குப்பையல்ல, செல்வம்!

பொதுநலம் கருதி நல்லுணர்வுடன் செயல்படுத்தப்படும் பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசப்படுகிறது. 'காவி சிந்தனை' என்று கூறப்பட்டாலும் அது காந்திய சிந்தனையுடனும் செக்கருடை
குப்பையல்ல, செல்வம்!

பொதுநலம் கருதி நல்லுணர்வுடன் செயல்படுத்தப்படும் பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசப்படுகிறது. 'காவி சிந்தனை' என்று கூறப்பட்டாலும் அது காந்திய சிந்தனையுடனும் செக்கருடை சிந்தனையுடனும் ஒட்டிச் சென்றாலும்கூட 'இந்துத்துவா' என்று இந்துக்களே முத்திரை குத்துவதுண்டு.
பண மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை செல்லாக் காசாக்கிய செயல், செக்கருடைத் தத்துவமே. இருப்பினும், இடதுசாரிகள் எதிர்த்தார்கள். ரியல் எஸ்டேட் செய்வோரின் ஏமாற்று வேலை முடங்கியுள்ளது. இன்று யாரும் அவ்வளவு சுலபமாக நிலத்தை விற்க முடியவில்லை. எல்லாம் நன்மைக்கே.
'ஸ்வச் பாரத்' அதாவது 'தூய பாரதம்' என்பது காந்தியத் தத்துவத்துடன் ஒன்றுபடும் அற்புதக் கொள்கை. நிறைவேற்றுவதில் சிரமங்கள் இருந்தாலும், மோடி தொடங்கியுள்ளதை வரவேற்க வேண்டும். தூய பாரதத்திற்கு மக்கள் பங்கேற்பு இருந்தால் வெற்றிக்கனி பறிப்பதில் தடை இருக்காது. இது இந்துத்துவம் என்று கூறி ஒதுங்கிவிட்டால் நாம் மாசுகளில் உழன்று மடிய வேண்டியதுதான். நற்பணிகளை நாம் பாராட்டுவதும் நாட்டுப்பற்றுதான்.
சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், மாசுகளை அகற்றவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய சட்டதிட்டங்களை மோடி அரசு ஒருமுகப்படுத்தி மகாத்மா காந்தி பிறந்த நன்னாளில் அதாவது 2.10.2014, 'ஸ்வச் பாரத் அபியான்' என்ற பெயருடன் தூய பாரத நல்வாழ்வுத் திட்டத்தைத் தொடங்கியது.
இது வீடு கூட்டும் திட்டமல்ல. 'அபியான்' என்றால் இயக்கம். முதலாவது பணி ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை. பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மாநிலங்களில் இத்திட்டம் சிறப்புடன் இயங்கி ஏறத்தாழ 90 சதவீதம் வெற்றி. இரண்டாவது கழிவுநீர் மேலாண்மை. கழிவுநீர் மேலாண்மையில் போதிய வெற்றி இல்லை. பின்னர், திடக்கழிவு மேலாண்மையில் போற்றத்தக்க வளர்ச்சியை எடுத்துக்காட்டும் விதமாகப் பல நகராட்சிகள் செயல்படுகின்றன.
இந்த மூன்று திட்டங்களும் சிறப்புடன் செயலாக்கம் பெற்று விடுமானால் ஸ்வச் பாரத் அபியான் வெற்றிக்கனியைப் பறித்துவிடும். மத்திய அரசு ஒரு புதிய நலவாழ்வுத் திட்டத்தை வழங்கி நிதி ஒதுக்குகிறது. தங்கள் பங்குக்கு மாநில அரசும் நிதி ஒதுக்கிச் செயல்பட வேண்டும். தூய பாரதத்தின் வெற்றிக்குரிய பங்கை உணர்ந்து ஒவ்வொரு நகராட்சியும் பேரூராட்சியும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
தெருச் சுத்தமும் திடக் கழிவு மேலாண்மையும் வருமானத்திற்குரிய நிர்வாகம். குப்பை நிர்வாகம் திறம்படச் செயல்படுமானால் குப்பையிலிருந்து செல்வம் பெற முடியும். திடக் கழிவு மேலாண்மையினால் இயற்கை விவசாயமும் புத்துணர்வு பெறும். இமாச்சலப் பிரதேசம் என்ற பெரிய மாநிலம் 'ஸ்வச் பாரத் அபியான்' திட்டத்தைத் திறம்பட நிறைவேற்றி முதலிடத்தைத் தொட்டுவிட்டது. இயற்கை விவசாயத்திலும் தடம் பதித்துவிட்டது.
சிம்லா மாவட்டத் துணை ஆட்சியர் ராகேஷ் குமார் பிரஜாபதி, இம்மாநிலத்தில் எல்லோருக்கும் கழிப்பறைத் திட்டம் நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அக்கழிப்பறைகள் இயங்கும்போது, தோன்றக்கூடிய பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு அதற்கான அமைப்புகளும் செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார்.
கழிவுநீர் தேங்காமல் கவனிக்கப்படுவதுடன் குடிநீருடன் கழிவுநீர் கலக்காதபடி பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார். திடக் கழிவு நிர்வாகத்தைப் பொருத்தவரை, மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டுக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு வகையான டிரம்கள் வழங்கப்பட்டு குப்பை போடும் போதே பிரித்து விடுவதால் மக்கிய குப்பையை கம்போஸ்ட் உரமாக்குவது, மண்புழு உரமாக்குவது எளிதாகிறது. மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஊராட்சிக்கும் 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை நிதி வழங்கப்படுகிறது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தூய பாரதத் திட்டம் செயல்படுவதில் முன்னிலை வகிக்கும் மாவட்டம் மண்டி. நல்ல மலைச் சூழலில் உள்ள இம்மாவட்டம் நமது நீலகிரி போன்றது. இம்மாவட்டத்தில் மட்டும் 4,490 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தூய பாரதத் திட்டத்தில் செயல்படுகின்றன.
முழுமையான தூய்மையுடன் பெண் அங்கீகாரம், பெண் அதிகாரம், குழந்தைக் கல்வி, பொருளாதாரம், கல்விப் பணிகளையும் செய்கிறது. ஒட்டுமொத்தமாக 70,000 பெண்கள் வாரத்திற்கு 2 மணி நேரம் ஒதுக்கி திட்டமிட்டுச் செயல்படும்போது ஊர்த் தூய்மை, கழிவுநீர் வெளியேற்றம், நீர்நிலைப் பாதுகாப்பு, மண்புழு உரம், கம்போஸ்ட் உரம் என்று பல கோணங்களில் பகிர்ந்து செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது.
கழிவுநீர் சுத்திகரிப்பும் நிகழ்கிறது. நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே குப்பை போட வசதியாக மரங்களில் பைகளைக் கட்டி வைத்துள்ளனர். 'வீடுகளிலும் ஒதுக்குப்புறங்களிலும் குப்பை போட்டு அசுத்தமாக்கினால் பின்னர் நாம்தானே சுத்தம் செய்ய வேண்டும்' என்ற எண்ணம் வளர்ந்துவிட்டதால் மண்டி மாவட்டமே தூய பாரதத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
எனினும், இமாச்சலப் பிரதேசத்தின் பிரதான வருமானம் சுற்றுலாப் பயணிகளின் வருகை. சிம்லாவும், சிம்லாவைச் சுற்றியுள்ள இடங்களும் நீலகிரி, கொடைக்கானலுக்கு இணையானது. சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பொதுக் கழிப்பிட வசதி சற்றுக் குறைவு.
சுற்றுலாப் பயணிகளால் குப்பைகள் சேர்வதாகக் குற்றச்சாட்டு உண்டு. சுற்றுலாப் பயணிகளின் தேவை நிறைவேற்றப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு வருவோம், குப்பைகளைச் செல்வமாக்கும் நிபுணத்துவமும், நீர்ச் சிக்கனப் பயிர்களை சாகுபடி செய்யும் நிபுணத்துவமும், மழைநீர் சேமிப்பும் இம்மாநிலத்தின் சிறப்பு அம்சங்கள். திடக்கழிவு மேலாண்மையில் புணே நல்ல எடுத்துக்காட்டு.
மைய அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் கணக்குப்படி 2016-இல் தினந்தோறும் 1,40,00,000 டன் குப்பை சேருகிறது. அதாவது இந்திய நகராட்சி - ஊராட்சிக் குப்பை அளவு, சுமார் 1.5 கோடி டன். இவற்றில் 70 சதவீதம் குப்பை மட்டுமே அள்ளப்படுகிறது. அள்ளப்படாமல் சிதறிப் பறக்கும் குப்பை 40 லட்சம் டன். அப்படி அள்ளப்படும் குப்பையில் 23 சதவீதம் மட்டுமே சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. ஆகவே, குப்பை அள்ளுவதில் வேகம் வேண்டும். அள்ளிய குப்பைகளைச் சுத்திகரிப்பு -- அதாவது மறுபயனீடு, மக்கும் குப்பை கொண்டு இயற்கை உரம் தயார் செய்தல் போன்ற பணிகளிலும் முனைப்பு வேண்டும்.
பொதுவாக, மக்காத பொருள்களை மறு சுழற்சி செய்வது என்றால் அதைப் பழைய மூலப்பொருள் நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதே நிலையில் மாற்று வடிவத்தைக் கொடுத்து அழகு, அலங்காரப் பொருள்களாக மாற்றி சந்தைப்படுத்துதல் லாபத்திற்கு வழி வகுக்கிறது.
மும்பையில் ஒரு நிறுவனம் - அப்படிப்பட்ட பணியில் ஈடுபட்டு லாபமும் பெறுகிறது. இந்தக் கம்பெனியை நடத்தும் அமிஷி ஷா என்ற பெண்மணி, இங்கிலாந்தில் படித்தவர். இந்தியா திரும்பியதும் புது மாதிரியான சிந்தனை வளர்ந்தது.
உடைந்த கிராமபோன் தட்டு, சி.டி., பிளாஸ்டிக், கண்ணாடி பீங்கான் எல்லாம் புத்துருவம் பெற்று சுவர்க்கடிகாரங்களாகவோ, சாவி வளையங்களாகவோ, அறை அலங்கார மாட்டிகளாகவோ,புதிய கலைப்பொருள்களாகவோ அழகு மிளிர ஜோடனையுடன் அதிக விலைக்கு சந்தைப்படுத்தப்படுகின்றார். ஆன் லைன் வியாபாரத்தில் அமிஷி ஷா பணத்தை அள்ளுகிறார்.
கர்நாடக மாநிலத்தில், தூய பாரதம் நோக்கிய செயல்பாடுகள் சிறப்பானவை. ஜங்க் ஆர்ட் (Junk Art) நிறுவனம், குப்பைகளை மிகவும் சிறப்பாகத் தரம் பிரிக்கும் இயந்திரங்கள் உதவியால் நகராட்சிகளுக்குத் தொண்டுணர்வுடன் உதவுகின்றது.
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தைக் குப்பைகளிலிருந்து மீட்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் சுமார் 200 நகராட்சிகள் குப்பைகளைத் தரவாரியாகப் பிரித்து மறுசுழற்சியும், கம்போஸ்ட் இயற்கை உர உற்பத்தியிலும் ஈடுபடுத்திக் கொண்டு வெற்றிக் கனி பறிக்கின்றன.
குப்பைப் பொருள் வாங்கும் வியாபாரிகளிடமிருந்தும் மறுசுழற்சிக்குரிய பொருள்களை வாங்கி ஊக்குவிக்கின்றார்கள். குப்பைகளைக் கூட்டிப் பெருக்கிக் குவிப்பது பெரிய விஷயமில்லை. அப்படிக் கூட்டிப் பெருக்கியதைப் பயன்படுத்தும் திறமையே இன்றைய தேவை.
தூய பாரதம் நோக்கிய இயக்கத்தில் மிகவும் சிறப்பாகச் செயலாற்றும் வெர்மி கோல்ட் எக்கோ டெக்(Vermi Gold Echo Tech)   நிறுவனமும் கர்நாடக மாநிலத்தில் குப்பையைச் செல்வமாக்கும் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறது. குறிப்பாக மக்கும் குப்பைகளைத் தொடங்கும் இடத்திலிருந்தே கொள்முதல் செய்கிறது.
உணவகங்களிலிருந்து எச்சில் இலைகள், காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றைப் பெற்று முதல்தரமான மண்புழு உரம் தயாரிப்பதில் தனிநிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவின் பல நகரங்களில் - வெர்மி கோல்ட் நிறுவனத்திற்குக் கிளைகள் உண்டு. வங்கதேசம் போன்ற அந்நிய நாட்டிலும் கிளை அமைப்புகள் உண்டு.
நிஜமாகவே குப்பையில் தங்கம் காணும் இந்த நிறுவனம் கோடி கோடியாகப் பணம் ஈட்டி வருகிறது.
குப்பையில் செல்வம் என்று சொல்லிக் குப்பையை அப்படியே வைத்திருந்தால் செல்வம் வராது. நோய்தான் வரும். குப்பையைத் தூய்மைப்படுத்தினால்தான் செல்வம் வரும்.
குப்பையைச் செல்வமாக மாற்றும் திறமையால்தான் செல்வம் கிட்டும்; தூய பாரதமும் வளரும்!

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com