Enable Javscript for better performance
காணாத கானகத்தே...- Dinamani

சுடச்சுட

  

  காணாத கானகத்தைப் புள்ளி மேவாத மான் மேயவில்லை. புள்ளியிட்டு அழித்தது மனிதனே. ஏரியை அழித்தான். ஏந்தலாயிருந்த காட்டையும் அழித்தான். "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாரதி பாடியதற்கு ஏற்ப, குமரியில் தொடங்கிய வள்ளுவன் புகழ் இமயத்தைத் தொட்டது போல், உத்தரகண்ட மாமனிதர் தருண் விஜய் பாரெல்லாம் குறள்நெறியைப் பரப்பி வருகிறார்.
   முப்பால் எழுதிய வள்ளுவன் கடவுள் வாழ்த்தில் தொடங்கிய பின், வரும் வான்சிறப்பில், மழையின் புகழ் பாடுகிறான். ""நீரின்றி அமையாது உலகு'' என்றும் வானின்றி அமையாது ஒழுக்கு'' என்றும் பாடியுள்ளார். மழை இல்லாவிட்டால் மனித ஒழுக்கம் குலையுமாம். ""வான் நின்று உலகம் வழங்கி வருதலால்தான் அமிழ்தம் என்றுணற்பாற்று'' என்கிறார்.
   நூறாண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ஏரியின் கீழ்த்திசையில் சதுப்பு நிலக்காடு இருந்த தடம் இன்றும் காணலாம். மகாலிங்கபுரம், லயோலா கல்லூரி, ஹாடோஸ் ரோடு, சாஸ்திரி பவன் ஆகியவை காடழித்துக் கட்டப்பட்டிருந்தாலும் பல பெரிய மரங்கள் விட்டு வைக்கப்பட்டதால் அப்பகுதியில் இன்னமும் பசுமைக் காட்சிகள் உண்டு.
   மழை என்ற அமிழ்தத்தை நுங்கம்பாக்கம் ஏரி ஏந்தி நின்றது. இந்த ஏரியினாலும், மரங்களினாலும் நிலத்தடி நீரும் மேலூற்றுக் கிணறுகளும் நீர் வழிந்து நின்று நகரவாசிகளுக்கு உதவின. காலப்போக்கில் நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஏரி சுருங்கியது. 1960-லிருந்து நுங்கம்பாக்கம் ஏரியில் நகராட்சிக் குப்பைகளைக் கொட்டினர்.
   இப்படிப் பல்லாண்டுக் காலமாகக் குப்பை கொட்டி மூடிய இடத்தில் கற்கள் கொட்டப்பட்டன. அங்கு வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது. நல்ல கலை உணர்வுடன் திருவாரூர் தேர் வடிவமைக்கப்பட்டு வள்ளுவருக்கு ஒரு கல் தேர் காணிக்கை வழங்கப்பட்டது. அமிழ்தத்தை ஏந்தி நீரை வழங்கிய ஏரியை அழித்துக் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டத்தைப் பார்க்கும்போது சிரிப்பதா? அழுவதா? "படிப்பது ராமாயணம். இடிப்பது பெருமாள் கோயில்' என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.
   "நான் ஏரி கட்டி ஏர் உழச் சொன்னேன். மனிதனோ ஏரியைக் குப்பை மேடாக்கி எனக்கு ஒரு சமாதி கட்டிவிட்டான்....' என்று வள்ளுவரின் ஆன்மா புலம்புகிறது. வள்ளுவன் குறளை மறந்த அரசியல்வாதிகள் ஏரிகளையும் மரங்களையும் புறக்கணித்ததால் சென்னை நகரில் ஊழி சூழ்ந்து ஆழியான காட்சியைத்தான் பார்த்தோமே! ஏரிகளை மேடாக்கிய மனிதன் காடுகளை வெளியாக்கி வருகிறான். "காடுகளே பாதுகாப்பு அரண்' என்பது வள்ளுவர் வாக்கு.
   "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
   காடும் உடையது அரண்'
   பரந்த நிலப்பரப்பில் நிழல் காடும் மலையும், மண்ணும் நீரும் நாட்டுக்கு நல்ல பாதுகாப்பு என்பது பொருள். பரந்த நிலப்பரப்பில் இருந்த நிழல் காடு அழிந்து பெயருக்கு ஒன்று இரண்டு மரங்கள் கொண்ட வெட்ட வெளியாகிவிட்டது. இதைப் "பயனற்ற காடுகள்' என்று முத்திரை குத்தி காகிதத் தொழிற்சாலைகளின் பயனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமென்று ஒரு கருத்தை வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் முன்வைத்துள்ளார்.
   பயனற்ற காடுகள் - அதாவது Degraded காடுகளாம். இதைப் பயனுறச் செய்யும் பொறுப்பை மரங்களை வளர்த்துப் பின் மரங்களை வெட்டும் காகிதத் தொழிற்சாலைகளுக்கும், மரம் வெட்டும் ஒப்பந்தக்காரர்களுக்கும் வழங்கினால் பணம் கிடைக்கும். பசுமை நீடிக்குமா? மரங்களை வளர்த்துப் பின் வருமானத்திற்காக மரங்களை வெட்டுவது அறமல்ல. காடுகளை அரணாகப் போற்றுவதே அறம் என்பது வள்ளுவர் வாக்கு.
   காடுகளில் மரம் வெட்டும் ஒப்பந்ததாரர்களும், காகித அதிபர்களும் இன்றல்ல; நேற்றல்ல. கடந்த 20 ஆண்டுகளாகவே காடுகளை அழிக்கக் கடவுச் சீட்டுப் பெற முயலுகின்றனர். "பயனற்ற காடுகள்' என்று அறிவித்து வெட்டுரிமை கேட்கும் பகுதிகள் எவை என்றால் ஒடிஸா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு அடங்கிய கிழக்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களும், இயற்கை சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் தாழ்வாரங்களும், வனத் துறைக்குச் சொந்தமான புதர்க் காடுகளும் தான். இவற்றை விழுங்கக் காத்திருக்கிறார்கள்.
   அடர்த்தியற்ற திறந்த காடுகள் என்றாலும் இப்பகுதிகளில் அரிய பறவை இனங்களும், விலங்கினங்களும் உண்டு. மயில்கள் வலம் வரும். புள்ளிமான்களுடன் புள்ளி மேவாத கரிய மான்கள் கண்ணில் படும். காட்டு ஆடுகள், அரிய வகைப் பாம்புகள், கரு முயல், காட்டுக் கோழிகள் வாழும் பகுதிகளாகும்.
   1994-ஆம் ஆண்டில் காகிதத் தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை ஏற்று பயன்படுத்தாக் காடுகள் என்று அடர்த்தியற்ற திறந்தவெளிக் காடுகளைப் பயன்படுத்தும் திட்டம் வரையப்பட்டது. மரம் வெட்டிகளுக்கும், காகிதத் தொழிற்சாலைகளுக்கும் நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்கலாம் என்று திட்டக்குழு பரிந்துரைத்தது.
   திட்டக்குழு பரிந்துரையை அன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கவில்லை. திறந்தவெளிக் காட்டைக் காகிதத் தொழிற்சாலைக்குத் திறந்துவிட இயலாது என்றும், காடு என்பது காகிதப் பயனுக்குரியது அல்ல என்றும் எதிர்ப்புக் கூறிய அமைச்சரகம், 1998-இல் வரையப்பட்ட வனக் கொள்கைக்கு திட்டக்குழு யோசனை எதிரானது என்றும் கூறி நிராகரிக்கப்பட்டதை நினைவுகூரலாம்.
   தரிசுநில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வன எல்லைக்கு வெளியே வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கில் காகித மரங்கள் பயிரிட ஒப்புதலானது. பட்டா நிலங்களில் காகிதத் தொழிற்சாலைக்குரிய மரங்களைப் பயிர் செய்ய வனத் துறை உதவ முன்வந்தது.
   காகிதத் தேவையைக் காரணமாக வைத்து வன ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்பது கோட்பாடு. 1988-இல் சட்டமாக்கப்பட்ட வனக் கொள்கை என்ன? அந்தக் கொள்கை அமல் செய்யப்பட்டதா? அரசியல்வாதிகள் அதை அறிந்தார்களா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.
   பூமி வெப்பமாகித் தட்பவெப்பம் தடுமாறுவதால் ஒரே இடத்தில் பேய் மழையும், பூகம்பங்களும், சுனாமிகள் போன்ற பேரிடர்களும் புவியில் ஆங்காங்கே நிகழ்ந்தவண்ணம் உள்ளன. புவி வெப்பமாதலைத் தடுக்க - தொழிற்சாலைகள் எரிசக்தியைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு வெப்ப ஆவிகளை வெளியிடுகின்றனவோ அந்த அளவுக்கு அந்த வெப்ப ஆவிகளை உள்வாங்கும் சக்தியுள்ள மரங்களை வளர்க்க வேண்டும். புவியில் குறைந்தபட்சம் 30 சதவீதம் அடர்த்தியான காடுகள் வேண்டும்.
   இந்தியாவில் 15 சதவீதம் கூட அடர்த்தியான காடுகள் இல்லாததால் இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. வருமானம், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மூலப்பொருள், ஜி.டி.ப்பி வளர்ச்சி என்றெல்லாம் தேனொழுகப் பேசி வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களை மதி மயங்கச் செய்து திறந்தவெளிக் காடுகளை அழிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
   1988-இல் வகுக்கப்பட்ட வனக் கொள்கையின்படி உயிர்ச்சூழல் சமன்பாடு, காடுகளை நம்பி வாழும் பழங்குடி / ஏழை விவசாயிகளின் ஜீவாதார வாழ்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அடர்த்தியற்ற காடுகளை அடர்த்தி நிரம்பச் செய்து பாதுகாப்பு அரணாக மாற்ற வேண்டும். சால், வேம்பு, இலுப்பை போன்ற எண்ணெய் வித்து மரங்களும், பஞ்சு வழங்கும் கோங்கு என்ற செவ்விலவு மரங்களும், மூங்கில், பிரம்பு போன்ற மரங்களும், வனப் புனர்வாழ்வுக்கு ஏற்றவை.
   அடர்த்தியற்ற காடுகளுக்கு காகிதப் பயனுக்குரிய யூகிலப்டஸ், சவுக்கு ஏற்றவை அல்ல. சூபாபுல் மரங்கள் வெட்டுப்பட்டாலும் ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் பயனுறும். இதுபோல் வன்னி, பரம்பு ஆகியவற்றையும் தேர்வு செய்யலாம்.
   பயனற்ற காடுகள் - அதாவது "Degraded Forests' என்று வரையறுக்கப்பட்ட வனத் தரிசுகள், திறந்தவெளிப் புதர்க் காடுகளை அப்பகுதியில் அந்த இடத்தை நம்பி வாழும் ஏழை விவசாயிகள், பழங்குடி மக்கள் கொண்ட குழுவுடன் வனத் துறை இணைந்து முன்பு சொல்லப்பட்ட மரங்களை நட்டுக் கடைநிலை மக்களின் ஜீவாதார உரிமையையும் பசுமையையும் ஒருங்கே நிலைநாட்டுவதே நல்லறம்.
   மழைக்கு ஆக்கும் சக்தியும் உண்டு. அழிக்கும் சக்தியும் உண்டு. ஒரு நாள் மழையே பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தும். அம்மழை இல்லாவிட்டால் வறட்சியும் தலைதூக்கும். அப்படிப்பட்ட மழை வெள்ளப் பேரிடரைத் தணிக்கும் ஆற்றல் மரங்களுக்கு உண்டு.
   மழையைத் தழைகள் அணைத்துக் கொண்டு, மண்ணில் விழும் மழைநீர் மரவேர்கள் செல்லும் வழியில் உள்ளே புகுத்திக் கொள்கின்றன. ஒரு சதுர கிலோ மீட்டர் அளவில் உள்ள பரந்த காடு சுமார் 50,000 முதல் 2,00,000 கன மீட்டர் நீரை இருத்தி வைத்துக் கொள்வதால் காட்டில் பெய்யும் மழையால் நாட்டில் அடித்தள நீர்மட்டம் உயர்கிறது.
   இவ்வாறு மரங்களால் உள் நிறுத்தப்பட்ட மழை, பள்ளப் பகுதிகளில் நீரூற்றுகளாகக் கனியும். ஆகவே, நகரங்களின் அருகில் மரங்கள் வேண்டும். மழைநீரை உள்வாங்கி நிலத்தடி நீர்மட்டத்தை மரங்கள் உயர்த்தும் உண்மையைப் புரிந்துகொண்டு நகரங்களில் வீதிக்கு வீதி வீட்டின் முன்பு மரங்களை நட வேண்டும்.
   ஒவ்வொரு மரமும் தொழிற்சாலைகளும் வாகனங்களும் கக்கும் விஷப்புகை மாசுகளைச் செலவில்லாமல் சுத்தப்படுத்தி ஓசோன் படலத்தைக் காத்து நிற்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு மரம் சுத்தப்படுத்தும் பணியை மனிதன் செய்தால் ஆகும் செலவு ஆண்டுக்கு ரூ.5 லட்சம். இப்பணியை ஒரு மரம் இலவசமாக செய்து கொடுப்பதால் அதன் மதிப்பை மனிதன் அறிவதில்லை.
   ஆகவே, காணாத காடுகளையெல்லாம் கண்டுபிடித்து, காணாமல் போன தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தையும் கண்டுபிடித்து, புதிய புதிய காடுகளை உருவாக்கினால்தான் நாடு பிழைக்கும் என்பதை நன்கு அறிக.
   மரங்களை வளர்த்துப் பின் வருமானத்திற்காக மரங்களை வெட்டுவது அறமல்ல. காடுகளை அரணாகப்
   போற்றுவதே அறம் என்பது வள்ளுவர் வாக்கு.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai