Enable Javscript for better performance
பண்டிட்டுகளின் மீள்குடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர் பண்டிட்டுகளை மீள்குடியேற்றம் செய்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சயீதும் மாறுபட்ட குரலில் பேசி வருவது கவலை அளிக்கிறது.

    காஷ்மீர் பண்டிட்டுகள் குடியேற தனி குடியிருப்புகள் கட்டும் திட்டம் ஏதும் மாநில அரசிடம் இல்லை என்று முதல்வர் முப்தி முகமது சயீத் கூறி வருகிறார்.

    ஆனால், அவர்களுக்கு என காஷ்மீர் பள்ளத்தாக்கில் தனிக் குடியிருப்பு கட்டும் திட்டத்தில் மாற்றம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

    மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புது தில்லியில் அண்மையில் சந்தித்துப் பேசிய முதல்வர் முப்தி முகமது சயீத், காஷ்மீர் பண்டிட்டுகளை மீள்குடியேற்றம் செய்வதற்கு பள்ளத்தாக்குப் பகுதியில் ஒருங்கிணைந்த தனி நகரியம் அமைக்கப்பட்டு, அங்கு அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்றும், இதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கும் என்றும் உறுதியளித்திருந்தார்.

    பின்னர், ஜம்மு - காஷ்மீர் திரும்பியதும், பண்டிட்டுகளை மீள்குடியேற்றம் செய்ய தனிக் குடியிருப்புகள் கட்டும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. இது குறித்து மத்திய அரசுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று கூறி திடீர் பல்டி அடித்துள்ளார்.

    மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்டுகள் தனித்து வாழ முடியாது. இஸ்ரேல் நாட்டில் உள்ளது போன்ற தனிக் குடியிருப்புகள் அமைப்பது சாத்தியமல்ல என்றும் கூறியுள்ளார்.

    அவரது இந்தப் பேச்சு துரதிருஷ்டவசமானது. அவரது நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதற்கு பிரிவினைவாதிகளின் எதிர்ப்பும், சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலும் காரணமாக இருக்கலாம்.

    காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கு பண்டிட்டுகள் திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்குத் தனிக் குடியிருப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

    காஷ்மீரில் காலம் காலமாக வாழ்ந்துவந்த பண்டிட்டுகள், 1989-இல் பயங்கரவாதம் தலைதூக்கியதை அடுத்து உயிருக்குப் பயந்து தங்கள் உடைமைகளை இழந்து வெளி மாநிலங்களில் தஞ்சம் அடைய வேண்டியதாயிற்று. சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகள் போல் வாழ்ந்து வருவது மிகவும் வெட்கக்கேடானது.

    இந்த வரலாற்றுப் பிழையை சரிசெய்ய மத்தியிலும், மாநிலத்திலும் இதுவரை ஆட்சியிலிருந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததில் வியப்பில்லை.

    ஏனெனில், பண்டிட்டுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டினால், காஷ்மீர் முஸ்லிம்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். வாக்கு வங்கி அரசியல் நடத்த முடியாது என்ற குறுகிய நோக்கம்தான் காரணம்.

    காஷ்மீர் பண்டிட்டுகள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீரில் அமைதியும் திரும்பிவிட்டால் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியாதே என்ற நோக்கத்தில்தான் பிரிவினைவாதிகள் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

    காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தனிக் குடியிருப்பு ஏற்படுத்தி மக்களைப் பிரிக்கப் பார்ப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு சில அரசியல் கட்சிகளும் துணை போகின்றன.

    பிரிவினைவாதிகளின் கோரிக்கையை மாநில அரசு காதில் போட்டுக்கொள்ளத் தேவையில்லை. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை ஒப்புக்கொள்ள இயலாதவர்களின் பேச்சை எதற்கு அரசு கேட்க வேண்டும்?

    பிரிவினைவாதிகளின் தீய எண்ணத்தைப் புரிந்துகொண்டு, அவர்களின் எதிர்ப்புக் குரலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அவர்கள் எல்லை மீறினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் தயங்கக் கூடாது.

    காஷ்மீர் பண்டிட்டுகள் மீள்குடியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாதிகள் நடத்திய கடையடைப்புக்கும் பெரிதாக வரவேற்பு இல்லை.

    பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து பண்டிட்டுகள் தங்கள் சொத்துகளைக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு தில்லி, ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடைக்கலம் புகுந்தனர்.

    எனவே, அவர்கள் திரும்பிவந்தால்கூட இழந்த சொத்துகளை மீட்பதற்கு போதுமான பொருளாதார வசதி அவர்களிடம் இருக்காது. இந்த நிலையில், அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதற்கு ஏற்றது ஒருங்கிணைந்த தனி நகரியக் குடியிருப்புகள்தான்.

    காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட்டுகளின் எண்ணிக்கை 62 ஆயிரம் இருக்கும். அவர்களின் சந்ததியினரான இளம் தலைமுறையினர் பலர் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடம் காஷ்மீர் என்று கேள்விப்பட்டிருப்பார்களே தவிர, நேரடித் தொடர்பு இருந்திருக்காது.

    ஆனால், அவர்களில் பலர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்குத் திரும்ப முனைப்புக் காட்டலாம். பண்டிட்டுகளுக்கு தனி நகரியம் அமைப்பது மட்டும் அவர்களிடம் தனி ஈர்ப்பை ஏற்படுத்தாது. அவர்களுக்கு காஷ்மீரில் அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளிக்க மாநில அரசு முன்வர வேண்டும்.

    பண்டிட்டுகள் நிரந்தரமாகத் தங்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

    பண்டிட்டுகளை மீள்குடியேற்றம் செய்ய பள்ளத்தாக்கில் தனி நவீன நகரம் (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்கலாம் என்று நடிகர் அனுபம் கெர் (இவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்தான்) தெரிவித்துள்ள யோசனையும் பரிசீலிக்கத்தக்கது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் பண்டிட்டுகள் தங்கியிருந்தால் பாதுகாப்பாக உணரமாட்டார்கள். அவர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ ஏற்ற இடம் தனிக் குடியிருப்புகள்தான் என்றும் அவர் கூறியுள்ளதிலும் உண்மையிருக்கிறது.

    இந்த விவகாரத்தில் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகளுக்கு கருத்துக் கூற தகுதி இல்லை. எனவே, பாகிஸ்தான் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் பிரிவினைவாதிகளின் நிர்பந்தத்துக்கு மாநில அரசு செவிசாய்க்காமல் மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

    பண்டிட்டுகளை மீள்குடியேற்றம் செய்தால் மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுவதுடன் காஷ்மீர் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai