Enable Javscript for better performance
ஞானக்கூத்தன் இனி இல்லை...- Dinamani

சுடச்சுட

  
  image

  காலையில் எழுந்தவுடன் பொழுது சரியாக இல்லை என்று தோன்றியது. ஞானக்கூத்தன் வீட்டிலிருந்து போன் வந்தது. நான் திகைத்துப் போய் போனை எடுத்தேன். காலை ஐந்தரை மணிக்கு ஒரு போன் வந்தால் அது சற்று திகைப்பாகத்தான் இருக்கும். ஞானக்கூத்தன் நேற்று இரவு இறந்து விட்டார் என்று துக்க செய்தியைச் சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் தயவுசெய்து எல்லோருக்கும் தகவல் சொல்லி விடுங்கள், என்றார்கள்.

  ஞானக்கூத்தன் இறக்கும்போது அவருக்கு வயது 78. அவரைப் பார்த்தால் அப்படி தெரியாது. மிடுக்காகவும் கம்பீரமாகவும் தோற்றம் தருபவர். சமீபத்தில்தான் அவர் மலேசியாவிலிருந்து சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். வந்தவுடன் எனக்குப் போன் செய்தார். நான் இந்தியாவிற்கு வந்துவிட்டேன் என்று. எப்போதும் அவர் போனில் பேசும்போது இரண்டு மூன்று வார்த்தைகள் பேசிவிட்டு வைத்து விடுவார்.

  புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நான் கொண்டு வந்த ஒரு கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேச முடியுமா என்று ஞானக்கூத்தனைக் கேட்டேன். அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஆனால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. உடல்நிலை சரியில்லாமல் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கும்படி நேர்ந்துவிட்டது.

  மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு மாதம் ஆகியிருக்கும், ஒருநாள் அவரிடமிருந்து போன் வந்தது. அப்பா எப்படி இருக்கிறார், என்று கேட்டு. என் அப்பாவிற்கு ஞானக்கூத்தன் கவிதைகளைப் பிடிக்கும். அவர் கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகளை அவரிடமே படித்துக் காட்டியிருக்கிறார்.

  எப்போது அவரைப் போய்ப் பார்க்கப் போவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் அவர் வீட்டிலிருந்து போன் வந்தது. ஞானக்கூத்தனை மயிலாப்பூரிலுள்ள இசபெல் மருத்துவமனையில் சேர்த்து விட்டதாக. என்னையும் ராஜகோபலனையும் (ஆங்கில பேராசிரியர்) பார்க்க விரும்புவதாக.

  நாங்கள் இருவரும் ஒருநாள் மாலையில் மருத்துவமனைக்குச் சென்றோம். அப்போது அவர் ஐசியூவில் இருந்தார். வயிறு வீக்கமாக இருந்ததாலும், மூச்சுவிட சிரமமாக இருந்ததாலும் அவரைச் சேர்த்ததாகச் சொன்னார்கள். வார்டில் பளிச்சென்று அதே புன்னகையுடன் காட்சி அளித்தார்.

  எனக்கு அவரை அங்கு பார்க்க வருத்தமாக இருந்தது. படுக்கையில் இருந்தபடியே அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்டார். அவர் கேட்ட விதம் எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

  எனக்கு என்னவோ அவர் அந்த இடத்திலிருந்து சாதாரண வார்டிற்கு வந்து வீட்டிற்கு வந்து விடுவார் என்றுதான் தோன்றியது. அவரைப் பார்த்துவிட்டு வந்தபின்னும் அடிக்கடி அவர் குடும்பத்தாரிடம் அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன்.

  ஆனால் ஒருவரை மருத்துவமனையில் போய்ப் பார்க்கும் தர்மசங்கடமான நிலையை நான் யோசிக்காமலில்லை.

  வயிற்றில் ஏற்பட்ட ஒரு தொற்று நோயால் அவருடைய முக்கிய அவயவங்கள் செயலிழக்கத் தொடங்கி விட்டன. என்னால் நம்பவும் முடியவில்லை. அவர் இறந்தும் விட்டார்.

  எனக்கும் அவருக்கும் 40 ஆண்டுகளாக பழக்கம். அவரை முதலில் சந்தித்தபோது அவருடைய கவிதைகள் எல்லாம் முழுதாக தொகுக்கப்படாமலிருந்தது. நான் ஞானக்கூத்தன் ரசிகன். அலுவலகம் போய்க் கொண்டிருக்கும்போது அவர் கவிதைகளை ரசித்துக் கொண்டே போவேன். அவர் கவிதைகளைப் படிக்கும்போது ஒரு விசித்திரமான உணர்வு ஏற்படும்.

  "என்ன மாதிரி' என்ற ஒரு கவிதையில் இப்படி எழுதியிருப்பார்:

  என்னை நோக்கி ஒருவர் வந்தார்

  எதையோ கேட்கப் போவது போல

  கடையா வீடா கூடமா கோயிலா

  என்ன கேட்கப் போகிறாரென்று

  எண்ணிக் கொண்டு நான்

  நின்றிருக்கையில்

  அனேகமாய் வாயைத் திறந்தவர்

  என்னிடம்

  ஒன்றும் கேளாமல் சென்றார்.

  என்ன மாதிரி உலகம் பார் இது.

  ஞானக்கூத்தன் கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து "ஞானக்கூத்தன் கவிதைகள்' என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தேன். டிசம்பர் 1998-ல் அத் தொகுப்பை கொண்டுவந்தேன். அத் தொகுதியில் சில கவிதைகளை "தீபம்' பத்திரிகையிலிருந்து எடுத்தேன். அதில் ஞானக்கூத்தன் சில ஓவியங்களையும் வரைந்திருப்பார்.

  ஞானக்கூத்தன் எப்போதும் ஒன்று சொல்வார். எழுத்தாளர்களை கொண்டாட வேண்டும் என்று. யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துக்கொண்டு போக வேண்டுமென்று. அப்படி அழைத்துக் கொண்டு போக வேண்டியவர்தான் ஞானக்கூத்தன்.

  இன்று உலகத்தில் எழுதப்படுகிற கவிதைகளுடன் அவர் கவிதைகளை நாம் தாராளமாக ஒப்பிடலாம். அந்த அளவிற்கு சிறப்பாக கவிதைகள் எழுதிக் குவித்தவர். அவருடைய எந்தக் கவிதையை எடுத்துப் படித்தாலும் படிப்பவரை நோக்கி அந்தக் கவிதை நகர ஆரம்பிக்கும்.

  அவர் கவிதைகளை பல முறை படித்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு சிறப்பாக எழுதியிருப்பார். தமிழில் அவர் எழுதுகிற உரைநடையே வித்தியாசமாகவும் இலக்கியத் தரமாகவும் இருக்கும். போற்றப்பட வேண்டிய ஒரு கவிஞரை நாம் இழந்து விட்டோம்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai