Enable Javscript for better performance
'பெயராசை' என்னும் பெருநோய்- Dinamani

சுடச்சுட

  

  'ஆசையே துன்பங்களுக்கான தோற்றுவாய். ஆதலால் அதிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள்' என்பதுதான் ஆன்றோர் வாக்கு. 
  அந்த ஆசைகளை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என மூன்றாக வகைப்படுத்தினர் முன்னோர். மண்ணின் மீது கொள்கிற ஆசை ஆதிக்க வெறியாகவும், பெண் மீது கொள்கிற ஆசை காமவெறியாகவும் பொன் மீது கொள்கிற ஆசை நுகர்வு வெறியாகவும் மாறி முடிவில் அழிவையே தந்து விடுகின்றது.
  இந்த மூன்று ஆசைகளில் அடங்காத மற்ற சில ஆசைகளும் உண்டு. அதில் முதலாவது பேராசை. முன்னர் கூறிய மூன்றின் மீது மட்டுமல்லாமல் எதன் மீதும் எதன் பொருட்டும் அளவுகடந்த வெறி கொள்ளுவதே பேராசையின் வெளிப்பாடு. 
  ஆசையே பெருந்துன்பம் என்றால், பேராசை எப்படிப்பட்ட துன்பம் உடையதாக இருக்கும் என்று தனித்துச் சுட்ட வேண்டியதில்லை. எல்லா ஆசைகளையும் ஒருசேர அனுபவித்துவிடத் துடிக்கிற கொடுவெறித்தனமே பேராசை.
  இந்த ஆசைகளுக்கெல்லாம் உச்சமாக மற்றொரு பெரும் பேராசையும் உண்டு. அதன் பெயரே பெயராசை. பார்க்கும் இடங்களிலெல்லாம் தன் பெயர் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்பதும், உலகத்து மக்களெல்லாம் தன் பெயரை உச்சரிக்க வேண்டும் என்றும் சுயநலத்தோடு கருதுகிற கயமைத்தனமே பெயராசை.
  இளம் பருவத்தில் வெள்ளைச் சுவர்களில் தனது பெயரைக் கிறுக்கி வைக்கிற குழந்தைத்தனத்திலிருந்து தொடங்கி, கோயிலுக்கு உண்டியல் வாங்கித் தந்து அதில் உண்டியலை விடப் பெரிதாகத் தன் பெயரை எழுதி வைத்துக் கொள்கிற 'பெரிய மனிதத்'தனம் வரைக்கும் இந்தப் பெயராசை உள்ளுக்குள்ளேயே ஒளிந்து மறைந்து வளர்கிறது.
  நான், எனது என்னும் அகம்பாவத்தின் வெளிப்பாடே பெயராசையின் அடிப்படை. அதனால்தான் இறைவனை வணங்கும் பக்தர்களும், குருவை வணங்கும் சீடர்களும் 'நான்' என்று கூறாமல் 'யான்' என்றோ, 'அடியேன்' என்றோ 'எளியோன்' என்றோ குறிப்பிட்டுத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.
  சுயநலம் மிகுந்த இந்தப் பெயராசை அரக்கத்தனத்தின் குறியீடு. அரக்கத்தன்மை உடைய பெயராசைக்காரர்கள் வரிசையில் முதலிடம் பெறுபவன் இரணியனே. கடவுளுக்கான மூலமந்திரத்துக்கு இணையாக இரணியாய நம என்று தன் பெயரையே நிறுவ முற்பட்ட முதல் பெயராசைக்காரன். 
  இன்றைய காலத்திலும் அந்தப் பெயராசை என்னும் இராக்கதம் தொடரத் தான் செய்கிறது. அழைப்பிதழ்களில் விடுபட்டுப்போன பெயர்களால் பல குடும்பங்களில் நற்செயல்கள் தடைப்பட்டுப் போனதோடு, தீராத பகையும் வந்து சேர்ந்த கதைகளும் உண்டு. அழைப்பிதழைக் கண்டவுடன் தனது பெயர் எங்கே இருக்கிறது என்று தேடுகிற பெயராசைக்காரர்களினால் அடைகிற புண்ணியம் அது.
  வாழ்க்கையில் நிறைய சாதித்துவிட்ட இந்தப் பெயராசைக்காரர்கள்தான் தங்களின் பல சாதனைகளில் ஏதேனும் ஒரு சாதனையை விளக்கிப் பிரம்மாண்டமான அளவில் தெருவையே அடைக்கிற மாதிரியும், ஒவ்வொரு தெருவுக்கும் தான் நிற்கிற மாதிரியும் உயரமான விளம்பரப் பதாகைகளை வைத்துத் தன் பெயர் நிறுவியிருப்பார்கள்.
  இந்தப் பெயராசை தனக்கு இல்லை என்கிற நிலையைப் புலப்படுத்தவே அடியார்களும் துறவிகளும் தங்களை நாயேன் என்றோ, பாவி என்றோ தாழ்த்தி அழைத்துக் கொண்டனர். 
  மடாதிபதிகளும் கூடத் தங்களுடைய பூர்வாசிரமப் பெயரை விடுத்துவிட்டு மற்றொரு பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதே வழக்கமாகும். ஆனால், இதற்கு நேர்மாறாகத் தன் பெயரோடு சேர்த்துப் பலவிதப் பட்டங்களை தானே தரித்துக்கொண்டு அதனைப் பிரபலப்படுத்தும் விளம்பரப் பிரியர்களும் உளர்.
  அறிவுலகில் வேறுமாதிரியான பெயராசை உண்டு. ஒருவருடைய படைப்பை - ஆய்வை - உழைப்பை அப்படியே தனதாக்கி, தன் பெயரில் எழுதிக் கொள்ளுகிற பெயராசை அது. 
  இவரிடமிருந்து இந்தக் கருத்தினை - தகவலை - புதிய செய்தியைப் பெற்றேன் என்று குறித்துக்காட்டி அதற்காகப் பெயருக்கேனும் ஒரு நன்றியைத் தெரிவிப்பதற்குக்கூட இந்தப் பெயராசை இடம் கொடுப்பதில்லை. 
  தமிழ் இலக்கணத்தில் இரண்டு திணைகள்தான் உண்டு. ஒன்று உயர்திணை; மற்றொன்று அது அல்லாத திணை. ஆறு அறிவுகளும் நிறைய உடையதனால் மனிதன் மட்டுமே உயர்திணைக்கு உரியவனாகிறான். 
  ஏனைய எல்லாமே உயர் அல்லாத திணைதான். அறிவுக்காக மட்டும் மனிதனுக்கு அந்த உயர்நிலை தரப்படவில்லை. அதனைக் காத்துக் கொள்வதிலும் அந்த அறிவினால் உண்டாகும் மமதையிலிருந்து விடுபட்டுக் கொள்வதிலும்தான் அவனுடைய உயர்நிலை புலப்படுகிறது. 
  பெயராசைக்கு ஆட்படுகிற மனிதர்கள் அல்லாத திணைக்கும் கீழாகப் போய் விடுவதையும் காலந்தோறும் காண முடிகிறது. பெயராசை என்னும் பெருநோயை விடுத்தவர்கள்தான் பெரும்புகழ் எய்தியிருக்கிறார்கள். நாமும் பெரும்புகழ் எய்துவோமே!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai