சுடச்சுட

  
  narayanan

  காவிரி நதிக்குப் பொன்னி நதி என்று ஒரு பெயர் உண்டு. கர்நாடக மாநிலத்தில் பொன்னி நீர் கொண்டு பொன்னி அரிசி சாகுபடி செய்கிறார்கள். அது சிறப்பான சுவையுடைய சன்னரக அரிசி. தமிழ்நாட்டு மக்கள்தான் கர்நாடகப் பொன்னி அரிசியை அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். பொங்கிவரும் பொன்னியான காவிரி நீர் வரவில்லை என்றாலும் பொன்னி நீர் கொண்டு விளைந்த கர்நாடகப் பொன்னி அரிசி வருவதை எண்ணிச் சற்று ஆறுதல் கொள்வோம்.
  டெல்டா பகுதிகளில் விளையும் பாபட்லா பொன்னி, ஆந்திரா பொன்னி ஆகியவை அவ்வளவு சன்ன ரகம் அல்ல. ஒரு நாட்டின் உணவுப்பொருளாதாரத்தில் வீணாகும் உணவுக்கு ஒரு விலை வைத்தால் நாம் அடையும் நஷ்டத்தைப் பல கோணங்களில் கவனித்தல் நலம். குடிப்பதற்கே நன்னீர் கிடைப்பது பல கிராமங்களில் அரிதாயுள்ளது. ஆற்றுநீராகிய நன்னீரைக் கொண்டு விளைந்த நஞ்சை தானியங்களை வீணாக்குவது என்பது எவ்வளவு பெரிய பாவம்?
  பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து ஜீவ நதிகளில் அணைகள் கட்டப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட அணைகளை நிர்வாகம் செய்யும் பொதுப்பணித்துறை நிர்வாகிகளுக்கு வழங்கும் சம்பளம் பலகோடி ரூபாய். இவ்வளவு பணம் செலவழித்த பின்னரே ஆற்றுநீர் பாசனக்கால்வாய் நீராகிப் பயிராகி விளைவதால் நீருக்கு விலையில்லை என்று கூற முடியுமா?
  ஆற்றுநீர் ஊற்றுநீராகி அந்த ஊற்றுநீர் ஆழ்துளைக் குழாய்வழியே கொட்டும் போது செலவாகும் மின்சாரத்தின் விலை என்ன? வீணாகும் உணவால் வீணாகும் எரிசக்தியை மிச்சப்படுத்தினால் காலநிலை மாற்றத்தைக் கூட கணிசமாகக் கட்டுப்படுத்திவிடலாம். ஆகவே, காலத்தின் தேவை திருத்தியமைக்கப்பட்ட பயிர் உற்பத்தி திட்டம்.
  அப்படிப்பட்ட புதிய பயிர் உற்பத்தித்திட்டத்தில் நீர்ச்சிக்கனப் பயிர்களுக்கு, குறிப்பாக புஞ்சை தானியங்கள், பருப்புகள் எண்ணெய் வித்துக்கள் சாகுபடிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது தான் காலத்தின் தேவை.
  நீர்த்தேவை அதிகமுள்ள உணவுப் பயிர்களை முறையே நெல், கரும்பு, கோதுமை, மக்காச்சோளம் என்று வகைப்படுத்த வேண்டும். நீர்ச்சிக்கனப் பயிர்களாக சின்னச்சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, புல்கோதுமை போன்ற சிறுதானியங்கள், கொண்டக்கடலை, துவரை, உளுந்து, பாசிப்பயறு, மசூர், கொள்ளு, காராமணி, மொச்சை போன்ற பருப்பு வகைகள், நிலக்கடலை எள், கடுகு, சூரியகாந்தி, சோயா குசும் (SAFFLOWER) போன்ற எண்ணெய்வித்துப்பயிர்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
  உணவுப்பயிர்களில் எண்ணிக்கை என்று பார்த்தால் நீர்ச்சிக்கனப்பயிர்களான புஞ்சைகளே ஓங்கியுள்ளன. விலைமதிப்பு என்ற கண்ணோட்டத்திலும் புஞ்சைகளே ஓங்கியுள்ளன. குறைந்த நீர்ச்செலவில் அதிக விலைமதிப்புள்ள உணவுப்பயிர்கள் புறந்தள்ளப்பட்டு, அதிக நீரை வீணாக்கும் அரிசி, கோதுமை, கரும்பு போன்ற நஞ்சைப் பயிர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது எந்தவகையில் நியாயம்?
  புஞ்சையாக விளையும் புல்கோதுமை என்ற சம்பா கோதுமை கோவை நீலகிரி மாவட்டச் சிறப்பு. நல்ல விலை இருந்தும் புல்கோதுமையைப் பயிரிடுவோர் இல்லை.
  முன்பெல்லாம் மையஅரசின் வேளாண்மை அமைச்சரகம் உணவு உற்பத்திக்குரிய பயிர்த்திட்டத்தை வகுக்கும்போது நஞ்சை தானியங்களுக்கும் புஞ்சை தானியங்களுக்கும் இடையே சமன் உறவு காப்பாற்றப்பட்டிருந்தது.
  உதாரணமாக, 1960-70களின் உணவு உற்பத்திக் கணக்கு இப்படி இருந்தது: அரிசி 4 கோடி டன், கோதுமை 2 கோடி டன், மக்காச்சோளம் 50 லட்சம் டன், கம்பு சோளம் சிறு தானியங்கள் 2.02 கோடி டன், பருப்பு வகைகள் 1 கோடி டன் எண்ணெய்வித்துகள் 1 கோடி டன். மொத்தம் 10.7 கோடி டன். இதில் நஞ்சை 6 கோடி டன் என்றால், புஞ்சை 4.7 கோடி டன். ஏறத்தாழ 6:5 என்பது சமன் நிலை.
  இன்றைய நிலை எப்படி? 2011- 12க்குப் பின் இந்திய சராசரி உணவு உற்பத்தி நிலவரம் இப்படி: அரிசி 10 கோடி டன், கோதுமை 9 கோடி டன், மக்காச்சோளம் 2 கோடி டன், சிறு தானியங்கள் 2.2 கோடி டன், பருப்புவகை 1.8 கோடி டன், எண்ணெய்வித்துக்கள் 2.2 கோடி டன். ஆக மொத்தம் 27.2 கோடி டன். நஞ்சை 19 கோடி டன். புஞ்சை 8.2 கோடி டன்.
  அதாவது இன்று நஞ்சை - புஞ்சை விகிதாச்சாரம் 6:2 என்ற அளவில் உள்ளது. சரியான சமன் உறவு என்றால் நாம் புஞ்சை உணவு உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்தியிருக்க வேண்டும். எந்த அளவில் அரிசி, கோதுமை உயர்ந்ததோ அந்த அளவில் சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு கூட்டு உற்பத்தி உயர்ந்திருக்க வேண்டும். எண்ணெய் வித்துப்பயிர்
  உற்பத்தி ஒரு மடங்கு கூடியிருக்க வேண்டும் அல்லவா?
  மக்காச்சோள உற்பத்தி மட்டுமே நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. மக்காச் சோளம் பெரிய, கனமான தானியம். பால் மாடுகள் தீவனத்தேவை, கோழித்தீவனத் தேவையுடன் ஏற்றுமதிச் சந்தையும் உள்ளதால் இன்றளவும் மக்காச்சோள சாகுபடி நிலப்பரப்பு படிப்படியாகக் கூடிவருகிறது.
  அதேசமயம் சிறு சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களின் நிலப்பரப்பும் உற்பத்தியும் படிப்படியாகக் குறைந்துவிட்டன. நல்ல உள்ளுர்த் தேவையிருந்தும் பருப்பு வகை, எண்ணெய்வித்துப் பயிர்களின் உற்பத்தியில் போதிய வளர்ச்சி இல்லை.
  குறைந்த நீர்ச்செலவில் கூடுதல் லாபம் தரக்கூடிய புஞ்சைப் பயிர்களைப் புறந்தள்ளி வளர்ந்த நஞ்சைப் பயிர்களால் அதிக நீர்ச்செலவுடன் குறைந்த லாபமே பெற முடிகிறது. நீர்ப்பாசன நிலப்பரப்பு பற்றிய புள்ளிவிவரம் இந்நிலையை விளக்கவல்லது.
  புஞ்சைப் பயிர்களுக்குக், குறிப்பாக சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்களுக்கு இருபருவம் உண்டு.
  ஜூன் - ஜூலையில் மானாவாரி. ஜனவரி - பிப்ரவரியில் இறைவை கோடைப்பயிர். பருவநிலைத் தடுமாற்றத்தில் காலம் மாறி மழைபெய்வதால் மானாவாரிப் பருவம் அழிந்து விட்டதும் மானாவாரியும் இறைவையை அதாவது நீர்ப் பாசனத்தையே மையமிட்டுவிட்டதால் சிறுதானியங்களின் இடத்தை மக்காச்சோளம், கோதுமை, நெல் ஆகிய பயிர்கள் பற்றிக் கொண்டன.
  நீர்ப்பாசன நிலப்பரப்பு கூடியதால் புஞ்சை தானிய நிலப்பரப்பு குறைந்தது. கடந்த 20 ஆண்டுகளில் பாசன நிலம் கூடி மானாவாரி மறைந்துள்ளது.
  1990-91 ஆண்டு நிலவரத்தில் மொத்தப் பாசனநிலம் (GROSS IRRIGATED AREA)  6.5 கோடி ஹெக்டேராக இருந்தது 2011-12இல் 9.0 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
  அதாவது 3.5 கோடி ஹெக்டேர் பாசன நிலம் அதிகமாகியுள்ளது.
  கடந்த 20 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட புதிய அணைக்கட்டுத் திட்டம், தடுப்பணைகள், நீர் நிலைமேம்பாட்டுத் திட்டம், ஆழ்துளைக் கிணறுகள் காரணமாக புஞ்சை நிலம் நஞ்சையாக மாறியபோது சிறுதானியப் பயிர்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் மானாவாரி நிலப்பரப்பு சூனியமானது.
  இறைவை (கோடைப் பயிர்) பயிர்சாகுபடி மட்டுமே தொடர்ந்துள்ளது.
  பாசனவசதி பெற்றவுடன் மானாவாரிப் பருவத்தில் மானாவாரி நிலங்களில் புஞ்சை தானியங்கள் சாகுபடி செய்யப்படுவதில்லை. 1970-களில் கிலோ அரிசி விலை ரூ.8/- கோதுமை ரூ.10 சிறுதானியங்கள் ரூ.5/- பருப்புவகை ரூ6/- என்று விற்றன. இன்று அரிசி விலை ரூ.50 கோதுமை ரூ.40 சிறுதானியங்கள் ரூ.60/- என்று விற்கின்றன.
  சென்னை கோவை போன்ற நகரங்களில் நலவாழ்வு காரணமாகப் பலர் சிறுதானியங்களை உண்ணத் தொடங்கி அவற்றின் தேவை உயர்ந்துள்ளதால் விலை ரூ.100 வரை விற்கப்படுகிறது. திண்டுக்கல், தர்மபுரி, மதுரை போன்ற முதல்நிலை அங்காடிகளில் சிறுதானியங்கள் ரூ.50 முதல் 60-க்கு விற்கப்படுகின்றன. வடக்கு மாநில வரவுகளான பருப்பு வகைகளின் முதல் நிலை அங்காடி விலை ரூ.150.
  மானாவாரி நிலங்களில் பாசன வசதி ஏற்பட்டவுடன் நீர்ச்செலவில்லாத புஞ்சை தானியங்களின் சாகுபடி உயரவேண்டுமானால் கோதுமையில் உள்ள கொள்முதல் முறையை புஞ்சை நில தானியங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
  கொள்முதல் விலையை மட்டும் அறிவித்து விட்டுக் கொள்முதல் செய்யாமல் இருக்கும் நிலை மாறிப் புஞ்சை தானியங்களைக் கொள்முதல் செய்து இருப்பு நிலையை (STOCK POSITION)  அறிவிக்க வேண்டும். இப்பணியை உணவுக் காப்பரேஷன் மேற்கொண்டு நல்ல விலையில் கொள்முதல் செய்து மானிய விலையில் மக்களுக்கு வினியோகம் செய்யவேண்டும்.
  அரிசி, கோதுமை, விலைக்கு நிகராக புஞ்சை தானிய விலை நிலவுமானால் மக்களின் நுகர்வுத் தேவை உயர்ந்து புஞ்சை தானிய சாகுபடியும் ஊக்கம் பெறும்.
  ஆகவே, அதிக நீர்ச்செலவுள்ள பயிர்களான நெல், கோதுமை, கரும்பு போன்ற நஞ்சைப் பயிர்களுக்குத் தேவைக்கு அதிகமாக முக்கியத்துவம் வழங்கி உற்பத்தி செய்த உணவில் ஒரு கணிசமான பங்கை இருப்புவைக்க இடமில்லாமல் வீணாக்கும் போது சேதமாவது அரிசி, கோதுமை மட்டுமல்ல, அவற்றை உற்பத்தி செய்யும் போது செலவழித்த தண்ணீரும்தான்.
  புஞ்சைப் பயிர்களில் பருப்புக்கும் சமையல் எண்ணெய் வித்துக்களுக்கும் தட்டுப்பாடு உண்டு. மில்லியன் மில்லியன் டாலர்களாகக் கொட்டி அழுது இறக்குமதி செய்கிறோம். இவை நீர்ச்சிக்கனமுள்ள புஞ்சைப்பயிர்கள் என்பதால் பாசனவசதியுள்ள மானாவாரி நிலங்களில் பருப்புவகைகளும், எண்ணெய் வித்துகளும், சிறுதானியங்களும் சத்தான சம்பா கோதுமையும் பயிரிட உரித்தான நீர்ச்சிக்கன உணவு உற்பத்தி திட்டங்களை வகுப்பது அரசின் தலையான கடமை.

  கட்டுரையாளர்:
  இயற்கை விஞ்ஞானி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai