Enable Javscript for better performance
குண்டு மழை பொழிந்த செண்பகராமன்!- Dinamani

சுடச்சுட

  
  shenbagaraman

  முதல் உலக மகாயுத்த நேரம். வானத்திலிருந்து எப்போது ஜெர்மானியரின் யுத்த விமானம் குண்டுகளை வீசும் என்று எப்போதும் பயந்து கொண்டிருந்த காலம்.

  அந்தச் சமயம் ஒரு நீர்மூழ்கி கப்பல் சென்னைக்கு வந்து கடலைக் கலக்கியது. குண்டுகளையும் வீசியது. சென்னை கலங்கி நடுங்கியது. அந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு "எம்டன்' என்று பெயர். அதை நமது சென்னையில் கடலில் ஒதுக்கி சாகசங்கள் செய்தவர் ஜெய்ஹிந்த் செண்பகராமன்; நாள் 22.9.1914.

  திருவனந்தபுரத்தில் ஆங்கில அரசில் பணியாற்றிய போலீஸ் அதிகாரியின் மகன் செண்பகராமன். திருவனந்தபுரம் மகாராஜா கலாசாலையில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்பொழுது மாணவர்களிடையே சுதந்திர உணர்ச்சியை ஊட்டியும், மாணவர் அமைப்பு உருவாக்கியும் பரங்கியரின் நெஞ்சத்தை பதை பதைக்க வைத்தான் மாணவ வீரன் செண்பகராமன்.

  விடுதலை இயக்கத்தின்போதும் தேசியப் பற்றுக்கு தாரக மந்திரமாக விளங்கும் "ஜெய்ஹிந்த்' என்ற கோஷத்தை முதல் முதலில் முழங்கியதும், பிறரை முழக்க வைத்ததும் மாணவர் செண்பகராமன்தான். அதனால் அவர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் என்று அழைக்கப்பட்டார்.

  அவனது தீர நெஞ்சத்தையும், வீர உணர்ச்சியும் கண்ட அதிகார வர்க்கம் அவன்மீது கண் வைத்தது. ரகசிய போலீஸாரின் பார்வை செண்பகராமனை பின்தொடர ஆரம்பித்தது.

  செண்பகராமன் சிந்தை கலங்கவில்லை. அடிமை நாட்டிலே வாழ்கின்ற வாழ்வும் ஒரு வாழ்வா என ஆத்திரமடைந்தான். அப்போது இந்தியாவில் ஜெர்மானிக்காக உளவு வேலையில் ஈடுபட்டிருந்த சர் வில்லியம் ஸ்டிரிக்கலாண்ட் திருவனந்தபுரத்தில் தங்கி செண்பகராமன் நடவடிக்கையை கூர்ந்து கவனித்து வந்தார்.

  அவரது அன்பையும் பரிவையும் பெற்று அவரது துணையோடு 1908 செப்டம்பர் 22-இல் தனது 17-ஆவது வயதில் என்.ஜி.எல். யார்க் என்ற ஜெர்மானியக் கப்பலில் சர். வில்லியமும், செண்பகராமனும் ஒன்றாகத் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டார்கள்.

  இத்தாலியிலும், சுவிட்சர்லாந்திலும் ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் சர்வகலாசாலையிலும் செண்பகராமனின் உயர் கல்விக்கு உதவினார் சர் வில்லியம்.

  அரசியல், பொருளாதாரம், பொறியியல் ஆகியவற்றில் டாக்டர் பட்டமும் பெற்று 12க்கும் மேற்பட்ட உலக மொழிகளைக் கற்று தேர்ந்தார் செண்பகராமன்.

  பொது மேடைகளில் ஏகாதிபத்திய ஆட்சியைப் பற்றியும், இந்திய நாட்டைக் கொள்ளையிடும் கொடுமையையும் கூறினார். ÷செண்பகராமன் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மேலும் ஆதரவு தேடி பெர்லின் நகரத்தில் இந்திய ஆதரவு சர்வதேச கமிட்டி நிறுவினார். அதற்கு இவரே தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  "ப்ரோ இந்தியா' என்ற செய்தித்தாளை ஆரம்பித்து பிரிட்டிஷார் கட்டிய பொய் பிரசாரக் கோட்டையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கினார். "ப்ரோ இந்தியா' புதிய இந்தியாவை நிர்மாணிக்கும் புரட்சிக் காவியமாக விளங்கிற்று. ஐரோப்பா கண்டத்தில் இந்தியாவின் குரலாக "ப்ரோ இந்தியா' உருவானது.

  நீக்ரோ மக்களுக்கு நீதி கிடைக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம் நிறுவி அவர்களது விடுதலைக்காகவும் போராடினார். அமெரிக்காவில் அவதியுற்ற நீக்ரோ மக்களை எழுச்சி பெற செய்த இவரது பேச்சால், இனி செண்பகராமன் நம் நாட்டில் இருந்தால் நல்லதல்ல என்று அமெரிக்கா முடிவு செய்தது.

  உலகளவிற்கு தெரிந்துவிட்ட ஒரு மாபெரும் தலைவராக செண்பகராமன் உருவானதும் பிரிட்டிஷ் பேரரசு இவரைக் கைது செய்ய முயன்று பலன்கிட்டாமல் செண்பகராமனை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருவதற்கு ஒரு லட்சம் பவுன் பரிசாகத் தரப்படும் என அறிவித்தது.

  செண்பகராமன் பெர்லினை தலைமையிடமாக அமைத்து இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். வெள்ளையர்களை இந்தியாவைவிட்டு வெளியேற்ற முடியும் என்று உறுதியாக நம்பினார்.

  செண்பகராமனின் வீரமும், தீரமும், விவேகமும் ஜெர்மானிய அதிபர் வில்லியம் கெய்சருக்கும் தெரிந்தது. அதிபரோடு சமமாகப் பழகும் வாய்ப்பும் ராஜாங்க மரியாதையும் செண்பகராமனுக்குக் கிட்டியது.

  எதிரிக்கு எதிரி நண்பர் என்ற கொள்கையோடு, இங்கிலாந்தை எதிர்த்து வருகின்ற ஜெர்மனி, இந்தியாவில் ஆளும் இங்கிலாந்துகாரர்களை விரட்டத் துடிக்கும் செண்பகராமனுக்கு சகலவிதமான ராணுவ உதவிகளை வழங்கியது.

  இந்தக் கால கட்டத்தில் டாக்டர் அரிய தயாள்சர்மா 1913-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் கத்தார் கட்சியைத் தொடங்கி அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை தாயகம் திரும்பிச் செல்லும்படியும், அங்கிருந்து ஆங்கிலேயர்களை விரட்டும்படியும் அறிவுரை கூறினார்.

  அமெரிக்காவிலும், கனடாவிலும் இருந்த இந்தியர்களிடம் அவருடைய அறிவுரை பெரும் எழுச்சியைத் தோற்றுவித்தது. டாக்டர் அரிய தயாள்சர்மா ஜெர்மனிக்கு சென்று வீரன் செண்பகராமனால் உருவாக்கப்பட்ட இந்திய தேசியத் தொண்டர் படையோடு தன்னையும் தனது கத்தார் கட்சியும் இணைத்துக் கொண்டார்.

  ஐ.என்.வி. வலுவோடும் வலிமையோடும் இருப்பதைக் கண்ட அதிபர் கெய்சர் செண்பகராமனைப் பெரிதும் போற்றினார்.

  இந்தக் கால கட்டத்தில் முதல் மகா யுத்தம் தொடங்கியது. ஐ.என்.வி. படைத் தலைவராக முதல் சுதந்திரப் போராட்டவீரராக ஆயுதம் ஏந்திப் போராடினார் தீரன் செண்பகராமன். தான் ஜெர்மனிக்கு வந்த 1908 செப்டம்பர் 22-லிருந்து 6 வருடங்கள் கழித்து தனது இருபத்தி மூன்றாம் வயதில் 1914 அதே செப்டம்பர் 22-இல் தனது சுதந்திர தாகத்தை நிறைவேற்றினார்.

  முதல் போருக்குப் பின்னரும் செண்பகராமன் ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டார். எனினும், அவரது ஜெர்மனி ஆதரவு நிலை அதிக நாள் நீடிக்கவில்லை.

  1931-இல் ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் இந்தியா விடுதலை பெறுவதற்கு "லாயக்கற்ற நாடு' என்று கூறியதை தீரன் செண்பகராமன் கண்டித்து ஹிட்லர் தமது சொற்களை எட்டு நாள்களுக்குள் வாபஸ் பெற வேண்டும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்.

  எட்டு நாள் கெடு முடிவதற்கு முன்பே ஹிட்லர் தமது கூற்றுக்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு நாஜிகளின் எதிர்ப்புக்கு ஆளானார் செண்பகராமன். எனினும், அதையும் சமாளித்துக் கொண்டு இந்திய விடுதலைக்காக தொடர்ந்து பாடுபட்டார்.

  1933-இல் வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டிற்கு செண்பகராமன் சென்றிருந்தார். அந்த மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து கலந்து கொண்ட சுபாஷ் சந்திரபோஸ், தீரன் செண்பகராமனை சந்தித்து பேசினார்.

  தீரன் செண்பகராமனின் லட்சியத்தையும் சுதந்திர தாகத்தையும் கண்ட சுபாஷ் சந்திரபோஸ் ஆனந்தம் அடைந்தார். செண்பகராமனின் இந்திய தேசியத் தொண்டர்

  படையின் அமைப்பு இந்திய தேசியப் படையாக உருவெடுத்தது.

  1934 மே 26-இல் விடுதலை வீரன் செண்பகராமன் மரணம் அடைந்தார். அவர் எழுதி வைத்த உயிலில், தனது அஸ்தியை தனது தாய்த் திருநாடாகிய இந்தியாவிற்கு எடுத்துச் சென்று நாஞ்சில் நாட்டு வயல்களிலும், நதிகளிலும் தூவ வேண்டுமென்று எழுதியிருந்தார். லட்சுமிபாய் செண்பகராமன் 1936-இல் அஸ்தி கலச்தோடு பம்பாய் வந்து சேர்ந்தார்.

  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜ் முயற்சியால் 32 ஆண்டுகள் கழித்து 17.9.1966 ஐ.என்.எஸ். கப்பலில் எடுத்துச் சென்று அமரர் செண்பகராமன் உயில்படி அஸ்தி தூவப்பட்டது.

  அப்போது பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி கூறிய செய்தியில், "புரட்சி வீரர் டாக்டர் செண்பகராமன் பிள்ளைக்கு "சல்யூட்' செய்கிறேன். அவருடைய அஸ்தி நம்முடைய கொடிக் கப்பலில் பம்பாயிலிருந்து கொச்சிக்கு செல்வது பெருமிதத்திற்குரிய நிகழ்ச்சியாகும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

  தீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் 1934இல் பிப்ரவரி 26-இல் உயிர்பிரிந்த பின்பு உடலை எரியூட்டி அதன் அஸ்தியை திருமதி லட்சுமிபாய் செண்பகராமன் கணவர் சொன்ன சொல்லை செயல்படுத்திட, கரமனை ஆற்றில் கரைத்தார். மீதிஅஸ்தி நாஞ்சில் நாட்டு வயல்வெளிகளில் தூவப்பட்டது.

  (இன்று சென்னையில் "எம்டன்' கப்பலில் இருந்து குண்டு போடப்பட்டதன்

  நூற்றாண்டு நிறைவு நாள்.)

   

  கட்டுரையாளர்:

   

  தேசிய நல்லாசிரியர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai