சுடச்சுட

  

  1639 ஜூலை 22... மிகச் சரியாக 376 ஆண்டுகளுக்கு முன்பு, சூரியன் மறையா தேசத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று பின்னாளில் புகழப்பட்ட பிரிட்டிஷார் இந்தியாவில் காலூன்றுவதற்காக விதை போடப்பட்ட நாள்.
   வாசனைப் பொருள்களை (மிளகு, லவங்கம், பட்டை உள்பட 82 பொருள்கள்) வாங்குவதற்கும், வாங்கிய பொருள்களைத் தங்கள் நாட்டில் விற்பதற்கும் ஐரோப்பியர் கொத்துக் கொத்தாக கிழக்காசிய நாடுகளுக்குக் கிளம்பி வந்திருந்தார்கள்.
   தென் இந்தியாவின் மிளகு வியாபாரத்தின் கொள்ளை லாபத்தில் மனம் கொள்ளை கொண்ட ஐரோப்பியர்களில் முதலில் போர்த்துக்கீசியர்கள், பிறகு டச்சுக்காரர்கள், அடுத்து பிரெஞ்சுக்காரர்கள் என்ற வரிசையில் கடைசியாக வந்தவர்கள் ஆங்கிலேயர்களே. கடைசியாக வந்தாலும் கவனமாக காய் நகர்த்தியதில் அவர்களால்தான் இந்தியாவை 250 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்ய முடிந்தது.
   ஆங்கிலேயர்களுக்கும் முன்பாகவே இந்தியாவுக்குள் நுழைந்த மற்ற ஐரோப்பியர்கள், வசதியான வாணிபத் தளங்களிலும், துறைமுகங்களிலும் தங்களின் வியாபார நிறுவனங்களின் மூலம் நிலை கொண்டிருந்தார்கள்.
   வணிகக் கனவான்கள் என்றழைக்கப்பட்ட டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டினத்திலும், பிரெஞ்சுக்காரர்கள் சூரத்திலும், போர்த்துக்கீசியர்கள் கோழிக்கோட்டிலும் புகழ்பெற்ற வியாபாரிகளாக நிலைபெற்றிருந்தனர். கடுமையான வியாபாரப் போட்டி நிலவியதில் ஒரு நாட்டினர் மற்றொரு நாட்டினரை அருகே நெருங்க அனுமதி மறுத்தனர்.
   விரோதத்துடன் கூடிய வியாபாரப் போட்டி நிலவிய இந்த நேரத்தில்தான், ஜான் கம்பெனி என்று அப்பொழுது அழைக்கப்பட்ட ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏஜெண்ட் ஆண்ட்ரூ கோகன், அவரின் கீழ் பணி செய்த ஃபிரான்ஸிஸ் டே ஆகிய இருவரும், போட்டிகள் நிரம்பிய ஊர்களை விட்டு புதிதாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தால் என்ன என்று யோசிக்கிறார்கள். ஜான் கம்பெனி அதிகாரிகளின் அவநம்பிக்கையைப் பொருள்படுத்தாமல் இருவரும் தங்கள் நிறுவனத்துக்காக புதிய வாணிபத் தளத்தைத் தேடுகிறார்கள்.
   ஆங்கிலேயரின் குடியிருப்பு இருந்த ஆர்மேகத்தில் (ஆந்திரம்) இருந்து ஒரு சிறு படகை எடுத்துக் கொண்டு ஃபிரான்சிஸ் டே வங்காள விரிகுடாவில் ஒருநாள் பயணம் செய்கிறார். காற்றின் போக்கில் சோழ மண்டலக் கடற்கரையின் விரிந்த கடற்பரப்புக்கு அவரது படகு வருகிறது. ஆளில்லாத, அந்த நீண்டு விரிந்த கடற்கரைப் பரப்பைப் பார்த்தவுடன் டேவுக்கு கட்டுக்கடங்காத மகிழ்ச்சி.
   மனித நடமாட்டமே இல்லாத அந்த மண் திட்டைப் பார்த்தவுடன் டே படகில் இருந்து குதித்தோடுகிறார். அலைகள் மோதும் அந்த திறந்தவெளி தீபகற்பமே தங்கள் நிறுவனத்தின் வியாபாரத் தளம் என்று தீர்மானிக்கிறார். உடனடியாகத் தனது ஏஜென்ட் கோகனையும் தொடர்பு கொள்கிறார். அங்கேயே தங்கி ஜான் கம்பெனியை அமைப்பதற்கான வேலைகளைத் தொடங்குகிறார்.
   பேரி திம்மண்ணா என்பவரைத் தனது துபாஷியாக்கிக் கொண்டு காய் நகர்த்துகிறார். 5 கி.மீ. நீளமும், 2 கி.மீ. அகலமும் கொண்ட கடற்கரைப் பரப்பு யாருக்குச் சொந்தமென்று கண்டறியச் சொல்கிறார். திம்மண்ணா விரைந்து களத்தில் குதிக்கிறார்.
   விஜயநகரப் பேரரசின் உள்ளூர் ஆளுநர்களாக இரு சகோதரர்கள் இருந்தார்கள். பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு அய்யப்ப நாயக்கர் என்பவரும், வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு தாமர்லா வெங்கடாத்ரி என்ற வெங்கடப்ப நாயக்கருமே அவர்கள் இருவரும். திம்மண்ணா முதலில் அய்யப்பனை அணுகுகிறார். டேயின் தேவையைச் சொல்லி தனது சகோதரரிடம் இருந்து இடத்தை வாங்கித் தரும்படிக் கேட்கிறார்.
   கூலிக்குத் துபாஷியாக இருந்த திம்மண்ணாவுக்கும் அவரது பரிந்துரையை எடுத்துக் கொண்டு வந்த பூந்தமல்லியின் ஆளுநரான அய்யப்ப நாயக்குக்கும் தங்களது செயலின் விபரீதம் தெரிந்திருக்கவில்லை. தங்கள் சொந்த நிலத்தைக் கொடுப்பதன் மூலம் சொந்த நாட்டை இழக்கப் போகிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாத அந்த ஆளுநர்கள் இருவரும் சேர்ந்து ஃபிரான்சிஸ் டேவுக்கு சென்னைக் கடற்கரையை மானியமாக எழுதிவைக்க சம்மதிக்கிறார்கள்.
   ஃபிரான்சிஸ் டே இந்த இடத்தைப் பெறுவதற்கு எந்த நயவஞ்சக நாடகத்தையும் நடத்த வேண்டியிருக்கவில்லை. நாள் கணக்காக, மணிக்கணக்காக எந்தவித சாணக்கியத் தந்திரமும் செய்யவில்லை. இடத்தைப் பார்த்தார், பிடித்திருந்தது. கேட்டார், கொடுத்தார்கள். அவ்வளவுதான்.
   வந்தவாசியை ஆண்ட வெங்கடாத்ரி, தனக்குச் சொந்தமான 10,000 சதுர அடி நிலப்பரப்பை ஜான் கம்பெனியின் ஏஜென்டான ஃபிரான்சிஸ் டேவுக்கு மானியமாக எழுதிக் கொடுத்த நாள் 1639 ஜூலை 22. அது ஜூலை மாதமாக இருக்க வாய்ப்பே இல்லை, ஆகஸ்ட் 22-ஆகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். காரணம் ஃபிரான்சிஸ் டே ஜூலை 27-ஆம் தேதி வரை மதராஸப் பட்டினத்துக்கு வந்து சேரவில்லை என்பதற்கான கடித ஆதாரம் உள்ளதாகக் கூறுகிறார்கள்.
   மானியப் பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ள தேதி ஜூலை 22 என்பதை கவனப் பிசகாக செய்திருக்கக் கூடும் என்கிறார்கள். மானியம் கொடுத்ததே கவனப் பிசகாக இருக்கும்போது, தேதியில் நடந்த கவனப் பிசகால் ஒன்றும் நமக்கு பாதிப்பில்லை. ஓர் அணா பைசாவும் பெறாமல் இவ்வளவு பெரிய இடம் மானியமாக ஆங்கிலேயர்களுக்குத் தரப்படுகிறது.
   இந்த மானியப் பத்திரத்தில் நம்மவர்களின் விதேச அன்பு பிரவாகம் எடுப்பதைப் பார்க்கலாம். "ஆங்கிலேயர் மீதான தனித்துவமான அன்பினாலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் ஆங்கிலேய கம்பெனியின் ஏஜென்டுக்கு மானியமாய் இந்தப் பத்திரத்தின் மூலம் எங்கள் நிலத்தை வழங்குகிறோம்.
   அவர்கள் அந்த இடத்தில் கோட்டையும், அரண்மனையும் கட்டிக் கொள்ளலாம். அவர்களுக்கு செüகர்யம் மிக்கது எதுவென்று நினைக்கிறார்களோ அவற்றை நிறைவேற்றிக் கொள்ளலாம்...' என்பது உள்பட நாணயங்கள் அச்சிட்டுக் கொள்வது வரையான அனைத்து உரிமைகளையும் அளித்திருந்தார்கள். அனைத்துத் தீர்வைகளில் இருந்தும் விலக்கு அளித்திருந்தார்கள்.
   பழம் நழுவி ஒயினில் விழுந்த மகிழ்ச்சியில் டே கூத்தாடினார். ஒன்பது மாதத்துக்குள் அந்த இடத்தில் கோட்டை கட்டி முடித்தார். அவர் கோட்டையைக் கட்டி முடித்த நாள் ஏப்ரல் 23, 1640. அன்று புனித ஜார்ஜ் தினம். எனவே, கோட்டைக்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயர் வைத்தார். இந்தியாவையே தன் காலடிக்குள் கொண்டு வருவதற்காக ஆங்கிலேயரின் முதல் கோட்டை இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
   அன்று முதல் இன்று வரை 375 ஆண்டுகளாக அந்தக் கோட்டை ஆட்சியாளர்களின் தலைமையிடமாக இருந்து வருகிறது. சிவப்புக் கம்பளம் விரித்து ஆங்கிலேயர்களை வரவேற்ற வந்தவாசி ஆளுநர்களுக்குக் கிடைத்தப் பெருமை ஒன்றே ஒன்றுதான். அவர்களுடைய தந்தை சென்னப்ப நாயக்கரின் நினைவாகத்தான் மதராஸப் பட்டினம், சென்னை என்றானது.
   புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயருக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்து அவர்களின் வியாபார நடவடிக்கைகளை வலுப்படுத்தியது. அடுத்த 50, 60 ஆண்டுகளில் இந்தியாவின் மூன்று எல்லைகளின் தலைநகரங்களும் ஆங்கிலேயர்களின் காலடியில் பூமாலைகளைப் போல் சுருண்டு விழுந்தன.
   அரபிக் கடலின் முக்கிய வாணிபத் தளமாக இருந்த மும்பை போர்த்துக்கீசியர்களின் கைவசம் இருந்தது. போர்த்துக்கீசிய இளவரசி இன்பெண்டா காத்ரீனா, பிரிட்டிஷ் இளவரசர் இரண்டாம் சார்லûஸ மணந்து கொண்டாள். பெண் கொடுத்தப் போர்த்துக்கீசியர்கள் தங்கள் இளவரசிக்கான சீதனமாக இளவரசன் சார்லஸýக்கு மும்பையை சீதனமாகக் கொடுத்தார்கள்.
   அடுத்து கொல்கத்தா. வியாபாரப் போட்டியில் ஐரோப்பியர்கள் எல்லோரும் பலமுனைப் போட்டியில் ஈடுபட்டிருந்த இடம். முகலாய அரசர் ஃபரூக்சியருக்கு ஆறாத கட்டி ஒன்று இருந்தது. அவரின் அரண்மனை வைத்தியர்களின் கை வைத்தியத்துக்கு அந்தக் கட்டி கட்டுப்படவில்லை. தீராத வலியில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு ஆங்கிலேய மருத்துவர் வில்லியம் ஹாமில்டன் வைத்தியம் பார்க்க வந்தார்.
   ஆங்கில மருத்துவத்தின் வேகமாக குணமாக்கும் தன்மையும், உடனடியாக வலியைக் குறைக்கும் மருந்துகளும் அரசன் ஃபரூக்சியரை கட்டியின் வலியில் இருந்து காப்பாற்றின. ஹாமில்டனின் மருத்துவத்தில் மகிழ்ந்த மன்னர் உடனடியாக அவருக்கு 25 ஊர்களை (38 ஊர்கள் என்றும் சொல்கிறார்கள்) மானியமாகக் கொடுத்தார். இதோடு மட்டுமல்லாமல் சுற்றியிருந்த சில ஊர்களை குத்தகைக்கும் கொடுத்திருக்கிறார்.
   இதே கொல்கத்தாவிலேயே ஷாஜகானின் மகளும், ஒüரங்கசீப்பின் தங்கையுமான ஜகனாராவுக்கு ஒருமுறை தீக்காயம் ஏற்பட்டுவிட்டது. தீக்காயத்தை ஆங்கில மருத்துவத்தின் மூலம் மருத்துவர்கள் சரிப்படுத்தியதால் அவர்களுக்குத் தீர்வை இல்லாமல் வாணிபம் செய்யும் உரிமையை மன்னர் ஷாஜகான் வழங்குகிறார்.
   படிப்படியாக குத்தகையாகவும், இனாமாகவுமே கொல்கத்தா முழுமையும் ஆங்கிலேயர் கைவசம் வந்துவிடுகிறது. வியாபாரப் போட்டியில் மற்றவர்கள் அடித்துக் கொண்டிருக்க ஆங்கிலேயர்களின் அதிர்ஷ்டமோ, நம்முடைய ஏமாளித்தனமோ அவர்களுக்கு ஒரு பேரரசே பரிசாகக் கிடைத்திருக்கிறது.
   தெற்கே சென்னையையும், கிழக்கே கொல்கத்தாவையும், மேற்கே மும்பையையும் தங்கள் வசப்படுத்திய ஆங்கிலேயர்கள் இந்தியா என்ற நிலப் பரப்பை முதன்முதலாக ஒரு வரைபடத்தின்கீழ் கொண்டுவந்தார்கள். தென்னகத்தில் பிடித்த இந்த வரைபடத்தின் நூலிழையை வடக்குக்குக் கொண்டு சென்று தில்லியில் நிறைவு செய்தார்கள். வியாபார முக்கியத்துவமற்று இருந்த தில்லி அதன் பிறகு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகியது.
   இந்தியாவின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் பெரும் போர்களை நிகழ்த்தவில்லை. கிடைத்த பகுதிகளை தக்கவைத்துக் கொள்ளவே பின்னர் பல போர்களில் ஈடுபட்டார்கள்.
   ஆங்கிலேயர்கள் சென்னையை மானியமாகப் பெற்ற நாளான ஆகஸ்ட் 22 தான் இன்றைக்குச் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai