சுடச்சுட

  

  உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இன்னும் மூன்று வாரங்களில் நிலைமை சீரடையும் என்று அரசு கூறுகிறது.
  மத்திய அரசின் அறிவிப்பை ஆரவாரமாக வரவேற்ற எதிர்க்கட்சிகள் பலவும், தற்போதைய ரூபாய் நோட்டுப் பற்றாக்குறையைப் பயன்படுத்தி அரசியல் நடத்த விழைகின்றன.
  இந்நிலையில் நாடு முழுவதும் கோடிக் கணக்கில் பறிமுதல் செய்யப்படும் புதிய 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகள், வேறோர் அபாயகரமான போக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. அது கருப்புப்பண முதலைகளின் திருட்டுத்தனத்துக்கு விலைபோன வங்கி அதிகாரிகளின் மோசமான செயல்.
  ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கருப்புப் பணம் பெரும் தடையாகும். அதைக் கட்டுப்படுத்தவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும்தான் பிரதமர் மோடி இப்படியொரு அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.
  மக்கள் தங்களிடமுள்ள அனைத்து ரூ.500, ரூ.1000 நோட்டுகளையும் வங்கியில் செலுத்த வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் பிரதான குறிக்கோள்.
  அதன்மூலமாக, ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் உள்ள பணத்தைக் கணக்கிட்டு, தேவைப்பட்டால் வருமான வரி வசூலிக்க முடியும்.
  சாமானிய மக்களுக்கு வருமான வரியால் பெருமளவில் பாதிப்பிருப்பதில்லை. அதேசமயம், இதுவரை தங்களிடமிருந்த பல கோடி பணத்தை மறைத்து வைத்திருந்த பலர், அரசின் நடவடிக்கையால் திருடனுக்குத் தேள் கொட்டியது போல மிரண்டு போனார்கள்.
  குறிப்பாக, வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்துள்ள அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்தால் சிக்கல் ஏற்படும் என்பதால் விழி பிதுங்கினார்கள். அத்தகையவர்களுக்கு வங்கிகளிலுள்ள சில கருப்பு ஆடுகள் உதவியிருக்கின்றன.
  அரசு நடவடிக்கையை நிறைவேற்ற வேண்டிய முக்கியமான கடமை வங்கி நிர்வாகங்களையே சாரும். ஆனால், சில இடங்களில் அரசின் நடவடிக்கையை தோல்வியடையச் செய்யும் முயற்சியில் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டது தற்போது தெரிய வந்திருக்கிறது.
  அவர்கள் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுடன் கைகோத்துக்கொண்டு, வங்கிக் கணக்குக்கு வராமலேயே பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பின்வாசல் வழியாக மாற்றித் தந்திருக்கிறார்கள்.
  நாட்டின் பல இடங்களில் கைப்பற்றப்படும் கோடிக்கணக்கான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சொல்லும் சேதி இதுதான்.
  500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையுடன் சேர்த்து வருமான வரி புலனாய்வுத் துறையும் நாட்டில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. அவ்வாறு நடத்தப்படும் சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத பெருமளவு தங்கமும், பல கோடி கருப்புப் பணமும் சிக்கியிருக்கின்றன.
  தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் கடந்த டிசம்பர் 8 முதல் 10 வரை நடத்தப்பட்ட தொடர் சோதனையில், ரூ.130 கோடி கருப்புப் பணமும், 170 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  அவருக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அளித்த வங்கி அதிகாரிகள், அச்சகத்திலிருந்தே அதை நேரடியாக அந்தத் தொழிலதிபரின் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதற்காக சுமார் 30 சதவீதம் வரை வங்கி அதிகாரிகளுக்கு தரகுத்தொகை கைமாறி இருக்கிறது.
  பெங்களூருவில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிப் பிரமுகர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5.7 கோடி கருப்புப் பணமும் 28 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கி ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  கர்நாடக முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ரூ.100 கோடி பணத்தை இதேபோல மாற்றிக் கொடுத்த விவகாரம் வெளிப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கலபுர்கியில் மூன்று அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  தில்லியில் ஆக்ஸிஸ் வங்கிக் கிளை ஒன்றில் 44 போலி கணக்குகளில் ரூ.242 கோடி பழைய நோட்டுகள் செலுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  வங்கி மேலாளர் இருவர் வீட்டிலிருந்து, லஞ்சமாகப் பெறப்பட்ட 3 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கி ஊழியர்கள் பலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் அன்னியச் செலாவணி வர்த்தகரின் வீட்டில் கழிப்பறையின் ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.7 கோடி பணமும், 25 கிலோ தங்கமும் சிக்கியிருக்கின்றன.
  இதேபோல, சண்டீகர், தானே, கொள்ளேகால், கோவை, சூரத், பில்வாரா, கொல்கத்தா எனப் பல இடங்களில் பல கோடி கருப்புப் பணம் பறிமுதலாகியிருக்கிறது.
  இவ்வாறு சிக்கிய பணத்தில் பெரும்பகுதி புதிய 2000 ரூபாய் நோட்டுகள். இவை நியாயமாக, வங்கி முன்பு காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கும், ஏடிஎம் முன்பு குவிந்த மக்களுக்கும் கிடைத்திருக்க வேண்டியவை. சில வங்கி அதிகாரிகளின் பேராசை காரணமாக, இவை மடை மாற்றப்பட்டுள்ளன.
  நாடு முழுவதும் 27 பொதுத் துறை வங்கிகள், 19 தனியார் துறை வங்கிகளைச் சேர்ந்த 1,38,626 வங்கிக் கிளைகள் செயல்படுகின்றன. இவற்றில் மோசடிகள் நிகழ்ந்த இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறைவானதல்ல. தவிர, வெளிவராத மோசடிகள் எவ்வளவோ தெரியவில்லை.
  எனவே, ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் தங்களிடமுள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி, கருப்புப் பண மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டும். அதேபோல மோசடிகளுக்கு வங்கிகளில் துணைபோன கருப்பு ஆடுகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
  சாமானிய மக்களின் உணர்வுக்கு அப்போதுதான் மதிப்பு கிடைக்கும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai