Enable Javscript for better performance
தேவையா சென்னை தினம்?- Dinamani

சுடச்சுட

  

  உலகமயமாக்கலின் மோசமான விளைவுகளில் ஒன்று, தேவையே இல்லாத தினங்கள் கொண்டாடுவது. காதலர் தினம், சகோதரர் தினம், நண்பர்கள் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம்... எனக் கொண்டாடுவதன் மூலம் வியாபாரிகள் கொழிக்கிறார்கள்.
   நமது நாட்டில் பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் இயற்கையுடனும், கலாசாரத்துடனும் இணைந்தே கொண்டாடப்பட்டு வருகின்றன.
   இப்போதைய நுகர்வுக் கலாசாரத்தில் அடிக்கடி ஏதாவது தினம் கொண்டாடப்படுகிறது.
   இந்த கார்ப்பரேட் யுகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வரும் இன்னோர் அபத்தம் சென்னையின் பிறந்த நாள் கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டத்தின் அடிப்படைதான் கேள்விக்குரியது. சென்னைக்கு வயது 375 ஆண்டுகள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். எதன் அடிப்படையில் தெரியுமா?
   வெங்கடப்ப நாயக்கர் என்ற சின்ன நிலப்பிரபு, ஆங்கிலேயர்களுக்கு (கிழக்கிந்திய கம்பெனி) நிலம் விற்றதை அடுத்து உருவான சென்னை மாநகரத்தின் தோற்றம்தான் பிறந்த நாளுக்கு அடிப்படை.
   முதலில் இதை அடிப்படையாகக் கொண்டு சென்னை தினம் கொண்டாடுவது தேசத் துரோகம். நம் மண்ணை பிரிட்டிஷார் ஆக்கிரமிக்க இடம் கொடுத்த நாளை எப்படிக் கொண்டாடலாம்?
   சென்னை நகரத்தை ஆங்கிலேயர்கள்தான் 375 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்தனர். எனவே, அதன் அடிப்படையில் சென்னை தினம் கொண்டாடலாம் என்று சொல்வார்கள். அதை ஏற்றுக் கொண்டால், 375 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பகுதி காடாக இருந்ததா? மனிதர்கள் காட்டுமிராண்டிகளாகத் திரிந்தார்களா?
   எல்லாவற்றையும்விட சென்னையின் வயது 375 ஆண்டுகள் என்பதே வரலாற்றுப் பிழை. இந்த நகரம் குறைந்தது 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. சென்னை என்ற பெயர் வேண்டுமானாலும் 375 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இங்கே வளமான, வசதியான நகரம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது வரலாற்று உண்மை.
   375 ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னை எனப் பெயர் வைக்கப்பட்டது, அதனால் கொண்டாடுவது தவறில்லை என்று சொல்லக் கூடும். ஒரு நபர் பிறந்த நாள் என்பது, அவர் தாயின் கருவில் இருந்து வெளியே வந்த நாள்தானே, அவருக்குப் பெயர் வைத்த நாள் இல்லையே. ஒரு சில சமுதாயத்தில் ஓராண்டுக்குப் பிறகுகூட பெயர் வைப்பார்கள். அதற்காக ஒரு வயதைக் குறைப்பார்களா?
   ஒரு சிலருக்கு குழந்தைப் பருவத்தில் ஒரு பெயரிடப்பட்டிருக்கும். அதே நபர், பின்னாளில் தனது பெயரை மாற்றி கொண்டு புகழ் பெற்றால், பெயர் மாற்றிய நாளில் இருந்து வயதைக் கணக்கிடுவார்களா?
   சரி, சென்னைக்கு இரண்டாயிரம் வயது என்று எப்படிச் சொல்லலாம்? அதற்குச் சான்றுகள் ஏராளம்.
   சென்னையில் (மயிலாப்பூர்) திருவள்ளுவர் வாழ்ந்தார் என்பது வேண்டுமானால் செவிவழிச் செய்தியாக இருக்கலாம். ராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் திருவான்மியூரில் (திரு வால்மீகி ஊர்) இறைவனை வழிபட்டது வேண்டுமானால் புராணம் என்று ஒதுக்கிவிடலாம்.
   சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் 1520 ஆண்டுகளுக்கு முன்பு வந்தனர் என்பதும், ஏசுநாதரின் சீடர்களில் ஒருவர் எனக் கருதப்படும் புனித தோமையார் வந்த இடம் என்பதும் வரலாற்று உண்மை.
   மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் வந்த திருஞானசம்பந்தர் "கார்தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான்' என்று பாடியுள்ளார். திருமங்கையாழ்வாரோ திருவல்லிக்கேணிக்கு வந்து, பெருமாளை "நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்' என்று பாடியிருக்கிறார்.
   திருவொற்றியூரில் பட்டினத்தடிகள் வாழ்ந்ததும், அவருக்கு சமாதி இருப்பதும், கோவளத்தில் முகமது நபிகளாரின் சஹாபாக்களில் ஒருவர் தங்கியிருந்தார் என்பதும் அவரது தர்கா இருப்பதும் வரலாற்றுக் குறிப்புகள்.
   அறிஞர்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் பல்லவர் வரலாறு, ரா.பி. சேதுப்பிள்ளையின் ஊரும் பேரும் ஆகிய நூல்களையும், புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளையின் நாள் குறிப்புகளையும் படித்தால் சென்னையின் வயது புரிந்துவிடும்.
   திருவான்மியூர், திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சாந்தோம், கோவளம் ஆகியவை அனைத்துமே சில ஆயிரம் ஆண்டுகள் பழைமை கொண்டவைதான். அப்படி இருக்க, இவற்றை உள்ளடக்கிய சென்னையின் வயது மட்டும் எப்படி 375 ஆண்டுகள் என்று சொல்ல முடியும்?
   தருமமிகு சென்னை என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பாடிய வள்ளலாரைக் கொண்டாட்டத்தில் இடம்பெறச் செய்யவில்லையே. ஏன் அவர் வாழ்ந்த ஏழுகிணறு பகுதியைச் சிறப்பித்துக் கொண்டாடுவதில்லை.
   திருவொற்றியூரில் வாழ்ந்து சமாதி ஆன மகான் பட்டினத்தாரை ஏன் நினைப்பதில்லை? மதச்சார்பின்மை அடிப்படையில், லஸ் பகுதியில் உள்ள சாந்தோம் ஒளி மாதாவை விழாவில் இணைக்கலாமே.
   எல்லிஸ் என்ற வெள்ளைக்கார அரசு அதிகாரி திருக்குறளைப் போற்றியதை நினைவு கூரவில்லையே. ஏன் தண்ணீர்ப் பற்றாக்குறை தீர எல்லிஸ், ஏழுகிணறு பகுதியில் தோண்டிய கிணற்றில் திருக்குறள் வான்சிறப்பு குறட்பாக்களைப் பொறித்தது குறித்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல கார்ப்பரேட் சென்னை ஆர்வலர்கள் ஏன் முயலவில்லை?
   ஏன் உலகமே போற்றும் மகாகவி பாரதி இல்லம், அவர் பணியாற்றிய சுதேசமித்திரன் இதழ் குறித்து, மாணவர்களிடம் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள சென்னை கொண்டாட்டத்தில் இடம் இல்லையே.
   சேக்கிழார் பெருமான் வாழ்ந்த குன்றத்தூர், பூந்தண்மலி எனப்படும் பூந்தமல்லி போன்றவையும் இடம்பெற வேண்டும்.
   சென்னை விழா கொண்டாடும் கார்ப்பரேட் குழுவினருக்கு ஒரு யோசனை, பேசாமல் சென்னை 375 என்பதற்குப் பதில், சென்னை 2000 என்று கொண்டாடி, ஏதாவது உருப்படியாகச் செய்யுங்களேன்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai