Enable Javscript for better performance
பாடங்கள் பல உண்டு; கற்பார்களா?- Dinamani

சுடச்சுட

  

  பாடங்கள் பல உண்டு; கற்பார்களா?

  By ஜங்ஷன் - intro  |   Published on : 24th May 2016 01:25 AM  |   அ+அ அ-   |    |  

  வாக்குப் பதிவு நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் தினம் வரை, வானம் பொழிந்து கொண்டிருந்தது. கதிரவன் கண்ணில் அகப்படவில்லை. நாளை சூரியன் உதிக்கும் என்று முகநூலில் சிலேடையாக எழுதி மகிழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகின.
   அவர்களுக்கு மட்டுமல்ல, கணிதப் புலிகளான கருத்துக் கணிப்பாளர்களின் கணிப்புகளும் பொய்த்தன. ஒரு வட இந்திய நிறுவனம், ஒரு தமிழ்த் தொலைக்காட்சி ஆகிய இரு நிறுவனங்களின் கணிப்புகள் மாத்திரம் தப்பின.
   எம்.ஜி.ஆருக்குப் பின், கடந்த 32 ஆண்டுகளில் நடைபெற்ற ஆறு தேர்தல்களில், ஆட்சியில் இருந்து கொண்டு தேர்தலைச் சந்தித்த முதல்வர்கள் யாரும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதில்லை. அந்த வரலாற்றை முறியடித்திருக்கிறார். ஆனால், அது மட்டுமல்ல அதன் சிறப்பு. ÷தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலும், உடல் நலிவுற்ற நிலையிலும் மக்களின் தளராத நம்பிக்கையைப் பெற்றிருந்தவருமான எம்.ஜி.ஆர். கூட தேர்தல் என்று வரும்போது கூட்டணிகளைத் தவிர்த்ததில்லை.
   ஆனால் ஜெயலலிதா, கூட்டணியே வேண்டாம் என்ற தீர்மானத்தோடு களமிறங்கினார். இரண்டாண்டுகளுக்கு முன்னரே மக்களவைத் தேர்தலில் தனித்துக் களமிறங்குவதை அவர் பரீட்சித்துப் பார்த்திருந்தாலும் இந்த முறை "ரிஸ்க்' அதிகமிருந்தது.
   அவரைப் பதவியிலிருந்து இறக்க 10 கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு அணி வகுத்திருந்தன. பாலினம் சார்ந்தும், தோற்றம் சார்ந்தும், அவரது தனி வாழ்க்கை குறித்தும் கொச்சையான பேச்சுகளைக் கூச்சமின்றி கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே வீசிக் கொண்டிருந்தார்கள். ÷
   பெரும்பாலான ஊடகங்களும், சமூக ஊடகங்களும் அவருக்கு எதிரான மனநிலையைக் கட்டமைக்க முயன்றன. பெரும்பாலும் பெண்களைக் கொண்ட அவரது வாக்கு வங்கியை அசைத்துப் பார்க்கும் நோக்கோடு அரசியல் கட்சிகள் மதுவைக் கையிலேந்தின. ஆட்சியிலிருந்து கொண்டு தேர்தலைச் சந்திக்கும் சங்கடம் வேறு இருந்தது.
   இரண்டாம் நிலைத் தலைவர்களை வளர்த்தெடுக்காத காரணத்தால் பிரசாரத்தைப் பெரும்பாலும் அவரே செய்ய நேர்ந்தது. இன்று அவர் ஈட்டியிருக்கிற வெற்றி இத்தனை தடைகளையும் தாண்டி ஈட்டியிருக்கிற வெற்றி.
   ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் இந்தத் தேர்தல் தி.மு.க.விற்கும் வெற்றி தந்திருக்கும் தேர்தல்தான். 2014 மக்களவைத் தேர்தலில் பூஜ்யம் பெற்ற தி.மு.க. இன்று தொண்ணூறைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவராகத் திகழ்கிறார் கருணாநிதி. சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி வரிசை முழுவதிலும் தி.மு.க. கூட்டணியினரே அமர இருக்கிறார்கள்.
   ஆனால்- இந்தத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்குச் சில பாடங்களையும் முன் வைத்திருக்கிறது.
   மக்கள் நலக் கூட்டணி : இடதுசாரிகளைப் போன்ற சித்தாந்திகள், விடுதலைச் சிறுத்தைகளின் களப்பணியாளர்கள், விஜயகாந்த் என்ற நட்சத்திர முகம், வைகோ, வாசன் என்ற கறைபடாத அரசியல்வாதிகள் எனத் தேர்தலில் வெல்வதற்கான அத்தனை கருவிகளையும் கொண்டிருந்த இந்த அணி இந்தத் தேர்தலில் மிக மோசமான தோல்வியைக் கண்டது ஏன்?
   ஊடகங்களைப் பார்த்து உமிழ்ந்தது, எடுத்து அடிச்சேனா, தெரியுமா என மிரட்டியது, தொலைக்காட்சிப் பேட்டியில் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியில் எழுந்து ஓடியது, வேட்பு மனுத்தாக்கல் வரை போய் கடைசி நிமிடத்தில் பின் வாங்கியது எனப் பல செயல்கள் முகம் சுளிக்க வைத்தன என்ற போதும் அவர்கள் மதிப்பிழக்கக் காரணமாக இருந்தது அவர்கள் மேற்கொண்ட எதிர்மறையான பிரசாரம்.
   தங்களுடைய செயல்திட்டங்களை முன்னிறுத்திப் பேசாமல், பொதுவாழ்வில் 80 ஆண்டுகளைச் செலவிட்ட கருணாநிதியையும், 30 ஆண்டுகளைச் செலவிட்ட ஜெயலலிதாவையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியது மக்களிடம் நன் மதிப்பை ஏற்படுத்தவில்லை.
   கடந்த தேர்தல் வரை இரண்டு திராவிடக் கட்சிகளையும் சார்ந்து தேர்தலைச் சந்தித்து, பதவிகளும் பெற்றவர்கள், பெரிய அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் சொந்த நலன்களுக்காக கூட்டணி கண்டதை மக்கள் அங்கீகரிக்கவில்லை.
   எல்லா சமூகத்தினரும் அமைச்சரவையில் பங்கு பெறும் தமிழகத்தில், பல கட்சிகள் பங்கு பெறும் கூட்டணி ஆட்சிக்கு அவசியமிருப்பதாக மக்கள் கருதவில்லை. அந்தக் கருத்தியல் அதிகாரப் பசி கொண்ட சந்தர்ப்பவாதக் கூற்றாகவே பார்க்கப்பட்டது
   பா.ம.க.: தமிழகத்தின் பிரச்னைகள் குறித்துத் தெளிவான திட்டங்களோடு ஓராண்டிற்கு முன்னரே களமிறங்கிய பா.ம.க. ஏன் வெற்றி காணவில்லை? இரண்டு முக்கிய காரணங்கள்: ஒன்று, எதிர்காலத்தை மனதில் கொண்டு அது பேசிய போதும் மக்கள் மனதில் அதன் கடந்த காலமே பதிவாகியிருந்தது. இரண்டாவது, அதன் பிரசார வடிவங்கள் புதுமையாக இருந்த போதிலும் இந்த மண்ணுக்குப் பொருந்தாது அன்னியமாக இருந்தன.
   ஒரு நபரை முன்னிறுத்தி வாக்குக் கேட்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவரை விளம்பரப்படுத்தும் சுவரொட்டிகள், பதாகைகள், வாசகங்கள் முக்கியத்துவம் பெறும். அதே உத்தியை இங்கு பயன்படுத்தினார் அன்புமணி.
   அவரது மாற்றம் என்ற முழக்கம், 2008 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு முதல் முறையாகப் போட்டியிட்டபோது ஒபாமா வைத்த முழக்கம். அப்போது வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகளின் டிசைனை அப்படியே பயன்படுத்தினார் அன்புமணி. அவரது மேடைகள் அங்கு நடக்கும் விவாத மேடைகளைப் போல அமைக்கப்பட்டன.
   "வேண்டும், மாற்றம் வேண்டும்' பா.ம.க. என்பதற்குப் பதில் "வேண்டும் அன்புமணி' என்பது முழக்கமாக வைக்கப்பட்டது. மோடியின் உதாரணத்தைப் பின்பற்றி தனி நபரை முன்னிறுத்தி கட்சியை ஜெயிக்க வைக்க முடியும் என்ற அணுகுமுறை பிழையாக முடிந்தது. 2021க்கு வெள்ளோட்டம் பார்க்கிறார்கள் என்ற எண்ணமே மிஞ்சியது.
   பா.ஜ.க.: மாநிலத்தில் கட்சியை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றவர்கள், கட்சிக்குத் தனித்துவமான அடையாளம் ஏற்படுத்தும் விழைவில் மேற்கொண்ட முயற்சிகள் அதைத் தனிமைப்படுத்துவதாக முடிந்தன.
   ஆனால், அதைக் குறித்த கவலைகளின்றி தமிழகக் கிளை இயங்கிக் கொண்டிருந்தது.
   உறுப்பினர் சேர்க்கையின் போது 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்திருப்பதாக அதன் அகில இந்தியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவ், 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் முகாமில் பேசும் போது தெரிவித்தார்.
   அப்படியானால், இந்தத் தேர்தலில் பா.ஜ.க. 50 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அது பெற்ற வாக்குகள், சுமார் 12 லட்சம் மட்டுமே (12,28,692 வாக்குகள்). அதாவது, 38 லட்சம் பா.ஜ.க. உறுப்பினர்களே பா.ஜ.க.விற்கு வாக்களிக்கவில்லை.
   மிகைபடப் பேசும் குழந்தைத்தனமான மனோபாவத்தைக் கைவிட்டு, நடைபயில்கிற குழந்தைக்கு நடை வண்டி சிறிது காலத்திற்குத் தேவை என்பதை பா.ஜ.க. உணர வேண்டும்.
   அ.தி.மு.க.விற்கு மாற்று தாங்கள்தான் என்பதை நிரூபித்திருக்கிற தி.மு.க. செய்து கொள்ள வேண்டிய சுய பரிசோதனைகள் ஏராளம். 2006-11 காலகட்டத்தில் அது நடத்திய ஆட்சி மக்களிடம் சில கசப்பான நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறது.
   அதனால்தான், அந்தக் காலகட்டத்திற்குப் பின் அதனால் ஆட்சியைப் பிடிக்க இயலாமல் திணறிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அது ஏற்க வேண்டும். அதனுடைய எதிர்காலம் அது எத்தகைய எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தது.
   எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல், முட்டுக்கட்டை போடாமல், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உழைத்தால் தி.மு.க. மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறும்.
   அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்து நீட்டிவிடவில்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்வது நல்லது. இந்தத் தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளுக்குமிடையே உள்ள வாக்கு வித்தியாசம் மிகக் குறைவு; நூலிழைதான்.
   கடந்த ஆட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்த அமைச்சர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நிர்வாகத்தில் கடுமையான சவால்கள், குறிப்பாக நிதித் துறையில், காத்திருக்கின்றன. செயல் திறன் மேம்பட வேண்டும்.
   கெட்டிக்காரத்தனமான முடிவுகள் எடுப்பதில் மட்டுமல்ல, அதை நிறைவேற்றுவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. சட்டப் பேரவையில் வலுவான எதிர்க்கட்சி. எனவே, விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் வேண்டும். எதிர்காலம் என்பது இரண்டாம் நிலைத் தலைவர்களை வளர்த்தெடுப்பதில் இருக்கிறது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai