ஆசையும், அருகதையும்

நல்லதொரு அரசும், அருமையான ஆட்சியும், ஊழலற்ற அதிகாரிகளும், மக்களுக்காக மக்களினால் ஆளப்படும் நிர்வாகமும் எங்களது பிறப்பு உரிமை' என்ற கூக்குரல் எல்லா நாளும், எல்லா இடங்களிலும், எல்லா ஊடகங்கள் மூலமும் நாம் தினமும் கேட்டுக் கொண்டிருப்பது உண்மையெனில், இதனோடு மற்றும் ஒரு குரல் அதோடு சேர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது.

நல்லதொரு அரசும், அருமையான ஆட்சியும், ஊழலற்ற அதிகாரிகளும், மக்களுக்காக மக்களினால் ஆளப்படும் நிர்வாகமும் எங்களது பிறப்பு உரிமை' என்ற கூக்குரல் எல்லா நாளும், எல்லா இடங்களிலும், எல்லா ஊடகங்கள் மூலமும் நாம் தினமும் கேட்டுக் கொண்டிருப்பது உண்மையெனில், இதனோடு மற்றும் ஒரு குரல் அதோடு சேர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது.

ஆம்! இப்படி நல்லதொரு வீணைக்கு நாம் உண்மையிலேயே அருகதை உள்ளவர்களா? ஆசை உள்ளது என்பதே உண்மை, அருகதைக்கு......? நாம் எதிர்பார்க்கும் நல்லதோர் வீணைக்கும், மீட்டப்பட்டு கேட்கும் இசைக்கும் காதளவும் சம்பந்தமில்லை என்பதை எல்லோரும் அறிவோம். தினம், தினம் பாதாளம் நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கும் சமுதாயம் நல்லதோர் வீணையாக மாற வாய்ப்புண்டா?

சீர்கேடான சமுதாயத்துக்கு யார் காரணம்? எங்கு கேட்டாலும், முயற்சியின்றி உடனே யாரும் சொல்லக்கூடிய பதில் "அரசியல்வாதி'. இது உண்மைதானா?

இன்றைய அரசியல்வாதி மக்களின் மனநிலையின் ஒரு பிரதிபலிப்பே. கூர்ந்து கவனித்தால் அரசியல்வாதிக்கும் மக்களுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம், அரசியல்வாதி + அதிகாரம். மக்கள் - அதிகாரம். மக்களின் பிரதிநிதி அரசியல்வாதி ஆனவுடன் அதிகாரம் என்ற அங்கம், கருவி, சேர்ந்தவுடன் அவருடைய செயல்பாடு வித்தியாசமாகத் தோன்றுகிறது. மக்கள் செய்யாத ஒன்றை அரசியல்வாதி செய்கிறாரா அல்லது செய்ய முடியுமா? பார்ப்போம்...

நமது முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவசாயியின் பங்கென்ன? அழுகிய தக்காளி கீழே! அழகிய தக்காளி மேலே.. இது ஆரம்பம்..

கிராமத்தில் வரப்பு வெட்டுவதிலிருந்து நில ஆக்கிரமிப்பு செய்வது வரை, பொது மின்சாரத்திலிருந்து மின்சாரம் திருடுவதும், மீட்டர் ஓடாமல் செய்வதும், தண்ணீரில் பாலைக் கலப்பதும், பாலில் பவுடரைக் கலப்பதும் நடைபெறத்தானே செய்கிறது.

ஜாதி சான்றிதழை எஸ்.சி., எஸ்.டி. ஆக மாற்றுவதும், பிழைக்க வழியிருந்தும் வழியற்றவனாகக் காட்டி அரசு உதவி பெறுவதும், பொய்ச் சான்றிதழ் கொடுத்து மானியம் பெறுவதும், வேலைக்கு விண்ணப்பித்து லஞ்சம் மூலமாக பெறுவதும், பின் இடமாற்றம், பதவி உயர்வு இவற்றை தனக்குச் சாதகமாக மாற்ற கையூட்டு மூலமாக சாதிப்பதும், மாட்டிக் கொண்ட பின் சொல் / செல்வாக்கை பயன்படுத்துவதும், கோயிலைக் காரணம் காட்டி சாலையைக் கடையாக்குவதும், பொருளாதார வசதியிருந்தும் சலுகையில் சமையல் எரிவாயு இணைப்பை அனுபவிப்பதும், அரசு விதிகளை மீறி வீடு கட்டுவதும், பின்பு அதைக் "கொடுத்து' முறைப்படுத்துவதும், கட்டிய வீடு 1,500 அடி எனில் பாதிக்கே மதிப்பீடு செய்து வரி ஏய்ப்பு செய்வதும் யார்?

