Enable Javscript for better performance
அவரவர் கணக்குகள்!- Dinamani

சுடச்சுட

  

  அண்மையில் எனது நண்பரின் மனைவி  மகப்பேற்றிற்காக  மருத்துவமனையில் சேர்க்கப்பெற்றார்.  நான் நண்பரைக் காண அங்கு சென்றபோது அவருடைய பெற்றோர்

  மருத்துவமனை முகப்பில் நின்றுகொண்டிருந்தனர். நான் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது,   மகப்பேற்றுக்குச் சேர்க்கப்பெற்ற பெண்ணின் தந்தையார், "நல்லபடியா

  குழந்தை பிறக்கணும். அதுவும் பெண்ணாப் பிறக்கணும். ஏன்னா, பொண்ணுன்னா கட்டிக் கொடுத்திட்டா போதும், வேற கவலையில்லை. அது மட்டுமில்ல, பையனைவிடப் பொண்ணுக்குத்தான் பாசம் அதிகமாக இருக்கும். பசங்கள நம்ப முடியாது' என்றார்.

   அவர் மனைவியின் கணக்கு வேறுமாதிரி இருந்தது. "ஆம்பளப் புள்ளைதான் வேணுங்க. மூத்தபொண்ணு கல்யாணத்துக்கு நெலத்தெ வித்தோம்.

  ரெண்டாவது பொண்ணுக்காக வீட்டெ வித்துட்டோம். அவங்க கலியாணத்துக்குப் பெறகும் நாமதான் பிரசவம் பாக்கணும்; காதுகுத்து நடத்தணும். பையனுங்கன்னா இதுமாதிரிக் கவலையில்லீங்களே'.

   இந்தப் பதிலும் பொருத்தமானதுபோலத்தான் இருந்தது. ஒரு குழந்தை பிறப்புக்கு முன்னதாக மனிதர்கள் எப்படி எப்படியெல்லாம் கணக்கிடுகிறார்கள் என்று தோன்றியது.

  மகப்பேறு ஒன்றுக்குள் குடும்பம் என்ற சமூகவியல், வரவுசெலவு என்ற பொருளியல், உறவுநிலை எனப்படும் மானிடவியல், ஆண் பெண் என்ற அரசியல், குழந்தை வளர்ப்புப் பற்றிய உளவியல் என எத்தனையோ கூறுகள் இணைகின்றன.

   அவரவரும் தத்தம் கணக்குகளே சரி என்று கருதுவதுதான் இதிலே முக்கியமானதாகும்.

  ÷நம் நாட்டில், சில மாநிலங்களில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் துணைவேந்தர்கள், முதல்வர்கள் நியமிக்கப்பெறுவதில்லை எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் கூறுகின்றனர்.

   அண்மையில் வட மாநிலம் ஒன்றில் நடந்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு நான் செல்ல நேர்ந்தது. நிகழ்ச்சி முடிந்த பின், விருந்தின்போது பக்கத்து மேசையில் இருந்தோர் இதைப்பற்றிக் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.

   அரசாங்கத்தில் மிகமிக உயர்நிலைப் பொறுப்பில் உள்ள ஓர் அதிகாரி, "எங்கள் பகுதியிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பணிக்காலம் முடிந்து ஏழரை மாதங்கள் ஆகிவிட்டன. புதிய துணைவேந்தர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

   அதனாலென்ன நட்டம்? பல்கலைக்கழக வேலைகள் எதுவும் நின்றுவிடவில்லையே? வழக்கம்போல்தானே எல்லாமும் நிகழ்கின்றன. மாணவர்கள் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். இப்போது அரசுக்கு எவ்வளவு இலாபம் தெரியுமா?

   ஏழரை மாதத்திற்கான துணைவேந்தர் சம்பளம் மிச்சம்; வீட்டுப் பராமரிப்புச் செலவு மிச்சம்; மகிழுந்துக்கான செலவினங்கள் மிச்சம்; உதவியாளர், ஏவலர் ஊதியம் மிச்சம்.; தொலைபேசிச் செலவு மிச்சம்' என்றார்.

   இந்த விளக்கம் அங்கிருந்த சிலருக்குத் திகைப்பை உண்டாக்கியது. ஒரு நண்பர் மேலும் கிண்டலாக "ஆமாம் துணைவேந்தர் அறைவாசலிலும், வீட்டு முகப்பிலும் பெயர்ப்பலகை வைக்க வேண்டியதில்லை; முகவரி அட்டை ​(‌v‌i‌s‌i‌t‌i‌n‌g ca‌r‌d)​  அடிக்க வேண்டியதில்லை; கடித முகப்புத் (‌l‌e‌t‌t‌e‌r ‌h‌e​a‌d)​  தயாரிக்க வேண்டியதில்லை; ஓட்டுநர், வாயில் காப்போர் அன்றாடம் வணக்கம் சொல்ல வேண்டாம்' என்று உரத்துக் கூறினார்.

   இப்படிப் பணக்கணக்கு என்பது முதன்மைபெறுவது இன்றைக்கு மிகுதியாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு துணைவேந்தர் பதவிக்காலம் முடிவுறும் நாளில் புதிதாகப் பொறுப்பேற்கும் அடுத்த துணைவேந்தரிடம் பொறுப்புகளை வழங்குவது என்பதே நடைமுறையாக இருந்தது. இந்த மரபு தொலைந்துபோனது என்பது வருத்தம் தருவதாகும்.

   ஒரு துறை, பல்வேறு வளர்ச்சிகள் கண்டு பல துறைகளாக வளர்ச்சி பெறுவதுதான் கல்விநிலைய மேம்பாட்டைக் குறிக்கும். ஆனால் பலதுறைகளை ஒருங்கிணைத்து, கல்வியாளர்களைக் குறைந்த எண்ணிக்கையில் பணிக்குச் சேர்ப்பதென்பதே நடப்பியலாகிவிட்டது.

    இந்த அவலநிலை கல்வித்துறைக்கு மட்டுமில்லை, அரசின் பல்வேறு துறைகளுக்கும் பொருந்தும்.

  ÷ஒரு நிகழ்வுக்குப் பின்னால் விதவிதமான கணக்குகள் அமைந்திருக்கும். பாவேந்தரின் பாவரி ஒன்றை விளக்கும்போது எழுந்த புனைவுகளை இங்கே பதிவு செய்வது தகுந்தது. அஃது உண்மையும்கூட.

    காய்கறிகள் விற்கும் சந்தை முகப்பில் நின்றுகொண்டு கவனித்தால் காய்கள் வாங்க வருபவர்களின் கணக்கீடுகள் பற்பல என உணரமுடியும். பெரிய சாக்குப்பையுடன் வருகின்ற ஒருவர் முருங்கை, பூசணி, புடலை போன்ற பெரிய பெரிய காய்களை மட்டுமே வாங்குவார்.

   அவர் உணவகம் நடத்துபவர். அவர் சின்னக்காய்களான சுண்டைக்காய், கோவைக்காய் போன்றவற்றினை வாங்கினால் காம்பு நீக்குதல், சின்னதாக அரிந்துகொள்ளுதலுக்கு நேரம் ஆகும். வேலையும் கூடுதல்.  வேலைப்பளுவும் நேரமும் அவருக்குப் பெரிய காய்களை மட்டும் வாங்கக் கட்டளையிடும். இது பணிக்கணக்கு.

   இரண்டாமவர் வருவார். "பீன்சு விலை என்ன' என்று கேட்பார். கடைக்காரர் "கிலோ முப்பது ரூபாய்' எனப் பதில் தருவார். பக்கத்திலிருக்கும் அவரைக்காயின் விலையை வந்தவர் கேட்கக் "கிலோ இருபத்தாறு ரூபாய்' என விடைகிட்டும். "அவரைக்காய் ஒரு கிலோ தாருங்கள்' என்பார் வாடிக்கையாளர் முகமலர்ச்சியோடு. அவருக்கு நான்கு ரூபாய் மிச்சம் பிடித்துவிட்டதாக ஒரு பெருமிதம். இங்கே இருப்பது பணக்கணக்கு.

   பணத்தைப் பற்றிக் கவலைப்படாத மற்றொருவர் கடைமுன் நின்றுகொண்டு "உருளைக்கிழங்கு வேண்டாம்.. அது வாய்வு.  கொத்தவரை நன்றாகத்தான் தெரிகிறது. ஆனால் அதிலே பித்தம் அதிகம்' என்று பயன்பாட்டைச் சுட்டிக்காட்டிப் பலவற்றைத் தவிர்ப்பார். இது உடல்நலக் கணக்கு.

   பாவேந்தர் வரியை இங்கே  கூற வேண்டும். குடும்பவிளக்குக் காவியத்தின் முதற்பகுதியில்,  கொண்டவர்க்கு எது பிடிக்கும்  குழந்தைகள் எதை விரும்பும் என அறிந்துவைத்துள்ள குடும்பத் தலைவி, கறிகள் தோறும் - உண்பவர் தம்மைக் கண்டாள்எனப் பாடுவார்.

    "என் இரண்டாவது மகனுக்குக் கத்தரிக்காய்க் கூட்டு என்றால் மிகப் பிரியம். வழக்கத்தைவிடவும் அன்று கூடுதலாக உண்ணுவான். எங்கள் மாமியாருக்குச் சேப்பங்கிழங்குப் பொரியல் என்றால் போதும்  இன்றைக்கு இரவு பலகாரம் வேண்டாம். சேப்பங்கிழங்குப் பொரியலுடன் சோறுமட்டும் போதும் என்பார்' என்று முகமலர்ச்சியுடன் காய்கறிகள் வாங்கும் நங்கையிடம் தென்படுவதோ பாசக்கணக்கு.

   காய் விற்பனை அங்காடிக்கு வருபவர்களிடமே இப்படி விதவிதமாய்க் கணக்குகள் தோன்றுகின்றன என்றால் இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் எவ்வளவு கணக்குகள் இடம்பெற்றிருக்கும் என எண்ணிப்பார்க்க வேண்டும்.

  "அரசியலில் ஆட்டம் காட்டும் கணக்குகளுக்கு அளவில்லை' என்றார் ஒரு புதுக்கவிதைக்காரர்.

   எந்தக் கட்சியில் எந்த நேரத்தில் இணைந்தால் நல்லது எனக் கணக்குப் போடும் நபர்களே அரசியலில் மிகுதி.

     கட்சி மாறலுக்குப் பின்புலத்தில் கட்சிப்பதவி அல்லது அமைச்சர் பதவி அல்லது வாரியத் தலைவர் பதவி போன்ற இலக்குகளைக் கருதுகின்ற பதவிக் கணக்குகளே இன்றைய காட்சிகள்.

   வேட்பாளர் தேர்வில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வசிக்கும் வாக்காளர்களின் சாதிக்கணக்கே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அடுத்தகட்சியும் அதே சாதியில் வேட்பாளரை நிறுத்துவதும் இதனை உறுதிப்படுத்தும்.

   ஒரு குறிப்பிட்ட சாதியினர் பல கட்சிகளிலும் இருப்பார்கள் என்றபோதும் கட்சியை விட்டுவிட்டுச் சாதிக்கே வாக்களிப்பர் என்பது கட்சித் தலைவர்களின் மனக்கணக்கு.  

  தேர்தல் முடிவுகள் இந்தக் கணக்குகளைப் பொய்யாக்கி விடுவதுதான் மெய்யான நிலை.

   மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லாப் பொருள்கள், வாக்குக்குப் பணம் போன்ற செயல்பாடுகள் எல்லாம் வாக்கு எண்ணிக்கை மிகுதியாகும் என்ற கணக்கீட்டின் அடிப்படையில்தான்.

   வாக்குப் பெட்டியை மையமிட்டு அரங்கேற்றப்படும் இதுபோன்ற நாடகங்களுக்கு எல்லையில்லை என்பது பலரின் கருத்தாகும்.

   வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் பலகோணங்களில் பல கணக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். சரியான விடைகளைச் சில நேரங்களில் மட்டுமே அவர்கள் பெறுகின்றனர். மற்ற நேரங்களில் கூட்டிக்கழித்து வகுத்துப் பெருக்கும்போது தவறான விடைகளே வருகின்றன.

   கணக்குப் போடுவதில் சரியான வழிமுறைகளை மேற்கொண்டால் விடைகளும் சரியானவையாக அமையும். ஈகையைப் பற்றிய திருக்குறள் இங்கு நினைக்கத்தக்கது.

  வறியார்க்கு உதவாமல் பிறருக்குச் செய்வன எல்லாம் அவற்றால் தனக்குக் கிடைக்கும் பயனை எதிர்கொண்டவை ஆகும் என்பதைக் "குறியெதிர்ப்பை நீரதுடைத்து' என்பார் வள்ளுவர்.

     ஒரு தலைவருக்கு, ஓர் உயரதிகாரிக்கு, அவர்களுக்கான சிறப்பு நாளில் சுவரொட்டி ஒட்டி, பதாகைகள் கட்டி, இதழ்களில் விளம்பரம் செய்து, இனிப்புகள் வழங்கி நிற்பதெல்லாம், பின்னர் உரியவர்களிடம் அறுவடை செய்து கொள்வதற்காகத்தான்.

   உண்மையான பற்றாளர்கள் பத்து விழுக்காடு கூட இல்லை என்பது இதுபோன்ற செயல்களில் முதலீடு செய்து, வருவாயையும் வசதி வாய்ப்பையும் பெருக்கிக் கொண்ட சிலரின் ஒப்புதல் வாக்குமூலமாகும்.

   இதனையறியாத பொதுமக்களின் கணக்குகள்தாம் தப்புக்கணக்குகளாகும். இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்ப்பது நல்லது.

   எனவே, உண்மையையும் நன்மையையும் ஒழுங்கினையும் விரும்பும் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, "நம் கணக்கு சரியா தவறா' என்பதே.

   

  கட்டுரையாளர்: பேராசிரியர், புதுவை மையப் பல்கலைக்கழகம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai