Enable Javscript for better performance
மன அழுத்தம் அகல வேண்டும்!- Dinamani

சுடச்சுட

  

  மன அழுத்தம் அகல வேண்டும்!

  By ஐவி. நாகராஜன்  |   Published on : 04th December 2017 02:11 AM  |   அ+அ அ-   |    |  

  மாறி வரும் சூழ்நிலையில் பணிச் சுமை என்பது அனைவருக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இதற்குக் காரணம் சக்திக்கு மீறிய வேலைப்பளு, விலைவாசி உயர்வு, கூட்டுக்குடும்பம் இல்லாதது, பணிக்கும் படிப்புக்கும் சம்பந்தம் இல்லாத வேலை, கல்லூரியில் படிக்கும் போதே வேலை, அதிக சம்பளம் என்பதால் இரவில் வேலை பார்ப்பது, தூக்கத்தைத் தொலைப்பது, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டு வேலை பார்ப்பது, நீண்ட நேரம் தொடர்ச்சியான வேலை, குறைந்த சம்பளம், அன்பு காட்டாத சக ஊழியர்கள், பணியில் மோதல், பணியில் தெளிவின்மை, வேலையில் நாட்டமின்மை மற்றும் நிறுவன அமைப்பு அல்லது சவாலற்ற வேலை எனக் காரணங்கள் நீள்கின்றன.
  மனதிற்கு பிடிக்காத வேலையை நாளெல்லாம் செய்ய வேண்டியிருப்பதை நினைத்து பெரும்பாலானோர் சலித்துக் கொள்கின்றார்கள். அதனால் வேலைக்குப் போவது என்றாலே அவர்களுக்குக் கசக்கிறது. இதனால் அடிக்கடி விடுமுறை எடுக்கிறார்கள்.
  இப்போது ஆண்களுக்கு நிகராகக் பெண்களும் கடினமான வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் பெண்கள் சோர்வடைகின்றனர். இவர்களைத் தவிர வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், காவல்துறையினர், ஐடி நிறுவன ஊழியர் முதல் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை குடும்பத்தை நடத்துவதற்குப் போதுமான வருமானம் இல்லாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். 
  இவ்வாறு வேலையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றி 2015-இல் எடுக்கப்பட்ட பொதுவான கணிப்பு என்னவென்றால், உலகில் 350 மில்லியன் மக்கள் மனச் சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர் என்பது. 200 மில்லியன் மக்கள் மனச்சோர்வுடனே வாழ்கின்றனர். நான்கு பேரில் ஒருவருக்கு மன அழுத்தப் பிரச்னை ஏற்படுகிறது. 57 சதவீதம் தொழிலாளர்கள் இப்போதைய பணியிடத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 69 சதவீத பணியாளர்கள் தாங்கள் பார்க்கும் பணியால் அழுத்தம் இருப்பதாகக் கருதுகின்றனர். இன்னும் சிலர் இதுபோன்ற பிரச்னையால் அடிக்கடி வேலை இழக்கின்றனர். சிலர் பணியின் போதே மன அழுத்தம் இருப்பதனால் அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருக்கின்றனர். 
  மன அழுத்தம் இருந்தால் சாதாரணப் பணிகூடக் கடினமானதாகத் தோன்றும். மேலும், மன அழுத்தம் இருந்தால் உடல் அளவில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக சோர்வு, தசைப் பதற்றம், தலைவலி, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, உடல் படபடப்பு, தூக்கமின்மை, இரத்த அழுத்தம், தசை மற்றும் மூட்டு வலி, உடல் நடுக்கம், செரிமான பிரச்னை, மனதளவில் மனச்சோர்வு, கவலை, தனிமை, அவநம்பிக்கை, அதிகப்படியான கவனக்குறைவு, பயம், உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் எரிச்சல்படுவது, வேலையில் செயல்திறன் குறைதல், தனிப்பட்ட உறவுகளில் சிக்கல், பின்தங்கிய நிலை இப்படி ஒவ்வொரு பணியாளரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படுகின்றனர்.
  காலப்போக்கில் இவை அதிகரித்து எளிய வேலை என்றாலும் அமைதியின்மை, அதிகமான அல்லது மிகக் குறைவான தூக்கம், கொழுப்புள்ள திண்பண்டங்கள் மற்றும் இனிப்பு வகைகள் அதிகம் உண்ணுதல், தற்கொலை எண்ணங்கள், மது மற்றும் போதை போன்றவற்றிற்கு அடிமையாதல் உட்பட்ட பல பாதிப்புகளைச் சந்திக்கின்றனர்.
  மன அழுத்தம் உள்ள ஒருவர் உங்களுடன் பணி புரிந்தால் அவரை உற்சாகமூட்டும் வகையில் நடந்து கொள்ளுங்கள். அவர் எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்பதை நினைவூட்டுங்கள். அவரால் வேலையைச் சரியாகச் செய்ய முடியும் என்பதை சொல்லி ஊக்கப்படுத்துங்கள். அவரை வீழ்த்தும் செயல் எதுவாக இருந்தாலும் அவரால் அதை சமாளிக்க முடியும் என்பதையும், அவரின் திறமைகளை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதையும் அவருக்கு உறுதிபடுத்துங்கள்.
  மன அழுத்தம் குறைக்க, நமக்குள்ள பிரச்னையை நமது நலம் விரும்பி, உயிர்த்தோழன் அல்லது தாயிடம் சொல்லி மனதை லேசாக்கிக் கொள்ளலாம். மன உளைச்சல் நம்மை மீறும்போது மூன்று அல்லது ஐந்து முறை ஆழமாக மூச்சு விடுதல் நன்மை பயக்கிறது. படபடப்பான நேரத்தை சிறிது நேரம் மூச்சு விடுவதற்காக நாம் எடுத்துக் கொள்வதால் அந்தக்கால அவகாசம் படபடப்பு குறையவழிவகுக்கும். 
  மூளையில் புதைந்துள்ள ஞாபகசக்தி தூண்டப்படுவதால் மனதிற்கு அமைதி தானே வந்துவிடும். வரும் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம் என்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பிரச்னையால் அதிகபட்ச இழப்பு என்ன? நாம் முயற்சித்தால் மாற்றக்கூடிய விஷயமா? எனப் பல கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டு அவற்றிற்கு பதில் சொல்லிக்கொண்டே வாருங்கள்.
  உங்களால் முடிந்தவற்றை செய்தாகிவிட்டதா? அதற்குமேல் உங்கள் கையில் எதுவும் இல்லையென்றால் பின் எதற்காக அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?
  கவலைப்படுவதால் மட்டும் எந்தப் பிரச்னையும் தீராது என்று நம்மை நாமே
  தேற்றிக்கொண்டு மன அழுத்தத்தை சமாளிக்கலாம்.
  எப்போது நாளுக்கு நாள் மன அழுத்த பாதிப்பை சமாளிப்பது கடினமாகிறதோ அப்போது நீங்கள் உளவியல் ஆலோசகரை (கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்) அணுக வேண்டும். உங்கள் பாதிப்புகள் எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிந்தபின் உங்களுக்கு உளவியல் நிபுணரை (சைக்யாட்ரிஸ்ட்) அவர் பரிந்துரைப்பார். உளவியல் நிபுணர்கள் மனநோய் சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசகர்கள் மன ஆரோக்கியத்திற்கான சிகிச்சை அளிப்பார்கள்.
  உளவியல் ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்களை அணுகுவதில் இன்னமும் கூடப் பலர் தயக்கம் காட்டுகின்றனர். மன நோயாளி என்று சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம். அந்த மனத்தடை உடைத்து எறியப்பட வேண்டும். உளவியல் ஆலோசனைகள் பெறுவது என்பதல்ல நோயின் அறிகுறி. ஆலோசனை பெறாமல் இருப்பதுதான் தன்னம்பிக்கையின்மையின், தாழ்வு மனப்பான்மையின் அறிகுறிகள். அதுதான் உண்மையான நோய் என்பதை உணர வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai