Enable Javscript for better performance
மன இறுக்கம் - தற்கொலை தீர்வல்ல!- Dinamani

சுடச்சுட

  

  முதல் மனிதன் தோன்றிய அன்றைக்கு இருந்த அன்னப் பறவை, இன்று இல்லை. இங்கிதமான இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, விகாரமான ஓசை குறுக்கிட்டால், உடனே உயிரை விட்டுவிடுகிற அசுணப் பறவை இன்று இல்லை.

  ஆணும், பெண்ணுமாய் பறந்து செல்கிறபோது, இடையில் ஒரு தாமரைப் பூ குறுக்கிட்டால் உயிரை விட்டுவிடுகிற அன்றில் பறவையினமும் இன்றில்லை.

  என்றாலும் மனிதன் மட்டும் இன்றும் இருக்கிறான். காரணம் என்ன? டார்வின் கொள்கைப்படி காலம், இடம், நேரத்துக்கு ஏற்றவாறு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வாழக் கூடியவன் மனிதன் மட்டுமே.

  பலவிதமான படைப்புகளுக்கிடையில், மானுடப் படைப்பு அற்புதமானது, ஆச்சரியமானது என்றார் மாக்சிம் கார்க்கி. அந்தப் படைப்பிலே இன்று பலர், உலுக்கப்பட்ட புளிய மரத்திலிருந்து புளியம் பழங்கள் உதிர்வதுபோல், தற்கொலை செய்து கொள்கிறார்களே, அது ஏன்?

  மன இறுக்கம், மனப் புழுக்கம், மன உளைச்சல் என்கிறார்கள். தனிமை, எதிர்மறை வாழ்க்கை - நம்பிக்கையின்மை, பாலியலால் ஏற்படும் அவமானங்கள், அதிகார வர்க்கம் தரும் மன உளைச்சல் போன்றவை தற்கொலைக்குக் காரணங்கள் ஆகின்றன என்கிறார் அமெரிக்க கான்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டோனி ஜுரிச்.

  தலைநகர் தில்லியில், எய்ம்ஸ் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சுப்ரியா மீனா என்ற மாணவி, அடிக்கடி வந்த நோயால் மனப் புழுக்கத்துக்கு உள்ளாகித் தற்கொலை செய்து கொள்கிறாள்.

  அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வர்னிகா பாண்டே என்ற மாணவி (பல் மருத்துவம்) மன அழுத்தம் காரணமாகத் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்குகிறாள்.

  அந்தக் கல்லூரியிலேயே பயின்ற கீர்த்தி காஹர் என்ற மாணவி, தனது படிப்புக்காகப் பெற்றோர்கள் கஷ்டப்படுவதை எண்ணி நச்சுப் பொருளை உண்டு, தற்கொலை செய்து கொள்கிறாள்.

  நம் நாட்டில் ஒரு மாநிலத்தின் ஆளுநரின் மகனே (மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் மகன் சைலேஷ் யாதவ்) தனது பெயர் ஒரு பெரிய ஊழல் புகாரில் இணைக்கப்பட்டதை எண்ணி, தன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

  நம் நாட்டில் மட்டுமன்றி, அமெரிக்காவிலும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் ஒரு தற்கொலை அமெரிக்காவையே உலுக்கியது.

  மேரி ஓஸ்மெண்ட் அந்நாட்டுச் சின்னத்திரைகளில் புகழ்பெற்ற இசைப் பாடகி. அவரது 18 வயது மகள் மிச்சேல் பிரையனின் தற்கொலை, ஊடக உலகத்தையே திகைக்க வைத்தது. மிச்சேலின் கணவர் பிரையன் விவாகரத்து செய்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாளாம்.

  தற்கொலைகள் பெருகி வருவதைப் பற்றிக் கவலை கொண்ட பேராசிரியர் ஜீன் டுவென்கே (ஸான் டீகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்) ஒரு கள ஆய்வு செய்திருக்கிறார். அந்தக் கள ஆய்வு முடிவின்படி, அமெரிக்காவில் முன்பைவிட தற்கொலைகள் 5 மடங்கு அதிகரித்திருக்கிறதாம்.

  100 நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நிகழ்கிறதாம். 15 வயதிலிருந்து 24 வயதுக்கு உள்பட்டவர்களில் 20 விழுக்காட்டினர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்களாம்.

  மன இறுக்கம் - மன உளைச்சல் எல்லோருக்கும் இருக்கிறது. என்றாலும், சிலர் மட்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதன் முதல் காரணம், ஒரு பிரச்னைக்கு தற்கொலைதான் முடிவு என்று தவறாக எண்ணிவிடுவதுதான்.

  தற்கொலை ஓர் உயிருக்குத்தான் முடிவே தவிர, பிரச்னைக்கு அன்று. ஒரு குடும்பத்தில் ஒருவன் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்கிறான் என்றால், அதிலிருந்து அவன் தப்பிக்க முடியுமே தவிர, அவன் குடும்பம் தப்பிக்க முடியாது.

  இரண்டாவது காரணம், ஓர் உயிரின் மதிப்பு, அருமை - பெருமை அதனை இழப்போருக்குத் தெரியாததுதான். ஒரு விலை கொடுக்காமல் ஒரு தீப்பெட்டியைக்கூட வாங்க முடியாது. ஒரு விலை கொடுக்காமல் ஒரு படி உப்பைக்கூட வாங்க முடியாது.

  ஆனால், விலை கொடுக்காமல் வாங்கப்படுவது உயிர் மட்டும்தான். இழப்பவன் அந்த உயிரைப் பெறுவதற்கு எந்த முயற்சியையும் செய்ததில்லை. ஒருமுறை போனால் திரும்பி வராதது உயிர் மட்டுமே.

  மூன்றாவது காரணம், வாழ்க்கையைப் பற்றி ஒரு கணிப்பு இல்லாததே. வாழ்க்கையை அற்புதமாகக் கணித்தவர் புனித அகஸ்டின். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சாத்தான் என்ற பாம்பும் இருக்கிறது. அற்ப ஆசை என்ற ஏவாளும் இருக்கிறாள். ஆபத்தைத் தடுக்கிற ஆதாமும் இருக்கிறான்.

  ஐம்பொறிகள் என்ற பாம்பு அற்ப சுகங்கள் எனும் ஏவாளைத் தூண்டி, ஆபத்துக்குள்ளாக்கும்போது, ஆதாம் என்ற விவேகம் வந்து தடுத்தாட்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலோரின் வாழ்க்கையில் ஆதாம் ஆகிய விவேகம், எழுந்து வருவதற்கு முன்னேயே சாத்தான் தன் வேலையை முடித்து விடுகிறான் என்றார்.

  கவியரசர் கண்ணதாசனுடைய வாழ்க்கையில், விவேகம் வென்றதை, "தற்கொலைக்கு நான் முயன்ற சரித்திரங்கள் பல உண்டு. அத்தனையும் மீறி இங்கே யாருக்கு வாழ்கிறேன்? தத்தையவள் என் மனைவி தாலிக்கே வாழுகின்றேன்' எனச் சுவைப்படப் பாடுவார்.

  மன இறுக்கத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகாமல் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் எத்தனையோ எச்சரிக்கைகளைச் செய்திருக்கிறார்கள்.

  திருக்குரானிலே ஆண்டவர் ஓர் அருமையான செய்தியைத் தீர்க்கதரிசிக்குத் தெரிவிக்கிறார். "வாழ்க்கை என்பது ஓர் தேர்வு. இத்தேர்வில் பல சோதனைகளும், வேதனைகளும் சாதாரணமாக வந்து செல்லும். நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால், பொறுமையுடையோர்க்கு நபியே நீர் நன்மாராயம் கூறுவீராக' என்பதுவே அச்செய்தி.

  நம் நாட்டில் நரிக் குறவர்கள் (குருவிக்காரர்கள்) என்றொரு நாடோடிக் கூட்டம் வாழ்கிறது. அவர்களுக்கு நிரந்தரமான வீடு கிடையாது (ரயில் நிலையம், ஆல மரத்தடிதான் வாழ்விடம்). நிரந்தர வருமானம் கிடையாது. ஓய்வூதியம் கிடையாது. காப்பீடு கிடையாது. பாசிமணி, ஊசிகள், டால்டா டின்தான் அவர்களின் மூலதனம். என்றாலும், அவர்கள் நிம்மதியாகத் தூங்குகின்ற தூக்கம் யாருக்குக் கிடைக்கும்?

  மன இறுக்கத்தால், அதிர்ச்சியால் அவர்களில் யாரும் தற்கொலை செய்து கொள்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?

  நமக்கு முத்து எப்படிக் கிடைக்கிறது? கடலுக்கு அடியில் கிடக்கும் சிப்பி மேலே வந்து, மழை நீர்த்துளியைத் தாங்கி, தன் வயிற்றுக்குள் இருக்கும் மணலோடு ஒரு புழுக்கத்தை உருவாக்கி, அந்தப் புழுக்கத்தாலேயே முத்தினை உருவாக்குகிறதே, அந்தப் புழுக்கம், மனிதர்கள் மத்தியில் மட்டும் ஏன் உயிரிழப்பை உருவாக்க வேண்டும்?

  பூமிக்கடியில் கிம்பர்லிரேட் என்றொரு பாறை இருக்கிறது. அந்தப் பாறையிலிருக்கும் சில சில்லுகள், ஆண்டாண்டு காலமாய் அழுத்தப்பட்டு, அழுத்தப்பட்டு அல்லவா வைரக் கற்கள் ஆகின்றன. அழுத்தத்தினால், அந்தச் சில்லுகள் தற்கொலை செய்து கொள்வதில்லையே?

  ஏனெஸ்ட் ஹெமிங்வே என்ற நாவலாசிரியர் நோபல் பரிசு பெற்றவர். கிழவனும், கடலும் (பட்ங் ஞப்க் ஙஹய் ஹய்க் ற்ட்ங் நங்ஹ) என்றொரு நாவல் எழுதினார். விடாமுயற்சிக்கும் லட்சியப் பிடிப்புக்கும் உதாரணமான நாவல் அது.

  ஒரு கிழவர் படகிலே மீன் பிடிக்கப் புறப்படுகிறார். இரண்டு நாள்கள் கழித்து அவரது வலையில் பெரிய விலாங்கு மீன் சிக்குகிறது. அவர் அந்த மீனைப் படகுக்குக் கொண்டு வரப் போராடுகிறார். மீனோ அவரைக் கடலுக்குள் இழுக்கப் போராடுகிறது. பல நாள்கள் இந்தப் போராட்டம் நடக்கிறது. கடும் போராட்டத்துக்குப் பிறகு வலையைப் படகுக்குக் கொண்டு வருகிறார் பெரியவர். ஆனால், அந்த மீனின் சதையை மற்ற மீன்கள் உண்டுவிட்டதால், வலையில் மீனின் எலும்புக் கூடுதான் கிடக்கிறது. என்றாலும் பெரியவருக்கு பெருமகிழ்ச்சி.

  ஏனென்றால், போராட்டத்தில் அவருக்கு லாபம் கிடைக்கவில்லையே தவிர, அந்தப் போராட்டத்தில் வென்றதே மகிழ்ச்சி. ஹெமிங்வே, கடலுக்குள் இருந்த மனிதனுக்காக எழுதவில்லை. கரைமேல் வாழ்பவர்களுக்காகத்தான் இதை எழுதினார்.

  அற்பத்திலும், சொற்பத்திலும் மனித உயிர்கள் கழிவதைக் கண்டு கண்ணீர் வடித்தவன் மகாகவி பாரதி. மன இறுக்கத்திலும், உளைச்சலிலும் உயிர்கள் போகக் கூடாது என்பதை, "வண்மையெலாம் ஐயத்திலும் துரிதத்திலும் சிந்தி அழிவதென்னே! பையத் தொழில்புரி நெஞ்சே!' என்று ஆணி அடித்துச் சொல்லியிருக்கிறான் அந்த மகாகவி.

  மேலும், உறுதி கொண்ட நெஞ்சம் உடைய இளைஞர்கள் கருவிலேயே உருவாக வேண்டும் என நினைத்த பாரதி, "எமது பரத நாட்டுப் பெண்பல்லார் வயிற்றினுமந் (தாதாபாய்) நெளரோஜி போற்புதல்வர் பிறந்து வாழ்க' என வாழ்த்தினான்.

  கழுமுனையிலும் சாதனைகளை நிகழ்த்தியவர்கள் பாரதப் புத்திரர்கள். அமரர் வ.வே.சு. அய்யர், இந்தியா ஹவுஸிலிருந்து கொல்லைப்புற கதவைத் திறந்து கொண்டு பிரான்ஸூக்கு தப்பி ஓடும்போதுகூட, கம்ப ராமாயணத்தைக் கக்கத்திலே இடுக்கிக் கொண்டே ஓடினாரே, அதனைத் தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  பகத் சிங்கின் தாய் வித்யாவதி தேவி, மதக் கலவரத்தின்போது லாகூரிலிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று இந்தியாவுக்கு ஓடி வருகிறார். அப்போது அவரது கைப்பையில் மூன்றே மூன்று பொருள்கள் இருந்தன.

  அவை என்ன தெரியுமா? மகன் பகத் சிங் பயன்படுத்திய ஷேவிங் செட், சுகதேவின் தொப்பி, ராஜகுருவின் ஷூ (பாதக்குறடு). தற்கொலைக்கு முயலுபவர்கள், ஒரு நிமிடம் அந்தத் தாயை நினைத்துப் பார்க்கட்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai