பெண்களே கண்கள்

அரசியல், நீதி, மருத்துவம், காவல், ஆசிரியர், விளையாட்டு என்று பல்வேறு துறைகளிலும், அறிவியல் நுட்பத்திலும் தம் தடம்பதித்து நாளுக்கு நாள் மகளிர் பெருமை வானளாவ ஓங்கி நிற்கிறது.
Published on
Updated on
2 min read

அரசியல், நீதி, மருத்துவம், காவல், ஆசிரியர், விளையாட்டு என்று பல்வேறு துறைகளிலும், அறிவியல் நுட்பத்திலும் தம் தடம்பதித்து நாளுக்கு நாள் மகளிர் பெருமை வானளாவ ஓங்கி நிற்கிறது. ஆனால் பெண்ணினத்தை இழிவு செய்யும் மடமை முற்றிலும் அழிந்தபாடில்லை.
இரண்டு பெண் குழந்தைகட்கு மேல் மூன்றாவது பெண்ணாகப் பிறந்து விட்டால் அதை நஞ்சூட்டிக் கொன்று விடும் நச்சுமனிதர்களை நாளும் ஊடகங்கள் இதழ்கள் வாயிலாக அறிந்து மனம்பதைக்கிறோம்.
தமிழக அரசு, தொட்டில் குழந்தைத் திட்டம் போன்ற பல சீரிய திட்டங்களையும் பல்லாண்டுகட்கு முன்னர் தீட்டி, செயற்பாட்டில் இருந்தாலும், அவை, கல்வியறிவு அற்றவர்களை, குறிப்பாக, கிராமப்புற மக்களைச் சென்று சேர்வதில்லை என்பது வருந்தத்தக்க செய்தி. இதனிடையில் சட்ட விரோதமாகக் கருவில் இருக்கும் சிசுவைக் கதிரியக்க மின்னணுக் கருவியின மூலம் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டுபிடித்து, பெற்றோர்க்கும் தெரிவித்து, பெண் சிசுவைக் கருவிலேயே மருத்துவம் கற்ற மருத்துவர்கள், போலி மருத்துவர்கள் கலைப்பதாகவும் கேள்வியுற்று நெஞ்சம் குமுறுகிறது.
ஆண் சிசுவா பெண் சிசுவா என்று கண்டறியும் கருவியே உண்மையில் தேவையான ஒன்றா என்று கூட எண்ணத் தொடங்குகிறது. சட்டரீதியாக, அக்கருவியைக் கண்டு பிடித்திருந்தாலும் சமுதாயத்திற்கு உயர்பயன் தரும் உன்னதக் கருவியன்று. அதுவும் தொன்மையான பாரம்பரியம், பண்பாடு இவற்றில் சிறந்த இடத்தில் இருந்து வரும் நம் இந்திய நாட்டிற்கு இக்கருவி தேவையில்லையோ என்று மனம் ஏங்குகிறது. மேலாக, நம் கலாசாரத்திற்கு இஃது இழிவு.
இச்செயற்பாடு சமுதாயப் பண்பாட்டினை, மதிப்பை படிப்படியாகக் குறைத்து விடுகிறது. இதற்குச் சமூகவிதிகளும் கலாச்சார நம்பிக்கைகளும், பொருளாதாரப் பயன்பாடுகளும், மதச் சார்புடைய நிகழ்வுகளின் பங்கும் முக்கியக் காரணங்களாகின்றன.
ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எல்லாம் இறைவன் தந்த வரம். மகப்பேறு இல்லாமல் பலர் கோவில் குளம் சுற்றுதலும், குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தலும், செயற்கைக் கருத்தரிப்பிற்காகப் பல இலட்சங்கள் செலவழித்தலும் உலகெங்கும் பரவலாக நடந்து வருகின்றன.
இத்தகு நிலையில் நமக்கு இயல்பாகக் கிடைத்த இந்த குழந்தை நாம் பெற்ற பெரும் பேறு என்று உள்ளம் பூரிக்காமல் பெண்மகவைச் சிதைப்பது அநீதியான செயல். எதிர்காலத்தில் நமக்கு நல்லின்பத்தைக் கொடுப்பவரும் பெண்கள். பெற்றோரிடம் அளவிறந்த பற்றுடையவரும் பெண்களே என்பதை உணர்கின்ற விழிப்புணர்வு சமுதாயத்திடையே மலர்வதற்கு அரசுடன், தன்னார்வ அமைப்பினரும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் பல கொண்டு வரலாம்.
கருச்சிதைத்தலே பெருங்குற்றமென்று அக்காலத்தில் பேசப்பட்டுவந்ததைச் சங்க நூல்களும், சாத்திரங்களும் தெரிவிக்கின்றன. ஆக, பெண் சிசுவைக் கொல்வது ஏழு தலைமுறையினரைத் தாக்கும் செயல்.
ஆணுக்குப் பெண் தாழ்வில்லை, இருவரும் சமம் என்று பாரதி குரல் கொடுத்தும் அதை இன்னும் முழுமையாக நம் சமுதாயம் உணரவில்லை என்பது தான் உண்மை. இக்கொடுமை அறவே களையப்படவேண்டும்.
பெண்கள் தனக்கு அருமையாய் வைத்த தன் பெயரையே திருமணத்திற்குப் பின்னர் மாற்றிக் கொண்டு இதுவரை அறியாத உறவை, அன்புஉறவாய் ஏற்று, கணவன் இல்லத்தாரோடு இணைந்து இல்லறம் இயற்றுகிறாள்.
இல்லப் பொறுப்பு, குழந்தைகள் நலம் பேணல், கணவன் குடும்பச் சுமையைக் குறைக்க, அலுவலகம் சென்று பொருள் ஈட்டல், மாலையில் பிள்ளைகட்குப் பள்ளிப் பாடங்களின் ஐயங்களைப் போக்கி அருகிருந்து படிக்க வைத்தல் என பல்வேறு சுமைகளைத் தலையிற் சுமந்து வாழ்ந்து வருதல் கண்கூடு.
இன்றைய காலச் சூழலில் ஆடவரும் பெண்டிரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் ஈடு கொடுத்து மனமொன்றி வாழ்ந்து குடும்பதைச் செவ்வனே நடத்தி வருதல் உண்மையே. ஆனால் இல்லறத்தில் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.
சில இடங்களில் ஆணாத்திக்கத்தால் பெண்கள் பணிக்குச் செல்லவும் தடைவிதிக்கப்படுகிறது. அவர்களுக்கு வீடே சிறை வாசம். மனைவியானவள் வீட்டு வேலைகளைச் செய்யும் ஒரு இயந்திரமாக இருப்பதும், பல சுமைகளை மேன்மேலும் அவள் தலை மேல் ஏற்றுதலும் இயல்பான ஒன்றாகி விடுகிறது.
கணவனும், மேன்மேலும் பொருள் ஈட்டவேண்டும் என்ற பேரவாவால், மக்கள் மேல் கொள்ளும் பாசம், மனித நேயம் அற்றுப் போகின்றன.
எந்தவொரு சூழலிலும், இன்முகத்துடன் உள்ளதைக் கொண்டு நிறைவு அடைந்து நலமான வாழ்வுக்கு இது போதும் என்று எண்ணி குடும்பத்தை வழி நடத்தினால் குடும்பப்பூசல்கள், மனஇறுக்கம் குறைந்து இல்லறச்சகடம் இனிதே செல்லும்.
பணத்தை மட்டுமே சம்பாதிக்கும் இயந்திரமாக மனிதர்கள் மாறிவிடும்போது மனித நேயம், உதவும் பண்பு, குடும்ப உறவுகள், பரஸ்பர நம்பிக்கை யாவும் காணாமல் போய்விடுகின்றன.
பணம், பணம் என அலையும் குடும்பத் தலைவனால் சீர்கெட்ட குடும்ப உறவுகள், வழி தவறிய குழந்தைகள் பலர். விவாகரத்துகள் இன்று அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
"அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு'.
பொருளாதாரத்தாழ்விற்கு தார்மிகப் பொறுப்பின்மையும், பேராசையும் காரணம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
ஆணும் பெண்ணும் தன்னலமின்றி கருத்தொருமித்து, வாழ்தலே உயர் வாழ்க்கைக்கு ஊன்று கோலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com