பணவீக்கக் கட்டுப்பாட்டுக்கே முன்னுரிமை!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்துள்ள நிதி - கடன் கொள்கை இருவிதமான விமர்சனங்களுக்கு இடமளித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்துள்ள நிதி - கடன் கொள்கை இருவிதமான விமர்சனங்களுக்கு இடமளித்துள்ளது. ஒரு பக்கம், பணச் சந்தைக்கு (மணி மார்க்கெட்) ஏமாற்றத்தை அளித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்கும் வகையில் வட்டி வீதம் கால் சதவீதமாவது உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதாவது, ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.5 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாக உயரும் என்கிற சந்தையின் நம்பிக்கை பொய்த்து விட்டது. வட்டி வீதம் 6.5 சதவீதமாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது.
மற்றொரு பக்கம், பண்டிகைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாதாந்திர தவணைத் தொகை (இஎம்ஐ) உயராததால் தப்பினோம் என்று வாடிக்கையாளர்கள் நிம்மதிப் பெருமூலிச்சு விட்டனர்.
நிதி மற்றும் கடன் கொள்கையின் நோக்கம், பொருளாதார வளர்ச்சியா? அல்லது பணவீக்கக் கட்டுப்பாடா? என்னும் கேள்வி எழும்போது, பணவீக்கக் கட்டுப்பாடுதான் மிக முக்கியமானது என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.
இந்த வட்டிவீத அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களில், பங்குச்சந்தை 792 புள்ளிகள் சரிந்தது. சென்செக்ஸ் 34.376 புள்ளிகளாகக் குறைந்தது. அதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு, சந்தை நேரத்தில், முதன் முறையாக 74 ரூபாய் என்ற வரம்பைக் கடந்தது. பிறகு சந்தை நேரத்தின் முடிவில் அது 73.76 ரூபாயாக இருந்தது.
ரிசர்வ் வங்கி ஆளுநரின் உரையிலிருந்து ஒரு செய்தி நமக்குத் தெளிவாகிறது. அதாவது, இப்போதைய சூழலில் பணவீக்க வீதத்தை நான்கு சதவீத அளவிலேயே கட்டுப்படுத்துவதுதான் அவரது நோக்கம் என்பதும், பின்னர் சாதகமான சூழல் உருவாகுமேயானால் வட்டி வீதத்தில் மாற்றம் கொண்டுவரலாம் என்று அவர் எண்ணுவதும் புரிகிறது.
நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் மேற்கூறிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர் அதுமட்டுமல்ல, நிதிக்கொள்கை அறிவிப்பை அடுத்து நிகழ்ந்த செய்தியாளர்களின் கூட்டத்தில் உரையாற்றிய ரிசர்வ் வங்கியின் உயர்நிலை அதிகாரிகளின் பேச்சிலும், பணவீக்கக் கட்டுப்பாடே அவர்களது பிரதான கடமை என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
அதே நேரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரியாமல் தடுக்கும் பொருட்டு, அந்நிய முதலீடுகளை வரவேற்கும் வகையில், ரிசர்வ் வங்கி தனது விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. அத்துடன், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை ஓரளவேணும் தடுக்கும் உத்தியாக, அவ்வப்போது அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டு தேவையான செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.
இம்மாத (அக்டோபர்) கொள்கை அறிவிப்பில் வட்டி வீதத்தைக் குறைக்காமல் விட்டதற்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு, இரண்டு முறை வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூலின்றாவது முறையாக வட்டி வீதத்தை உயர்த்தாமல் விட்டது பொருத்தமே. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருகிறது. மத்திய அரசு பணச் சந்தையில் அதிக அளவு கடன் வாங்க நேரிடும். தற்போதைய நிலையில் மத்திய அரசு குறைந்த வட்டியில் கடன் வாங்குவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
ஒருவேளை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் வளர்ந்த பிற நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும் வட்டி வீதத்தை மேலும் உயர்த்தும் பட்சத்தில், அந்த நேரத்தில் இந்திய ரிசர்வ் வங்கியும் வேறு வழியில்லாமல், வட்டி வீதத்தை உயர்த்த வேண்டிவரும் என்பதில் ஐயமில்லை.
இதனைக் கருத்தில் கொண்டுதான், ரிசர்வ் வங்கி கவர்னர் தனது 5-ஆம் தேதி உரையில், அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளுக்கு ஏற்ப, நிதி மற்றும் கடன் கொள்கையில் மாற்றம் வரலாம் என்று மறைமுகமாகக் கூறியுள்ளார்.
அதே நேரம், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கணிப்பின்படி, 2018 அக்டோபர் முதல் 2019 மார்ச் வரையிலான, நடப்பு நிதி ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் பணவீக்கம் 3.9 முதல் 4.5 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக சாதகமான விஷயம்தான்.
இது ஒருபுறம் இருக்க, ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தக்கூடும் என்கிற ஊகத்தின் அடிப்படையில், பல வங்கிகள் தங்களது கடனுக்கான வட்டி வீதத்தை ஏற்கெனவே உயர்த்தி விட்டன. ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தாத நிலையில், சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக, வட்டி வீதத்தை பழைய நிலைக்குக் குறைக்க வேண்டும்.
பாரத ஸ்டேட் வங்கி விரைவில் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, மற்ற வங்கிகளுக்கு முன் உதாரணமாகத் திகழவேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.
சர்வதேச அளவில் வர்த்தகம் வலுவற்ற நிலையில் இருப்பதால், ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கை சரியானதுதான் என பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து ஆறாம் தேதிக்குள் சென்செக்ஸ் 1850 புள்ளிகள் சரிந்துள்ளன. அதாவது 5.1 சதவீதம் சரிந்துள்ளது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எட்டு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை இழந்துள்ளனர்.
அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் நூறு கோடி டாலர் அளவுக்குத் தங்கள் பங்குகளை விற்பனை செய்துவிட்டு ளியேறியுள்ளனர். 
இந்நிலையில், ஆறுதல் தரும் செய்தியும் ஒன்று உண்டு. சாதாரணமாக பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும்போதெல்லாம், சிறு முதலீட்டாளர்கள், அவசர அவசரமாகத் தங்கள் கையிலிருக்கும் பங்குகளை வந்த விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவதுதான் வழக்கம். இந்தமுறை, அதற்கு மாறாக, நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பொறுமை காத்து வருகிறார்கள். அவசரப்பட்டு விற்பனையில் ஈடுபடவில்லை.
அதுமட்டுமல்லாமல், நல்ல பங்குகளின் விலை குறையும்போது, அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, அவற்றை வாங்குவதற்காக புதிய முதலீடுகளையும் செய்ய முன் வந்துள்ளனர். இது இந்திய சிறுமுதலீட்டாளர்களின் மன முதிர்ச்சியைக் காட்டுகிறது.
கடந்த ஒரு மாதத்தில், சிறுமுதலீட்டாளர்கள் 8000 கோடி ரூபாய் அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் பங்குகள் திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். அதில் 7000 கோடி ரூபாய் அளவுக்கு எஸ்ஐபி என்னும் முறையான மாதாந்திர முதலீடு திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
ஜிடிபி என்னும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி, ரிசர்வ் வங்கியின் கணிப்புப்படி, நடப்பு நிதி ஆண்டில் 7.4 சதவீதமாக இருக்கும். ஆனால், மத்திய அரசின் பொருளாதார அமைச்சகம், நடப்பு நிதி ஆண்டில் ஜிடிபி 7.4 சதவீதத்தைவிட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
தற்போது உள்நாட்டு பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் இருப்பது நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. அதேநேரம், நாம் அதிக அளவில் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருள்களின் விலை சர்வதேச அளவில் உயர்ந்து கொண்டே போகிறது. இது ரிசர்வ் வங்கிக்குக் கவலையளிப்பதாக உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த ஒரு நிலையிலும் மாறாத விஷயம் ஒன்று உண்டு. ரிசர்வ் வங்கியின் முக்கியக் கடமை, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடனை தங்கு தடையில்லாமல் வழங்க வழிவகை செய்திட வேண்டும். 
அதேசமயம், பணவீக்கம் அதிகரிக்காமலும், அதன் காரணமாக, விலைவாசி ஏற்றத்தின் சுமை மக்கள் தலையில் விழாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால், இரண்டாவது அம்சம் நிதிக்கொள்கை குழுவுக்கு ஒரு சட்ட ரீதியிலான விதிமுறையாகவே உள்ளது. 
மேற்கூறிய இலக்கை அடைவதற்கு ரிசர்வ் வங்கியிடம் உள்ள ஒரே ஆயுதம் ரெப்போ ரேட் மட்டுமே. அதனை எவ்வளவு சிறப்பாக ரிசர்வ் வங்கி கையாள முடியுமோ அவ்வளவு சிறப்பாகவே கையாண்டு வருகிறது. 
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, பணவீக்க வீதத்தை, பொருள்களின் மொத்த விலை அடிப்படையில்தான் கணக்கிட்டு வந்தார்கள். அதனை சில்லறை விலை அடிப்படையில் கணக்கிட்டால்தான் பணவீக்க வீதம் உண்மை நிலையைப் பிரதிபலிக்கும் என்று பரிந்துரைத்தவர், ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் உர்ஜித் படேல்தான்.
பணவீக்க கட்டுப்பாட்டுப் பணியில் நீண்டகால அனுபவம் வாய்ந்த அவருடைய பரிந்துரை ஏற்கப்பட்டு 2016-ஆம் ஆண்டு முதல் சில்லறை விலை அடிப்படையில்தான் பணவீக்க வீதம் கணக்கிடப்படுகிறது. 
இந்நிலையில், பணவீக்கத்தை நான்கு சதவீதமாகக் கட்டுப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக உள்ள ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேலும் நிதி கொள்கை குழுவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவார்கள் என்றும், அதன் மூலிலம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து நடைபோடும் என்றும் நம்புவோம்.

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com