Enable Javscript for better performance
மெய்ப்பொருள் காண்பது அறிவு!- Dinamani

சுடச்சுட

  
  venkadaramana

  முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதைப் பற்றிய செய்திகளும், கற்பனைக் கதைகளும், மீம்ஸ்களும் இன்ன பிறவும் றெக்கை கட்டிப் பறக்கின்றன. சுவாதியும், ராம்குமாரும் வரலாறு ஆகிவிட்ட நிலையில் முதல்வரின் சுகவீனம் உலகத் தமிழர்களைப் பாடாய் படுத்துகிறது.
  ஒரு ஜனநாயக நாட்டில் ஏழரை கோடி மக்களை ஆளும் ஒரு முதல்வரின் திடீர் சுகவீனம் பரபரப்பான செய்தியாவதில் ஆச்சரியமில்லை. இதில் ஆளும் கட்சி அன்பர்களும் எதிர்க்கட்சி போட்டியாளர்களும் ஆர்வம் காட்டுவதில்கூட தவறில்லை. ஆனால் இந்த விஷயத்தில், அடுத்தவர் துன்பத்தில் அற்ப சுகம் காணும் உலகளாவிய யூ டியூப் செய்தியாளர்கள் பொய் வியாபாரிகளாக மாறியது தான் சோகம்.
  மாநிலத்தில் மழை இல்லை, விவசாயிகளின் கும்பி இப்பொழுதே எரிகிறது. உரிய காலத்தில் போதிய மழை இல்லாவிட்டால் ஊர் மக்கள் உணவும் நீரும் இல்லாமல் தவிக்கும் அபாயம் உள்ளது. அண்டை மாநிலம் தண்ணீர் தர மறுக்கிறது.
  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் அரசியல்வாதிகளின் தூண்டுதலால் உள்ளூர் ரவுடிகள் பஸ்சை கொளுத்துகிறார்கள். தமிழர்களின் சொத்துகளை சூறையாடுகிறார்கள். இவற்றை யூ டியூப்பில் திடீர் செய்தியாளர்கள் கண்டு கொள்வதில்லை.
  தண்ணீர் வராத காவிரியில் பொய்கள் வெள்ளமாக ஓடுகின்றன. இதில் பெரும்பங்கு வகிப்பவை தமிழ்நாட்டு ஊடகங்கள் அல்ல. யாழ்ப்பாணத் தமிழ் பேசுபவர்களும் மற்றும் பிரான்ஸின் தமிழச்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் உலகளாவிய ஹைடெக் வல்லுநர்களும், கம்யூட்டர் அறிவும், ஹைடெக்கும் கற்பனை வளமும் மிகுந்த கற்பனைவாதிகளும் செய்திகளை உற்பத்தி செய்கிறார்கள்.
  இவற்றை உண்மையென்று நம்பி தொலைபேசியில் அழைத்துப் பாடாய்ப்படுத்துகிறார்கள் நண்பர்கள்.
  செப்டம்பர் 22 இரவு 10.30 மணிக்கு திடீரென்று ஒரு சாதாரண காய்ச்சலுக்காக முதல்வர் ஆம்புலன்சில் அப்பல்லோ பயணித்தார் எனக் கூறப்பட்டது. சாதாரண காய்ச்சலுக்கு அப்பல்லோவா என்ற வாதம் தலைதூக்கியது.
  22-ஆம் தேதி ஆஸ்பத்திரி போன முதல்வரை 30-ஆம் தேதி சந்திக்கப் போன ஆளுநரிடம் இருந்து முதல்வர் பணியை பன்னீர்செல்வம் கவனிப்பதோடு கேபினட் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்கிற தகவல் அக்டோபர் 11-ஆம் தேதி (19 நாள் கழித்து) ஆளுநர் மாளிகையில் இருந்து வருகிறது.
  "தலைமைச் செயலகத்தை மருத்துவமனை ஆக்கிய அம்மா, மருத்துவமனையை தலைமைச் செயலகம் ஆக்கிவிட்டார்' என்று மீம்ஸ்கள் கும்மி அடித்தன. வழக்கம்போல் கேள்விக்கு பதில் சொல்வாரில்லை.
  இதற்கிடையில் இன்டெர்நெட் பொய்கள் பரபரக்கின்றன. முதல்வர் மூளைச் சாவு அடைந்து விட்டார். முதல்வர் ரத்தத்தில் கிருமிகள் வந்துவிட்டன. கிருமிகள் ரத்தத்தில் வேண்டும் என்றே செலுத்தப்பட்டு விட்டன என்றெல்லாம் பலவாறாக முதல்வரை நேரில் பார்த்ததுபோலவும், மருத்துவ அறிக்கையை படித்ததுபோலவும் சிலர் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.
  முதல்வரின் அரசியல் எதிரியாக தன்னை தேர்தலில் காட்டிக் கொண்ட வைகோ மருத்துவமனைக்கு செல்கிறார். அதில் தவறில்லை. அதே கையோடு அவர் ஆளுனரை சந்தித்து இடைக்கால முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என கருத்துச் சொல்லி பாழ்பட்டு நிற்கும் தன்னுடைய நம்பகத்தன்மையை மேலும் கெடுத்துக் கொண்டுள்ளார்.
  இதற்கெல்லாம் உச்சமாக டெல்லியிலிருந்து ராகுல் காந்தி வந்து ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் திரும்பி அரசியல் சூட்டை கிளப்பினார். திருமாவளவன், ஸ்டாலினிலிருந்து கேரள முதல்வர், கவர்னர் வரை அப்பல்லோ வாசலில் வரிசை கட்டி நிற்கிறார்கள்.
  இவர்களுக்கு ஜெயலலிதாவின் உடல் நலத்தைவிட ஜெயலலிதாவின் சுகவீனத்தால் வரும் அரசியல் லாப, நஷ்டங்களில்தான் ஆர்வம் அதிகம். இப்போது மோடி ஏன் முதல்வரை இன்னும் பார்க்க வரவில்லை என்ற கேள்வி கூத்தாடுகிறது.
  மத்திய நிதியமைச்சர் தன் கட்சித் தலைவருடன் அப்பல்லோ வருகிறார் என்கிறது ஒரு செய்தி. அடுத்த கட்டமாக மத்திய உளவுத்துறை போலி டாக்டர் உருவத்தில் அனைத்தையும் முழுசாக அறிந்து விட்டதாக புலம்புகிறது. அடுத்த யூ டியூப் செய்தியில் போலி டாக்டர் உள்ளே போனதால் முதல்வரின் உயிருக்கு ஆபத்து என்று அச்சப்படுகிறது.
  இதற்கு இடையில் லலிதாவின் மகள் அஸ்லிகா பிறந்த நாள் ஆல்பம் என்று வெளியிட்டு 12,789 பார்வையாளர்களை கட்டி இழுக்கிறது ஒரு செய்தி. சூட்சுமம் புரிகிறதா? ஜெயலலிதாவுக்கு மகள் உண்டு என்று அடிக்கடி வரும் வதந்தியைப் பயன்படுத்தி குளிர்காய்கிறது. அப்பல்லோ நாடகத்தின் இறுதிக்கட்டம் என சொல்லி நான்கு லட்சம் வாசகர்களை அள்ளுகிறது ஒரு சேனல்.
  இதன் பிண்ணனி என்ன? வேலை மெனக்கெட்டு இவர்கள் தங்கள் கருத்துகளை செய்திகளாக யூ டியூப்பில் பதிவேற்றம் செய்வதன் நோக்கம் என்ன? பொது நோக்கமா இல்லை சுயலாபமா?
  தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு, குறிப்பாக புலனாய்வு பத்திரிக்கைகளுக்குக்கூட கிடைக்காத பல அபூர்வ செய்திகள் லண்டனிலும், பாரிஸிலும், நியூயார்க்கிலும் வாழும் யாழ்ப்பாணத் தமிழ் பேசும் இந்த திடீர் பத்திரிக்கையாளர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?
  முதலில் இதிலுள்ள அமெரிக்க வியாபாரத்தனத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
  இன்றைய இமெயில் ஆரம்பம் அமெரிக்க ராணுவத்தில் தொடங்குகிறது. ஒரு கணினியும் தொலைபேசி இணைப்பும் இருந்து விட்டால் யார் வேண்டுமானாலும் செய்திகளை செலவின்றி பரிமாறிக் கொள்ளலாம் என்ற அடிப்படையின் விரிவாக்கம்தான் கூகுள் மெயில்.
  ஒரு கல்லூரியில் ஆரம்பித்து, சர்வகலா சாலைக்கு பரவி, உலகம் முழுவதும் வியாபித்தது கூகுள். இதன் போட்டியாளர் யாஹு(Yahoo) இதில் நம்மூர் பதிப்பு ரீடிஃப் மெயில் (Rediff)
  நீங்கள் ஜி-மெயிலிலும் யாஹுவிலும் செய்தி அனுப்பும்போது விளம்பரங்கள் தோன்றும். அந்த விளம்பரங்கள் ஏனோ தானோ விளம்பரங்கள் அல்ல. கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்களானால் உங்கள் கடிதத்திற்கும் அந்த விளம்பரத்திற்கும் தொடர்பு இருக்கும்.
  ஒரு உதாரணம். சென்னையில் இருந்து தில்லியில் இருக்கும் உங்கள் நண்பருக்கு தில்லி வருவதாக நீங்கள் இ}மெயில் அனுப்பினால் அதில் உள்ள வீடு என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு தில்லி அல்லது சென்னையில் வீடு விற்பனையாளர்கள் ஏஜெண்டுகள், வீட்டுக்கடன் வங்கி விளம்பரங்கள் வரும்.
  அதே மெயிலில் தில்லியை டூர் அடிக்க வேண்டும் என்ற ஒரு வார்த்தை இருந்தால் போதும் தில்லி விடுதிகள், உணவகங்கள் என்று நீங்கள் கேட்காமலே விளம்பரங்கள் வந்து விழும். இந்த விளம்பரங்களுக்கு கூகுள் காசு வாங்கிக் கொழிக்கிறது.
  பெரிய ஊர்களில் உள்ளூர் பத்திரிக்கை அல்லது ஏரியா பத்திரிக்கை என்பது பிரபலம். மைலாப்பூர், தி.நகர், அடையார் என்று வட்டார பத்திரிக்கைகள் வீட்டு வாசலில் இலவசமாக வந்து விழும். அதில் அந்த பகுதி முக்கியஸ்தர், கல்லூரி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர், 80 வயது விழா கொண்டாடிய பெரியவர், 50 வருடம் வாழ்ந்த தம்பதியர் என உங்கள் பக்கத்து வீடு, உங்கள் தெரு அல்லது அடுத்ததெரு மனிதர்களைப் பற்றி செய்திகள் இருக்கும்.
  இது நம்ம ஆளு என நீங்கள் அந்த செய்தியை படிக்கும் பொழுதே அந்த ஏரியா கடைகளின் விளம்பரம், டாக்ஸிகளின் விவரம், அந்த ஏரியா வீடு விற்க அல்லது வாடகைக்கு என்ற விளம்பரங்கள் உங்களை துரத்தும். இந்த விளம்பரங்களின் வருமானத்தில்தான் அந்த உள்ளூர் பத்திரிகைகள் செலவு தாண்டி லாபம் பார்க்கின்றன. இதன் விரிவாக்கம் தான் யூ டியூப்.
  தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் சிலர் உலக அளவிலும் பிரபலமானவர்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும், ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அஜீத்தும் விஜய்யும் தலைப்புச் செய்திகள்.
  அந்த ஒன்று முதல் பதினொரு நிமிட குறும்பட செய்திகளை பார்க்கும் போது ஆரம்பத்திலும் நடுவிலும் வரும் விளம்பரங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இது ஒரு வியாபார உத்தி.
  இந்த திடீர் யூ டியூப் விளம்பரங்களில் வரும் வருமானத்தை, யூ டியூப்பும் இந்த திடீர் சேனல்களை நடத்துபவர்களும், பார்வையாளர்களின் அடிப்படையில் பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? இந்த பொய் வியாபாரிகள் பொய்களை மட்டும் விற்கவில்லை, விளம்பரங்களையும் விற்றுப் பணத்தை அள்ளுகிறார்கள்.
  இந்த ஏமாளித்தனத்தை நம்பித்தான் சில நெட்வொர்க் நிறுவனங்கள் இலவச கால்கள் என்ற சவ்வு மிட்டாயை கொடுத்து டேட்டாவுக்கு பணம் என்ற மிகப்பெரிய வியாபாரத் தந்திரத்தோடு 50 கோடி செல்லிடப்பேசி உபயோகிப்பார்களை நம்பிக் களம் இறங்கியுள்ளன.
  ஆகவே இந்த பொய் வியாபாரிகள் பொய்யை விற்று விளம்பரம் மூலமாக காசை அள்ளுகிறார்கள். இதற்குத் தான் அன்றே சொன்னார் வள்ளுவர்:-
  எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

  கட்டுரையாளர்:
  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
  டி.எஸ்.ஆர். வேங்கடரமணா

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai