சுடச்சுட

  

  எந்த அரசியல் கட்சிக்கும் தலைவராக இல்லை, எந்த இயக்கத்துக்கும் தலைவராக இல்லை, கட்சிப் பெயர் இல்லை, கொடி இல்லை, சின்னம் இல்லை. ராமேசுவரத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் 15.10.1931-இல் பிறந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த அப்துல் கலாம் இறந்தபோது இந்தியாவே அழுதது.
  அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் பேர் ராமேசுவரத்தில் வந்து குவிந்தனர். சாதாரண மனிதர்கள் முதல் பாரதப் பிரதமர் வரை வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்திய வரலாறு அன்று நடந்தது. தமிழகம் ஸ்தம்பித்தது. வாகனங்கள் ஓடவில்லை, வர்த்தக நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படவில்லை.
  லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில், கண்ணீர்க் கடலில் மூழ்கியது ராமேசுவரம் தீவு. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. உலக நாடுகள் முழுவதும் கலாமின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்திருந்தது மட்டும் இல்லாமல் அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. அமெரிக்க பத்திரிக்கைகளும் அவருக்கு புகழாரம் சூட்டியிருந்தன.
  பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்று அந்தச் சாதனை மனிதர் சொன்னது அவரது வாழ்வில் அப்படியே மெய்யாகிப் போயிருந்தது.
  பணக்காரனாக இருந்தால் தான் முன்னேற முடியும், ஆங்கிலம் படித்திருந்தால்தான் உயர முடியும், நகரத்தில் இருந்தால்தான் வேகமாக முன்னேற முடியும் என்கிற மாயையை உடைத்தெறிந்த அந்த மகத்தான மனிதர் கடந்த 27.7.2015- ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
  அவரது மரணச் செய்தி இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களை, மாணவர்களை, குழந்தைகளை அதிர்ச்சியடையச் செய்தது.
  அதற்கு காரணம் என்ன? நம் வீட்டுக்குள் அந்நியர் புகுந்து விடாமல் இருக்க நம் வீட்டைச் சுற்றி வேலி அமைப்போம். ஆனால் இவரோ இந்தியாவின் பாதுகாப்புக்கு வானத்தில் வேலி கட்டி உலக நாடுகள் பலவற்றையும் உற்று நோக்க வைத்த பெருமைக்குரிய ஏவுகணை நாயகன்.
  ஒலியின் வேகத்தைவிட இருமடங்கு வேகமாகச் செல்லக்கூடிய சுகோய் போர் விமானத்தில் பறந்து சாகசப் பயணம் நிகழ்த்தினார். கடல் மட்டத்திலிருந்து 7 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் உள்ள குளிர் பிரதேசமான சியாச்சினுக்கு சென்று அங்கு நம் தேசத்துக்காக பாதுகாப்பு பணியை செய்து வரும் ராணுவவீரர்களைசந்தித்து உற்சாகப்படுத்தினார்.
  ஐ.என்.எஸ். சிந்து என்ற நீர்மூழ்கிக் கப்பலில் தொடர்ந்து 3 மணி நேரம் கடலுக்குள்ளேயே பயணம் செய்தார். இவரது சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தமிழின் சிறப்புகளை விளக்கியதும், தினமணி நடத்திய தமிழ் இலக்கியத் திருவிழாவில் தமிழ் மொழி செழிக்க ஆறு அம்சத் திட்டத்தை அறிவித்ததும் அவரது தமிழ்மொழிப் பற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
  நாலு கிலோ எடையுள்ள செயற்கை கால்களைப் பொருத்திக் கொண்டு நடக்கவே முடியாத போலியோ பாதித்த குழந்தைகளுக்கு வெறும் 400 கிராம் மட்டுமே எடையுள்ள எடைகுறைந்த காலிப்பரால் ஆன செயற்கைக் கால்களைக் கண்டு பிடித்துத்தந்த விஞ்ஞானி.
  அவர் அறிவியிலில் செய்த சாதனைகளையும்,பெற்ற விருதுகளையும், எழுதிய புத்தகங்களையும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ, மாணவியரிடையே காட்டிய அன்பையும் விவரித்து எழுதிட வார்த்தைகளே இல்லை.
  இந்தியத் திருநாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் கவலையோடு பறந்த அந்த நேரத்தில் அந்த தியாக சீலரின் உடல் அவரது சொந்த ஊரான ராமேசுவரம் தீவில் பேக்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் எடுத்து வரப்பட்டது.
  முப்படை வீரர்களும் தனித்தனியாக ராணுவ வாகனத்தின் முன்பாக அணிவகுத்து வந்தனர். இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றது. ஊர்வலம் வரும் வழிநெடுகிலும் குவிந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் கலாமின் உடலுக்கு கண்ணீர் மல்க மலர்களை தூவி னர். ஏராளமான மாணவர்கள் தங்கள் கைகளில் தேசியக்கொடியை வைத்து அசைத்து மிகுந்த சோகத்துடன் அவரை வழியனுப்பினார்கள்.
  வழிநெடுகிலும் அஞ்சலி செலுத்த காத்திருந்த பலரும் அவரது உடல் ஏற்றப்பட்ட ராணுவ வாகனம் அவரவர்களுக்கு அருகே வந்தபோது விம்மி, விம்மி அழுது, கண்ணீர் சிந்தியது நெஞ்சை உருக்குவ
  தாக இருந்தது. ஒரு அசம்பாவித சம்பவம் கூட நடக்கவில்லை. நல்லடக்கம் செய்யப்படும் இடம் அருகே வந்தவுடன் அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை முப்படை வீரர்களும் ராணுவ மரியாதையுடன் அகற்றினர்.
  பின்னர் ராணுவ வீரர்கள் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது ராணுவவீரர்கள் 3 முறை வானத்தை நோக்கி 21குண்டுகள் முழங்கினர். கலாமின் உறவினர்களால் சிறப்புத் தொழுகையும் நடத்தப்பட்டு இஸ்லாமிய மத வழக்கப்படி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
  தேசத்துக்காகவே தன் வாழ்வை தியாகம் செய்த அந்த தியாகச் செம்மலுக்கு, எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத அந்த தலைவருக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், அனைத்து மதத்தினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய வரலாறு நிகழ்ந்தது.
  புண்ணிய பூமியாக இருந்த ராமேசுவரம் தீவு இப்போது புனித பூமியாகவும் மாறியிருக்கிறது. கலாமின் இரண்டாவது நினைவு தினமான இன்று ஒவ்வொரு குடிமகனும் தேசத்தை வலுப்படுத்திட உறுதியேற்போம். அதுதான் நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai