சுடச்சுட

  
  prabha

  பாலியல் வன்முறை வழக்கு ஒன்றின் தீர்ப்பு அண்மையில் அமெரிக்காவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஆறுமாத சிறை தண்டனை. குற்றவாளி நீச்சல் போட்டியில் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கெடுக்கும் அளவிற்கு திறமை படைத்தவர், ஸ்டான்ஃபோர்டு கல்லூரி மாணவர். அவர் தந்தை கூறுகிறார்: இருபது நிமிட ஆக்ஷனுக்கு இத்தனை பெரிய தண்டனையா?

  பொதுமக்கள் மற்றும் சட்ட வல்லுனர்களும் நீதித் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த கொடும் செயலுக்கு ஆறே ஆறுமாதம் சிறை தண்டனை அளித்த நீதிபதியின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கொதிக்கிறார்கள்.

  அது போகட்டும். இந்தப் பெண் அந்த நேரத்தில் தங்கையுடன் பார்ட்டி செல்கிறார், மதுவும் அருந்துகிறார். உடனே அதான்... என்று சொல்லக்கூடாது. மது அருந்துவது பலருக்கு வழக்கம் இங்கேயே... குடி குடியைக் கெடுக்கும் என்று நாம் கரடியாக கத்தினாலும். அமெரிக்காவில் அது மிக சகஜம். ஒரு பெண் மது அருந்தினால் அவரை எல்லோரும் அணுகலாம் என்று பொருளல்ல. இதை கருத்தில் வைத்து மேலே படிக்கவும்.

  அந்தப் பெண் நீதிமன்றத்தில் அந்தக் குற்றவாளிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள்:

  "கனம் கோர்ட்டார் அவர்களே. நான் நேரே குற்றம் சாட்டப்பட்டவரை நோக்கியே பேசப்போகிறேன். உனக்கு என்னை தெரியாது. ஆனால், நீ என்னுள் இருந்திருக்கிறாய். அதனால் தான் நாம் இருவரும் இந்த மன்றத்தில் இருக்கிறோம்.

  அந்த பார்ட்டியில் நான் கொஞ்சம் அதிகமாகக் குடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு ஒன்றும் நினைவில்லை. விழித்துப் பார்த்தால் நான் ரத்தம் தோய்ந்த கட்டுடன் கிடக்கிறேன். என்னைத் தடவிப் பார்க்கிறேன். என் உள்ளாடைகள் இல்லை. அந்த மெல்லிய துணி காணோம். என்னுள் எல்லாமே உறைந்து மெளனமாகியது. இன்றும் அந்த உணர்வை விவரிக்க என் வசம் வார்த்தைகள் இல்லை.

  என் மூளை என் அடிவயிற்றிடம் சுருண்டு போகாதே என்று கெஞ்சியது. என் அடிவயிறோ காப்பாற்று காப்பாற்று என அலறியது.

  மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்ததை விவரிக்கிறார். பிறகு..

  சில மணி நேரம் இவ்வாறு கழிந்தது. பின்னர் என்னை குளிக்க அனுமதித்தார்கள். என் உடலை அந்த நீர் வழிந்துவிழுவதின் ஊடாக பார்த்துக்கொண்டே நின்றேன். எனக்கு இந்த உடல் வேண்டாம் என்று தீர்மானித்தேன். அதைப் பார்த்தாலே பயமாக இருந்தது. அதனுள் என்ன இருந்தது என்று எனக்குத் தெரியாது, அது மாசுபடுத்தப்பட்டதா? யார் தொட்டார்கள் அதை? வேண்டாம் அதையும் என சட்டையைக் களைந்தது போல கழட்டி மருத்துவமனையிலேயே விட்டு விட்டுப் போகிறேனே.

  அவர் பெற்றோர், பாய் ஃப்ரெண்ட் யாரிடமும் அப்பொழுது அவருக்கு என்ன நடந்தது என்று சொல்ல விருப்பமில்லை. பின் தொடர்கிறார்....

  என் நினைவை விட்டு நடந்ததை அகற்றப் பார்த்தேன். எனக்குப் பேசப் பிடிக்கவில்லை, சாப்பிட தூங்க. நான் தனிமைப்பட்டுப் போனேன். எனக்கு மிகவும் அன்பானவர்களிடம் இருந்து விலகினேன். என் வேலை முடிந்த பின் தனிமையான இடத்திற்குச் சென்று உரக்கக் கத்துவேன். கெட்ட கனவோ..? இல்லை! நான் அன்று அணிந்திருந்த சட்டை அதற்கு சாட்சி.

  ஒரு நாள் செய்தித்தாள் ஒன்றை வலைத் தளத்தில் படிக்கிறார். அந்த பெண் தான் தான் என்று தெரிகிறது. அவர் இருந்த அலங்கோல நிலை, மேல் சட்டை இல்லாமல், இடுப்பிற்குக் கீழே ஆடை ஏதுமில்லாமல், கால்கள் அகற்றி நினைவிழந்து. இப்படி தானே எல்லோரும் தன்னைப் பற்றி படிப்பார்கள்.. பிறகு?

  அடுத்த பத்தியைப் படித்தேன். அவனை மன்னிக்கமாட்டேன். அவன் நினைத்தானாம் எனக்கு விருப்பமாக இருந்தது என்று. எனக்குப் பிடித்ததாம். இன்றும் அந்த உணர்வை விவரிக்க என் வசம் வார்த்தைகள் இல்லை...என்னைப் புரட்டிப் போட்டு என் ஆடைகளை கழற்றி, இலை முட்களையும் விரல்களையும் என்னுள் நுழைத்து ... நான் எப்படி நிரூபிக்கவேண்டும்? எனக்கு அது பிடிக்கவில்லை என்று.

  வழக்கு, வாக்குமூலம் கண்ணிய பறிப்பு எல்லாவற்றையும் பற்றி சொல்கிறார். பிறகு..

  கூர்மையான, கொடுமையான கேள்வி கேட்டார்கள் என்னைப் பற்றி, என் கடந்த கால வாழ்க்கை, குடும்பம் என அர்த்தமற்ற கேள்விகள் எல்லாம் .. என் பெயரைக் கூட தெரிந்துகொள்ளாமல் சில நொடிகளில் என் ஆடையை நீக்கியவனை காப்பாற்ற ஒரு சால்ஜாப்பு கண்டுபிடிக்க..

  இரு மாணவர்கள் அந்தப் பக்கம் செல்கிறார்கள். அவர்கள் தான் நடப்பதை கண்

  கூடாகப் பார்த்து அவனை துரத்திச் சென்று பிடித்தது. அப்படி தான் அவன் அகப்படுகிறான். பெரிய நீச்சல் சாம்பியன் என்பதால் பெரிய வக்கீல் அவன் சார்பில் வாதம் செய்கிறார்.

  குற்றவியல் வழக்குகளில் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளின் நேர்விளைவுகளைப் பார்க்கலாம். எல்லா நாடுகளிலும் அதே கதை தான். திரும்பவும் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்திற்கு வருவோம்.

  சத்தியப் பிரமாணம் செய்து நான் ஒப்புக்கொண்டேன், அனுமதித்தேன் என்று சொல்வது, ..நீதான் பலியாடு ஆகிவிட்டாய் என்பது தன் முட்டாள்தனமான, மிக கேவலமான செயல். நீ என்னை அவமானப்படுத்தி, என்னை வன்முறைக்கு உட்படுத்துவது தவறில்லை என்று விளக்கி உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறாய்.

  என் சுயமதிப்பை. என் அந்தரங்கத்தை, என் வலிமையை, என் நேரத்தை, என் பாதுகாப்பை, என் தன்னுணர்வை, என் துணிவை, என் சொந்தக் குரலை இன்று வரை பறித்துவிட்டாய்... பத்திரிகைகளில் சுயநினைவற்ற, போதையிலாழ்ந்த பெண் என்று என்னை குறிப்பிட்டார்கள். சில சொற்கள் அது மட்டுமே நான். சில நாட்களுக்கு நானே அது தான் என நினைத்தேன். இல்லை. என்னை என் பெயரை நான் யார் என்பதை மீட்டெடுக்க முற்பட்டேன்.

  நான் அதுவல்ல என்று புரிந்துகொள்ள....நான் ஒரு மனித உயிர், அதீதமாக காயப்பட்டவள். ....என் சுதந்திரம், என் துள்ளல், என் கனிவு, நேர்கோடாக சென்ற என் வாழ்க்கைப் பாதை எல்லாம் அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு விகாரப்பட்டுவிட்டன.

  நான் என்னையே மூடிக் கொண்டேன், கோபம், சுயவெறுப்பு, அசதி, எரிச்சல்,வெறுமை இவையெல்லாம் நான் ஆக ஆயின. அந்த தனிமை சில நேரங்களில் தாங்க முடியவில்லை. உன்னால் அந்த இரவிற்கு முன் இருந்த என் வாழ்க்கையைத் திரும்ப தரமுடியாது. உன் பெயர் கெட்டுவிட்டது என்று புலம்புகிறாய்.

  தேக்கரண்டியை ஃப்ரிட்ஜில் வைத்து அதை கண் மேல் வைத்துக் கொள்வேன். கண்கள் அழுது அழுது வீங்கியிருக்கும். ஒவ்வொரு நாளும் வேலைக்குத் தாமதமாக செல்வேன். மாடிப்படி அடியில் அழுவேன். யாருக்கும் தெரியாமல் எங்கெல்லாம் அழலாம் என்று உனக்கு பட்டியல் போட்டுத் தருகிறேன். என் வலி தாங்கவில்லை, என் பாஸிடம் வேலையை விடுகிறேன் என்று தொலைதூரத்திற்குப் போனேன்.

  ஐந்து வயது சிறுமியைப்போல இப்போதெல்லாம் என்னால் விளக்கில்லாமல் தூங்க முடிவதில்லை. யாரோ தொடுவது போல கெட்ட கனவுகள். சூரியன் உதித்தபின் தான் தூங்குவேன். அந்த சம்பவத்திற்கு பின் மூன்று மாதங்களுக்கு காலை ஆறு மணிக்குதான் தூங்குவேன்.

  நான் சுதந்திரமானவள் என்று எனக்குப் பெருமை... இப்பொழுதோ யாராவது என்னுடன் எப்பொழுதும் இருக்கவேண்டும். இப்படி ஆகிவிட்டேனே என்று அவமானமாக இருக்கிறது. இப்படி தயங்கி தயங்கி, எப்பொழுதும் காவலுடன், எப்பொழுதும் பாய தயாராக, எப்பொழுதும் சீற்றத்துடன்.. தவறு நேர்ந்துவிட்டது. அது நடந்து போனது; மாற்ற முடியாது. நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இது நம்மை அழிக்க விடலாம். நான் கோபித்துக்கொண்டும் நீ மறுத்துக்கொண்டும் வாழலாம் அல்லது நான் வலியை

  யும் நீ தண்டனையையும் ஏற்று மேலே போகலாம்.

  உன் வாழ்க்கை முடியவில்லை, நீ மாற்றி அதை எழுத நேரம் இருக்கிறது. இப்பொழுது உன் பெயர் கறைபடிந்து உள்ளது. உனக்கு ஒரு சவால். அதை மாற்று. உலகை பிரமிக்கும்படி செய்.

  உன் குடும்பம் உன்னிடம் பாசம் வைத்துள்ளது. அது ஒன்றே போதும். என் குடும்பம் என்னைத் தாங்கியது போல்.

  கலிஃபோர்னியாவில் பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பானவர்களைப் பதிவு செய்கிறார்கள். ஆகையால், இந்த ஸ்டான்ஃபோர்டு மாணவன் என்றுமே ஒலிம்பிக் போட்டியில் சேர முடியாது. அதனால் தான் அவன் தந்தை 20 நிமிட ஆக்ஷனுக்கு கடும் தண்டனை என்றார். மேலே படிப்போம்:

  அவன் ஆயுள்காலம் முழுவதும் பாலியல் வன்முறை செய்தவன் என்று பதிக்கப்பட்டுள்ளான். அதற்கு காலாவதி இல்லை. அவன் எனக்கு செய்ததற்கும் காலாவதி இல்லை. சில ஆண்டுகள் சென்ற பின் முடிவு பெறாது. அது என்னுடன் இருக்கும். அது என் தனித்துவத்தின் ஒரு பகுதி. நான் எப்படி வாழ்கிறேன் என்பதை நிரந்தரமாக மாற்றிவிட்டது, நான் எப்படி இனிமேல் வாழ்வேன் என்பதையும் மாற்றிவிட்டது.

  இறுதியில் எல்லோருக்கும் நன்றி கூறுகிறார். உலகத்துப் பெண்கள் அனைவருக்கும் நம்பிக்கை செய்தியும் சொல்கிறார்.

  "உங்கள் எல்லோருடன் நான் இருக்கிறேன். இரவில் தனியாக இருக்கிறேன் என்று தோன்றினால் உங்கள் நான் இருக்கிறேன், மற்றவர் உங்களை சந்தேகித்தாலோ விலக்கினாலோ உங்கள் நான் இருக்கிறேன். உங்களுக்காக நான் ஒவ்வொரு நாளும் யுத்தம் செய்கிறேன். உங்களை நம்புகிறேன்'.

  கலங்கரை விளக்குகள் கடலில் பயணிக்கும் படகுகளைத் தேடிச் செல்லாது, அது இருக்கும் இடத்திலேயே நின்று ஒளியை பரப்பும். இதுபோன்ற ஒரு வாக்குமூலம் அரிது. அந்தப் பெண் என்ன நினைக்கிறார்? அவருடைய அத்தனையையும் சிதைத்த அந்தப் பையனை "போ, உன் பெயரில் உள்ள கறையை அழிப்பதற்கு ஆக்கபூர்வமாக செயல்படு, உனக்கு அந்த மூளை செயலாற்றல் இருக்கிறது' என்கிறார். வன்முறைக்கு ஒரே மாற்று அன்பு தான்; மன்னிப்பு தான். இது கடிதம் அல்ல, இதயம்.

   

  கட்டுரையாளர்:

  நீதிபதி (ஓய்வு).

  பிரபா ஸ்ரீதேவன்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai