மரணமிலாப் பெருவாழ்வு!

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைப் பற்றிப் பேசிப் பயன் என்? மண் தின்னப் போகின்ற ஓர் இருதயத்தை, ஒரு பயனாளிக்கு வழங்க மனமில்லாமல் மரிக்கும் உயிர்கள், பாரியைப் பற்றி பேசிப் பயன் என்?

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைப் பற்றிப் பேசிப் பயன் என்? மண் தின்னப் போகின்ற ஓர் இருதயத்தை, ஒரு பயனாளிக்கு வழங்க மனமில்லாமல் மரிக்கும் உயிர்கள், பாரியைப் பற்றி பேசிப் பயன் என்?
 மயிலுக்குப் போர்வை தந்த பேகனைப் பற்றிப் பேசிப் பயன் என்? எரியுண்ணப் போகின்ற ஒரு சிறுநீரகத்தை, அந்த உறுப்புக்கு ஏங்கும் ஓர் உயிருக்கு வழங்காமல், விலை பேசிக் கொண்டிருக்கும் மனிதர்கள், பேகனைப் பற்றிப் பேசிப் பயன் என்?
 சென்ற ஆண்டு நம் நாட்டில் சாலைப் போக்குவரத்தில் சிக்கி, உயிரிழந்தவர்கள் 5 இலட்சம் பேர் ஆவர். அவர்களில் உறுப்பு தானம் செய்தவர்கள் வெகு சிலரே! தாராள மனசு என்பது, நன்றாக வாழ்கின்றபோது மட்டும் இருந்தால் போதா; கடைசி மூச்சை விடுகின்ற நேரத்திலும் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் சாகின்றவர்கள், சாகப் போகின்றவர்களை வாழ வைப்பார்கள்! உறுப்பு தானம் செய்வது இன்று நேற்று வந்ததன்று; சங்க காலத்திலேயே இருந்து வந்திருக்கிறது.
 சிலப்பதிகார காலத்தில் பொய் சாட்சி சொன்ன ஒருவனைச் சதுக்க பூதம் அடித்துத் தின்னப் போகிறது. அப்பொழுது கோவலன் குறுக்கிட்டு, "அந்தத் துர்க்குணன் ஒரு தாய்க்கு ஒரே மகன் என்பதால், என்னுடைய உயிரை எடுத்துக் கொண்டு, அவனை விட்டுவிடு' என்று சதுக்க பூதத்திடம் கெஞ்சுகிறான். அதற்கு சதுக்க பூதம் "நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பு ஈங்கில்லை' எனப் பகருகின்றது. அதிலிருந்து அந்தக் காலத்தில் உறுப்பை மட்டுமன்று, உயிரையே தியாகம் செய்யக் கூடிய பெருமக்கள் இருந்தார்கள் எனத் தெரிகிறது.
 ஒரு மனிதன் தன் வாழ்நாளில் குருதிக் கொடையாலும், உறுப்புக்கள் தானத்தாலும், எட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஒரு கொடையாளி தன் திசுக்களின் மூலம் 50 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று "உலக உறுப்புக் கொடை நிறுவனம்' தெரிவிக்கிறது.
 மூளை செயலற்று மரிக்கும் மனிதர்களில், உறுப்பு தானம் செய்யக் கூடியவர்கள், ஸ்பெயினில் ஒரு மில்லியனுக்கு 35 விழுக்காடு கொடையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், நம் புண்ணிய பூமியில் மில்லியனுக்கு 0.8 விழுக்காட்டினர்தாம் கொடையுள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றனர். புகையிலைக்குக் கொடுக்கும் இருதயங்களை, மதுவிற்குக் கொடுக்கும் சிறுநீரகங்களை, கல்லீரல்களை, கணையங்களை, கருவிழிகள், சிறுகுடல், எலும்புதிசுக்கள், நரம்புகளை, பயனாளிகளுக்குத் தந்து புண்ணியத்தைப் பெறலாமே!
 உறுப்புக்களை உரியவர்களுக்குத் தந்து உதவுவது, திருவள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறது. "குறிப்பினுள் குறிப்பு உணரக் கூடிய வல்லாளர்களின் உறவை, ஓர் அரசன் தன்னுடைய உறுப்புக்களில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்தாவது பெறல் வேண்டும்' என்றார் திருவள்ளுவர் (குறள்:703).
 இன்றைய மருந்தியலாளர்கள், கண்ணை, கல்லீரலை, சிறுநீரகத்தை, இருதயத்தைதாம், தானமாகக் கேட்கிறார்கள். ஆனால் நம் திருவள்ளுவர் "உறுப்புக்களில் எதையும் தானம் செய்யலாம்' என்கிறார்.
 மேலும், திருவள்ளுவர் "உற்றவர்க்கு உரிய நேரத்தில் குருதியையோ, ஒரு சிறுநீரகத்தையோ தானம் செய்ய முன்வராவிட்டால், அவன் பெற்ற உறுப்புக்களால் என்ன பயன்' எனக் கேட்கின்றார்.
 புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
 அகத்துறுப்பு அன்பிலவர்க்கு
 என்பது அந்தத் திருக்குறள்ஆகும்.
 "இருதயம் வலுவிழந்த இருதய நோயாளி ஒருவருக்கு ஒரு கொடையாளி கிடைப்பது, தரித்திரத்தின் விளிம்பில் இருப்பவனுக்கு பம்பர் லாட்டரி கிடைத்தது போலாகும்' என்கிறார், அமெரிக்க இருதயவியல் வல்லுநர்-நிபுணர் டாக்டர் அர்னால்டு காட்ஸ்!
 நடப்பு ஆண்டில் சில நூறு பேர்களுக்கு மட்டும்தான் மாற்று இருதயம் பொருத்தும் சிகிச்சை நடந்திருக்கிறது. ஆனால் 50,000 பேர் இன்னும் காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறார்கள். சாலை விபத்தில் மாண்டுபோன 5 இலட்சம் பேர்களில் பலர் மனம் வைத்திருந்தால், காத்திருப்புப் பட்டியலைக் கரையேற்றியிருக்கலாம். உறுப்புக்கள் மட்டும் ஒத்திருந்து உள்ளத்தில் அன்பும் பண்பும் இல்லாத மனிதர்களை, திருவள்ளுவர் மனிதர்களாகவே நினைக்கவில்லை. "உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பன்றால், வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம்ஒப்பு' என்பது குறள்.
 நம் நாட்டில் மூன்று இலட்சம் பேர் சிறுநீரகங்கள் பழுதுபட்டு, மாற்று ஏற்பாட்டிற்காக மருத்துவமனைகளில் காத்துக் கிடக்கிறார்கள். பத்து இலட்சம் பேர் கருவிழிகள் பாதிக்கப்பட்டு, மாற்று ஏற்பாட்டிற்காகப் படுக்கையில் கிடைக்கின்றனர்.
 ஒவ்வோர் ஆண்டும் ஐந்து இலட்சம் பேர், மாற்று உறுப்புகள் கிடைக்காத காரணத்தால், மடிந்து போகிறார்கள்.
 வசதி படைத்தவர்களுக்குக் கொடையாளிகளும் கிடைக்கின்றார்கள்; உலகத்தரம் வாய்ந்த தனியார் மருந்துவமனைகளும் காத்துக் கிடக்கின்றன! தில்லியிலுள்ள அகில இந்திய அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) எட்டு மாதங்களாக பலர் மாற்று சிறுநீரகங்களுக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்; அம்மருத்துவமனையில் 13 டயாலிசிஸ் கருவிகள் மட்டுமே உள்ளன.
 அதனால் ஒவ்வொரு நாளும் 40 பேருக்கு மட்டும்தான் டயாலிசிஸ் செய்ய முடிகிறது. அகில இந்திய அரசு மருத்துவமனை கடந்த ஆண்டு 150 பேருக்கு மட்டுமே மாற்று சிறுநீரகங்களைப் பொருத்தியிருக்கிறது. ஆனால் அதே தில்லியிலுள்ள "இந்திரபிரஸ்தா' மருத்துவமனை 600 பேர்களுக்கு மாற்றுச் சிறுநீரகங்களைப் பொருத்தியிருக்கிறது.
 இந்திய நாட்டில் மாற்று உறுப்புக்களைப் பொருத்துவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்ட மருத்துவமனைகள் 270 மட்டுமே உள்ளன. அவற்றுள் 36 மருத்துவமனைகள் தில்லியில் மட்டுமே உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் நான்கு மருத்துவமனைகள் உள்ளன. பிகாரில் ஒன்றே ஒன்று மட்டுந்தான் உள்ளது.
 இந்நிலையில், செயலிழந்த மூளையினையுடைய ஒரு பயனாளி, தன்னுடைய இருதயத்தை உயிருக்குப் போராடும் ஒருவருக்குக் கொடுக்க விரும்பினால், நான்கு மணி நேரத்திற்குள், இடம் பெயர்க்கப்பட்ட இருதயம் பொருத்தப்பட்டாக வேண்டும். அண்மையில், இந்தூரிலிருந்து மும்பை போர்ட்டிஸ் மருத்துவமனைக்கு இடம் பெயர்க்கப்பட்ட ஓர் இருதயம், விமானம் மூலம் பறந்து வந்திருக்கிறது.
 கடைசி மூச்சை விடுகின்ற தறுவாயில் இருக்கின்ற ஒருவர், தம்முடைய திசுக்களைத் தானம் செய்ய வந்தால், அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களை 12 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தியாக வேண்டும்.
 அண்மையில், தில்லியில் அதிசயிக்கத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அன்மோல் எனும் 21 வயது இளைஞர், சாலை விபத்தில் சிக்கி உயிர் பிழைக்க முடியாத நிலைக்குச் சென்றார். என்றாலும் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு உள்ளான அவனுடைய பெற்றோர், ஓர் உன்னதமான முடிவிற்கு வந்து, அவருடைய உறுப்புக்கள் அனைத்தையும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அளிக்க முன்வந்தனர். அவர்களுடைய கொடையுள்ளத்தால் 30 உறுப்புக்கள் தக்கவர்களுக்கு உயிர் தந்தன.
 மற்றுமொரு சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி அண்மையில் நாசிக்கில் நிகழ்ந்தது. அருண் தம்போல் எனும் நடுத்தர வயது மாமனிதர் மோட்டார் சைக்கிளில் அசுர வேகத்தில் பயணித்ததால் கொடுமையான விபத்திற்கு உள்ளானார். மருத்துவர்களால் அவரைப் பிழைக்க வைக்க முடியவில்லை. அதனால் அந்த மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ரகிபி உரியவர்களிடம் இணக்கத்தோடு பேசி, அருண் தம்போலின் உறுப்புக்களைப் பயனாளிகளுக்கு வழங்க இசைவு பெற்றார்.
 அதன்படி, தம்போலின் கல்லீரல் புணேயிலுள்ள ஜூபிடர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவருக்குப் பொருத்தப்பட்டது. அருண் தம்போலின் கிட்னி, புணேயிலுள்ள சஹைதி மருத்துவமனையில் துடித்துக் கொண்டிருந்த, ஓர் உயிருக்கு அபயம் தந்தது.
 இந்தியத் திருநாட்டில் எல்லாவித மருத்துவத் துறைகளிலும் உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள்-வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஆனால், விபத்துக்கு உள்ளாகும் மனிதர்களின் உறவினர்களுக்கு சோகத்தில் மூழ்கத் தெரிகின்றதே தவிர, அடுத்து என்ன செய்வது என்று தெரிவதில்லை. இறக்கப் போகும் உயிரைக் கொண்டு எத்தனை பேரைப் பிழைக்க வைக்கலாம் என்று எண்ணத் தோன்றுவதில்லை.
 உயிர்தான் போகப் போகிறதே தவிர, உறுப்புக்கள் உயிரோடுதான் இருக்கின்றன. உயிரோடு இருக்கின்ற உறுப்புக்களை அளித்துதவினால், மற்ற உயிர்களின் உடம்பில் தம் பிள்ளைகள் வாழ்வார்கள் எனும் எண்ணம் தோன்றுவதில்லை. முடியப் போகின்ற ஓர் உயிரின் உறுப்புக்கள், வாழத் துடிக்கும் உடம்புகளில் பொருத்தப்பட்டால், அதுதான் மரணமிலாப் பெருவாழ்வு ஆகும்.
 வெட்டப்படுகின்ற ஒரு வாழை மரம், பூவைத் தருகிறது; காயைத் தருகிறது; கனியைத் தருகிறது. தனக்குள் எலும்பைப் போல் இருக்கும் வாழைத்தண்டைத் தருகிறது; சாப்பிடுவதற்கு இலையைத் தருகிறது! நார்நாராகக் கிழிந்தாலும் பூக்கட்ட நரம்புகளைத் தருகிறது. ஆறறிவு படைத்த மனிதர்கள் வாழையிடமிருந்து பாடம் பெறலாமே! அதுதானே மரணமிலாப் பெருவாழ்வு! மரணமிலாப் பெருவாழ்வு என்பது இருக்கும்போது தான் வாழ்வது மட்டுமன்று; இறக்கும்போது பிறரை வாழ வைப்பதுமாகும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com