Enable Javscript for better performance
இன்றைய தலையாய கேள்வி!- Dinamani

சுடச்சுட

    

    இன்றைய தலையாய கேள்வி!

    By என். முருகன்  |   Published on : 17th May 2016 03:54 AM  |   அ+அ அ-   |    |  

    நம் நாட்டின் ஐந்து மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல், குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், விஞ்ஞான வளர்ச்சியினால் உருவாகியுள்ள கணினி மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும், தொலைக்காட்சி விவாதங்கள், விளம்பரங்கள் மூலம் உருவாகியுள்ள கருத்துகளும், ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களைப் புறந்தள்ளியுள்ளன.
     முக்கியமாக, பல அரசியல் தலைவர்களும், இளம் வாக்காளர்களும் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி மக்களைச் சந்தித்து பல நிர்வாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பேசி வருவது சரியல்ல.
     இன்றைய ஜனநாயக நடைமுறை "பிரதிநிதித்துவ ஜனநாயகம்' எனப்படும். இந்த பூவுலகு உருவாகிய காலகட்டத்தில் இருந்த வேறு பல ஆட்சி முறைகளிலிருந்தும் உருவாகி வளர்ந்த நடைமுறை இது. இன்றைய இளைஞர்கள் இதைப் புரிந்து கொள்வது அவசர அவசியமாகியுள்ளது.
     கிரேக்க நாட்டில் தோன்றிய நேரடி ஜனநாயகம் "சிட்டிஸ்டேட்' எனப்படும். ஒரு நகர் அல்லது கிராமத்தை ஆளும் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி எல்லா நிர்வாக நடவடிக்கைகளைப் பற்றியும் விவாதித்து ஒரு முடிவெடுப்பார்கள். பின் அது நடைமுறைபடுத்தப்படும். இந்த மாதிரியான நகர, மாநிலங்கள் உருவாகி நடைமுறையிலிருந்தது கி.மு. 1000 முதல் கி.மு. 800-ஆம் ஆண்டு வரை என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
     இதுபோன்ற நடைமுறையை நேரடி ஜனநாயகம் என அழைக்கலாம். இதில் வளமடைந்த மக்கள் வெள்ளம் வளர்ந்து பெருகி வேறுபல இடங்களுக்கும் பரவி, அங்கேயும் நகர, மாநிலங்கள் உருவாகின. இதுபோல பெருகி வளர்ந்திருந்த பல நகர, மாநிலங்களையும் கைப்பற்றி தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது ரோமாபுரியின் மன்னராட்சி.
     அந்தக் காலத்தின் பின்னாலும் வியாபார நடவடிக்கைகளினால் செழிப்படைந்த பல பகுதியின் நகரங்கள் தங்கள் நிர்வாகத்தை நகர, மாநிலங்களைப் போல் உருவாக்கி, மன்னராட்சியுடன் ஒத்துப்போய் சிறப்பாக இருந்தன.
     மக்கள் மன்றம் கூடி பிரச்னைகளை அலசி, நடவடிக்கை தீர்மானங்களை நிறைவேற்றும்போது தேவைப்பட்டால் பொது வாக்கெடுப்பு எடுக்க உறுப்பினர்கள் கையை உயர்த்தும் நடைமுறை இருந்தது. நகர வகுப்பினர்களில் பெரியவர்கள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் போன்ற பணியையும் செய்தனர்.
     இதுபோல் சிறப்பாக மக்கள் பணியாற்றிய அரசியலமைப்பான நேரடி ஜனநாயகம் மக்கள் பெருக்கத்தின் காரணமாக, எல்லோரும் கலந்துகொண்டு செயலாற்ற முடியாத சூழ்நிலையில் சிலர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நிர்வாகத்தை நடத்தும் முறை உருவானது. டோக்கன்கள் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு அவற்றை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து உரியவர்கள் நிர்வாக உறுப்பினர்கள் ஆனார்கள்.
     அடுத்தகட்டமாக, நகரங்கள் பல ஒன்று சேர்ந்தும் விரிந்தும் உருவான மாநில அமைப்புகள் நேரிடை ஜனநாயக நடைமுறையினால் ஆட்சி செய்ய முடியாத நிலையில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் உருவானது. அதன்படி, ஒரு பகுதியின் மக்களின் பிரதிநிதிகளாக சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசாட்சி முறையும் நீதி, நிர்வாகம், சட்ட சபை என்ற பாகுபாட்டுடன் நடைபெற ஆரம்பித்தது.
     "தகுதியுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் சட்டமியற்றப்பட்டு ஆட்சி செய்யப்படும் முறையே பிரதிநிதித்துவ ஜனநாயகம்' எனக் கூறுகிறார் மார்க் பியர்சி எனும் அறிஞர்.
     அமெரிக்காவில் அதிபர் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவது சரியான உதாரணம் எனவும் அவர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு எது நன்மை பயக்குமோ அவற்றை நடைமுறைப்படுத்தும் நிர்வாகத்தை இயக்கி ஆட்சி செய்வதுவே இந்த பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மைய அம்சம் என பியர்சி மேலும் கூறுகிறார்.
     ஜனநாயக நாடு என்று நாம் ஒரு நாட்டின் கட்டமைப்பை கூறும் வகையில் அங்கே ஐந்து அம்சங்கள் இருக்க வேண்டும்.
     • வாக்களிப்பு எல்லோருக்கும் சரி சமமாக இருக்க வேண்டும்.
    • எல்லோரும் தேர்தலில் கலந்துகொள்ள வேண்டும்.
    • ஜனநாயகத்தின் அம்சங்களை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
    • தேர்தல் நடைமுறைகள் கட்டுப்பாட்டுடன் நேர்மையாக நடக்க வேண்டும்.
    • எல்லா மக்களையும் முழு அளவிலும் உள்ளடக்கி தேர்தல் நடைபெற வேண்டும்.
     இந்த ஐந்து அம்சங்களும் இருந்தால்தான், தரமான பிரதிநிதித்துவ ஜனநாயகம் ஒரு நாட்டில் இருப்பதாக நாம் கூற முடியும்.
     அமெரிக்கா, இந்த ஐந்து அம்சங்களையும் கொண்ட மிகச்சிறந்த ஜனநாயக நாடு; தரமான பெரிய மத்திய அரசும், பல மாநில அரசுகளும் கூட்டாக இணைந்து நடக்கும் "ஃபெடரல் டெமாக்ரஸி' அது. ஒருங்கிணைந்த ஜனநாயக நாடான அமெரிக்காவில் மூன்று கட்டமைப்புகள் உண்டு. அதிபரின் தலைமையிலான நிர்வாகத் துறையும், மக்கள் சபைகளாக நாடாளுமன்றமும், மாநில சட்டப் பேரவைகளும், அடுத்து நீதித் துறையுமே அந்த மூன்று தனித்தனியான அமைப்புகள்.
     உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் தழைத்தோங்கி மேலே விவரிக்கப்பட்ட மூன்று கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டன. இதன் முக்கியமான காரணகர்த்தாவாக பண்டித ஜவாஹர்லால் நேருவைக் கூற முடியும்.
     இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் போல படித்த விவரம் தெரிந்த மக்கள் அதிகம் இல்லாத நமது நாட்டில் எல்லோருக்கும் வாக்குரிமை வழங்குவது சரிதானா என்ற கேள்வி எழுந்தபோது, "ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என் தாய்நாட்டில் ஏழை, எளிய படிப்பறிவில்லாத மக்களைத் தேடி படித்தவர்களும் தனவந்தர்களும் சென்று அவர்களது வாக்குகளை கெஞ்சி கேட்டு சேகரிக்கும் நிலைமை உருவாக வேண்டும்' எனக் கூறி எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப் போராடினார் நேருஜி! ஆனால், அந்த ஜனங்கள் தங்கள் வாக்குகளை விலை பேசும் சூழ்நிலை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உருவாகும் என அவர் அந்த நேரத்தில் நினைத்திருக்க மாட்டார்.
     அதைவிடவும் மேலாக, உலகின் எல்லா ஜனநாயக நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமான தனித்தன்மையுடன் நிர்வாகமும், நாடாளுமன்ற, சட்டப் பேரவைகளும் இயங்க வேண்டும் என்ற விதியை மறந்துவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளைக் களையும் நிர்வாக நடவடிக்கைகளை எடுப்பார்கள் என இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தலைமையேற்று நடத்திய பல அரசியல் கட்சிகள் கூறியது மிகப் பெரிய ஆச்சர்யம் என பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
     இவர்களுக்கு பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அம்சங்கள் சரியாக புரிந்திருக்கவில்லை என்பதும், அதை யாரும் சுட்டிக்காட்டவில்லை என்பதும் மிகவும் தவறான நடைமுறை.
     எனவே, தேர்தலில் பரப்புரை செய்த முதல்வர் வேட்பாளர்கள் பலரும் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விவரங்கள் பல. முதல்வர் நேரடியாக மக்களைச் சந்தித்து எல்லா பிரச்னைகளையும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நிர்வாகத் துறையில் இதுபோன்ற மக்கள் பிரச்னைகளைத் திரட்டி முதல்வரின் பார்வைக்கு எடுத்துச்செல்லும் அமைப்புகள் உண்டு.
     மேலும், முதல்வர் நேரிடையாக தெரு வலம் வந்து மக்களிடம் உரையாடினால் அரசு நிர்வாகிகளின் வேலை பாதிக்கப்படும். அவர்களின் கடமைகள் சிதறும்.
     கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் நிர்வாகத்தில் நேரடியாக தலையிடவே கூடாது. அவர்கள் தங்கள் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக நடந்து கொண்டால் மாநில நிர்வாகம் தரமாக நடக்க முடியும். பிரச்னைகளை சட்டப் பேரவையிலும், அமைச்சர்களிடமும் முறையிடுதலே அவர்களது கடமை.
     இதை நாம் கைவிட்டதனால் மாநில நிர்வாகம் தரமற்று போனது மிகவும் வருத்தமளிக்கும் இன்றைய நிலைமை. சீர்படுமா இது என்பதே இன்றைய தலையான கேள்வி!
     
     கட்டுரையாளர்:
     ஐ.ஏ.எஸ். (ஓய்வு).
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp