றி அடிமைகளாக வாழும் இந்தியர்களைக் கண்டு மனம் வருந்தினார்.

  பெண் கல்வியின் அவலநிலை கண்டு, பெண் கல்விக்காகப் பல முயற்சிகளை எடுத்தார். 1898-ஆம் ஆண்டு வாராணசியில் பெண்களுக்கான கல்விக் கூடத்தை நிறுவினார்.

  காசியில் நிறுவப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை அடிப்படையாக வைத்து தர்பங்கா மஹாராஜா ராமேஸ்வர பிரதாப் சிங் தலைமையில் காசி இந்து பல்கலைக்கழகம் உருவானது. இந்து சமயத்தையும், இந்தியப் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வித் திட்டம், 1904-ஆம் ஆண்டு அவர் நிறுவிய பெண்கள் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

  அக்கல்வித் திட்டம் பல்கலைக்கழகத்தின் அடிப்படை சித்தாந்தமாக அமைந்தது. 1921-ஆம் வரும் காசி பல்கலைக்கழகம் பெசன்ட் அம்மையாரின் சேவையைப் பாராட்டி அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

  அன்னி பெசன்ட் முற்றிலும் தன்னைச் சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். உண்மையாகவும், தைரியமாகவும் தனது கருத்துகளை எடுத்துக்கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  அவரது கருத்துச் சுதந்திரத்தால் பல எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. அறிஞர் சார்லஸ் பிராட்லோவுடன் சேர்ந்து திருமணம், கருத்தடை, ஜனத்தொகை அதிகரிப்பால் ஏழைகள் படும் இன்னல் இவை குறித்து பல கருத்துகளைத் துணிச்சலாகக் கூறினார். அக்கருத்துகள் பிற்போக்கான மதபோதகர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

  நீதிமன்றத்தில் நாத்திகம் பரப்புவதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு அன்னிக்கு ஆறுமாத தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அதனால் சோர்ந்துவிடவில்லை அன்னி. மேல்முறையீட்டில் நிரபரதியாக வெளி வந்து, ஆண் - பெண் உறவு, விவாகம் பற்றிய தனது கருத்துகளை சிறு சிறு பிரசுரங்களாக வெளிட்டார். அவை லட்சக்கணக்கில் விற்பனையாயின. பல மொழிகளிலும் வெளிவந்தன.

  அன்னி இந்தியாவிற்கு வந்தபோது இங்கிருந்த சமுதாயச் சூழலைக் கண்டு வருந்தி, இந்நிலையை மாற்ற விழைந்தார். 1912-ஆம் வருடம் "மகன்கள் - மகள்கள்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, மகன், மகள் இருவரும் பேதமின்றி நடத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளை வலியுத்தினார்.

  இந்தியாவில் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமை கொண்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. ஒருமித்த கருத்து கொண்ட இரு சமூக சீர்திருத்தவாதிகளும் இணைந்தனர். பெண்களின் நிலையை உயர்த்தவும், பிற்போக்குப் பிணைப்புகளிலிருந்து அவர்களை விடுவிக்கவும் இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்பை 1913-இல் உருவாக்கினார்.

  டாக்டர் முத்துலட்சுமியோடு அன்னி இணைந்து பெண்களுக்கு கல்வி, ஆண்களுக்கு இணையான உரிமை என பல முயற்சிகளை மேற்கொண்டார். "இந்தியாவே விழித்தெழு' என்ற தனது கட்டுரைகளின் தொகுப்பினை 1913-ஆம் ஆண்டு வெளியிட்டு அதன் மூலம் விடுதலைக்கான விழிப்புணர்வை நாடெங்கும் ஏற்படுத்தினார்.

  நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்து, "இந்திய இளைஞர்கள் சங்க'த்தை (வ.ங.ஐ.அ.) 1914-ஆம் ஆண்டு துவங்கினார். உடற்பயிற்சிக் கூடம் நம் உடலை எவ்வாறு வலுவடையச் செய்யுமோ அதுபோல, சீரிய குடிமக்களை உருவாக்கும் மையமாக இச்சங்கம் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்தார். அந்த "இந்திய இளைஞர்கள் சங்கம்' இப்போது நூற்றாண்டு சேவையை கொண்டாடுகிறது.

  "சுயாட்சிப் பேரியக்கம்' என்ற விடுதலைப் போராட்டத்தை சென்னையில் துவக்கியதற்கு பேருதவியாக இருந்தவர் பாலகங்காதர திலகர். விடுதலை வீரர் தாதாபாய் நெüரோஜி தலைவராகச் செயல்பட்டார். அன்னி பெசன்ட் விதைத்த விடுதலை விருட்சம் வளர்ந்து அதன் விழுதுகள் நாடெங்கும் இறங்கின.

  ராஜாஜி, சர் சி.பி. ராமசாமி, திரு.வி. கல்யாண சுந்தரனார், சுப்பிரமணிய ஐயர், இந்து பத்திரிகை கஸ்தூரி ரங்கன் போன்றோர் சென்னையிலும், மோதிலால் நேரு, சாப்ரூ, தாஸ் போன்றோர் அகில இந்திய அளவிலும் செயல்பட்டனர். பிரிட்டிஷ் அரசு 1917 ஜூன் மாதம் அன்னையை சிறையிலிட்டது. ஆனால், எதிர்ப்பு அதிகரிக்கவே அவரை விடுவித்தது.

  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 1917-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் அன்னி பெசன்ட் அம்மையார்தான்.

  1907-இல் அன்னி பிரம்ம ஞான சபையின் தலைவராகி மதங்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டார். உண்மை நெறி, நேர்மையான பாதை, மனித நேயம், சகோதரத்துவம் இவைதான் பிரம்ம ஞான சபையின் கொள்கைகள்.

  இந்தியாவையும் இந்தியர்களையும் அன்னி வெகுவாக நேசித்தார். மகாத்மா காந்தி "அன்னி பெசன்ட்தான் இந்தியர்களை நீண்ட துயிலிலிருந்து தட்டி எழுப்பி சுதந்திர உணர்வை ஊட்டினார்' என்று பாராட்டியுள்ளார்.

  தமிழறிஞர் திரு.வி.க. அம்மையாரால் வெகுவாக கவரப்பட்டார். "அம்மையாரின் கிளர்ச்சி என்னுள் கனன்று கொண்டிருந்த கனலை எழுநாவிட்டு எரியச் செய்தது; வெஸ்லி பள்ளிப் பணியை விட்டுவிடத் தூண்டியது; "தேசபக்தன்' இதழுக்கு ஆசிரியனாக்கியது; தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது; மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்தது. என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்த அன்னி பெசன்ட் எனக்கு அன்னை வசந்தை ஆனார்' என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

  இந்த அக்டோபர் மாதத்தில் காந்தி, சாஸ்திரி, ஜெயப்பிரகாஷ், படேல் போன்றோருடன் அன்னி பெசன்ட் அம்மையாரையும் மறவாமல் நினைவுகூர்வோம்.

  இன்னொரு அன்னை வசந்தையோ, காந்தியோ, சாஸ்திரியோ, அம்பேத்கரோ, அன்னி பெசன்ட்டோ வரமாட்டார்கள்.

  அவர்கள் இட்டுச் சென்ற பாதையில் உபாதைகள் முளைக்காமல் கண்காணித்தலே நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய சமூக சேவையாகும்.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp