பூர்வீக சொத்தல்ல; பொது சொத்து!

கார்த்திகா அண்ணாமலை பெங்களூரு அருகே மாரெனஹலிபந்தெ என்ற கிராமத்தில் ஒரு கல்குவாரி தொழிலாளியின் மகள்
பூர்வீக சொத்தல்ல; பொது சொத்து!

கார்த்திகா அண்ணாமலை பெங்களூரு அருகே மாரெனஹலிபந்தெ என்ற கிராமத்தில் ஒரு கல்குவாரி தொழிலாளியின் மகள். அவர்தான் அந்த கிராமத்திலேயே முதல் முதலாக உயர்நிலைபள்ளி சென்றவர். தெரிந்த மொழிகள் தமிழ், கன்னடம். தொழில் நுட்ப வல்லுநர்கள் தேடிப் போகும் பெங்களூரு இதோ கைகெட்டும் தூரம் தான். ஆனால் கார்த்திகா வீட்டில் கழிப்பறை இல்லை. அதற்கு புகைமூட்டமான வெட்ட வெளியைத் தான் தேடிச் செல்லவேண்டும்.
இன்று அவர் கொல்கத்தாவின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் தேர்வு பெற்ற மாணவி. "என் கடந்த காலம் என்னைச் சிறைப்படுத்த முடியாது' என்று சொன்ன கார்த்திகா அதை நிரூபித்தும் விட்டார்.
அத்துடன் அவருடைய தொடுவானத்தின் எல்லை நிற்கவில்லை. அரசியலில் இறங்கி, பதவியில் அமர்ந்து நம் நாட்டின் ஏழ்மையையும் சமூக அநீதிகளையும் அகற்ற போராடுவேன் என்கிறார். அப்பா இல்லை. கல் குவாரியில் வேலை செய்யும் அம்மா. இப்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சூழலில் பிறந்த கார்த்திகா இன்று பல நாடுகளில் சட்டம் சார்ந்த போட்டிகளில் பங்கேற்றவர். இந்தியாவில் ஒரு முதன்மையான சட்ட நிறுவனத்தில் பணி புரிகிறார்.
அர்ரேபள்ளி நாகபாபு மசூலிப்பட்டனத்தை சேர்ந்தவர். அவர் குடும்பத்தில் ஐந்து பேர். மொத்த வருமானம் ஆண்டுக்கு முப்பத்து ஆறாயிரம் ரூபாய். நாக பாபுவுக்கு கண்பார்வை இல்லை. அவருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பது கனவு.
தன் சாதி மக்களுக்கு நல்ல எதிர்காலம் அமையவேண்டும் என்பதும் அவர் கனவு. இதற்கு சட்டப் படிப்பு உதவும் என நம்பினார். ஒடிஸா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் அவருக்கு இடம் கிடைத்தது.
முகமது தனிஷ் கனி கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அப்பா செருப்பு கடையில் பணி புரிபவர். மாதம் மூவாயிரம் ரூபாய் வருமானம். குடும்பத்தில் ஐந்து பேர். இந்த சூழ்நிலையிலும் தனிஷ் கனவு கண்டார்.
நம் எல்லோர் இதயத்திலும் என்றும் ஜனாதிபதியாக இருக்கும் அப்துல் கலாம் "கனவு காணுங்கள், அப்பொழுது தான் அந்த கனவு நனவாக முயற்சிக்கலாம்' என்று சொன்னதற்கு ஏற்ப தனிஷ் ஐ.ஏ.எஸ். ஆபீசர் ஆகவேண்டும், சமூகம் மேம்பட உழைக்கவேண்டும் என்று கனவு கண்டார்.
நம் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும், அதை சீர் செய்ய தான் சட்ட படிப்பு படிக்கவேண்டும் என்றும் நினைத்தார். இன்று நிர்மா பல்கலைகழகத்தில் அவர் சட்டம் பயிலுகிறார்.
கிரிஸ்டினா சார்ல்ஸின் தாயார்தான் அவர் குடும்பத்தை காப்பாற்றுகிறார். தந்தையின் காலில் புரையோடி காலையே எடுத்துவிட்டார்கள். வசதியான குடும்பம் அல்ல. இன்று அவர் சட்டம் கற்றவர்.
இவர்கள் வசதி இல்லாதவர்களாக இருப்பினும் கடினமான CLAT (Common Law Admission Test) மற்றும் AILET (All India Law Entrance Test) என்னும் சட்ட கல்லூரி நுழைவு பரீட்சைகளில் தேர்வு பெற்றுள்ளார்கள். இந்த பரீட்சைகளில் தேர்வு பெறுவது எளிதல்ல. பின் எப்படி இவர்களுக்கு வெற்றி கிட்டியது?
அது ஒரு மகத்தான ஐடியா - அதாவது IDIA (Increasing Diversity by Increasing Access to Education).  முப்பது கோடி முகமுடைய நம் அன்னையின் அனைத்து முகங்களும் பள்ளி செல்வதில்லையே. பல தடைகள். ஏழையாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம், மாற்றுத் திறனாளியாக இருக்கலாம், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம்.
நம் சமூகத்தில், நம் நாட்டில் வலுவிழக்கச் செய்யும் தடைகளுக்கா பஞ்சம்? இவர்கள் எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்க வழிசெய்தால்?
அனைவருக்கும் கல்வி என்று ஒரு திட்டம் கொண்டுவந்தால் என்ன என்று முனைவர் ஷம்னாத் பஷீர் என்ற அறிவுசால் சொத்து சட்ட வல்லுநருக்குத் தோன்றியது. இந்த வேள்விக்குத் தான் அவர் IDIA என்று பெயர் சூட்டினார், நாமும் அதை "ஐடியா' என்றே அழைப்போம்.
இந்த ஐடியா அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் நாடு முழுவதும் சென்று பின்தங்கிய வகுப்பை சேர்ந்த எந்த மாணவருக்கு சட்டம் பயிலும் ஆர்வம் உள்ளதோ அவருக்கு பயிற்சி அளிக்கிறார்கள். பின் தங்கிய என்பது சாதியை மட்டும் குறிப்பது அல்ல. மதத்தால், பெண் என்பதால், ஏழ்மையால், மாற்றுத் திறனாளி என்பதால் - இதுபோல ஏதொவொரு காரணத்தால் சமவாய்ப்பு கிட்டாதவர்கள்.
அவர்களுக்கு பயிற்சி அளித்து சட்ட நுழைவுத் தேர்வு எழுத உதவுகிறார்கள். அதில் தேர்வு பெற்றால் உடனே நம் நாட்டின் சிறப்பு சட்டக் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடும். அது பாதி கிணறு தான், சாமி வரம் கொடுத்தாற் போல் தான். மீதி கிணறு பூசாரி வரம். அதற்கும் ஐடியா திட்டம் வைத்துள்ளது.
கல்லூரி கட்டணம் முதலிய செலவுக்கும் மானியம் பெற ஐடியா அமைப்பு உதவுகிறது. இந்த மாணவர்களை கல்வித் திறனை மட்டும் வைத்து மதிப்பிடுவதில்லை. அவர்களுடைய சமூக பொறுப்புணர்ச்சி, சமூகத்தின் குறைகளை தீர்ப்பதில் ஆர்வம் என்று பன்முக கோணங்களில் எடை போட்டு இந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அப்படித்தான் கார்த்திகா, தனிஷ், கிரிஸ்டினா, நாகபாபு போன்றவர்கள் சிறந்த சட்டக் கல்லூரிகளில் படித்தார்கள். ஏதோ ஒரு வகையில் நான் ஒதுக்கப்பட்டு பின்னே தள்ளப்பட்டிருக்கிறேன் என்றால் எனக்கு என் போன்றவர்களின் வலியும் தேவையும் புரியும் இல்லையா?
ஐந்து ஆண்டுகளில் இவர்களைப்போல எழுபது மாணவர்களை ஐடியா தேர்ந்தெடுத்துள்ளது. அவர்களில் சிலர் சட்டப் படிப்பு முடித்து விட்டார்கள். சிலர் இன்னும் சட்டம் படிக்கிறார்கள்.
1954-இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் ப்ரவுன் எதிர் கல்வி வாரியம்(Brown vs. Board of Education)  வழக்கில் ஒரு தீர்ப்பு வழங்கியது. அப்பொழுது வெள்ளை நிறத்தவர்களுக்கு தனி பள்ளிகூடம், மற்றவர்களுக்கு - அதாவது கருப்பர்களுக்கு - தனி பள்ளிகூடம் என்று நடைமுறையில் இருந்தது - நமக்கு இரட்டை டம்ளர் இல்லையா அதுபோல.
எந்த நாடாக இருந்தால் என்ன? நான் உசத்தி நீ மட்டம் என்று சொல்லும் மனோபாவம் மாறாது போலும். ஆனால் சமத்துவத்தை நிலை நாட்டும் கடமை உள்ள நீதிபதிகள் தங்கள் பணியை செய்யவேண்டும், செய்தார்கள். இந்தத் தீர்ப்பில் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி, அது எப்படி ஓர் இளம் மனதை விழிக்க செய்கிறது, இளம் உள்ளங்களை சுற்றுச் சமூகத்துடன் இயல்பாக ஒத்து போக எப்படி உதவுகிறது என்று விவரித்து, கல்வி வாய்ப்பு இல்லையென்றால், வாழ்க்கையில் முன்னேற முடியாது என்றும், இந்த கல்வி உரிமை அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்றும் சொல்லியது.
இது ஆரம்பக் கல்வியைப் பற்றிய தீர்ப்புதான் என்றாலும், கல்லூரி கல்விக்கும் பொருந்தும். சட்டக் கல்வி, அதுவும் தேசிய சட்ட பல்கலைகழகங்களில் (National law Universities)   படிக்கும் வாய்ப்பு குறிப்பிட்ட சிலருக்குத்தான் கிடைக்கும் என்றால் அது பெரிய அநீதி இல்லையா? கல்வி வாய்ப்பு பூர்வீக சொத்து இல்லை; பொது சொத்து.
ஒரு நிகழ்ச்சியில் என் நண்பர் தொழிலதிபர் ரா. சேஷசாயி சொன்னார்: கல்வி ஒன்று தான் எல்லோரையும் சமதளத்துக்கு அழைத்து செல்லும் கருவி. நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் சில சாரார்களுக்கு மட்டுமே கல்வி வாய்ப்பு கிட்டியது. அவர்கள் மட்டுமே முன்னேறினார்கள். இன்று கல்வியின் வலிமையைப் புரிந்துகொண்டு அனைவரும் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும், போட்டி போட்டுக் கொண்டு படிக்கிறார்கள். இது வரவேற்கப் படவேண்டிய ஒன்று.
அந்தக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் சமத்துவத்தைப் பேண வேண்டும். ஒதுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் மாணவர் இங்கேயும் ஒதுக்கப்பட்டார் என்றால், அந்த கொடுமைக்கு பொறுப்பு அந்த ஆசிரியர்களும், அந்த அமைப்பின் அதிகாரிகளும்தான். எல்லோரும் சமம் என்பதை கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் எல்லா மாணவர்களின் மனத்திலும் பதித்துவிட்டால் அன்றே எமதன்னையின் விலங்குகள் போகும்; எமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்.
இட ஒதுக்கீடு வழியாக கல்லூரியில் இடம் கிடைத்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மையைப் பேணி, ஆளுமையை வளர்த்து, தன்னம்பிக்கைக்கு ஊக்கம் அளித்து - இவை அனைத்தையும் செய்ய வேண்டியது நம் கடமை என்கிறார் ஷம்னாத் பஷீர். கார்த்திகா, நாகபாபு யோகேந்திர யாதவ், ராம்குமார் போன்றவர்கள் ஐடியாவினால் பயனடைந்து நம்மை பிரமிக்கவைக்கிறார்கள். ஐடியாவின் இணைய தளத்தில் இவர்களை சந்திக்கலாம்.
நாகபாபுவுக்கு நீதித் துறையில் சேர வேண்டும் என்று ஆவல். ஆனால் கண்பார்வை இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது என்று விதிமுறை உள்ளது. முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் தனியாகவே பயணம் செய்யும் நாகபாபு, யாரையும் சாராது நிற்கிறார். ஆனால் நீதித் துறையில் சேர முடியாது.
ஜாக் யாகுப் என்று தென்னாபிரிக்காவில் ஒரு நீதிபதி. அந்த நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு (Constitutional Courtof South Africa) அவரை நெல்சன் மண்டேலா நியமித்தார். இதில் சிறப்பு என்னவென்றால் அவருக்கு 16 மாதத்தில் காய்ச்சல் வந்து கண் பார்வை முழுவதும் போய்விட்டது. நினைவில் கொள்ளவும் 16 மாதம். பிறகு படித்து, பட்டம் பெற்று அற்புதமான தீர்ப்புகள் வழங்கினார்.
சென்ற ஆண்டு ஐடியா தன் ஆண்டு
விழாவுக்கு அவரை புதுதில்லிக்கு அழைத்தது. அப்பொழுது அவர் ஆற்றிய சொற்பொழிவு அப்பா அபாரம்... நம் நாகபாபுவும் தான் கனவு காண்கிறார்... ஹ்ம்ம்.
எல்லோரையும் சமமாகப் பார்க்க நமக்கு ஏனோ தெரியவில்லை. ஐடியாவின்
அடிவேரும், ஷம்னாத் பஷீர் அங்கே பாய்ச்சிய நீரும் பாராட்டப்பட வேண்டியவை. ஐடியாவின் உதவியால் சட்டம் படித்தவர்களை ஐடியா அறிஞர் (IDIA Scholar) என்று அழைக்கிறார்கள்.
இந்த சிலர், பல நூறு பேர்களாகப் பெருகி அறிவுப் பேரொளியை நாடெங்கும் பாய்ச்ச வேண்டும்!

கட்டுரையாளர்:
நீதிபதி (ஓய்வு).

பிரபா ஸ்ரீதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com