நல்லுறவு மலரட்டும்
By | Published On : 13th January 2015 03:29 AM | Last Updated : 13th January 2015 03:29 AM | அ+அ அ- |

இலங்கை தேர்தல்: தமிழர்கள் எழுச்சியால் ராஜபட்ச படுதோல்வி, சிறீசேனா அதிபர் ஆனார் என பத்திரிகையில் படித்தபோது ஆனந்தக் கண்ணீர் வடிக்காமல் வேறென்ன செய்ய முடியும்?
ஒரு தமிழ்ச் சமூகம் இதயத்திலே சுமந்து கொண்டிருந்த எரிமலையால் கிடைத்த ஜனநாயக வெற்றி.
மைத்ரிபாலா சிறீசேனாவுக்குக் கிடைத்த வெற்றிக்கு தமிழர்களின் எழுச்சியும் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறியும்போது "போற்றுபவர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும், தொடர்ந்து செல்வோம் சாக்காடே எதிர்நோக்கி வந்தாலும் சரி, சதிகாரர்களின் சூழ்ச்சி எம்மை வதைத்தாலும் சரி, தோற்காது எம் தொடர்போக்கு அது கூடுமே அல்லாது குறையாது' என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
தமிழ் மக்களை மாக்களைவிட கேவலமாய் நடத்திய ஒரு கொடூர ஆட்சிக்கு மக்கள் ஜனநாயகப் பாதையில் கொடுத்த விடை இது.
தமிழர்கள் மிக எழுச்சியுடன் திரண்டு வந்து வாக்களித்தனர். ஆம், மகிந்த ராஜபட்ச நிறுத்திய படைகளால் கூட இம்மக்களை வாக்களிக்க விடாமல் நிறுத்த முடியவில்லை.
இலங்கையில் ஆதிக்க சக்தியிடமிருந்த அதிகாரமும் ஆணவமும் தகர்த்தெறியப்பட்டுள்ளது. மக்கள் விரும்பிய ஒரு மாற்றம் இத்தேர்தல் மூலம் மலர்ந்திருக்கிறது.
தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் வாக்குகளே ராஜபட்சவின் தோல்வியை உறுதிப்படுத்தியுள்ளதை அறியும்போது மகிழ்ச்சியே.
இலங்கை அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றும், தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும் என்றும் ராஜபட்ச முன்பு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றாமைக்கு சிறுபான்மை தமிழர்கள் அவருக்கு அளித்த சிறப்புப் பரிசுதான் இப்படுதோல்வி.
காலச்சக்கரம் வேகமாக சுழல்கிறது. மக்களை ஏமாற்றி வாழ நினைக்கும் எந்த சக்தியும் அதிக நாள் நிலைத்து நிற்காது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
ஒருவன் பலரை சில காலம் ஏமாற்றலாம். சிலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.
இத்தேர்தலின் மூலம் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபாலா சிறீசேனா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னராவது இந்தியாவும் இலங்கையும் நல்லிணக்கத்துடன் திகழ வேண்டும்.
இந்திய மீனவர்கள் இயற்கையின் சீற்றத்தால் எல்லை தாண்டும்போதும், சிலவேளைகளில் இந்திய எல்லைக்குள்ளேயே வந்தும் இவர்களை பிடிக்கின்ற சிங்கள படை இவர்கள் மீது மிகவும் அபாண்டமான பழிகளை சுமத்துவதும், பல மாதங்கள் இவர்களை சிறையிலடைத்து கொடுமைப்படுத்துவதும் காலங்காலமாக நடந்து வரும் அநியாயம்.
இப்பிரச்சினையை தீர்க்க மைத்ரிபாலா சிறீசேனா ஆவன செய்ய வேண்டும். இரு நாட்டு மீனவர்களுக்கிடையே பரஸ்பர ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் வாழ்வது எம் தொப்புள்கொடி உறவுகளே.
அரசியல் காரணங்களுக்காகப் பிரிக்கப்பட்ட இம்மக்கள் ஒன்றிணைக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். புதியதோர் அரசியல் அத்தியாயம் எழுதியுள்ள மைத்ரிபாலா சிறீசேனாவினால் இது சாத்தியம் என நம்பலாம்.
மீனவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு சமாதானக் குழு ஏற்படுத்தப்பட வேண்டும். மீன்பிடிப்பு சம்பந்தமான பிரச்னையெனில், இக்குழு நேரடியாகப் பேசி பிரச்னையை சுமூகமாகத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
இரு நாட்டு மீனவர்களுக்கும் நல்லிணக்கம் ஏற்படும் வகையில் அவ்வப்போது கூட்டங்கள் கூட்டி கலந்துரையாட வேண்டும், இதனால் ஒற்றுமை வலுப்படும்.
சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் இரு நாட்டு மீனவர்களை ஈடுபடுத்த தூண்டும் எவ்வித சக்திக்கும் அடிபணியாமல் துணிந்து செயல்படும் வண்ணம் இம்மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படவேண்டும்.
அது மட்டுமல்லாது, இரு நாடுகளையும் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் எவ்வித ஆதிக்க சக்திக்கும் ஆள்படாமல் இருப்பது நலம்.
ஒரு நல்லெண்ண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம், இயற்கையின் சீற்றத்தால் கடலில் திசைமாறி செல்லும் மீனவர்களைக் கைது செய்யாமல் அவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதாவது, மீனவர்கள் இயற்கையின் சீற்றத்தால் வழிதவறிச் சென்று கடற்படையினரால் கைது செய்யப்படும்போது சம்பந்தப்பட்ட தூதரகத்துக்கு தகவல் கொடுத்து, உண்மைத் தன்மையை தெரிந்துகொண்டு அதன்மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சில சமயங்களில் மீனவர்கள் வழிதவறிச் சென்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொலைக் குற்றவாளிகளை அடைக்கும் சிறையில் அடைக்கப்படுவதும், கொடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதும் இதுவரை நடந்து வந்தது. இனி இது தவிர்க்கப்பட வேண்டும்.
கடந்த கால கசப்புகளை மறந்து, இரு நாட்டு மீனவர் பிரச்னைகளை தீர்க்கும் ஆக்கபூர்வமான வழிமுறைகளைக் கண்டறிவதும் அவற்றை உடனே செயல்படுத்துவதும் பயன் விளைவிக்கும்.
கச்சத்தீவில் பாரம்பரியமாக மீன்பிடித்துவந்த உரிமையை மீண்டும் நிலை நாட்டவேண்டும். சுற்றுலா, வியாபார காரணங்களுக்காக இருநாட்டு மக்களும் பரஸ்பரம் ஒத்துழைக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
எனவே, இலங்கை அதிபரும் இந்திய பிரதமரும் சந்தித்து இரு நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வு ஓங்க ஆவன செய்ய வேண்டும்.