ஏமாற்று வித்தை காட்டும் மக்களைப் போலவே அரசியல்வாதி. "நீயோ நேர்மையை விற்றவன், பின் ஏன் இந்த அரசியல்வாதி நியாயமும் நேர்மையும் கலந்த ஒரு தேவதையாக உலா வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய், என்ன நியாயம்' என்று கேட்கிறார் ஓர் எழுத்தாளர். அரசியல்வாதி உன் பிரதிபலிப்பல்லவா? நெறி பேசும் அரசியல்வாதி, ஒரு விபத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், நீ அவனை ஒத்துக்கொள்ள மாட்டாயே?

நமது நாட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், அடுக்குமாடிக் கட்டடமாகட்டும், வணிகக் கூட்டாண்மைக் கட்டடமாகட்டும், நட்சத்திர மருத்துவமனையாகட்டும், ஏன் சில அரசுக் கட்டடங்களும், 80 சதவீதத்துக்கு மேல் கட்டட மற்றும் தீ பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறாதவையும், அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கும் கட்டடங்களுமே அதிகம். கல்வியை வியாபாரம் செய்யும் வித்தையை யார் செய்ய முடியும், நம்மைத் தவிர?

இப்படிப் பட்டியலிட்டுக் காண்பித்தால் புரிவது ஒன்றே! மக்கள் மோசக்காரர் எனில், அவர்களை ஆளுவதும் மோசக்காரரே... இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஆளுபவனுக்கும் ஆளப்படுவனுக்கும் இடையே ஒரு சமரச நிலை, சௌகரியமான ஏற்பாடு. ஏமாறு, ஏமாற்று.

நீ எதிர்பார்க்கும் நல்லதொரு அரசியல்வாதியும், அரசும் வேண்டுமெனில் நீ நல்ல ஒரு விதையாக இருந்தால் மட்டுமே, அதாவது மக்கள், நன்மக்களாக மாறினால் மட்டுமே நல்லதோர் வீணையும் இசையும் வர வாய்ப்புண்டு. அன்று சொன்னார்கள்: ராஜாவைப் போல பிரஜை; இன்று: பிரஜையைப் போல ராஜா.

இத்தனை இடர்பாடுகளுக்கும் இடையே மின்னல்போல், சில தேவதைகள் அவ்வப்போது அரசியலிலும், பொதுவாழ்விலும், அரசிலும் எல்லா இயல்புகளிலும் வந்து போகின்றனர்.

அவர்களின் எண்ணிக்கை குறைவே. சிங்கமும் புலிகளும் எண்ணிக்கையில் குறைவே. எனினும், மனம் தளராமல் தனி மனிதன் ஒவ்வொருவரும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறினால், ஒரு நாள் நல்லதோர் வீணை வர வாய்ப்புண்டு.

சில உறுதிமொழிகள் நமது மூச்சாக மாறினால், என் மக்கள், என் நாடு நலம் பெற வாய்ப்புண்டு என்பது மாத்திரம் சாத்தியம்.

1. இன்று முதல் நான் அரசு விதிகளை மதிப்பேன்;

2. தலைக்கவசம் அணிவேன்;

3. குறைந்தபட்சம் வாரம் ஒரு நாள் பொய் சொல்ல மாட்டேன்;

4. உணவை, தண்ணீரை வீணாக்க மாட்டேன்;

5. இலவசத்தை அருகதையின்றி பெற மாட்டேன்;

6. முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் இலவச சேவை மாதம் ஒரு நாள் செய்வேன்;

7. குப்பைகளைத் தொட்டியில் மாத்திரமே போடுவேன்;

8. கழிப்பிடத்தை மட்டுமே பயன்படுத்துவேன்;

9. பிள்ளைகளை, என் கனவை நனவாக்கு, என்று அராஜகம் செய்ய மாட்டேன்;

10. மின் விளக்கு பொதுஇடங்களில் வீணாவதையும், வீட்டில் வீணாக்குவதையும் தடுப்பேன்; 11. வரிகளைக் கட்டுவேன்;

12. இதில் 1 முதல் 11-இல் எல்லாம் அல்லது முடிந்தவைகளைக் கடைப்பிடிப்பேன்.

இவை சிறிய முயற்சி. நல்லதோர் சமுதாயத்தைப் படைப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com