Enable Javscript for better performance
மொழிகளின் எதிர்நீச்சல்- Dinamani

சுடச்சுட

  

  மொழிகளின் எதிர்நீச்சல்

  By இரா. கதிரவன்  |   Published on : 02nd March 2016 01:44 AM  |   அ+அ அ-   |    |  

  இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, கிழக்குப் பாகிஸ்தான் பெருமளவில் வங்காள மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களால் நிறைந்திருந்தது. ஆயினும், மேற்கு பாகிஸ்தான், 1948-இல், உருது மொழியை தேசிய மற்றும் ஆட்சி மொழியாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
   இந்தத் திணிப்பை எதிர்த்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் 1952-இல் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது,அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில், 21-02-1952 அன்று நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து 1956-இல், மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்து பாகிஸ்தான் அரசு, உருது மட்டும் என்ற நிலையை திரும்பப் பெற்று, வங்காள மொழிக்கும் சம உரிமை அளித்தது.
   கிழக்குப் பாகிஸ்தானிய மாணவர்கள் தாய் மொழிக்காக போராடிய இந்த நிகழ்வை முன்னிறுத்தி, 1999-ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் அமைப்பான யுனெஸ்கோ, பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியை, உலக நாடுகளின் - தாய் மொழி தினமாக அறிவித்தது. அதன் பின்னர், ஒவ்வோர் ஆண்டும், தாய் மொழி தினம் உலக நாடுகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
   மொழிகளின் வளர்ச்சிக்கு உதவுவது - கல்வியில் எல்லா நிலைகளிலும் தாய்மொழி பயன்பாடு இருக்க முனைவது - மக்கள் தங்கள் தாய் மொழி உள்ளிட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்க உதவுதல் , மற்றும் கணினித் துறையில் அம்மொழிகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட திட்டங்களை ஒவ்வொரு நாட்டினரும் வகுத்துச் செயலாற்ற யுனெஸ்கோ உதவுகிறது.
   மாறி வரும் சூழலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சில மொழிகள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. சில மொழிகள் எதிர் நீச்சல் போடுகின்றன.
   உலகில் 97% மக்கள், உலகில் உள்ள மொழிகளில் வெறும் 4 மொழிகளையே பேசுகிறர்கள். சுமார் 3% மக்களோ, 96 மொழிகளைப் பேசுகிறார்கள். உலக நாடுகளில், ஒவ்வோர் ஆண்டும், பல மொழிகள் சிதைவினை எதிர்கொண்டும் - சில மொழிகள் அழிவினை எதிர்கொண்டும் வருகின்றன.
   உலகில் உள்ள சுமார் 6 ஆயிரம் மொழிகளில், பாதிக்கும் மேலான மொழிகள் அழிவினை எதிர்நோக்கியிருப்பதாக யுனெஸ்கோ ஆய்வு அறிக்கை கூறுகிறது.
   ஒரு மொழி என்பது, அம்மொழியினைப் பேசுபவர்கள் மீது தொடுக்கப்படும் போர்களாலோ அல்லது அவர்கள் சந்திக்கும் பொருளாதார சீர்குலைவு- அல்லது அரசியல் கலாசார மற்றும் கல்வியில் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளாலோ, அழிவை எதிர்நோக்கும் வாய்ப்புகளைச் சந்திக்கிறது.
   மேலும், ஆட்சியாளர்களால், ஒரு மொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை என்பதும் புதிது அல்ல.
   இதற்கு உதாரணமாக, ஸ்பெயின் தேசத்தில் பாஸ்க் (Basque), இன மக்களையும், அவர்களது மொழியையும் எடுத்துக் கொள்ளலாம். ஸ்பெயின் தேசத்தின் வட எல்லைக்கும் பிரெஞ்சு தேசத்தின் தெற்கு எல்லைக்கும் அருகிலான மலைப் பிரதேசங்களில் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வந்தவர்கள் - பாஸ்க் (Basque) எனும் இனத்தவர்கள்.
   உலகின் மிக மூத்த குடிமக்களுள் ஓர் இனமாக கருதப்படும் இவர்கள், மானுடவியலைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் புதிராக இருந்து வருகிறார்கள். இவர்கள், தம்மை சூழ்ந்துள்ள ஐரோப்பிய மக்களோடு இன ரீதியாக எந்த விதத்திலும் தொடர்பில்லாத இனத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களது மொழியான பாஸ்க் மொழியும், ஏனைய ஐரோப்பிய மொழிகளோடு எவ்வித தொடர்பும் அற்ற மொழியாக இருக்கிறது.
   இதனாலோ என்னவோ, பல நூறு ஆண்டுகளாக பிறரோடு போரிடுவதிலும், தம் இனத்தைக் காப்பாற்றிக் கொள்வதிலும் பெரும் இழப்பை அடைந்திருக்கிறார்கள். இதன் உச்சக் கட்டமாக, 1930}களில், ஸ்பெயின் தேசத்து சர்வாதிகாரி, பாஸ்க் மொழியைத் தடை செய்து, பொது இடங்களில் பேசப்படக்கூடாத மொழியாக ஆக்கினார்.
   சுமார் 40 ஆண்டு காலம், இந்த மொழி இந்த இனத்தவரின் ரகசிய மொழியாக விளங்கி வந்தது. ஆயினும், இவர்கள், தங்களது மொழியை தங்களுக்குள்ளாக அரும்பாடுபட்டு காப்பாற்றி வந்தனர். இருப்பினும், இம்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை வெறும் 10%-ஆக குறைந்தது.
   மேலும், இந்த மொழி எட்டு விதமாக சிதைந்தும் போனது. ஆனாலும், ஸ்பெயினில் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தபின்னர், இந்த இனத்தவர், விடாமுயற்சியோடு, பாஸ்க் மொழியின் எழுத்துகளில் - சொற்களில் மொழிச் சீர்திருத்தம் செய்து, எட்டு வித வடிவங்களையும் ஒழுங்குபடுத்தி பொதுவான வரி வடிவம் - சொற்கள் ஆகியனவற்றை ஏற்படுத்தி அந்த இனத்தவர் அனைவருக்கும் பொதுவானதாகவும் - ஏற்புடையதாகவும் செய்தனர். சீரழிவின் விளிம்பில் இருந்த மொழிக்குப் புத்துயிர் கொடுத்தனர்.
   இப்போது, இவர்கள் வசிக்கும் பகுதியில் பாஸ்க் மொழி இணை ஆட்சி மொழியாகவும்,அந்த இன மக்களில் சுமார் 40% பேர் பேச - எழுத - படிக்கக் கூடிய மொழியாகவும் மாற்றியிருக்கிறார்கள்.
   ஒரு மொழி உயிர்ப்புடனும் - துடிப்புடனும் இருப்பதை அளவீடு செய்ய சில முக்கிய அம்சங்களை யுனெஸ்கோ கூறுகிறது. ஒரு மொழி, இந்த தலைமுறையினராலும் - அடுத்த தலைமுறையினராலும் பேசப்படுகிறதா? பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறதா அல்லது குறைகிறதா?
   அம்மொழி, அம்மக்களால் சிந்திக்கவும் - கருத்துப் பரிமாற்றத்துக்கும்- படைப்புகள் உருவாக்கவும் - பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் பயன்படுகிறதா?
   அம்மொழி, புதிய தளங்களில் - பள்ளிக்கூடங்களில் - ஊடகங்களில் -இன்டர்நெட் போன்றவற்றில் பயன்பாட்டில் உள்ளதா என்பன உள்ளிட்ட கேள்விகளே அவை.
   இந்தக் கேள்விகளை நாம் நமது தமிழ் குறித்து நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
   மொழியை எதிர்நோக்கி இருக்கும் பிரச்னைகளையும் - மூல காரணங்களையும் - அவற்றின் தீவிரத்தையும் உணர்ந்து கொள்வதும், அவை ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை உணர்வதும் மிக முக்கியமானவை.
   தனிமனிதன், தனது சொத்தைப் பெருக்கி - வளப்படுத்தி , தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறான். அதே உணர்வோடு, தாய் மொழியையும் சிதைக்காது - மாறாக செம்மைப்படுத்தி, அடுத்தத் தலைமுறைக்குக் கொடுக்க வேண்டியது அவசியம்.
   மொழி வளர்ச்சிக்காக இரண்டு தளங்களில் செயல்பட வேண்டியுள்ளது:
   ஒரு தளத்தில் சிதைவை மற்றும் பாதிப்பைத் தடுப்பது, மற்றொரு தளத்தில் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்துவது. இவற்றை சராசரி மக்கள் ஒரு புறமும், அரசு - கல்வியாளர்கள்- வல்லுனர்கள் ஆகியோர் இன்னொரு புறமும் செய்ய வேண்டியிருக்கிறது.
   சராசரி மனிதர்களும், மொழி வளர்ச்சி மற்றும் சிதைவுத் தடுப்பு ஆகியன குறித்து,பல முக்கிய செயல்களைச் செய்ய முற்பட வேண்டும். மொழி பயில்வது என்பது வெறும் வேலை வாய்ப்புக்காகத்தான் என்ற தவறான எண்ணத்தையும் உணர்வையும் நீக்க வேண்டும்.
   மொழியைக் காப்பாற்றும் பொறுப்பு அம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களைச் சார்ந்தது. அம்மொழியின் சிதைவுக்கோ அல்லது பாதிப்புக்கோ வேறு மொழியோ அல்லது வேறு மொழி பேசுபவர்களோ எதிரிகள் அல்ல என்ற உண்மை புரிய வேண்டும். மேலும் மொழி குறித்த வெறுப்பு உணர்வு அறவே கூடாது. ஏனெனில், வெறுப்பு இருக்கும் இடத்தில் வளர்ச்சி நிகழவே நிகழாது.
   சுமார் 40 வருடங்களுக்கு முன்னர், குழந்தைகள் 8 அல்லது 9 வயதின் போதுதான், ஆங்கிலம் கற்கும் சூழல் இருந்தது, அதற்குள் மாணவர்கள் தமிழில் எழுத - பேச - படிக்க ஓரளவு பயிற்சி பெற்றிருந்தார்கள்.
   தற்போது, குழந்தைகள் சுமார் 3 வயதில் மழலையர் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதாலும் - அப்போதிலிருந்தே ஆங்கில மொழிக்கு முன்னுரிமை தரப்படுவதாலும், பலருக்கு தமிழில் எழுத - படிக்க போதுமான பயிற்சி இல்லாமலே போய் விடுகிறது. ஆகவே, பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு சற்று அதிக முயற்சி எடுத்து, தமிழ் மொழிப் பயிற்சியைத் தொடர்ந்து பெறும் வகையில் ஈடுபாடு காட்டி வளர்க்க வேண்டும்.
   பெற்றோர் உணர வேண்டிய ஒன்று: நம் குழந்தைகள் எல்லோருக்கும் பல மொழிகளைக் கற்று பேச -எழுத - படிக்கும் திறனும் ஆற்றலும் இருக்கிறது என்பதும் ஆங்கில மொழி படிப்பது, தமிழ் மொழியைக் கற்க தடையாக இருக்காது என்பதும்தான்.
   பல இடங்களில், என் மகனுக்கு/மகளுக்கு தமிழில் எழுதவோ - படிக்கவோ தெரியாது என்று போலி கெளரவத்துடன் சொல்வதைக் கேட்க முடிகிறது. ஆனால்,எனது மகனுக்கு/மகளுக்கு , தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் எழுதவும் - பேசவும் - படிக்கவும் தெரியும், என்று சொல்வதில்தான் மெய்யான கெளரவமும் பெருமையும் அடங்கியுள்ளதை அவர்கள் உணர வேண்டும்.
   இது தவிர பெற்றோர், தமது குழந்தைகள், இளம் வயதில், குறிப்பாக பதின் பருவத்தின் துவக்கத்தில், அதிகம் சிரமம் இன்றி படிக்கக் கூடிய தமிழ் சிறு கதைகள் - மிக எளிதில் புரியும் கவிதைகள் போன்றவற்றைப் படிக்க ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.
   இன்னொரு முக்கியமான விஷயம் :
   தமிழ் மொழியில் எழுத - படிக்க - பேச, இளம் வயதில் கற்றிருந்தும், அப்பழக்கத்தை இழந்து, தமிழினை வெகு அரிதாகவும் - சொற்பமாகவும் பலர் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலத்தில் passive

  speakers என அழைக்கப்படும் இவர்கள், முனைப்புடன் தமிழில் பேசத் துவங்க வேண்டும்...
   நாம், இந்த பூமியை அதன் இயற்கை வளங்களுடன் - பூமியைப் பாழ்படுத்தாது - அடுத்த தலைமுறைக்கு தர வேண்டியதன் அவசியத்தை, நாள்தோறும் பத்திரிகைகளிலும் - தொலைக் காட்சிகளிலும் பார்க்கிறோம், படிக்கிறோம் .
   அதேபோல, நெடுங்காலமாக - வளமாக நிலைத்து நின்ற - நம்மைப் பெற்ற நம் மொழியை சிதைக்காது - ஓரளவேனும் வளப்படுத்தி, அடுத்த தலைமுறைக்குத் தர வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதையும் உணர வேண்டும்.
   இப் பொறுப்பை, தமிழ் பேசும் நாம் நிறைவேற்றா விட்டால் வேறு யார் நிறைவேற்ற முடியும்? இப்போது செய்யா விட்டால், வேறு எப்போது செய்ய முடியும்?
   அப்படி நிறைவேற்றினால்... சிறந்த நம் மக்கள், நம் தமிழை மேலும் சிறப்பாக வளர்க்கக் கூடும்.
   தனிமனிதன், தனது சொத்தைப் பெருக்கி - வளப்படுத்தி, தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறான். அதே உணர்வோடு, தாய் மொழியையும் சிதைக்காது - மாறாக செம்மைப்படுத்தி, அடுத்தத் தலைமுறைக்கு கொடுக்க வேண்டியது அவசியம்.
   
   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp