Enable Javscript for better performance
பொதுத்துறை வங்கிகளும் அரசு கட்டுப்பாடும்- Dinamani

சுடச்சுட

  

  பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் மற்றும் கடன்மோசடி பற்றிய பிரச்னைகள் ஒருபுறம் பூதாகரமாக வெடித்து நாட்டை உலுக்கிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் வங்கி மேற்பார்வை மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகளில் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களின் சமீபத்திய அறிக்கைகள், வங்கித் துறை பற்றிய அவர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன எனலாம்.
  வங்கித் துறை நிர்வாக சீர்திருத்த வாரியத்தின் (Banks Board Bureau) தலைமைப் பொறுப்பை வகிக்கும் வினோத் ராய் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'செயலகத்தால், நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட, வங்கி நிர்வாக நடைமுறை சீரமைப்பு, அதிகாரிகளுக்கான வெகுமதிகள், பொறுப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் நீண்ட காலமாக எந்த பதிலும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வங்கிகளின் தற்போதைய நலிந்த நிலைமைக்கான காரணிகளும், அவற்றுக்கான பரிகாரங்களும் அடங்கிய பரிந்துரைகள் இவை' என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம், அரசின் மெத்தனம் கோடிட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது.
  2016-இல், இந்த அமைப்பு பிறந்தபோது, வங்கிகளின் தலைமை அதிகாரி மற்றும் உயர் மட்ட அதிகாரிகளை நியமிக்கும் பிரத்யேக பொறுப்பு மட்டும் அதற்கு வழங்கப்பட்டது. வங்கித்துறை மேம்பாடு சம்பந்தப்பட்ட கூடுதல் பொறுப்புகளை வழங்கக் கோரி அதே ஆண்டு, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இயக்குநர் குழு அங்கத்தினர் நியமனம் சம்பந்தப்பட்ட பரிந்துரைகளை எந்த தலையீடுகளும் இல்லாமல், மத்திய அமைச்சரவையின் நியமன கமிட்டிக்கு நேரடியாக சமர்ப்பித்தல், வாராக்கடன் நிர்வாக யுக்திகளை மேம்படுத்துதல் ஆகிய கோரிக்கைகள் இதில் அடங்கும். இந்த ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளுக்கும் அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை என்பது அந்த வாரியத்தின் மற்றொரு முக்கிய ஆதங்கம்.
  வங்கித் துறையின் பலத்தைக் கூட்ட, பெரும் எதிர்பார்ப்புகளிடையே நிறுவப்பட்ட இந்த அமைப்பு, அரசின் ஓர் அங்கமாக கருதப்பட்டு, அதன் நிபுணத்துவ பலத்தை அனுபவிக்காமல் புறம் தள்ளப்படுவது வங்கிகளின் நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் பெருத்த வருத்தமளிக்கும் விஷயமாகும்.
  வங்கிகளை உரிய வகையில் கண்காணிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்புகளில் ஒன்று. ஆனால், சமீபத்தில் வெளியான வங்கி மோசடிகளை தக்க தருணத்தில் கண்டுபிடித்து, அதை தவிர்க்க ரிசர்வ் வங்கி தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் குற்றசாட்டை மறுக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதில் அளித்திருக்கிறார். அந்த பதிலை உற்று நோக்கும்போது, நமக்குப் பல உண்மைகள் புலப்படுகின்றன.
  வங்கி வரைமுறைச் சட்டம் 1949-இன் படி, அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள்தான் இயங்குகின்றன. ஆனால், இந்த சட்டத்தின்படி, ஸ்டேட் பாங்க் உள்பட, பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு கிடையாது. அதன் நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்களை மாற்றும் அதிகாரம் மத்திய அரசின் பிடியில்தான் உள்ளது. நிதி நிலைமையைக் காரணம் காட்டி, தனியார் வங்கிகளை ரிசர்வ் வங்கியால் ஒன்றிணைக்க முடியும். ஆனால், இம்மாதிரி செயல்பாடு, பொதுத்துறை வங்கிகள் விஷயத்தில் சாத்தியம் இல்லை.
  பொதுத் துறை வங்கிகள் மீது, ரிசர்வ் வங்கிக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது. வரையறுக்கப்பட்ட சில அதிகார வட்டத்துக்குள்தான் அது சுழன்று, தன் கண்காணிப்புப் பணியைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கிறது.
  பொதுத் துறை வங்கி நிர்வாகங்களை முழுவதும் இயக்குவது மத்திய அரசுதான் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக புரிகிறது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட காலந்தொட்டு இதே நடைமுறைதான் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது எனலாம். எனவே, பொதுத் துறை வங்கிகள் மீதான அதிகார கட்டுப்பாட்டை தளர்த்தவோ, ரிசர்வ் வங்கி போன்ற மற்ற அமைப்புகளுக்கு சில அதிகாரங்களையாவது பகிர்ந்தளிக்கவோ, மத்தியில் ஆளும் எந்த அரசுக்கும் விருப்பமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. ஏனென்றால், பணப்புழக்கம் நிறைந்த பொதுத் துறை வங்கிகள், தேனடை போன்றது. அதிலிருந்து சொட்டும் தேனை சுவைக்க, பலர் எப்பொழுதும் வரிசையில் காத்து நிற்கின்றனர் என்பதுதான் உண்மை நிலை!
  நகர்வாலா காலத்து மோசடிகள் முதல், பல வங்கி மோசடிகள் மூடி மறைக்கப்பட்டது, அரசியல் அதிகார வர்க்கத்தினரால்தான் என்ற சந்தேகம் வேரூன்றி நீண்ட காலமாகிவிட்டது. வாடிக்கையாளர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் சேமிப்புத் தொகையைத்தான் பல தரப்பினருக்கு கடன் வழங்க வங்கிகள் பயன்படுத்துகின்றன. வழங்கிய கடன் திரும்ப செலுத்தப்படவில்லையானால், அது வங்கிகளின் மூலதனத்தை பாதித்து, அவற்றின் வியாபார அபிவிருத்திக்கு உலை வைத்துவிடும்.
  வங்கிக் கடன்கள் அரசியல் தலைவர்களால் வழங்கப்படுகிறது என்ற தவறான எண்ணம் பயனாளிகளிடையே வேரூன்றிவிடக்கூடாது. உதாரணமாக,1980களில் வங்கிகளால் சாமான்ய மக்களுக்கு வழங்கப்பட்ட சிறு கடன்கள், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தலைவரால் மக்களுக்கு இனாமாக வழங்கப்பட்டது என்ற வாக்குவங்கி சார்ந்த பிரசாரம் வலுவாகப் பரப்பப்பட்டது. அரசியல்வாதிகள், சாமான்யர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்க உதவி செய்வது தவறல்ல. ஆனால், இடைத்தரகர்களாக செயல்பட்டு, வழங்கப்பட்ட கடன் தொகையில் ஒரு பகுதியை, சாமான்ய மக்களிடமிருந்து கமிஷனாக பெறுவதுதான் தவறு. வாங்கிய கடனை திருப்பிக் கட்டச் சொல்லி பயனாளிகளை அரசியல்வாதிகள் அறிவுறுத்தாதது மற்றொரு பெரிய தவறாகும். வங்கி அதிகாரிகளை அச்சுறுத்தி வழங்கவைக்கப்பட்ட அம்மாதிரி கடன்கள் பெரும்பாலானவை பயனாளிகளை முழுவதும் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை நிலை. வாக்கு வங்கியைக் குறிவைத்து இயங்கும் இம்மாதிரி செயல்பாடுகள், முற்றிலும் அரசியலானதாகும். சாமான்ய மக்களின் பெயரில் வழங்கப்பட்ட அம்மாதிரி கடன்களின் பெரும்பகுதி, திரும்ப வசூலிக்கப்படாமல், வாராக் கடனாக எழுதப்பட்டது வங்கி சரித்திரத்தில் ஒரு முக்கிய கருப்பு நிகழ்வாகும். வாராக்கடன் பிறப்பதற்கு அரசியல் தலையீடுகளும் முக்கிய காரணம் என்பதற்கு இம்மாதிரி நிகழ்வுகள் சிறந்த உதாரணம்.
  காலப்போக்கில், பெரும் கடனாளிகள் விஷயத்திலும் இம்மாதிரி செயல்பாடுகள் நீட்டிக்கப்பட்டது. அரசியல் செல்வாக்கு இருந்தால், பெரும் தொகைகளை வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற முடியும் என்ற சித்தாந்தம் வளர்ந்தது. அதோடு நில்லாமல், பெரும் கடன் தொகைகளை தள்ளுபடி செய்வதற்கும் அரசியல் செல்வாக்கை தாராளமாக பயன்படுத்தலாம் என்ற தவறான கோட்பாடும் வளர்ந்தது.
  ரூ.9 லட்சம் கோடி அளவில் வங்கி வாராக்கடன்கள் வளர்ந்து நிற்பதற்கான காரணங்களில் அரசியலுக்கு பெரும் பங்கு உண்டு என்பது ஊரறிந்த ரகசியம். தற்போதைய வாராக்கடன்களில் பெரும் பகுதி, சமூக அந்தஸ்தும், அரசியல் செல்வாக்கும் கூடிய பெரும் புள்ளிகளுக்கு வழங்கப்பட்டவை. தொகை பெரிது என்பதால், கடன் தொகை பல பொதுத் துறை வங்கிகளிடையே பங்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெருந்தொகை கடனாளியிடம், கடன் வழங்குவதற்கு முன்பான ஆய்விலிருந்து, கடன் தொகை வசூல் வரை, பல வங்கிகள் கூட்டாக ஏமாந்தது எப்படி என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. ஆனால், செயல் திறனில் எல்லா பொதுத்துறை வங்கிகளும் ஒரே தர வரிசைதான் என்பதை மட்டும் இந்த நிகழ்வுகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.
  வங்கிகளின் தற்போதைய தலையாய பிரச்னையே, அவற்றின் நிர்வாக அமைப்பில்தான் உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். தலைமை முதல், இயக்குநர் குழு வரையிலான நியமனங்களில் அரசியல் வாடை. வங்கிகளின் பொருளாதார செயல்பாட்டுத் திறனை தாங்கி நிற்கும் வாடிக்கையாளரைவிட, தங்களுக்கு பதவிகள் கொடுத்து கெளரவிக்கும் எஜமானர்களுக்கு மட்டும்தான் இவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
  வங்கிகளின் பொருளாதார சீர்கேடுகள் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை உலுக்கிக் கொண்டிருந்தாலும், நிர்வாகத்தை சீரமைக்கும் பணியில் ஒரு சில காலடிகள் கூட அரசால் முன்னோக்கி எடுத்து வைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. பல ஓட்டைகளிட்ட பானையிலிருந்து ஒழுகும் நீரை கட்டுப்படுத்த, ஒன்று, ஓட்டையை அடைக்க முயல வேண்டும்; அல்லது பாத்திரத்தை மாற்ற வேண்டும். ஓட்டைப் பானையாக மாறியிருக்கும் வங்கிகளின் இன்றைய நிலையை மாற்றவும் இந்த தத்துவம் பொருந்தும். கரைந்து கொண்டிருக்கும் வங்கி மூலதனத்தையும் அவற்றின் கடன் வழங்கும் செயல்பாடுகளையும் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய துல்லிய தாக்குதல் நடவடிக்கை இனியும் அரசால் தாமதப்படுத்தப்படக் கூடாது.
  சமீபத்திய வங்கி மோசடி நிகழ்வுகளில், தணிக்கையாளர்களின் பொறுப்பும் பெருமளவில் பேசப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் அந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. ஒரு வங்கியின் கணக்குகளை தணிக்கை செய்யும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட வங்கிகளாலேயே நியமிக்கப்படும் நடைமுறை சில ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அறிமுக நிலையிலேயே இதற்கு இந்திய பட்டயக் கணக்காளர் சம்மேளனம் (Institute of Chartered Accountants of India)பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. இந்த முறையில் செயல்பாட்டு சுதந்திரம் பறி போகும் என்பதுதான் அந்த எதிர்ப்புக்கு காரணம் என்று யூகிக்கலாம். தணிக்கையாளர் நியமனம், தரத்தின் அடிப்படையில் ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டிருக்கின்றது. இம்மாதிரி சீர்திருத்தங்களையாவது அரசு உடனடியாக ஆராய்ந்து, தீர்வு காண வேண்டும்.
  தங்க முட்டையிட்ட வாத்தை, பேராசையால் ஒரே நாளில் வெட்டிய கதை போல, இந்திய பொருளாதாரத்திற்கு பல விதங்களில் உதவியாக இருக்கும் பொதுத் துறை வங்கிகளை அரசியல் தலையீடுகள் என்ற பேராசையால் குறுகிய காலத்தில் செயலற்றுப் போகச் செய்வதை நாட்டுப்பற்றுள்ள இந்திய குடிமகன் எவரும் விரும்பமாட்டார். வலுவான வேர்களுடைய ஆலமரமாக அரசு வங்கிகள் மீண்டும் தழைத்தோங்கி வளர்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai