Enable Javscript for better performance
வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி உண்டா?- Dinamani

சுடச்சுட

  

  வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி உண்டா?

  By எஸ். கோபாலகிருஷ்ணன்  |   Published on : 27th November 2015 01:41 AM  |   அ+அ அ-   |    |  

  இந்தியாவில் வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய இரு துறைகளிலும் வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள் முற்றிலும் சரியானதா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்தக் கருத்து பல அமைப்புகளால் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம், மக்களைப் பொருத்தவரை, அவர்களிடம் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. வளர்ச்சி அதிகரிக்கும்போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்பதே அது.
   2008-இல் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படுவதற்கு முன்பு வரை, ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக, இந்தியாவில் வளர்ச்சி சராசரியாக எட்டு சதவீதமாக இருந்தது. அப்போதுகூட, அந்த வளர்ச்சி வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக இருக்கவில்லை என்பதே உண்மை.
   2013-இல் வளர்ச்சி விகிதம் 4.75 சதவீதமாக சரிந்தது. அப்போது வேலைவாய்ப்புகள் கணிசமாக குறைந்ததில் வியப்பில்லை. பின்னர் வளர்ச்சி விகிதம் படிப்படியாக உயர்ந்து நடப்பு நிதியாண்டில், அதாவது, 2015-16இல் 7.5 அல்லது 7.4 சதவீதமாக இருக்கும் என்று பாரத ரிசர்வ் வங்கி மற்றும் உலக வங்கி அறிவித்துள்ளன.
   இந்த வளர்ச்சி வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. மத்திய அரசு வேலைவாய்ப்பு உருவாக்கத்தை குறிவைத்துதான் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதில் ஐயமில்லை. உதாரணமாக, பிரதமர் கையில் எடுத்துள்ள "இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' (Make in India) என்னும் திட்டம், நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புக்காக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு, ரயில், சாலைகள் மற்றும் நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு உதவும் வகையில் வெளியிடப்பட உள்ள வரியில்லாத கட்டமைப்பு பாண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
   அண்மையில், கட்டுமானத் தொழில், விமானப் போக்குவரத்து, ஒற்றை வணிக முத்திரைப் பொருள் விற்பனை அங்காடி உள்ளிட்ட பதினைந்து தொழில் பிரிவுகளில் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
   நிறுவனத்தின் தன்மை, அவர்கள் முன்வைக்கும் கருத்துரு, எத்தனை ஆண்டுகள் அத்தொழில் இந்தியாவில் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்து, முதலீடுகள் அனுமதிக்கப்பட உள்ளன. இந்த அணுகுமுறை தொழில் வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திப் பொருளாதாரத்தை முடுக்கிவிடக்கூடியது.
   அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதற்கு, ஆங்காங்கு எதிர்ப்புக் குரல்களும் ஐயப்பாடுகளும் எழுப்பப்படுகின்றன. எனினும், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையைக் கடந்த 25 ஆண்டுகளாக இந்தியா கடைப்பிடித்துவரும் நிலையில், தொழில் வளர்ச்சிக்கு அன்னிய முதலீடு தேவைப்படுகிறது என்கிற எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
   அதேநேரம், வேலைவாய்ப்பு உருவாக்கத்தைப் பொருத்தவரை இவையெல்லாம் நீண்டகால அடிப்படையில்தான் பயனளிக்கும் என்பது வெளிப்படை. உடனடி வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு வேறு வழிமுறைகளையும் நாம் தேடியாக வேண்டும். தொழில் புரிதலில் எளிதான நாடுகளின் பட்டியலில் இந்தியாவை 142-ஆவது இடத்திலிருந்து 130-ஆவது இடத்துக்கு உலக வங்கி உயர்த்தி இருக்கிறது.
   அதேநேரம், 189 உலக நாடுகளின் பட்டியலில் உள்ள எட்டு தெற்காசிய நாடுகளில், தொழில்புரிய அனுமதிகளைப் பெறுவதிலும், வணிக ரீதியிலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலும், நம்மைவிட வங்க தேசம் மட்டுமே பின்தங்கி உள்ளது என சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்.) கூறுகிறது. இந்தியாவை விடச் சிறிய நாடுகளான இந்தோனேசியாவும், இலங்கையும்கூட நம்மைவிட முதலீட்டுக்கு சாதகமான நாடுகளாகக் கருதப்படுகின்றன.
   இவை ஒரு பக்கம் இருக்க, இந்திய ஏற்றுமதியை எடுத்துக் கொண்டோமானால் கடந்த 11 மாதங்களாக தொடர்ந்து சரிந்துள்ளது. இதற்குக் காரணம், சர்வதேச பொருளாதார மந்தநிலைமைதான்.
   இந்தியாவிடமிருந்து பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. அந்த நாடுகள் பொருளாதார மந்த நிலையிலிருந்து இன்னும் முழுமையாக மீட்சி அடையவில்லை என்பதையே இதுகாட்டுகிறது.
   இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களான பொறியியல், பெட்ரோலியப் பொருள்கள், ஆபரணக் கற்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட 20 முக்கிய பொருள்களின் ஏற்றுமதி கடுமையாக சரிந்துள்ளது.
   வங்கிகள் தொழில் துறையினருக்கு வழங்கும் கடன் தொகை வளர்ச்சி தேக்க நலையில்தான் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்காததும், மேற்கூறிய ஏற்றுமதி சரிவும்தான் எனலாம்.
   சென்ற செப்டெம்பர், 29-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிதி மற்றும் கடன் கொள்கையில், ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான (ரெப்போ ரேட்) வட்டியை அரை சதவீதம் குறைத்தது. இதன் பயனாக, தொழில் துறையினர் வங்கிக் கடன் பெற்று தொழிலை விரிவாக்கம் செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதன் மூலம் புதிய வேலைகள் உருவாகக்கூடும்.
   அந்த வகையில், பொறியியல் துறை, ஆபரணக் கற்கள், தங்க நகை ஏற்றுமதி, மருந்து உற்பத்தி, ஹோட்டல் துறை உள்ளிட்ட துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
   நடப்பாண்டில் இதுவரை இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு ரூ.23,409 கோடியாக (3.55 பில்லியன் டாலர்கள்) உள்ளது. 2014-ஆம் அண்டு பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு ரூ.97,054 கோடி (14.73 பில்லியன் டாலராக) இருந்தது என நேஷனல் செக்யூரிடீஸ் டெபாசிட்டரி லிமிடெட் தெரிவிக்கிறது.
   ஆக, நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் மத்திய அரசு மேற்கொண்டுவரும் மேற்கூறிய திட்டங்கள் தவிர, உடனடி வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு நம் கையில் எடுக்க வேண்டிய பணி ஒன்று உண்டு. அதுதான் வேலைவாய்ப்புகளை அதிக அளவில் அளிக்கக்கூடிய சிறு, குறுந்தொழில் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து ஊக்குவிப்பும் அளிப்பதாகும். ஏற்கெனவே, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 40 சதவீத பங்களிப்பு அளிக்கும் சிறு, குறுந்தொழில்கள் தக்கமுறையில் ஊக்குவிக்கப்பட்டால், கணிசமான அளவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட முடியும்.
   கடந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முத்ரா (Micro Units Development Refinance Agency - MUDRA) ஒரு சிறந்த தொடக்கம். இதன் பணிகளை விரைந்து முன் எடுத்துச் செல்ல வேண்டும்.
   அமைப்பு சாரா குறுந்தொழில் துறையினருக்கும், தனி நபர்களுக்கும் கடன் வழங்கும் குறு நிதி நிறுவனங்களுக்கு மறு நிதி வழங்கும் இந்த அமைப்புக்கு (Mudra) ரூ.20,000 கோடி வைப்பு நிதி (Corpus Fund) மற்றும் குறு நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் தொகைக்கு உத்திரவாதமாக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
   குறு, சுயதொழில் முனைவோருக்கு பதிவு செய்யப்பட்ட தனியார் நிதி அமைப்புகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதை ஊக்குவிப்பது தான் "முத்ரா' வங்கி திட்டமாக அறிவிக்கப்பட்டது.
   சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் அவரவர்களின் உண்மையான தேவைக்கு ஏற்ப, விரைந்து வங்கிக் கடன் கிடைப்பதற்கு ஒரு சிறப்புத் திட்டம் தேவை, வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 46 ஆண்டுகள் ஆன பிறகும், சிறு தொழில்களுக்கான வங்கிக் கடன் வழங்கும் திட்டம் சீராக உள்ளது என்று கூற முடியாது.
   இன்னும் சொல்லப்போனால், வங்கிகள் தேசியமயமானதிலிருந்து, 1992-ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கும் வரை வங்கிகள் சிறுதொழில்களுக்கு கடனுதவி வழங்கியது சிறப்பாகவே இருந்தது. 1992-க்குப் பிறகு சிறுதொழில்களுக்கு வங்கிகள் தந்த முக்கியத்துவம், காட்டிய அக்கறையும் படிப்படியாக குறைந்ததே தவிர மேம்படவில்லை.
   இந்த ஒரு விஷயத்தை மட்டும் கையில் எடுத்து சீர்செய்துவிட்டாலே, சிறு தொழில் மற்றும் நடுத்தரத் தொழில் செழித்தோங்கும். அது உடனடி வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு உத்திரவாதமாக அமையும்.
   வங்கிக் கடனுக்கு அடுத்தபடியாக கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனங்கள் சப்ளை செய்யும் பொருள்களுக்கு 90 நாள், 120 நாள் கழித்துதான் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அதற்கு மேலும்கூட தாமதம் ஆகலாம். இந்த இடர்பாட்டை களைவதற்கு மின்னணு மூலம் தங்கள் பில்களுக்கு முன்கூட்டியே பணம் பெற்றுக் கொள்ளக்கூடிய (Bill Discounting Scheme) வங்கிக் கடன்வசதி சென்ற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
   சிறுதொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மத்திய, மாநில அரசுகள் தங்கள் தேவைக்கு கட்டாயமாக கொள்முதல் செய்திட வேண்டும் என்ற விதிமுறையை அறிமுகம் செய்து அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதனால், அந்த நிறுவனங்களின் நடைமுறை மூலதன (working capital) பற்றாக்குறை தீருவதற்கு வழிபிறக்கும்.
   சென்ற செப்டம்பர் மாதம் வெளிவந்த ஒரு செய்தி நாட்டையே உலுக்கியது. உத்தரப் பிரதேச அரசில் 368 கடைநிலை ஊழியர்களுக்கான பணி நியமனத்துக்கு 23 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன; அவற்றில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பொறியியல் பட்டதாரிகள் என்பதே அந்த செய்தி.
   இந்த நிலையில், சிறு தொழில்களுக்கு எந்த அளவு ஊக்குவிப்பு அளிக்கிறோமோ அந்த அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
   உத்தரப் பிரதேச அரசில் 368 கடைநிலை ஊழியர்களுக்கான பணி நியமனத்துக்கு 23 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன; அவற்றில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பொறியியல் பட்டதாரிகள்.
   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp