Enable Javscript for better performance
கசையடியும் கருத்துச் சுதந்திரமும்...- Dinamani

சுடச்சுட

  

  சவூதி அரேபியாவைச் சேர்ந்த வலைதளப் பதிவர் ரைஃப் பதாவிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய யூனியனின் உயரிய விருதானது, மனித உரிமைகளுக்கான போராட்டத்துக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகக் கருதப்பட்டாலும், இந்த விருது சிறையில் அடைபட்டுக் கிடக்கும் அவரை மீட்டெடுக்குமா, அவருக்கு விதிக்கப்பட்டுள்ள கசையடிகளை ரத்து செய்ய வழி ஏற்படுத்துமா என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
   31 வயதே ஆன பதாவி, சவூதி அரேபியாவில் கடைப்பிடிக்கப்படும் தீவிர மத நடைமுறைகள் குறித்து தனது வலைதளப் பதிவுகளில் கேள்வி எழுப்பி வந்தார். அரசியல், சமூகம், பெண் கல்வி உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் விவாதிக்கும் விதமாக ஓர் இணையதளத்தையும் உருவாக்கினார். இவைதான் அவர் செய்த குற்றம்.
   இஸ்லாமை அவமதித்ததாகவும், சவூதியின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை மீறியதாகவும் கூறி, 2012-ஆம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றத்தால் அவருக்கு 1,000 கசையடிகளும், 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன.
   2011-ஆம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் தொடங்கிய அரபு வசந்தம் எனும் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்குப் பின்னர், இத்தகைய கருத்துரிமையை ஒடுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கியது சவூதி அரேபியா.
   அதன் ஓர் அம்சம்தான், பதாவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் இதற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை சவூதி அரசு. தண்டனையின் முதல் கட்டமாக கடந்த ஜனவரியில் ஜெட்டா நகரில் பொதுமக்கள் முன்னிலையில் பதாவிக்கு 50 கசையடிகள் வழங்கப்பட்டன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 20 தவணையாக இந்தக் கசையடி தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
   அதன்பிறகு, இந்த விவகாரத்தில் எழுந்த சர்வதேச நெருக்கடியைத் தொடர்ந்து, பதாவிக்கான கசையடி தண்டனையை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது சவூதி அரசு. ஆனால், கடந்த ஜூனில் பதாவி மீதான தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, எந்த நேரமும் மீண்டும் கசையடி தண்டனை தொடரக் கூடும் என்ற அச்சமும் பதாவியின் நண்பர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
   இச்சூழ்நிலையில்தான், பிரான்ஸின் ஸ்ட்ராஸ்போர்க் நகரில் அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றக் கூட்டத்தில், கருத்துச் சுதந்திரத்துக்கான விருது பதாவிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
   ரஷியாவைச் சேர்ந்த விஞ்ஞானியான ஆண்ட்ரே ஷக்காரோவ் பெயரிலான இவ்விருது, மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரத்துக்காகப் பணியாற்றும் நபர்கள், அமைப்புகளை ஊக்குவிப்பதற்காக 1988}ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
   கடந்த காலங்களில் தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா, பாகிஸ்தானின் மலாலா உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு பதாவியுடன், வெனிசுலாவின் எதிர்ப்பு இயக்கத் தலைவர் மேசா டி லா, அண்மையில் கொலை செய்யப்பட்ட ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் போரிஸ் நெம்ட்சோவ் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தன.
   மூவரில் பதாவிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டதற்கு, அவரது நடவடிக்கைகளும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையுமே முக்கியமான காரணம் என்கிறார் ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் மார்ட்டின் சல்ஸ். விருதை அறிவித்த கையோடு, "பதாவியை உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்' என சவூதி மன்னருக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார் அவர்.
   2013-ஆம் ஆண்டிலிருந்து கனடாவில் தன் இரு குழந்தைகளுடன் அடைக்கலம் புகுந்துள்ள பதாவியின் மனைவி என்ஸாஃப் ஹெய்டரும், ஐரோப்பிய யூனியனின் இந்த விருது தன் கணவரின் விடுதலைக்கு உதவும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். பதாவியை மீட்க கனடா அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார். கனடா அரசும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
   கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் நடவடிக்கைகள் உலகமெங்குமே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஜெர்மனியில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல், வங்க தேசத்தில் வலைதளப் பதிவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவில் கம்யூனிஸ்ட் தலைவரும், எழுத்தாளருமான கோவிந்த் பன்சாரே, எழுத்தாளர் கலபுர்கி ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம், சீன அரசில் மாற்றங்கள் வேண்டும் என இணையத்தில் அழைப்பு விடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டு இன்று வரையிலும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான லியூ ஜியாபோ என, கருத்துச் சுதந்திரத்தை, பேச்சுரிமையை நசுக்கும் கொடுமைகளின் வரிசையில் சவூதியின் பதாவி.
   சிறைக்குச் சென்ற பின்னர் பதாவி எழுதிய முதல் கடிதம் ஜெர்மன் பத்திரிகை ஒன்றில் கடந்த மார்ச்சில் வெளியானது. அதில், தான் 50 கசையடிகளுக்குப் பின்னரும் அதிசயமாக உயிர் பிழைத்திருப்பது பற்றிக் கூறியுள்ளார் அவர்.
   மேலும், "ஓர் உற்சாகக் கூட்டம் ஆர்ப்பரிக்க அதன் மத்தியில் எனக்கு கசையடி வழங்கப்பட்டது. எனது கருத்தைத் தெரிவித்த ஒரே காரணத்துக்காக இந்தக் கொடூரம் எனக்கு நிகழ்ந்தது' என நினைவுகூர்ந்துள்ளார். முதல் தவணை கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டபோது, பதாவி எந்தவிதமான குரலும் எழுப்பவில்லையாம்; வலியால் அழவும் இல்லையாம். அவர் கருத்துச் சுதந்திரப் போராளி, இந்தக் கசையடிகள் அவரை ஒன்றும் செய்துவிட முடியாது.
   யேமனில் அரசுப் படைக்கு ஆதரவாக சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்துவதால், பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து பதாவி விமர்சித்ததையும் ஒரு குற்றமாகக் கருதுகிறது சவூதி அரசு. சொந்தக் குடிமக்களுக்கு எதிரான சவூதியின் அடக்குமுறைகள் குறித்து இன்று உலகமே விமர்சிக்கிறது. உலகத்துக்கே கசையடி கொடுக்குமா சவூதி?
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai