உடனடி நிவாரணம் தேவை

தமிழகத்துக்கே சோறு போடும் டெல்டா மாவட்டங்கள், ஆண்டுதோறும் 12  முதல் 15 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து மனித குலத்துக்கு உணவளித்து வருகின்றன.

தமிழகத்துக்கே சோறு போடும் டெல்டா மாவட்டங்கள், ஆண்டுதோறும் 12 முதல் 15 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து மனித குலத்துக்கு உணவளித்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, காணும் இடமெல்லாம் பசுமைப் போர்வை போர்த்தியது போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது. காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னை மற்றும் பருவ மழை பொய்ப்பதன் காரணமாக வானம் பார்த்த பூமியாய் சில ஆண்டுகளில் இருந்ததும் உண்டு.

வறட்சியானாலும் வெள்ளமானாலும் அதிக பாதிப்பு டெல்டா மாவட்ட மக்களுக்கே. விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், மீனவர்கள் வறட்சி நிவாரணம் வெள்ள நிவாரணத்துக்காக அரசிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மக்களை காப்பது அரசுகளின் கடமை. அந்த வகையில், இதுவரை ஏற்பட்ட வறட்சி மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நியாயமான முறையில் நிவாரணம் கிடைத்துள்ளதா என்பது கேள்விக்குறியே.

இயற்கை இடர்பாடு காலங்களில் நேரிடும் விவசாய பாதிப்புகள், மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உயிரிழப்புகளுக்கு அரசு நிவாரணம் வழங்குகிறது. 

இவ்வாறு, இயற்கை பேரிடரில் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உரிய காலத்தில் உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்க வேண்டும். இல்லையெனில் அது பயனற்றதாக போய்விடும்.

தமிழகத்தில், குறிப்பாக டெல்டா பகுதியில் "கஜா' புயலின் கோரத் தாண்டவத்தால் நெல், வாழை, தென்னை, மா, பலா போன்ற பணப்பயிர்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன.  விவசாயிகள் மட்டுமன்றி மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் மின்சாரமில்லாமலும்  குடிநீர், பால் போன்ற உணவுப் பொருள்கள் கிடைக்காமலும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

"கஜா' புயல் குறித்து தமிழக அரசின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாராட்டும்படியாக இருந்தன என்பதும், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் தொடர்ந்து சிறப்பாக ஈடுபட்டு வருகிறது என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இருப்பினும்,  வீடுகளை இழந்து முகாம்களில் இருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்குத் தேவை உடனடி நிவாரணம். 

இதுபோன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது, மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதி பெற்று மாநில அரசின் பங்களிப்புடன் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசு பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக நிவாரணத் தொகை அறிவிப்பு செய்வதில்லை.

மாநில அரசிடமிருந்து பாதிப்பு குறித்த அறிக்கை பெற்று, பரிசீலித்து அதன்பிறகு நிவாரண நிதி ஒதுக்கீடு அறிவிப்பு செய்கிறது. இந்த நடைமுறைகளுக்கு குறைந்தது சில நாள்கள் ஆகிவிடுகின்றன.

அதுவரை, வீடுகளை இழந்தவர்களின் நிலை, வாழ்வாதாரத்துக்காக போராடுகிறவர்களின் நிலை மிகவும் பரிதாபமாகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு அலுவலர்கள் உடனடியாக வருவதில்லை என்ற கோபத்தில் தங்களைப் பார்க்க வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்களிடம் தங்களது கண்டனத்தை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை (நவ. 22) பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து, கஜா புயல் பாதிப்பு சேதம் குறித்து விளக்கமளித்து, நிவாரணத் தொகையாக ரூ. 15,000 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, மத்தியக் குழு தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டு, அக்குழுவினர் சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஆய்வின்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக பார்க்காமல், சாலையோரம் உள்ள சில பகுதிகளை மட்டும் பார்வையிட்டுவிட்டு, மற்ற பகுதிகளின் பாதிப்புகளை கேமரா பதிவைப் பார்த்து விட்டு சேத மதிப்பை கணக்கிடுகின்றனர் என்று சிலர் புகார் கூறுகின்றனர்.

மத்தியக் குழு பாதிக்கப்பட்ட பகுதி முழுவதையும் பார்வையிடும் வகையில், மாவட்டத்துக்கு ஒரு குழுவை அனுப்பி சேதமதிப்பை பார்வையிட செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல், மத்திய அரசு ஒட்டுமொத்தமாக ஒரு குழுவை அனுப்பி குறிப்பிட்ட சில நாள்களில், சில மாவட்டங்களில் சில மணி நேரத்துக்குள் ஆய்வை முடிக்கும் வகையில் குழுவை அனுப்புகிறது. 

பாதிப்பை ஆய்வு செய்ய வரும் குழுவினர், சீரமைப்பு பணியின்போது ஊழியர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள், பாதிக்கப்பட்டவர்கள் வீடின்றி, உணவின்றி ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தையும் தொலைத்துவிட்டு எப்படியெல்லாம் சிரமப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்தால்தானே உண்மை நிலை தெரியவரும். அதைவிட்டு கேமரா பதிவு மற்றும் புகைப்படங்கள் மூலம் பாதிப்பை ஆய்வு செய்வது சரியா?

தற்போது ஆய்வு செய்து வரும் மத்தியக் குழுவினர் சேதமதிப்பின் உண்மை நிலையை மத்திய அரசுக்கு விளக்கிக் கூறி போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

கடந்த காலங்களில் "தானே', "ஒக்கி', "வர்தா' புயல்கள் தாக்கியபோது தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட நிவாரணத் தொகையில் மிக மிக சொற்ப அளவுக்கே மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இம்முறை மத்திய அரசு உடனடியாக தமிழகத்துக்கு போதுமான அளவுக்கு நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும். 

மத்திய அரசின் நிவாரண நிதி ஒதுக்கீடு காலதாமதமானால், மாநில அரசு போர்க்கால அடிப்படையில் ரிசர்வ் வங்கியிடமிருந்து "ஓவர் டிராப்ட்' (வங்கி கணக்கு இருப்பைவிட கூடுதலாக பணம் பெறும் வசதி) பெற்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com